இது கூ டூ (KUTOO) (மகளிர் பக்கம்)
பிரான்ஸ் நாட்டில் மன்னராட்சி நடைபெற்றபோது அவர்களது அந்தஸ்துக்கு ஏற்ப குதிகால் உயர்த்தப்பட்ட செருப்புகள் (high heels) அணிந்து வந்தனர். அப்போது ஆண்கள்தான் குதிகால் உயர்ந்த செருப்புகளை அணிந்தார்கள். சாமானியர்கள் அரை அங்குல உயர செருப்புகளையும், அரச வம்சத்தினர் இரண்டரை அங்குல உயர காலணிகளை அணிய வேண்டும் என சட்டவிதிகள் இருந்தன. இந்த வகை செருப்புகளில் ‘பெண் தன்மை’ இருப்பதை அறிந்த ஆணாதிக்க சமுதாயம் அதை பெண்களை அணிய வைத்தனர்.
இதன் தொடர்ச்சியாக ஐரோப்பா முழுவதும் ஹைஹீல்ஸ் அணிவது ஃபேஷனாக பரவியது. இந்த செருப்பு பணக்கார பெண்களின் அந்தஸ்தை காட்டுவதாக அமைந்தது. இது இரண்டாம் உலகப் போருக்குப் பின் நடுத்தர பெண்களையும் விட்டுவைக்கவில்லை.
சீனாவில் 10ம் நூற்றாண்டில் மேட்டுக்குடி பெண்களிடையே அழகுக்காகவும் அந்தஸ்தின் அடையாளமாகவும் முன்பாதங்களை தாமரை இதழ் போல சுருக்கிக் கொள்ளும் இந்த பழக்கம் திணிக்கப்பட்டது. இவ்வாறான செருப்புகளை அணிவதால் பாதங்கள் இறுக்கமாகக் கட்டப்பட்டு பாதங்களின் இயல்பான தன்மை மாறிவிடும்.
ஜப்பானில் அரசு அலுவலகங்களுக்கு செல்லும் பெண்கள் மட்டுமின்றி வியாபார நிறுவனங்களில் பணியாற்றும் பெண்கள் கட்டாயம் ஹைஹீல்ஸ் அணியவேண்டும் என்ற நிலை உள்ளது. இதை அணிவதால் உடல் மற்றும் கால்வலி ஏற்படுவது மட்டும் இல்லாமல், முதுகுவலி, மூட்டு வலி, கழுத்து வலி, கண் எரிச்சல், கர்ப்பப்பையிலும் பாதிப்பினை ஏற்படுத்துகிறது. இந்த காலணிகளை அணிந்து கொண்டு நெடுந்தொலைவு நடப்பது என்பது சாமானியமற்றது.
மேலும் ஹைஹீல்சினை அணிந்து கொண்டு குளிர்பானங்கள் மற்றும் உணவுகளை எடுத்து செல்லும்போது கால் இடறி விழும் அபாயம் உள்ளது. இது போன்ற பிரச்னைகள் மற்றும் உடல் ரீதியாக ஏற்படும் வலியால் பாதிக்கப்பட்ட பெண்கள் இப்போது ஹை ஹீல்சுக்கு எதிராக போராட்டத்தை துவக்கியுள்ளனர். அந்த நாட்டின் நடிகையும் பத்திரிகையாளருமான யுஷி இசிகவா என்பவர் சமீபத்தில் இந்தியாவில் பிரபலமான மீ டூ என்ற பாலியலுக்கு எதிரான போராட்டத்தை போல் கூடூ (kutoo) என்ற இயக்கத்தை தொடங்கிஉள்ளார்.
கூ டூ என்றால் ‘எனக்கும் வலி’ என்று பொருளாம். இது தொடர்பாக யுஷி இசிகவா கூறியதாவது, ‘அலுவலகங்களில் ஹைஹீல்ஸ் அணிவதை கட்டாயமாக்குவதை தடை செய்ய வேண்டும் என தொழிலாளர் துறை அமைச்சரிடம் புகார் அளித்து இருந்தோம். ஆனால் அவர்கள் பெண் ஊழியர்கள் ஹீல்ஸ் அணிவதை தடை செய்ய முடியாது என கூறிவிட்டனர்.
இதை தொடர்ந்து தான் இந்த கூ டூ இயக்கத்தை தொடங்கியுள்ளோம். இதுவரை 18 ஆயிரம் பெண்கள் ஆன்லைனில் வரவேற்பு தெரிவித்துள்ளனர். குதி கால் உயர்ந்த செருப்பினை அணிவதை கட்டாயமாக்குவது பாலின பாகுபாட்டின் அடையாளமாக கருதுகிறோம். விரைவில் எங்கள் போராட்டத்திற்கு முடிவு கிடைக்கும்’’ என்றார் யுஷி இசிகவா.
Average Rating