உங்களால் இன்னொருவர் வாழ்வில் ஒளியேற்ற முடியும்!! (மருத்துவம்)

Read Time:10 Minute, 17 Second

நம் நாட்டில் மட்டும் கருவிழிப் பிரச்னைகளால் பார்வையின்றி தவிப்போர் சுமார் 1.8 லட்சம் பேர் என்று புள்ளி விவரங்கள் கூறுகின்றன. உலக அளவில் இந்தியாவில்தான் கருவிழி பாதிப்பு அதிகம் இருப்பதாகவும் ஆய்வுகள் கூறுகின்றன. கண் தானம் மூலமாக இவற்றில் பெரும்பான்மையானோருக்கு மீண்டும் பார்வை கிடைக்கச் செய்ய முடியும். இதனை Treatable blindness என்கிறோம்.

உடல் உறுப்பு தானத்தை எடுத்துக்கொண்டால் உயிருடன் இருக்கும்போதே சிறுநீரக தானம், எலும்பு மஜ்ஜை தானம் போன்றவற்றை நாம் செய்ய முடியும். இதயம், நுரையீரல், கல்லீரல் போன்ற உறுப்புக்களை, மூளைச்சாவு அடைந்த ஒருவர் மற்ற உறுப்புகளுக்கு ரத்த ஓட்டம் பாய்ந்து கொண்டிருக்கும் நிலையில் இருந்தால் மட்டுமே தானமாகக் கொடுக்க முடியும். ஆனால், ஒருவர் இறப்பிற்கு பின்பும் செய்யக் கூடிய ஒரே உறுப்பு தானம் கண்தானம் மட்டுமே!

பிறந்த குழந்தை முதல் 100 வயது முதியவர் வரை யார் வேண்டுமானாலும் கண் தானம் செய்யலாம். ஆண் பெண் பேதமும், இன பேதமும் இதில் கிடையாது. கண்ணாடி அணிந்தவர்கள், சர்க்கரை நோயாளிகள், ரத்தக் கொதிப்பு, இதய நோயாளிகள், கண் புரை அறுவை சிகிச்சை மேற்கொண்டோர் இவர்கள் அனைவரும் கண்தானம் செய்யத் தகுதியானவர்களே. இயற்கை மரணம் மற்றும் விபத்து மூலமாக மரணம் எய்தியவர்களின் கண்களையும் தாராளமாகத் தானமாக பெறலாம். வீடு, மருத்துவமனை என்று எங்கு மரணம் நிகழ்ந்திருந்தாலும் அங்கு சென்று இறந்தவரின் உடலில் இருந்து கண்களை அகற்றிக் கொள்வார்கள்.

இறந்தவரின் கண்களை தானம் செய்ய உறவினர்கள் தயாராக இருக்கும் பொழுது கண்களை தானமாகப் பெறும் கண் வங்கியின் மருத்துவர் இறப்பிற்கான காரணத்தை ஆராய்வார். எச்.ஐ.வி, ஹெப்படைட்டிஸ் பி, மூளைக்காய்ச்சல், நாய்க்கடி போன்ற நோய்கள் அந்த நபருக்கு இருந்திருந்தால் கருவிழி தானம் பெறப்பட மாட்டாது.

போதைப் பொருட்கள் உட்கொள்வோர், விஷத்தினால் மரணம் அடைந்தோர், தீவிர புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் இவர்களிடமிருந்தும் கண் தானம் பெறப்பட மாட்டாது. இறப்பிற்கான காரணம் தெரியாவிட்டாலும் அந்த நபரின் கண்களைத் தானமாகப் பெற மாட்டார்கள்.

ஒரு நபர் மரணம் அடைந்து ஆறு மணி நேரத்திற்குள் கண்களை அவர்கள் உடம்பில் இருந்து அகற்றிவிட வேண்டும். அப்படி அகற்றப்பட்ட கண்கள் குளிரூட்டப்பட்ட சாதனங்கள் மூலம் கண் வங்கிக்கு எடுத்துச் செல்லப்படும். கண் வங்கிக்கு எடுத்துச் செல்லப்பட்ட கண்கள் பரிசோதிக்கப்பட்டு, தரம் பிரிக்கப்படும். தரத்தைப் பொறுத்து ஒன்று முதல் நான்கு நிலைகளாக வகைப்படுத்தப்படும்.

தரம் 1 என்று நிர்ணயிக்கப்பட்ட கருவிழிகள், உறுதியாக பார்வை கிடைக்க வாய்ப்புள்ள நோயாளிகளுக்குப் பொருத்தப்படும்.தானமாகப் பெற்ற சில கண்களில் கருவிழியின் உட்பகுதியில் செல்கள்(Endothelial count) குறைவாகக் காணப்படும். இந்த வகையான கருவிழிகள் (Grade 3,4) கருவிழியில் புண் ஏற்பட்டு, மருந்துகளால் குணப்படுத்த முடியாத நோயாளிகளுக்குப் பொருத்தப்படும்(Therapeutic keratoplasty). இந்த வகை அறுவை சிகிச்சையில் பார்வை முழுவதுமாகக் கிடைக்கும் என்று உறுதியாக கூறமுடியாது. ஆனால், கண் மாற்றுவதால் ஆறாத புண்(Non healing corneal ulcer) முழுவதுமாக ஆறிவிடும்.

கண் மாற்று அறுவை சிகிச்சை செய்வதில் அவசர நோயாளிகளுக்கும் ஏற்கனவே கண் வங்கியில் பதிவு செய்யப்பட்டு காத்திருப்போர் பட்டியலில் முதலில் இருப்பவர்களுக்கும் முன்னுரிமை அளிக்கப்படும். கருவிழியில் இயற்கையிலேயே ஆறு அடுக்குகள் உள்ளன. தற்போதைய விஞ்ஞான வளர்ச்சியால் ஒரு கருவிழியை வேறுவேறு பிரச்சினைகளால் பாதிக்கப்பட்ட நான்கு நபர்களுக்கு பயன்படுத்த முடியும்.

கண் தானம் செய்வது குறித்து பல மூட நம்பிக்கைகள் நிலவுகின்றன. முகம் உருக்குலைந்து விடும் என்றும் அடுத்த பிறவியில் பார்வை இருக்காது என்றும் சொர்க்கத்திற்குச் சென்றால் கடவுளைக் காண முடியாது என்றும் இன்றளவும் ஆங்காங்கே நம்பப்படுகிறது. கண் மாற்று அறுவை என்றால் முழு கண் பந்தினையும் மாற்றுவது என்பதும் பலருடைய எண்ணமாக இருக்கிறது. திரைப்படங்களிலும் இப்படிப்பட்ட காட்சிகளே வருகின்றன. இது தவறான புரிதல். கருவிழி மட்டுமே கண் தானத்தின் மூலமாக பெறப்படும் கண்ணிலிருந்து எடுத்து நோயாளிக்கு பொருத்தப்படுகிறது.

பல திரைப்படங்களில் பார்த்திருப்போம். இரண்டு கண்ணும் தெரியாத கதாநாயகனோ கதாநாயகியோ இருப்பார்கள். ஆனால், பார்ப்பதற்கு சாதாரண மனிதர்களைப் போலவே காட்சியளிப்பார்கள். அவர்களுக்காக இன்னொரு கதாபாத்திரம் தன் உயிரை அழித்து தமது கண்களை தானமாக அளிக்கும் அல்லது உயிருள்ள நபர் ‘என் கண்ணை எடுத்துக் கொள்ளுங்கள்… என் மகனுக்குப் பொருத்துங்கள்’ என்று வசனம் பேசுவார். இவையும் தவறான சித்தரிப்புக்கள். உயிருடன் இருக்கும் நபரிடமிருந்து கண் தானம் பெறப்படுவதில்லை.

குடும்பத்தில் ஒருவர் மரணமடையும்போது உறவினர்கள் கண் தானம் செய்ய விரும்பினால் அருகிலுள்ள கண் வங்கியையோ குடும்ப மருத்துவரையோ அணுகினால் போதும். அவர்கள் உங்களுக்குத் தேவையான வழிகாட்டல்களைச் செய்வார்கள். இறந்தவரின் நெருங்கிய உறவினர் உரிய படிவத்தில் கையெழுத்திட்டு கண்தானத்திற்கு அனுமதி அளிக்கலாம்.

உயிருடன் இருக்கும் ஒரு நபர் கண்தானத்திற்குப் பதிவு செய்ய விரும்பினால் உரிய படிவத்தை நிரப்பி அருகில் உள்ள கண் வங்கியில் கொடுக்க வேண்டும். அதன் ஒரு நகலைத் தானும் வைத்திருந்து தன் குழந்தைகளிடமோ உறவினர்களிடமோ தகவல் கூற வேண்டும். எதிர்பாராமல் மரணம் அடைய நேரும் சமயத்தில் அந்த நபர் கண்தானத்திற்கு பதிவு செய்தது குடும்பத்தினருக்கு நினைவிருக்குமாறு செய்தால் நல்லது.

இதுபோக தேசிய கண் பார்வை இழப்பு தடுப்பு திட்டத்தின் கீழ் சில தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் பெரிய மருத்துவமனைகளில் மரணம் நேரும் தருவாயில் இருக்கும் நோயாளிகளைக் கண்டறிந்து அவர்களின் உறவினர்களிடம் சென்று கண் தானத்தின் அவசியத்தைக் குறித்து வலியுறுத்தி வருகிறார்கள்(Hospital cornea retrieval programme). இப்படி பெறப்படும் கருவிழிகளின் எண்ணிக்கை தாமாக முன் வந்து தானமளிப்போரைக் காட்டிலும் அதிகம். அவையே பல நோயாளிகளுக்கு இன்று கண்ணொளி வழங்கி வருகின்றன.

மற்றொரு புள்ளிவிவரம். இந்தியாவில் நாளொன்றுக்கு 85 லட்சம் பேர் மரணமடைவதாகவும் அறிக்கைகள் தெரிவிக்கின்றன. ஒரு நாளில் மரணம் அடைபவர்களில் மட்டும் 10 முதல் 20 சதவீதத்தினர் கண் தானம் செய்தாலே கருவிழி பாதிப்புடைய அனைத்து நபர்களுக்கும் கண்ணொளி கிடைக்க வாய்ப்புண்டு. கண் தானம் குறித்த விழிப்புணர்வு இந்த நோக்கத்திற்கு மிகவும் அவசியம்.

முதன்முதலாக உலகில் வெற்றிகரமாகக் கண் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்ட ஆண்டு 1905. 115 ஆண்டுகள் ஆன நிலையிலும் இன்றும் மக்களிடையே கண் தானம் குறித்த போதிய விழிப்புணர்வு இல்லை என்பதே உண்மை. தானத்தில் சிறந்தது கண் தானம். மண்ணுக்குப் போகும் கண்களை மனிதருக்கு தரலாமே!

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஓரின சேர்க்கையில் தான் அதிக இன்பம் என்பது சரிதானா? (அவ்வப்போது கிளாமர்)
Next post Clean Eating!! (மருத்துவம்)