தமிழரின் கல்வி: எழுக தமிழ்! (கட்டுரை)

Read Time:17 Minute, 3 Second

பத்தொன்பதாம் நூற்றாண்டுக்கு முன்னர், மனித மூலதனத்தில் முறையான முதலீடு செய்தல் என்பது எந்தவொரு நாட்டிலும் விடேசமானதொரு விடயமாகக் கருதப்படவில்லை.

பாடசாலைக்கல்வி, வேலைவாய்ப்பு, பயிற்சி போன்றவற்றுக்கான முதலீட்டுச் செலவுகள் மிகவும் சிறியதாக இருந்தன. அதன் பின்னரான விஞ்ஞான வளர்ச்சியானது, தொழிற்றுறையில் பெருமளவு மாற்றங்களை உட்புகுத்தியதுடன், புதிய பொருள்களின் வளர்ச்சிக்கும், திறமையான உற்பத்தி முறைகளுக்கும் வழிவகுத்தது. மேற்கில் தோன்றிய இந்த மாற்றம் மிகவிரைவாக உலகின் அனைத்து நாடுகளுக்கும் பரவியது. இருபதாம் நூற்றாண்டில், கல்வி, திறன்கள், அறிவைப் பெறுதல் ஆகியவை, ஒரு நபரின், ஒரு தேசத்தின் உற்பத்தித்திறனைத் தீர்மானிப்பதில் முக்கியமான கூறுகளாக மாறிவிட்டன. இன்றைய காலகட்டத்தை “மனித மூலதனத்தின் காலம்” என்று கூட சிலர் அழைக்கலாம். அதாவது ஒரு தேசத்தின் வாழ்க்கைத் தரத்தின் முதன்மை நிர்ணயம் என்பது, திறன்களையும் அறிவையும் வளர்ப்பதிலும் பயன்படுத்துவதிலும், ஆரோக்கியத்தை மேம்படுத்துவதிலும், கல்வி, பயிற்சியை வழங்குவதிலும் அது எவ்வளவு வெற்றிகரமாகச் செயற்படுகிறது என்பதிலேயே தங்கியுள்ளது.

கல்வி என்பது, வளர்ச்சியின் அடிப்படைக் காரணிகளில் ஒன்றாகும். மனித மூலதனத்தில் கணிசமான முதலீடு இல்லாமல் எந்த நாடும் நிலையான பொருளாதார வளர்ச்சியை அடைய முடியாது. கல்வி, மக்கள் தங்களைப் பற்றியும் உலகத்தைப் பற்றியும் புரிந்துகொள்வதை வளப்படுத்துகிறது. இது அவர்களின் வாழ்க்கையின் தரத்தை மேம்படுத்துகிறது.

தனிநபர்களுக்கும் சமூகத்துக்கும் பரந்த சமூக நன்மைகளுக்கு வழிவகுக்கிறது. கல்வி மக்களின் உற்பத்தித்திறனையும் படைப்பாற்றலையும் உயர்த்துகிறது. தொழில் முனைவோர், தொழில்நுட்ப முன்னேற்றங்களை ஊக்குவிக்கிறது. கூடுதலாக, பொருளாதார, சமூக முன்னேற்றத்தைப் பாதுகாப்பதிலும் வருமான விநியோகத்தை மேம்படுத்துவதிலும் இது மிக முக்கியமான பங்கு வகிக்கிறது. அதேவேளை கல்வியால் மட்டும், நிச்சயமாக ஒரு பொருளாதாரத்தை மாற்ற முடியாது. முதலீட்டின் அளவு, தரம், உள்நாட்டு, வெளிநாட்டு, ஒட்டுமொத்த கொள்கைச் சூழலுடன் சேர்ந்துதான் பொருளாதார செயற்றிறனின் பிற முக்கிய தீர்மானங்களை உருவாக்குகின்றன. ஆயினும்கூட மனித வள வளர்ச்சியின் நிலை இந்தக் காரணிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. கொள்கை வகுத்தல், முதலீட்டு முடிவுகளின் தரம் கொள்கை வகுப்பாளர்கள், முகாமையாளர்களின் கல்வியால் தீர்மானிக்கப்படுகிறது. மேலும், ஒரு தேசத்தின் மனித மூலதன வழங்கல் அதிக அளவில் இருக்கும்போது, உள்நாட்டு, வெளிநாட்டு முதலீட்டின் அளவும் பெரிதாக இருக்கும்.

மேலும் தனிநபர் வருமான மேம்பாட்டிலும் கல்வியானது பெரும் பங்கு வகிக்கிறது. கல்வி மிகவும் பரந்த அளவில் கிடைக்கப்பெறும் போது, ​​குறைந்த வருமானம் உடையவர்கள் தமக்கான புதிய பொருளாதார வாய்ப்புகளைத் தேடக் கூடிய சூழலை அது ஏற்படுத்தித் தருகிறது.

எடுத்துக்காட்டாக, 1980 களில் லத்தீன் அமெரிக்காவின் 18 நாடுகளில் பாடசாலைக் கல்வி, வருமான சமத்துவமின்மை, வறுமை ஆகியவற்றுக்கு இடையேயான தொடர்பு பற்றிய ஓர் ஆய்வில், பாடசாலைக் கல்வி கிடைப்பதானது, தொழிலாளர் வருமானத்தில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியதைச் சுட்டிக்காட்டியது. ஆகவே பொருளாதார வளர்ச்சிக்கு கல்வி இன்றியமையாதது. நல்ல கல்வி இல்லாமல் எந்த பொருளாதார வளர்ச்சியும் சாத்தியமில்லை.

ஒரு சீரான கல்வி முறை பொருளாதார வளர்ச்சியை மட்டுமல்ல, உற்பத்தித்திறனையும் ஊக்குவிக்கிறது, மேலும் தனிநபர் வருமானத்தை உருவாக்குகிறது. அது தேசிய அளவில் மட்டுமல்லாது, ஒரு குடும்ப அளவிலும் பொருளாதாரத்தில் கணிசமான தாக்கத்தைச் செலுத்தக்கூடியதாக இருக்கிறது.

காலனித்துவக் காலத்தை, குறிப்பாக பிரித்தானிய காலனித்துவ காலத்தில் இலங்கையில் மிஷனரிகள் பல பாடசாலைகளை ஸ்தாபித்தன. பிரித்தானியரின் இலங்கை வருகையிலிருந்து 1850கள் வரையான காலப்பகுதியில் இலங்கையில் ஸ்தாபிக்கப்பட்ட பாடசாலைகளில் மிகப்பெரும்பா ன்மையானளவு பாடசாலைகள், இன்றைய வடக்கு, கிழக்கு மாகாணங்களில் ஸ்தாபிக்கப்பட்டிருப்பதை நாம் காணலாம்! ஆகவே இலங்கையின் ஆரம்ப, இரண்டாம்நிலைக் கல்வியின் தாயகம் வடக்கு-கிழக்காகத்தான் அமைகிறது. வடக்கு-கிழக்கின் புகழ்பூத்த பாடசாலைகளில் தெற்கிலிருந்து வந்து கல்விகற்ற சிங்களவர்கள் கணிசமானளவில் உள்ளனர்.

இது வரலாறு. மறுபுறத்தில் மிகக்கொடூரமான யுத்தகாலத்திலும் கூட வடக்கு-கிழக்கிலிருந்து மாணவர்கள் அகில இலங்கை ரீதியான சாதாரண தர, உயர்தரப் பரீட்சைகளில் பெரும்சாதனைகளை நிகழ்த்தியதும் வரலாறு! குறிப்பாக மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாத யுத்தச் சூழலிலும் கணித, விஞ்ஞானப் பிரிவுகளில் அதியுயர் புள்ளிக​ளைப் பெற்றுச் சாதனை படைத்த வரலாறு வடக்கு-கிழக்குக்கு உண்டு. ஆனால் வடக்கு-கிழக்கின் கல்வியின் இன்றைய நிலை என்ன?

2017ஆம் ஆண்டு பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சை முடிவுகளில் வடக்கு-கிழக்கு, அதிலும் குறிப்பாக வட மாகாணம் பின்னடைவைச் சந்தித்தது. கிழக்கு மாகாணத்தில் 67.76 சதவீதமானோர் மட்டுமே உயர்தரத்துக்குத் தகுதி பெற்றிருந்தனர். ஆனால் 9 மாகாணங்களில் இறுதி நிலையில் வட மாகாணம் இருந்தது. வட மாகாணத்திலிருந்து வெறும் 66.12 சதவீதமானோரே உயர்தரத்துக்குத் தகுதி பெற்றிருந்தனர். மேலும், 2017ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளுக்கு அமைய, அனைத்து பாடங்களிலும் சித்தியடையாதவர்களின் பட்டியலிலும் வட மாகாணமே முன்னிலையிலிருந்தது. அங்கு 3.46 வீதமானவர்கள் அனைத்து பாடங்களிலும் சித்தியடையவில்லை. இரண்டாம் நிலைக் கல்வியின் தாயகத்துக்கு ஏன் இந்த நிலை? இது பற்றி 2017இல் அன்றைய வட மாகாண கல்வி அமைச்சராக இருந்த கந்தையா சர்வேஸ்வரன் தனது உரையொன்றில் குறிப்பிட்ட விடயத்தை இங்கு சுட்டிக்காட்டுவது பொருத்தமானதாகும். “வடக்கு, கிழக்கில் தொழில் வளம் இல்லை. இங்கு விவசாயிகளாக, மீன்பிடி மக்களாக இருந்தாலும் அடுத்து இருப்பது ஒரே ஓர் அரசாங்க உத்தியோகம். ஆகவே பிள்ளைகளை நன்றாகப் படிப்பித்தார்கள். நிறைய செலவழித்தார்கள். ஆகவே எங்கள் முயற்சியினால் தான் நாங்கள் முன்னேறினோமே தவிர யாரும் எங்களை தட்டில் வைத்து ஏந்தவில்லை. ஆனால், யுத்தம் வந்த பின்னால் பாடசாலைகள் அழிக்கப்பட்டன. எங்கள் கல்வி பல வழிகளில் சீரழிக்கப்பட்டன.

நாங்கள் பின்தங்கியவர்களாகிப் போய் எங்களுக்கு பின்தங்கிய மாவட்டம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இன்றைக்கு எங்களுக்கு தகுதி வாய்ந்த அதிபர்கள் போதவில்லை. தகுதிவாய்ந்த விஞ்ஞான, கணித, ஆங்கில ஆசிரியர்கள் இல்லை” என்று தன்னுடைய உரையில் அவர் குறைபட்டுக் கொண்டார். மறுபுறத்தில் பின்னடைந்து வரும் வடமாகாணக் கல்வியை முன்னேற்ற, தமிழ் கல்விக்கான தனித்த அமைச்சு வேண்டும் என்ற கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டு வருகின்றன. ஆனால் தனித்த அமைச்சு அமைவதால் மட்டுமே இந்தப் பிரச்சினை தீர்க்கப்பட்டுவிடுமா என்ற கேள்வி இங்கு எழுவதைத் தவிர்க்க முடியாது.

இன்று வடக்கு-கிழக்கு என்பது கல்வியில் மட்டுமல்ல, பொருளாதாரத்திலும் பாரிய பின்னடைவைச் சந்தித்து வருவதை நாம் காணலாம். வேலைவாய்ப்பின்மை அதிகமுள்ள மாகாணங்களாக வடக்கும், கிழக்கும் காணப்படுகின்றன. இத்தனைக்கும் இந்த இரு மாகாணங்களிலும் மூன்று அரச பல்கலைக்கழகங்கள் உள்ளன. ஆயினும் கல்வியிலும், பொருளாதாரத்திலும் இந்த மாகாணங்கள் தொடர்ந்து பின்னடைவைச் சந்தித்து வருகின்றன.

ஆனால் தமிழர் அரசியல் பரப்பில் இந்த விடயம் பேசு பொருளாக இல்லை என்பது மிகுந்த கவலைக்குரியது. ஒன்று இரண்டு நிகழ்வுகளில் சில அரசியல் தலைமைகள் இது பற்றி “கவலைதெரிவிப்பதோடு” அல்லது “பேரினவாதத்தின் திட்டமிட்ட செயல்” என்று குற்றஞ்சுமத்துவதோடு இந்தப் பிரச்சினைகள் பற்றிய பேச்சு நின்றுவிடுகிறது. வடக்கு-கிழக்கின் கல்விநிலையின் பின்னடைவு பற்றிய முறையான ஆய்வுகளை மேற்கொண்டு அதற்கான சரியான காரணிகளை அடையாளம் காண்பதற்கான நடவடிக்கைகளைக் கூட தமிழ்த் தலைமைகள் முன்னெடுக்கவில்லை என்பது வேதனைக்குரியது. வறுமைகூடிய மாகாணம், வேலைவாய்ப்பின்மை கூடிய மாகாணம் என்று புள்ளிவிவரங்கள் சுட்டிக்காட்டும் போதும் அது தொடர்பில் தமிழர் அரசியல்பரப்பில் பலமாக வாதப்பிரதிவாதங்கள், கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்படவில்லை. தனது தேசம் கல்வியில் பின்னடைந்துகொண்டும், வறுமையில் உழன்றுகொண்டும் இருக்கையில், அதனைப் பற்றிப் பேசாது, வெறுமனே “தேசியவாத உணர்வை” அள்ளிவீசும் வெறும் வாய்ச்சொல் வீரர்களாகவே தமிழ்த் தலைமைகள் தமது அரசியலைக் கொண்டு நடாத்துகிறார்கள்.

கடந்தகால அநீதிகளுக்கு நியாயம் கேட்பது மிக அவசியமானது. அதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால் கடந்தகாலத்துக்காக நிகழ்காலத்தை அடகுவைத்துவிட்டு, எதிர்காலத்தையும் இழந்து நிற்பது என்பது எவ்வளவு தூரம் அறிவார்ந்த செயல் என்பதை தமிழினம் தம்மைத்தாமே கேட்டுக்கொள்ள வேண்டும். இங்கு ஒரு சமநிலை அவசியமாகிறது. அநீதியாகக் கொல்லப்பட்டவர்களுக்கு ஜெனீவாவில் நியாயம் கேட்பது எவ்வளவு முக்கியமோ, அதேயளவு வடக்கிலும் கிழக்கிலும் வறுமையில் உழலும் தமிழ்த் தேசத்தவர்களுக்கு நியாயம் செய்தலும் முக்கியம். ஆனால் இந்த சமநிலை தமிழ்த் தலைமைகளால் உணரப்படவில்லை. பொருளாதாரப் பின்னடைவால், வறுமையால் வாடிக்கொண்டும் கல்வியில் பின்தங்கிக்கொண்டிருக்கும் ஒரு தேசம், அதன் மனித வளத்தை இழந்துகொண்டிருக்கிறது. மனித வளத்தை இழந்து கொண்டிருக்கும் ஒரு தேசம், தனது பொருளாதாரத்தை இழந்து கொண்டிருக்கிறது. இது இழப்பைத் தொடர்ந்து ஏற்படுத்தும் விசச்சக்கரமாகும். “எழுக தமிழ்” என்பது அர்த்தமுள்ளதாகவேண்டுமானால், இந்த விசச்சக்கரம் உடைக்கப்பட வேண்டும்.

நாளை தேர்தல் காலத்தில் மட்டும் தம்மைத் தேடி வந்து மேடைபோட்டு வெறும் இனத்தேசிய பகட்டாரவாரப்பேச்சு அரசியல்வாதிகளையும் நாளை தீர்வு வரும், நாளை மறுநாள் தீர்வுவரும் எனத் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கெல்லாம் வரப்போகும் தீர்வுதான் “சர்வ ரோக நிவாரணி” என்று வெற்று நம்பிக்கையை மீள மீள விதைக்கும் அரசியல்வாதிகளையும் ஆதரிப்பது தொடர்பில், தமிழ்மக்கள் மீள்பரிசோதனை செய்ய வேண்டும். “தேசம்” என்பது வெற்றி வார்த்தையல்ல. அது வார்த்தைகளாலும் உணர்வினாலும் மட்டுமே கட்டியெழுப்பப்படக்கூடிய ஒன்றல்ல. ஒரு “தேசம்” கட்டியமைக்கப்பட உணர்வு எவ்வளவு முக்கியமோ, அதையும் தாண்டி தொட்டுணரக்கூடிய விடயங்களும் முக்கியத்துவம் பெறுகின்றன.

வறுமைக்கும் நோய் நொடிக்கும் தன்னை இழந்துகொண்டிருக்கும் ஒரு மக்கள்கூட்டத்துக்கு அதிகாரப்பகிர்வுத் தீர்வைத்தாண்டி சிந்திக்க முடியாத தலைமைகளால் எந்த நன்மையும் விளையப் போவதில்லை. ஏனெனில் அந்த அதிகாரப் பகிர்வு கிடைத்தால் கூட, அதனை வைத்து என்ன செய்வது என்ற திட்டம் கூட அவர்களிடம் கிடையாது.

“எழுக தமிழ்” என்பது அர்த்தமுள்ளதாக வேண்டுமென்றால், தமிழ்த் தேசம் தனது அரசியலை வெறும் “பகட்டாரவாரப் பேச்சு” அரசியலைத் தாண்டியதாக மாற்றியமைத்துக்கொள்ள வேண்டும். அது நடக்காத வரை, “எழுக தமிழ்” என்பது தமிழ் மக்களின் நிறைவேறாத கனவாகவும், தமிழ் அரசியல்வாதிகளின் உணர்வெழுச்சிப் பகட்டாரவாரமாகவும் மட்டுமே இருந்துகொண்டிருக்கும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post துரோகம் செய்த நம்பிக்கையான ஊழியர்! (வீடியோ)
Next post மனநிலையை மாற்ற உதவும் புதிய செயலி!! (மருத்துவம்)