மிஸ் இந்தியா 2019!! (மகளிர் பக்கம்)
மிஸ் இந்தியா 2019 கோலாகலமாக நடந்து முடிந்திருக்கிறது. ராஜஸ்தான், ராஜ்ஸமந்த் பகுதியைச் சேர்ந்த 20 வயது சுமன் ராவ் 2019க்கான மிஸ் இந்தியா பட்டத்தைத் தட்டிச் சென்றுள்ளார். ஜூன் 15, 2019ல் சர்தார் வல்லபாய் பட்டேல் உள் அரங்கத்தில் நடந்த இப்போட்டி காத்ரீனா கைஃப், விக்கி கௌஷல், மௌனி ராய் மற்றும் நோரா ஃபடேஹி உள்ளிட்ட பல பிரபலங்களின் நடன நிகழ்ச்சிகளுடன் பிரம்மாண்டமாக நடந்து முடிந்திருக்கிறது.
வெற்றியாளர் சுமன் ராவ்…கோதுமை நிறம், 5.8 உயரம், சிரித்த முகம் என ஒரே நாளில் இந்திய இளைஞர்களின் ஹாட் சாய்ஸ் இந்தக் கண்ணம்மாதான். யாருப்பா இந்தப் பொண்ணு என தேடியதில்…‘‘பிறப்பு ராஜஸ்தான், வளர்ப்பு மும்பை. மகாத்மா கல்வி அமைப்பில் பள்ளிப்
படிப்பு, இன்ஸ்டிடியூட் ஆஃப் சாட்டர்ட் அக்கவுன்ட் – டெல்லியில் கல்லூரி படிப்பு, பி.காம் மற்றும் சாட்டர்ட் அக்கவுன்ட் முடிந்திருக்கும் சுமன் படிப்பிலும் கொஞ்சம் கெட்டி.
அப்பா தொழிலதிபர், அம்மா ஹோம் மேக்கர், இரண்டு சகோதரர்கள். மாடலிங்கில் ஆர்வம் ஆனாலும் தொடர்ந்து படிப்பும் முக்கியம் என முதுகலைக்கும் அட்மிஷன் போட்டுவிட்டார். கூடைப்பந்து விளையாட்டிலும் பொண்ணு திறமைசாலி. உடற்பயிற்சி, டயட், ஆரோக்கியமான உணவு இவற்றை எதற்காகவும் விட்டுக்கொடுக்காத கறார் பேர்வழி.
கொஞ்சம் நேரம் கிடைத்தாலும் சினிமா மற்றும் இசையில் மூழ்கிவிடும் பெண். முறைப்படி கதக் நடனம் கற்றுக்கொண்ட சுமன் மற்ற நடனங்களிலும் ஒரு கை பார்க்கும் கில்லாடி. சினிமா உலகில் நுழைய அத்தனை தகுதிகளும் சுமனுக்கு உண்டு. ஆனாலும் சுமன் ராவுக்கு அடுத்த குறிக்கோள் ‘மிஸ் வோர்ல்ட் 2019’.
டிசம்பர் மாதம் ஏழாம் தேதி பட்டாயா, பேங்காக்கில் நடக்க இருக்கும் போட்டிக்கு தயாராக இருக்கிறார். மிஸ் இந்தியா 2019 பட்டம் மட்டுமின்றி இந்தப் போட்டியில் முதல் கட்ட சுற்றுகளில் சுமன் ராவ் ‘மிஸ் ராம்ப்வாக்’ என்னும் பட்டத்தையும் பெற்றிருக்கிறார்.
ஆண் – பெண் சம உரிமைக்காக எப்போதும் குரல் கொடுப்பவர். ஏனெனில் தானும் இந்த ஆண் – பெண் சம உரிமை கிடைக்காத சமூகத்தைச் சேர்ந்த பெண் என போட்டியின் ஒரு கட்டத்திலேயே சொன்ன சுமன், இந்த மனநிலையை மாற்ற நிச்சயம் முயற்சிப்பேன் என அறிவித்திருக்கிறார்.
இதே போட்டியில் மற்ற வெற்றியாளர்களாக சட்டீஸ்கரைச் சேர்ந்த ஷிவானி ஜாதவ் – மிஸ் கிராண்ட் இந்தியா 2019, பீகாரைச் சேர்ந்த ஸ்ரேயா ஷங்கர் – மிஸ் இந்தியா ஒருங்கிணைந்த கட்டமைப்பு 2019, மேலும் சஞ்சனா விஜ் – மிஸ் இந்தியா 2019 ரன்னராகவும் பட்டம் பெற்றுள்ளனர்.
மிஸ் இந்தியா மட்டுமின்றி, ஃபெமினா மிஸ் ராஜஸ்தான் பட்டத்தையும் வென்ற சுமன் ராவ் இந்த வருடம் நடக்கவிருக்கும் மிஸ் வோர்ல்ட் 2019 போட்டிக்கு இந்தியா சார்பாக செல்ல இருக்கிறார். வாழ்த்துகள் சுமன்…
Average Rating