‘இவர்களை நினைச்சா இரத்தம் கொதிக்குது’ (கட்டுரை)

Read Time:12 Minute, 32 Second

பாடசாலைகளின் விடுமுறைக் காலம் முடிவுற்று, மீண்டும் மூன்றாம் தவணைக்காலம் ஆரம்பித்துள்ளது. பொதுவாக, மாணவர்கள், தங்கள் பெற்றோர்கள், உறவினர்களோடு சுற்றுலாப் பயணங்களை மேற்கொண்டிருப்பார்கள். புதிய இடங்களைப் பார்த்தல், புதிய நபர்களைச் சந்தித்தல், அவர்களது அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளல் என்பன சிறுவர்களைப் போன்று பெரியவர்களுக்கும் பிரியமானதே.

அந்த வகையில், நண்பர்கள், மாணவர்கள் அடங்கிய அணியாக அண்மையில் களுத்துறை செல்லும் வாய்ப்பு கிட்டியது. அங்கு எங்களை தடல்புடலாக வரவேற்றனர். ஒரு வீட்டில் காலை உணவு; இன்னொரு வீட்டில் மதிய உணவு என விதம் விதமான உணவுகளால் வயிறு நிறைந்தது.
எங்களது சுதந்திரமான இலகுவான உரையாடலுக்கு, மொழி பிரதான தடைக் கல்லாக அமைந்திருந்தது. பாசங்களை வெளிப்படுத்த, பாசை இடைஞ்சலாக அமைந்திருந்தது. ஒரு கட்டத்தில், மொழி பெயர்ப்பாளர் திக்குமுக்காடினார். அந்த அளவுக்கு பல பக்க உரையாடல்கள் தொடர்ந்தன. மொழி, மனித உள்ளங்களைப் பிரிப்பதை உணர்ந்த அவ்வேளையில், பிற மொழிகளைக் கற்க வேண்டியதன் அவசியத்தை இரு தரப்பும் தானாகவே உணர்ந்துகொண்டன.

“தமிழ் மக்கள் அனைவருமே ஆயுதம் வைத்திருக்கின்றார்கள்; அவர்கள் பொல்லாதவர்கள் என நாங்கள் அப்போது நினைத்திருந்தோம்” என, ஒரு சிங்களப் பெண்மணி கூறினார். “களுத்துறை ஆட்கள் மிகவும் துவேசம் பிடித்தவர்கள் என்றே நாங்கள் அப்போது நினைத்திருந்தோம்” என்று, ஒரு தமிழ் மகன் கூறினார்.

அன்று ஓகஸ்ட் 11ஆம் திகதி. அன்றைய தினமே பொதுஐன பெரமுனவின் ஐனாதிபதி வேட்பாளர் கோட்டபாய ராஐபக்‌ஷ என ஊடகங்களில் அறிவிக்கப்படுகின்றார். இது, நாங்கள் உரையாடிக்கொண்டிருந்த இடத்தில் இருந்த தொலைக்காட்சியிலும் ஒளிபரப்பானது. அதுவரை, எங்களுடன் பொதுவான எண்ணங்களைப் பகிர்ந்து கொண்ட அவர்கள், மெல்ல அரசியலுக்குள் அடி எடுத்து வைத்தார்கள்.

அவர்களுக்குள் இரண்டு பிரதான ஆளும் கட்சிகளது ஆதரவாளர்களும் காணப்பட்டனர். அவர்கள், தாங்கள் சார்ந்த கட்சி குறித்த கருத்துகளை வெளிப்படுத்தத் தவறவில்லை. பண்டா – செல்வா ஒப்பந்தம் நிறைவேறியிருந்தால், நாட்டில் இனப்பிரச்சினை ஏற்பட்டிருக்காது என, ஒரு பகுதியினர் கூறினர். கல்வியின் தரப்படுத்தலே, இப்பிரச்சினைக்குக் காரணம் என, மற்றைய பகுதியினர் வாதிட்டனர்.

நாங்கள் அமைதியாக அவர்கள் கதைப்பதற்கும் எங்களுக்கும் சம்பந்தம் இல்லாததுபோல வெறுமனே பார்த்துக் கொண்டு இருந்தோம். அவர்களது உரையாடலைப் புரிய மொழி புரியவில்லை என்பது ஒரு காரணம். இலங்கை அரசியலில் இருந்த வெறுப்பு (பகையு)ணர்வு, மறு காரணம்.நிலைமைகள் இவ்வாறு இருக்கையில், நீங்கள் யாருக்கு வாக்களிக்கப் போகின்றீர்கள் என ஒருவர் எங்களைக் கேட்டார். கடந்த காலங்களில், இரு கட்சிகளுமே எங்களுக்கு (தமிழ் மக்கள்) தீமைகளைச் செய்துள்ளன என்று, உங்களது உரையாடல்களே தெளிவாகச் சொல்கின்றன. இந்நிலையில், யாருக்கு வாக்களிக்காது விடுவதென்பதே எங்களின் பிரதான பிரச்சினை என்றோம்.

சற்று நேரம் கடும் அமைதி நிலவியது. அந்த அமைதியின் அர்த்தம் (சொற்கள்) எங்களின் வார்த்தை நியாயமானதென ஏற்றுக்கொண்டது போலக் காணப்பட்டது. “சரி, பழையனவற்றை விடுவோம். இப்போது எல்லாம் சரி தானே, இப்போது என்ன பிரச்சினை?” எனக் கேட்டார் இன்னொருவர்.

“ஒன்றா இரண்டா, எதைச் சொல்வது எதை விடுவது? எங்கள் பகுதிகளில் பல இளைஞர்கள் படித்துவிட்டு இருக்கின்றார்கள். வேலைவாய்ப்புகள் இல்லாதநிலை தொடர்கின்றது. இந்நிலையில் இங்குள்ள (தெற்கு) இளைஞர்கள் அங்கு மின்மாணி வாசிப்பாளராகக்கூட நியமிக்கப்படுகின்றார்கள். எங்கள் கடலில் எங்கள் மீனவர்கள் கடற்றொழில் செய்யப் பல தடைகள், கட்டுப்பாடுகள் இருக்கின்றன. ஆனால், மாத்தறையிலிருந்தும் நீர்கொழும்பிலிருந்தும் வந்து எங்கள் கடலில் எங்கள் மீனைப் பிடித்து எங்களுக்கே விற்கின்றார்கள். அத்துடன், சட்டவிரோத மீன் பிடியிலும் ஈடுபடுகின்றனர்.

“கொழும்பிலிருந்து பிக்கு ஒருவர் வந்து, படையினரின் உதவியுடன், செம்மலை பிள்ளையார் கோயிலுக்கு அருகில் விஹாரை கட்டி, எமது மக்களின் சுதந்திரமான வழிபாட்டுக்கு தடைகள் செய்கின்றார். பஸ்களில் பௌத்தர்களைக் கூட்டிவந்து வழிபாடுகளை மேற்கொள்கின்றார். இவ்விடயம் நீதிமன்றம்வரை சென்று விட்டது. வலி. வடக்கிலுள்ள எங்கள் விவசாய நிலங்களில், படையினர் பயிர் வளர்த்து மருதனார்மடத்தில் எங்களுக்கு விற்கின்றார்கள். பலாலி விமான நிலையம் மீண்டும் இயங்கப் போகின்றது. அங்கும் பெருமளவில் பெரும்பான்மையினரை நியமித்து, எங்களை ஓரங்கட்டி விடுவார்களோ எனப் பயமாக இருக்கின்றது” என அடுக்கிக்கொண்டே போனோம். இவை ஒன்றுமே அவர்களுக்குத் தெரியாது. “ஏமத?” (அப்படியா) என ஆச்சரியத்துடன் கேட்டார்கள். இவை ஏற்றுக்கொள்ள முடியாதவைகள் எனக் கூறினார்கள். அதிகாரிகள், அரசியல்வாதிகள் ஆகியோருக்குத் தெரியப்படுத்தினீர்களா எனக் கேட்டார்கள். பலரிடமும் பலமுறை கூறியும் விளைவு பூச்சியம் என்றோம்.

“எங்கள் பிரதேச விடயங்களில் எங்களால் முடிவுகள் எடுக்க முடியாதுவிட்டால், அதில் எங்களுக்கு உரித்துகள் இல்லை என்றுதானே பொருள்” எனக் கூறினோம். “இதில், தமிழர், சிங்களவர் எனப் பார்க்காது, குறித்த பிரதேச மக்களின் விடயமாகப் பார்க்க வேண்டும்” எனக் கூறினோம். இதனையே நாங்கள் 1948ஆம் ஆண்டு தொடக்கம் கோரி வருவதாகக் கேட்டுக்கொண்டோம்.

அனைத்தையும் பொறுமையாகவும் அமைதியாகவும் கேட்டார்கள். ஆகவே, ஆயுதப் போர் நடைபெற்ற காலங்களிலும் சரி ஆயுதப் போர் அமைதியாக உள்ள காலங்களிலும் சரி, தமிழ் மக்களது பிரச்சினைகள் அதன் மறுதரப்பான சிங்கள மக்களிடம் உண்மையாகவும் நியாயமான முறையிலும் மொழி பெயர்ப்புச் செய்யப்படவில்லை. பிழையாகவும் முறைகேடாகவும், பல முறைகள் பல ஆண்டுகள் திரும்பத் திரும்ப கூறி, பெரும்பான்மை மக்களின் ஆழ் மனங்களில், தமிழ் மக்கள் தொடர்பில் பிழையான, தப்பான எண்ணங்கள் விதைக்கப்பட்டு உள்ளது. இதிலிருந்து சிங்கள மக்கள் வெளியே வரவேண்டும். இதுவொரு வகையில் பிரச்சினையின் முக்கிய தரப்பு அறையின் உள்ளே தாழ்ப்பாள் இட்டு பூட்டியிருப்பதற்குச் சமம் ஆகும்.

பொருள்கள் தாராளமாகக் கிடைக்கின்றன. மருத்துவம், கல்வி, போக்குவரத்து சீர் செய்யப்பட்டு உள்ளன. தேர்தல்கள் நடக்கின்றன. போர் இல்லாது, பிரச்சினைகள் இல்லாது தமிழ் மக்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றார்கள் என்ற எண்ணத்திலேயே கணிசமான சிங்கள மக்கள் இன்னமும் இருக்கின்றார்கள். இவ்வாறே சிங்கள அரசியல்வாதிகள், சிங்கள ஊடகங்கள் மெய் திரித்து பொய் உரைத்து வருகின்றன. இவ்வாறாக தமிழ் மக்கள் அனுதினம் அனுபவிக்கும் பிரச்சினைகளைக் கணிசமான சிங்கள மக்கள் அறியாது இருக்கையில், அடிப்படைப் புரிதல்கூட இல்லாது அவர்கள் இருக்கின்றார்களே என எவ்வாறு எங்களால் (தமிழ் மக்கள்) கூற முடியும்?

ஆகவே, இவற்றை வெளிச்சம் போட்டுக் காட்ட வேண்டும். சிங்கள மக்களை நாடி, அவர்களது வீட்டுவாசல் தேடிச்செல்ல வேண்டும். நாங்கள் ஹம்பாந்தோட்டைக்கும் அநுராதபுரத்துக்கும் செல்வோம். எங்கள் அரசியல்வாதிகள் எங்கள் வீட்டுக் கோடியில் நின்று கத்துவதைக் காட்டிலும், அவர்களது வீட்டு முற்றத்துக்குச் சென்று எங்கள் பிரச்சினையைச் சொன்னால் என்ன? மொழி வல்லமை படைத்த எங்கள் அரசியல் ஜம்பவான்கள் இதில் கூடுதல் அக்கறை காட்ட வேண்டும். அதைச் சொல்வதில் தடங்கல்கள், சிக்கல்கள் வந்தால்கூட அதுகூட செய்திதானே? தமிழ் மக்கள் தங்கள் பிரச்சினையை வெளிப்படுத்தக்கூட சுமூகமான சூழ்நிலை இலங்கையில் இன்னமும் இல்லை என்பதை உலகம் உணரட்டுமே.

நிலைமைகள் இவ்வாறு இருக்கையில், தமிழ் மக்களது பிரச்சினைகளைத் தமிழ் அரசியல்வாதிகள் ஹம்பாந்தோட்டையிலிருந்து வரும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷவுக்கோ அமைச்சர் சஜித் பிரேமதாஸவுக்கோ, கரவெட்டியிலும் களுவாஞ்சிக்குடியிலும் வைத்துக் கூறிப் பயன் எதுவுமில்லை. ஏனெனில் சிங்கள அரசியல்வாதிகளுக்கு தமிழ் மக்களது அனைத்துப் பிரச்சினைகளும் நன்கு தெரியும். சில வேளைகளில் தமிழ் அரசியல்வாதிகள் அறிந்ததைக் காட்டிலும் அதிகமாகத் தெரியும். அவர்கள் தமிழர் பிரதேசங்களுக்கு வந்து வடிக்கும் கண்ணீர் அனுதாபக் கண்ணீர் அல்ல. வெறும் முதலைக் கண்ணீர்.

இப்படியே கதைத்துக் கொண்டு இருக்கையில் நாவற்குழி புகையிரத நிலையம் வந்தது. எங்கட தமிழ் அரசியல்வாதிகள் என்னத்தைத் தான் உருப்படியாகச் செய்கின்றாங்கள். இவங்களைப் பற்றிக் கதைத்தால் எனக்கு இரத்தம் கொதிக்கும் என்றார் ஒரு முதியவர் சற்றுக் கோபத்துடன்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post லைஃப் ஸ்டைலை மாற்றுங்கள்… செக்ஸ் லைஃப் மாறும்!! (அவ்வப்போது கிளாமர்)
Next post நாயுருவின் நற்பலன்கள் இதோ! (மருத்துவம்)