ஆற்றல் தரும் ‘கிவி’!! (மருத்துவம்)

Read Time:10 Minute, 44 Second

இந்த சீசனில், நியூசிலாந்து நாட்டில் அதிகம் விளையக்கூடிய, பார்க்க சின்னதாய், மேலே பழுப்பு மற்றும் உள்ளே பச்சை நிறத்தில் புசு புசு வென்று நியூசிலாந்தின் தேசிய சின்னமான ‘கிவி’ பறவையின் ஒத்த சாயலோடு இருப்பதாலேயே இந்தப்பழம் ‘கிவி’ என்ற செல்லப்பெயர் பெற்றது. “ஒட்டுமொத்த ஊட்டச்சத்துக்களையும் உள்ளடக்கிய கிவி பழத்தை ‘Powerhouse of Nutrition’ என்று சொல்வோம்” எனக்கூறும், உணவியல் நிபுணர் மீனாட்சி பஜாஜ், கிவி பழத்தின் ஊட்டச்சத்து மற்றும் மருத்துவ பயன்களைப் பற்றி விளக்குகிறார்…

பொதுவாக, ‘C’ வைட்டமின் ஊட்டச்சத்து பற்றாக்குறைக்கு அது நிறைந்திருக்கும் சிட்ரஸ் பழங்களான எலுமிச்சை, ஆரஞ்சை பரிந்துரைப்போம். ஆனால் கிவி பழத்தில் அந்த இரண்டு பழங்களைக் காட்டிலும் இரண்டு மடங்கு அதிக வைட்டமின் சி நிறைந்துள்ளது. கிவி பழத்தில் சிட்ரஸ் பழங்களை விட 3-5 மடங்கு அஸ்கார்பிக் அமிலமும் உள்ளது.

கிவி பழத்தில், வைட்டமின் சி, ஆதாரங்களோடு கூடுதலாக பொட்டாசியம் மற்றும் ஃபோலேட், வைட்டமின் ‘E’ மற்றும் வைட்டமின் ‘K’ ஊட்டச்சத்துக்களும் நிறைந்துள்ளன. சிறந்த மலமிளக்கியாக செயல்படுகிறது. பழுக்க வைக்கும் போதோ அல்லது நீண்டநாள் சேமிப்பின் போதோ குறைந்த அளவு ஊட்டச்சத்து தர இழப்பே ஏற்படுகிறது என்பதால், இதை காயாக வாங்கிவந்து நன்கு பழுக்க வைத்தும் சாப்பிடலாம். முக்கியமாக, முதியவர்கள் இந்த பழத்தை சாப்பிடுவதால் நல்ல பலனைப் பெறலாம்.

100 கிராம் கிவி பழத்தில், 92 மிலிகிராம் வைட்டமின் சி, 3 கிராம் நார்ச்சத்து, ஃபோலேட் 25 மைக்ரோகிராம் ஊட்டச்சத்து அளவுகள் உள்ளன. 70 கிராம் எடையுள்ள ஒரு கிவி பழத்தில் சுமார் 23.46 மிலி கிராம் கால்சியம் நிறைந்துள்ளது.

ஆஸ்துமாவிற்கு நல் மருந்து‘கிவி’-யில் உள்ள அதிக அளவு வைட்டமின் சி மற்றும் ஆன்ட்டி ஆக்ஸிடென்டுகள் ஆஸ்துமா நோயாளி
களுக்கு சிகிச்சையளிக்க உதவக்கூடியவை. மற்ற பழங்களோடு, கிவி பழங்களை தவறாமல் தொடர்ந்து உட்கொள்பவர்களிடத்தில், நுரையீரல் செயல்பாட்டில் நல்ல முன்னேற்றம் ஏற்படும் என 2000ம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட ஒரு இத்தாலிய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. மேலும், குழந்தைகளிடத்தில் ஏற்படும் மூச்சிழைப்பு (Wheezing) பிரச்னை குறைவதாகவும் சொல்லப்பட்டுள்ளது.

ரத்த தட்டணுக்களை அதிகரிக்க

ஃபோலேட், வைட்டமின் ‘B-9’, ‘B-12’ , C, D மற்றும் K ஊட்டச்சத்துக்கள் நிறைந்த கிவி பழத்தை உண்பதன் மூலம் ரத்த தட்டணுக்களை அதிகரிக்கலாம். மலேரியா, டெங்கு போன்ற காய்ச்சல் வந்த ஒருவருக்கு ரத்தத்தில் வெகு வேகமாக ரத்த தட்டணுக்கள் குறையும். ரத்தநாளங்களில், ரத்த ஓட்டத்தை தடுக்கும். அதனால் இவர்களுக்கு ரத்தம் ஏற்றுவார்கள். இந்த நோயாளிகள், ஒரு நாளைக்கு 2 அல்லது 3 கிவி பழத்தை 28 நாட்களுக்கு எடுத்துக் கொள்வதன் மூலம் ரத்த தட்டணுக்களை அதிகரிக்கச் செய்யலாம்.

செரிமானத்தை தூண்ட

கிவி பழத்தில் அதிகப்படியான நார்ச்சத்து இருப்பது செரிமானத்திற்கு மிக நல்லது. கிவி பழச்சாறில் இயற்கையாக இருக்கும் Actinidin எனப்படும் Proteolytic என்சைம் உணவில் உள்ள புரதத்தை உடைத்து செரிமானத்தை பெரிதும் மேம்படுத்துவதாக ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நோயெதிர்ப்பு சக்திக்கு

உடலில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க அவசியமான ஊட்டச்சத்து வைட்டமின் ‘C’. ஒரு கப் கிவி பழம் தினசரி பரிந்துரைக்கப்பட்ட, வைட்டமின் ‘C’ ஊட்டச்சத்து மதிப்பில் 27.3 சதவீதத்தை வழங்குகிறது. இதனால் நோயெதிர்ப்பு செயல்பாடு மேம்படுவதால் சளி, காய்ச்சல் நோய்களை உருவாக்கும் வாய்ப்பு குறைகிறது. குறிப்பாக 65 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் பச்சிளம் குழந்தைகளுக்கு நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது அவசியம் என்பதால், இவர்கள் தாராளமாக கிவி பழத்தை எடுத்துக் கொள்ளலாம்.

ரத்த அழுத்தத்தை நிர்வகிக்க

2014ம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட ஓர் ஆய்வில், ஒரு நாளைக்கு 3 கிவி பழங்கள் சாப்பிடுவதால் கிடைக்கும் பயோஆக்டிவ் பொருட்கள், ஒரு நாளைக்கு 1 ஆப்பிள் எடுத்துக் கொள்வதன் மூலம் கிடைப்பதைவிட அதிகம் என்றும், இந்த பயோ ஆக்டிவ் பொருட்கள் ரத்த அழுத்தத்தை குறைக்கும் ஆதாரங்கள் இருப்பதையும் கண்டறியப்பட்டுள்ளன. நீண்ட நாட்களாக கட்டுப்படுத்தப்படும் ரத்தஅழுத்தம், மாரடைப்பு, பக்கவாதம் போன்ற உயர் ரத்த அழுத்தத்தால் வரக்கூடிய நோய்களின் ஆபத்தை குறைக்கலாம்.

ரத்த உறைவைத் தடுக்கிறது

ரத்த அழுத்தத்தை நிர்வகிக்க உதவுவதோடு, ரத்த உறைவையும் குறைக்கும். ஓஸ்லோ பல்கலைக்கழக ஆய்வு ஒன்றில், ஒரு நாளைக்கு 2 முதல் 3 கிவி பழம் சாப்பிடுவது ரத்த உறைவு அபாயத்தை கணிசமாகக் குறைப்பதும், ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவும் குறைவதும் கண்டறியப்பட்டுள்ளது. இந்த விளைவுகள், இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த தினசரி எடுத்துக் கொள்ளும் ஆஸ்பிரின் மாத்திரை ஏற்படுத்தும் அளவைப் போலவே இருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

தெளிவான கண் பார்வைக்கு,..

பார்வை இழப்பு ஏற்படுவதற்கு முக்கிய காரணமான மாகுலர் சிதைவிலிருந்து கிவி பழம் உங்களை பாதுகாக்கிறது. கிவி பழத்தில் மிகுந்துள்ள Zeaxanthin மற்றும் Lutein அளவே இதற்கு காரணம். தினசரி 3 முறை கிவி பழங்களை எடுத்துக் கொள்வதால் மாக்குலர் சிதைவு 36 சதவீதம் குறைவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

ஆழ்ந்த உறக்கத்தைப் பெற

கிவி பழத்தில் செரடோனின் அதிக அளவில் இருப்பதால் தினமும் இரவு கிவி பழத்தை சாப்பிடும் ஒருவருக்கு நிம்மதியான தூக்கம் பெற உதவுவோடு, புத்துணர்ச்சியுடன் இருக்கச் செய்யும். கொழுப்பு அமிலங்கள் பல்வேறு செயல்பாடுகளுக்கு அவசியமானவை. கிவி பழத்தில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், ஒமேகா-6 கொழுப்பு அமிலங்கள், மோனோஅன் சாச்சுரேட்டட் கொழுப்புகள், பாலிஅன்சாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள் மற்றும் சாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள் போன்றவை உள்ளது. இந்த அனைத்து கொழுப்பு அமிலங்களும், ஆன்டி-ஆக்ஸிடன்ட் போன்று செயல்படும்.

கர்ப்பிணிகளுக்கு நல்லது

கர்ப்ப காலத்தில் பெண்கள் கிவி பழத்தை சாப்பிடுவது நல்லது. ஏனெனில் இதில் ஃபோலிக் அமிலம் அதிகம் உள்ளது. போலிக் அமிலம் கருவின் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமான சத்தாகும். மேலும் இச்சத்து பிறப்பு குறைபாட்டைத் தடுக்கும் என்பதால், கர்ப்பிணிகளுக்கு போலிக் அமில மாத்திரைகளை கர்ப்ப காலத்தில் மருத்துவர்கள் எடுத்துக் கொள்ள பரிந்துரைக்கிறார்கள்.

மேலும் கிவி பழத்தில் இருக்கும் பலவிதமான ஊட்டச்சத்துக்கள் மற்றும் உயிரியல் ரீதியாக சுறுசுறுப்பான பைட்டோ கெமிக்கல்கள் அதன் ஆக்ஸிஜனேற்ற மற்றும் அழற்சி எதிர்ப்பு நடவடிக்கைகளைத் தூண்டுவதால், இருதய நோய், புற்றுநோய் மற்றும் பிற சீரழிவு கோளாறுகளைத் தடுக்க உதவுகிறது.

இவற்றைத்தவிர கிவி பழத்தால் அழகியல் ரீதியான பலன்களையும் பெற முடியும். சருமப் பாதுகாப்பிற்கு ஆதாரமான கொலேஜன் (Collagen), வைட்டமின் ‘சி’ யை நம்பியுள்ளது. இந்த வைட்டமின் ஒரு அத்தியாவசிய ஊட்டச்சத்து மற்றும் ஆன்ட்டி ஆக்சிடன்ட் ஆகும். இது புற ஊதாக்கதிர், மாசு மற்றும் புகையால் சருமத்திற்கு ஏற்படும் சேதத்தை தடுக்க உதவுகிறது. மேலும் சருமத்தில் ஏற்படும் சுருக்கங்களை
மென்மையாக்குவதோடு ஒட்டு மொத்த தோல் அமைப்பை மேம்படுத்துகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வார நாட்களில் நடைப்பயிற்சி… வாழ்நாள் முழுவதும் ஆரோக்கியம்!! (மருத்துவம்)
Next post மயக்கம்… குழப்பம்… கலக்கம்!! (அவ்வப்போது கிளாமர்)