முழங்கால் மூட்டு வலி…!! (மருத்துவம்)

Read Time:8 Minute, 12 Second

பெரும்பாலானவர்களுக்கு முழங்கால் மூட்டில் அடிபட காரணமாக இருப்பது ACL. அதாவது Anterior cruciate ligament எனப்படும் தசைநார். இந்த தசைநாரில் ஏற்படும் காயமே முழங்கால் மூட்டில் அடிபட அடிப்படை காரணமாகிறது. ஏ.சி.எல் என்பது எலும்புகளை முழங்கால்களுக்குள் பிணைத்து வைத்திருக்கும் திசு பகுதி ஆகும். முழங்கால் மூட்டுகளை நிலையாக வைத்திருப்பதும் இவையே. ஓடும்போதும், குதிக்கும்போதும், திரும்பும்போதும் ஏற்படும் முறையற்ற அசைவுகளால் ஏ.சி.எல் பகுதி கிழிந்து போகலாம். இதனால் கால்களில் வலி ஏற்படுவதோடு நடக்கவும் சிரமம் ஏற்படும்.

எப்படி ஏற்படுகிறது?

விளையாட்டு வீரர்களுக்கு இந்த பிரச்னை மிகவும் சகஜம். பயிற்சியின்போது திடீரென நிலைகளை மாற்றுவதே இதற்கு காரணம். கால்பந்து, வாலிபால், கூடைப்பந்து மற்றும் ஜிம்னாஸ்டிக் பயிற்சிகளில் ஈடுபடுவோர் இப்படி திடீர் திடீரென முழங்கால் மூட்டுகளை திருப்பி ஏ.சி.எல் பாதிப்புக்கு உள்ளாவது உண்டு. ஏ.சி.எல் பாதிப்பு ஆண்களை விட
பெண்களுக்கு அதிகம்.

அறிகுறிகள்

காயம் ஏற்பட்ட உடனே சிலருக்கு மூட்டு பகுதியில் ஒரு சத்தம் கேட்கும். ஆனால், இது எல்லோருக்கும் ஏற்படுகிற அறிகுறி என்று சொல்ல முடியாது.
பொதுவான பிற அறிகுறிகள்

வலி : சிறிய அளவிலான காயம் என்றால் வலி தெரியாது. மூட்டு இணைப்புகளில் ஒருவித அசௌகரிய உணர்வு இருக்கும். சிலருக்கு கால்களில் அழுத்தம் அதிகமானது போலவும் நடப்பதற்கு சிரமமாக இருப்பது போலவும் தோன்றலாம்.

வீக்கம் : அடிபட்ட 24 மணி நேரத்துக்குள் வீக்கம் ஏற்படலாம். ஐஸ் ஒத்தடம் கொடுப்பது, கால்களை சற்று உயர்த்தி அது போன்றவற்றின் மூலம் இதை குணமாக்கலாம்.

நடையில் சிரமம்: அடிபட்ட காலில் அழுத்தம் கொடுக்கும்போது அதன் விளைவாக நடப்பதற்கு சிரமம் ஏற்படுவதாக உணரலாம். சிலருக்கு மூட்டு இணைப்புகள் முன்பைவிட லூஸ் ஆனது போலவும் ஒரு உணர்வு ஏற்படும்.

அசைவுகளில் மந்த நிலை: ஏ.சி.எல் பாதிப்பு ஏற்பட்ட பிறகு முழங்கால் மூட்டுகளை அசைக்கவும், வளைக்கவும் முடியாமல் போகலாம்.

பரிசோதனைகள்

எலும்பு மருத்துவர் உங்களிடம் நீங்கள் எப்படி அடிபட்டு கொண்டீர்கள் என்ற பின்னணியை முதலில் கேட்டறிவார். இரண்டு மூட்டுகளையும் பரிசோதித்து ஒன்றைவிட இன்னொன்றில் ஏதேனும் வித்தியாசங்கள் தென்படுகிறதா என்று ஆராய்வார். அதை பொறுத்து கீழ்கண்ட பரிசோதனைகளை உங்களுக்கு பரிந்துரைப்பார். சமதளமான பரப்பில் உங்களை படுக்கச்சொல்லி உங்கள் இடுப்பு பகுதியையும், முழங்கால்களையும் பல்வேறு கோணங்களில் திருப்ப சொல்லுவார். மூட்டு பகுதிகளை தொட்டுபார்த்து எலும்புகளின் அசையும் தன்மையில் உள்ள வேறுபாட்டை வைத்து ஏ.சி.எல் பாதிப்புதானா என்பதை உறுதி செய்வார்.

எக்ஸ்ரே : ஏ.சி.எல் என்பது மிகவும் மென்மையான திசு. அதில் ஏற்பட்டுள்ள பாதிப்பை எக்ஸ்ரேவில் கண்டுபிடிப்பது கஷ்டம். ஆனாலும் எலும்புகள் ஏதேனும் உடைந்து போய் இருக்கிறதா என்பதற்காக எக்ஸ்ரே எடுக்க சொல்வார். எம்.ஆர்.ஐ அல்லது அல்ட்ரா சவுண்ட்: இந்த பரிசோதனைகளில் மென்மையான திசு பகுதியையும் கடினமான எலும்பு பகுதியையும் பார்க்க முடியும். அந்த வகையில் ஏ.சி.எல் பாதிப்பு இதில் தெரிந்துவிடும்.

ஆர்த்ரோஸ்கோபி : எலும்பு அறுவை சிகிச்சை நிபுணரால் செய்யப்படுகிற சோதனை இது. ஒளியும், லென்ஸ் போன்ற அமைப்பும் பொருத்தப்பட்ட பென்சில் வடிவ கருவியை சருமத்தில் சிறிய கீறலை ஏற்படுத்தி அதன் வழியே செலுத்தி செய்யப்படுகிற சோதனை இது. இணைப்பு பகுதியில் ஏற்பட்டுள்ள பாதிப்பு திரையில் தெரியும். அதை வைத்து உங்களுக்கு ஏற்பட்டுள்ளது ஏ.சி.எல் பாதிப்பு தானா அல்லது வேறு ஏதேனும் பிரச்னையா என்பதும் தெரிந்துவிடும்.

சிகிச்சைகள்

உங்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பின் தீவிரத்தை பொறுத்து அதற்கேற்ற சிகிச்சை பரிந்துரைக்கப்படும். சாதாரண, சிறிய காயம் என்றால் ஐஸ் ஒத்தடம் கொடுப்பது, கால்களை சற்றே உயர்த்தி வைத்து இருந்து ஓய்வெடுப்பது, பேண்டேஜ் கட்டுவது போன்றவையே போதுமான சிகிச்சைகளாக இருக்கும். வீக்கம் இருந்தால் அதை குறைப்பதற்கான மருந்துகளை மருத்துவர் எழுதி தருவார். வலிநிவாரணிகளையும் பரிந்துரைப்பார். வலி மிகவும் அதிகமாக இருப்பவர்களுக்கு ஊசியின் மூலம் அதை குறைப்பதற்கான சிகிச்சை பரிந்துரைக்கப்படலாம்.

விளையாட்டு வீரர்களுக்கு முழங்கால்களில் Knee brace உபயோகிக்க சொல்வார். இது மூட்டுகளுக்கு சப்போர்ட் கொடுக்கும். சில நாட்களுக்கு பிசியோதெரபி சிகிச்சைகளையும் மேற்கொள்ள அறிவுறுத்துவார். இந்த சிகிச்சையில் தசைகளை வலுப்படுத்தும் பயிற்சிகள் அளிக்கப்படும். அதன் மூலம் உங்கள் அசைவுகள் இயல்பு நிலைக்கு திரும்பும். குறிப்பிட்ட நாட்களுக்கு இந்த சிகிச்சைகளை மேற்கொண்ட பிறகு வீட்டிலேயே சில பயிற்சிகளை தொடர்ந்து செய்ய வேண்டியிருக்கும்.

ஏ.சி.எல் திசுவானது மிக மோசமாக பாதிக்கப்பட்டு இருந்தால் அவர்களுக்கு அறுவை சிகிச்சை தேவைப்படலாம். நடக்கவே முடியாத நிலையில் இருப்பவர்களுக்கும், மூட்டுகளே ஆதாரம் என நம்பியிருக்கும் விளையாட்டு வீரர்களுக்கும் இந்த அறுவை சிகிச்சை தேவைப்படலாம். மிக மோசமாக பாதிக்கப்பட்ட ஏ.சி.எல் திசுவானது அகற்றப்பட்டு செயற்கை திசு பொருத்தப்படும். அறுவை சிகிச்சை முடிந்து, முறையாக பிசியோதெரபி சிகிச்சைகளையும் மேற்கொண்டால் ஒரு வருடத்துக்குள் அவர்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப முடியும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ச்சும்மா அதிருதுல்ல! (மகளிர் பக்கம்)
Next post டீன் ஏஜ் செக்ஸ்?! (அவ்வப்போது கிளாமர்)