ஜாகிர் நாயக்கை நாடு கடத்துங்கள் – நரேந்திர மோதி வலியுறுத்தல்!! (உலக செய்தி)

Read Time:9 Minute, 33 Second

இந்தியாவில் சில குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ள இஸ்லாமிய மத போதகர் ஜாகிர் நாயக்கை நாடு கடத்துமாறு மலேசியப் பிரதமர் மகாதீர் மொஹமத்தை ரஷ்யாவில் சந்தித்தபோது இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி வலியுறுத்தினார்.

பண மோசடி உள்ளிட்ட காரணங்களுக்காக இந்தியாவால் தேடப்படும் நபராக அறிவிக்கப்பட்டுள்ள ஜாகிர் நாயக், கடந்த 2016ஆம் ஆண்டு முதல் மலேசியாவில் தங்கியுள்ளார். அவருக்கு அங்கு நிரந்தர வசிக்கும் உரிமை வழங்கப்பட்டுள்ளது.

ஜாகிர் நாயக்கை நாடு கடத்த வேண்டும் என இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில், மலேசியா இக்கோரிக்கையை இதுவரை ஏற்கவில்லை.

“ஜாகிர் நாயக் இந்தியா செல்லும் பட்சத்தில், அவரது உயிருக்கு ஆபத்து நேரக்கூடும். மேலும் அவரை வேறு எந்த நாடும் ஏற்றுக் கொண்டதாகத் தெரியவில்லை. அவரால் மலேசியாவில் எந்தவிதப் பிரச்சனையும் எழாதவரை அவர் இங்கு தங்கி இருக்கலாம்,” என்று மலேசியப் பிரதமர் மகாதீர் சில மாதங்களுக்கு முன்பு அறிவித்திருந்தார்.

இதற்கிடையே, மலேசியாவின் கிளந்தான் மாநிலத்தில் நடைபெற்ற சமய நிகழ்ச்சியில் பங்கேற்ற ஜாகிர் நாயக், அங்குள்ள இந்திய, சீன வம்சாவளியினர் குறித்து தெரிவித்த கருத்துகளால் சர்ச்சை வெடித்தது.

மலேசிய வாழ் இந்தியர்களின் விசுவாசம் குறித்து அவர் பேசியது கண்டனத்துக்குரியது என்றும், மலேசிய வாழ் சீனர்களை தமக்கு முன்பே அந்நாட்டிற்கு வந்த விருந்தாளிகள் என்றும் ஜாகிர் குறிப்பிட்டது பெரும் எதிர்ப்பைத் தந்தது.

இதையடுத்து, மலேசியாவில் பல்வேறு தரப்பினரும் அவரை நாடு கடத்த வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

மலேசிய அமைச்சரவையில் அங்கம் பெற்றுள்ள நான்கு இந்திய வம்சாவளி அமைச்சர்களும் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.

ஆனால் ஜாகிர் நாயக் இனவாத அரசியலைத் தொட்டுப் பேசியதன் மூலம், எல்லை கடந்துவிட்டார் என்பதை ஒப்புக் கொண்ட பிரதமர் மகாதீர், ஜாகிர் நாயக்கை நாடு கடத்துவதில்லை என்ற மலேசிய அரசாங்கத்தின் நிலைப்பாட்டில் எந்தவித மாற்றமும் இல்லை என்று அண்மையில் மீண்டும் அறிவித்தார்.

இத்தகைய சூழ்நிலையில், ரஷ்யாவில் நடைபெறும் கிழக்கு பொருளாதார உச்சி மாநாட்டில் பங்கேற்க அங்கு சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோதியும், மலேசியப் பிரதமர் மகாதீரும் நேரில் சந்தித்துப் பேசினர்.

அச்சமயம் ஜாகிர் நாயக்கை நாடு கடத்தும் விவகாரம் குறித்து நரேந்திர மோதி மலேசிய தரப்பிடம் வலியுறுத்தியதாகத் தெரிகிறது.

ஜாகிர் நாயக்கை நாடு கடத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மகாதீரிடம், இந்தியப் பிரதமர் வலியுறுத்தியதாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கும் நிலையில், இக்கோரிக்கை தொடர்பாக மலேசியப் பிரதமர் ஏதேனும் உறுதி அளித்தாரா என்பது தெரியவில்லை.

“இந்த விவகாரம் இந்தியாவுக்கு மிக முக்கியமான ஒன்று. எனவே இது தொடர்பாக இரு தரப்பு அதிகாரிகளும் தொடர்பில் இருப்பது என முடிவாகி உள்ளது,” என்று இந்திய வெளியுறவுச் செயலர் விஜய் கோகலே தெரிவித்ததாக மலேசிய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

பிரதமர்கள் மோதியும் மகாதீரும் நேரில் சந்திப்பது இது இரண்டாவது முறையாகும். முன்னதாக கடந்த ஆண்டு மலேசியாவுக்கு மேற்கொண்ட அதிகாரப்பூர்வ பயணத்தின்போது இரு தலைவர்களும் முதன்முறையாகச் சந்தித்தனர்.

இந்நிலையில், தற்போது நடைபெற்ற சந்திப்பின்போது இருதரப்பு உறவுகள் குறித்து பல்வேறு தளங்களில் விவாதிக்கப்பட்டதாக இந்திய வெளியுறவுச் செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார் தெரிவித்ததாக அந்த ஊடகச் செய்தியில் மேலும் கூறப்பட்டுள்ளது.

ஜாகிர் நாயக்கை நாடு கடத்துவது தொடர்பாக இருநாட்டு பிரதமர்களின் நேரடிச் சந்திப்பின் போது வலியுறுத்தப்பட்டிருப்பதன் மூலம் புதுடெல்லி இந்த விவகாரத்துக்கு எந்தளவு முக்கியத்துவம் அளிக்கிறது என்பது உலக நாடுகளுக்கு உணர்த்தப்பட்டிருப்பதாக கருதப்படுகிறது.

இதற்கிடையே, ஜாகிர் நாயக்கிற்கு நிரந்தர வசிக்கும் உரிமையானது எந்த அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது? என மூத்த அரசியல் பிரமுகரும், மலேசியாவின் நெகிரி செம்பிலான் மாநில பெர்சாத்து கட்சித் தலைவருமான ராயிஸ் யாத்திம் கேள்வி எழுப்பியுள்ளார்.

இவ்விஷயத்தில் மலேசிய சட்ட அமைப்பு பின்னுக்குத் தள்ளப்பட்டிருப்பதாகவும், நாட்டில் சர்ச்சையைத் தணிக்க ஜாகிர் நாயக்கை அவரின் சொந்த நாட்டிற்கே அனுப்ப வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி உள்ளார்.

ஜாகிர் நாயக்கை இந்தோனிசியா, சௌதி அரேபியா உள்ளிட்ட நாடுகள் வரவேற்கவில்லை என்று குறிப்பிட்டுள்ள ராயிஸ் யாத்திம், மலேசியா மட்டும் அவரை ஏற்றுக் கொண்டிருப்பதாக சுட்டிக் காட்டினார்.

“அவருக்கு நிரந்தர வசிக்கும் உரிமையைத் தருவதற்கு என்ன காரணம்? அவர் சிலரை இஸ்லாத்திற்கு மாற்றியதா? அல்லது மலேசியர்கள் எவரிடமும் இல்லாத புத்திக்கூர்மை அவரிடம் இருக்கிறதா?” என்று ராயிஸ் யாத்திம் கூறியுள்ளார்.

இதற்கிடையே, மலேசியாவின் மலாக்கா மாநிலத்தில் நடைபெற உள்ள சமய நிகழ்ச்சி ஒன்றில் ஜாகிர் நாயக் பங்கேற்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

செப்டம்பர் 7ஆம் தேதி நடைபெற உள்ள இந்த நிகழ்ச்சியில் அவர் உரையாற்ற மாட்டார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்டதை அடுத்து, பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்று உரையாற்ற ஜாகிர் நாயக்கிற்கு மலேசிய காவல்துறை தடை விதித்துள்ளது. மேலும் சில மாநிலங்களில் நுழையவும் தடை உள்ளது.

இத்தகைய சூழ்நிலையில் மலாக்காவில் நடைபெறும் நிகழ்ச்சியில் அவர் பங்கேற்பார் அம்மாநில தொழில்துறை, வணிகம் மற்றும் முதலீட்டு வாரியத் தலைவர் முகமட் ராபிக் நைசா மொகிதின் தெரிவித்துள்ளார்.

பல்வேறு தரப்புகளில் இருந்து கடும் அழுத்தங்களை எதிர்கொண்ட போதிலும், இந்நிகழ்ச்சி திட்டமிட்டபடி நடைபெறும் என்று குறிப்பிட்டுள்ள அவர், தமது பங்கேற்பை ஜாகிர் நாயக்கும் உறுதிபடுத்தி இருப்பதாக கூறியுள்ளார்.

அதே வேளையில் இக்குறிப்பிட்ட நிகழ்ச்சியில் ஜாகிர் நாயக் உரையாற்ற மாட்டார் என்றும் முகமட் ராபிக் நைசா மொகிதின் சுட்டிக்காட்டி உள்ளார்.

ஜாகிர் உரையாற்றப் போவதில்லை என்பதால் அவர் நிகழ்ச்சியில் பங்கேற்க எந்தவிதத் தடையும் இல்லை என மலேசிய காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வியாபாரிகளுக்கு ஓய்வூதிய வழங்கும் திட்டம்!! (உலக செய்தி)
Next post நான் குழந்தை பெற்றுக்கொள்ள மாட்டேன் !! (சினிமா செய்தி)