By 17 October 2019 0 Comments

தேர்தல் புறக்கணிப்பு!! (கட்டுரை)

இலங்கையில் ஒரு ஜனாதிபதித் தேர்தல், மீண்டும் நடைபெற இருக்கிறது. தேர்தல் களம், கொஞ்சம் கொஞ்சமாகச் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கும் வேளையில், மீண்டுமொருமுறை தமிழ் மக்களிடையே, ‘ஜனாதிபதித் தேர்தலைப் புறக்கணிக்க வேண்டும்’ என்ற கருத்தும் அந்தக் கருத்துகான எதிர்ப்பும் வாதப்பிரதிவாதங்களை உருவாக்கி வருகின்றன.

இந்த வாதப் பிரதிவாதங்களில், தேர்தல் புறக்கணிப்புப் பற்றிப் பல்வேறுபட்ட அபிப்பிராயங்கள் முன்வைக்கப்படுவதை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது.

இந்தக் கட்டுரையின் நோக்கம், ‘புறக்கணிப்பு’ என்பதன் ஜனநாயக அரசியல் பங்கையும் முக்கியத்துவத்தையும் விளங்கிக்கொள்ள முயற்சிப்பதுடன், இன்றைய சூழலுக்கு, அது ஏற்புடையதா என்ற வினாவுக்கு விடைகாண முயற்சிப்பதும் ஆகும்.

இந்த அமைவுச்சூழலில், ‘புறக்கணிப்பு’ என்று தமிழில் பயன்படுத்தப்படும் சொல்லானது, ஆங்கிலத்தில் ‘போய்கொட்’ (Boycott) என்று வழங்கப்படுகிறது. ‘போய்கொட்’ என்பது, உண்மையில் ஒரு நபரின் பெயர்! புறக்கணிப்புக்கு, ‘போய்கொட்’ என்பவரின் பெயர் எப்படி வழங்கப்பட்டது என்பது, ஒரு சுவாரசியமான கதை.

‘போய்கொட்’ என்ற சொல், ஆங்கிலமொழியில் நுழைந்தது, ஐரிஷ் ‘நிலப் போராட்ட’ காலத்திலாகும். பெரும் நிலப்பிரபுவான ஏர்ன் பிரபுவுக்கு, அயர்லாந்தில் சொந்தமாகவிருந்த பெருநிலப்பரப்புக்கு முகவராக, 1880களில் கப்டன் சார்ள்ஸ் போய்கொட் செயற்பட்டுவந்தார்.

குறித்த நிலங்களைப் பொதுமக்கள் பலரும் குத்தகைக்குப் பெற்று, பயிர்ச்செய்கையில் ஈடுபட்டு வந்தனர். குறித்த ஆண்டு, அறுவடை மோசமாக இருந்ததால், ஏர்ன் பிரபு, தனது குத்தகைக்காரர்களுக்கு அவர்களின் வாடகையில் பத்து சதவிகிதம் குறைப்பை வழங்கினார். ஆனால், குத்தகைக் காரர்களோ 25 சதவிகிதம் குறைப்பைக் கோரினார்கள். இந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொள்ள, ஏர்ன் பிரபு மறுத்துவிட்டார்.

இதனைத் தொடர்ந்து, ஏர்ன் பிரபுவின் முகவராகச் செயற்பட்டு, குறித்த நிலங்களை நிர்வகித்து வந்த கப்டன் சார்ள்ஸ் போய்கொட், வாடகையைச் செலுத்தாத 11 குத்தகைக்காரர்களை நிலத்திலிருந்து வெளியேற்றும் முயற்சிகளை முன்னெடுத்தார்.

இந்தச் சந்தர்ப்பத்தில்தான், அந்த ஊரில் வாழ்ந்த மக்கள், ஐரிஷ் தேசியவாதத் தலைவர்களுள் ஒருவரான சார்ள்ஸ் ஸ்டுவர்ட் பானெல் வலியுறுத்தி வந்த, வன்முறைக்கு மாற்றான புறக்கணிப்பு எனும் அரசியல் ஆயுதத்தைக் கையிலெடுத்தனர். அதன்படி குறித்த ஊரவர்கள், கப்டன் சார்ள்ஸ் போய்கொட்டைப் புறக்கணிக்கத் தொடங்கினர்.

சாமானியர்களான பொதுமக்களுக்கு, பெரும் நிலப்பிரபுவின் முகவரைப் புறக்கணிப்பது ஆரம்பத்தில் இலகுவானதொரு காரியமாக இருக்கவில்லை. புறக்கணிப்பில் ஈடுபட்டவர்களுக்கு குறுகிய காலப் பொருளாதாரக் கஷ்டங்கள் இருந்தபோதிலும், புறக்கணிப்பு கப்டன் போய்கொட்டை விரைவில் தனிமைப்படுத்தியது. அவரது தொழிலாளர்கள், வயல்வெளிகளிலும் தொழுவத்திலும் அவரது வீட்டிலும் வேலை செய்வதை நிறுத்தினர். உள்ளூர் வர்த்தகர்கள் அவருடன் வர்த்தகம் செய்வதை நிறுத்தினர். உள்ளூர் தபால்காரர் கூட, அவருக்குத் தபால் வழங்குவதை நிறுத்திவிட்டார். அவரது நிலத்தில் வளர்ந்த பயிர்கள், அறுவடைக்குத் தயாராக இருந்தது; ஆனால் அறுவடை செய்ய உள்ளூரில் ஒருவரும் வரவில்லை. கடைசியாக, வௌியூரிலிருந்து பலத்த பொலிஸ் பாதுகாப்புடன் ஆட்கள் கொண்டுவரப்பட்டு, அறுவடையை கப்டன் போய்கொட் முன்னெடுத்தார். ஆனால் குறித்த ஆட்களை வரவழைக்கவும் அவர்களுக்கான பாதுகாப்பு என்பவற்றுக்கான செலவுகள், அறுவடையின் பெறுமதியையும் பார்க்க அதிகமாகவிருந்தது. அந்த ஊரின் ஐரிஷ் மக்களின் புறக்கணிப்பிலிருந்து, ‘போய்கொட்’ என்ற சொல் ஆங்கிலத்தில் பிரசவம் பெற்றது.

‘புறக்கணிப்பு’, ‘போய்கொட்’ என்பது, பொதுவாகத் தார்மீக, சமூக, அரசியல், சுற்றுச்சூழல் காரணங்களுக்காக, ஒரு நபரின், அமைப்பின், நாட்டின் மீதான எதிர்ப்பை வௌிப்படுத்தும் வழிமுறையாகும்.

புறக்கணிப்பின் நோக்கமானது, ஒன்றில் அது இலக்காகக் கொள்ளும் விடயத்துக்குப் பொருளாதார அல்லது வேறுவகையான இழப்பை ஏற்படுத்துவது. அல்லது, தமது தார்மீகச் சீற்றத்தை, எதிர்ப்பை வௌிப்படுத்தவது ஆகும். இவற்றினூடாகக் குறித்த இலக்கின் ஆட்சேபனைக்குரிய நடத்தையை மாற்ற, இலக்கைக் கட்டாயப்படுத்த முயற்சிப்பது ஆகும்.

ஆகவே, இந்தப் பின்புலத்தில் வைத்து நோக்கும் போது, ‘புறக்கணிப்பு’ என்பதும் ஒரு வகை ‘குடிசார் சட்டமீறல்’ (civil disobedience) நடவடிக்கையாகும். குடிசார் சட்டமீறல் என்பது, அரசாங்கத்தின் சில சட்டங்கள், கோரிக்கைகள், உத்தரவுகள், கட்டளைகளுக்குக் கீழ்ப்படிய மறுக்கும் ஒரு குடிமகனின் செயற்பாடாகும்.

குடிசார் சட்டமீறலாக ஒரு விடயம் அமைய வேண்டுமானால், அது வன்முறையற்றதாக இருக்க வேண்டும் என்று சில அறிஞர்கள் வரையறுப்பர். ஆகவேதான், ‘குடிசார் சட்டமீறல்’ என்பது எப்போதும் அமைதியான எதிர்ப்பு, வன்முறையற்ற எதிர்ப்பு நடவடிக்கையாகக் கருதப்படும்.

அதில் வன்முறை சேரும் போது, அது ‘குடிசார் சட்டமீறலாகக்’ கருதப்படுவதில் சிக்கல்கள் உருவாகும். ஆயினும், மக்லொஸ்கி உள்ளிட்ட சில தத்துவறிஞர்கள் வன்முறையானது, அஹிம்சையை விட வினைதிறன் கூடியதாக அமையும் போது, அதுவும் ‘குடிசார் சட்டமீறலாகக்’ கருதப்படமுடியும் என்று வாதிடுகிறார்கள்.

எது எவ்வாறாயினும், ‘குடிசார் சட்டமீறல்’ என்ற அரசியல், ஜனநாயக ஆயுதத்தை மிக வெற்றிகரமாகப் பயன்படுத்தியவர்களாக மகாத்மா காந்தி, மார்டின் லூதர் கிங் ஜுனியர் ஆகியோரை வரலாறு கொண்டாடுகிறது. இதற்கு அவர்கள் கையாண்ட அஹிம்சை வழி முக்கியமானது.

இந்தக் கட்டுரையின் நோக்கம், ‘குடியியல் சட்டமீறல்’ என்ற பெரும்பரப்பை ஆராய்வதல்ல; மாறாக, அதன் ஓர் அம்சமாகக் கருதக்கூடிய ‘தேர்தல் புறக்கணிப்பைப்’ பற்றி ஆராய்வதாகும்.
தமிழ் மக்கள் தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபடக்கூடாது என்று வாதிடுவோர், அவர்களது நிலைப்பாட்டில் பல நியாயதர்மங்கள் இருந்தாலும், புறக்கணிப்பு என்பது ஜனநாயக விரோதமானது போன்று கருத்துகளை முன்வைப்பது முறையானதோ, பொருத்தமானதோ அல்ல.

அண்மைக்காலத்தில் தேர்தல்காலம் வரும்போதெல்லாம், எல்லோரும் சென்று வாக்களியுங்கள்; வாக்களிப்பது ஜனநாயகக் கடமை என்ற கோசங்கள் அனைவராலும் முன்வைக்கப்படுவதைக் காணலாம். இது நல்ல விடயம்.

ஆனால், தேர்தல் தினத்தன்று சென்று வாக்களிப்பது என்பது எவ்வளவு முக்கியமோ, அதேயளவுக்கு யாருக்கு வாக்களிக்கிறோம், எதற்கு வாக்களிக்கிறோம் என்று அறிந்து வாக்களிப்பதும் முக்கியம்.

வாக்களிப்பு என்பது ‘கடமையே’ எனக் கைவிரலில் மையைப் பூசிவிட்டு, வாக்குச் சீட்டில் உள்ள ஏதேனுமொரு சின்னத்துக்கு வாக்களித்துவிட்டு வரும் செயற்பாடல்ல. அது அதனைத்தாண்டிய பலமானதொரு ஜனநாயக ஆயுதம். அது ஒருவருக்கு நேரடியாக வாக்களிப்பது பற்றியது மட்டுமல்ல; ஒரு தனிமனிதன், அல்லது அந்த ஜனநாயகத்தின் பங்குதாரியான ஒரு மக்கள்கூட்டம், தன்னுடைய அரசியல் அபிப்பிராயத்தை வௌிப்படுத்தும் ஊடகமுமாகும்.

அதனால்தான் உலகமெங்கும் பல்வேறு காலகட்டங்களிலும், பல்வேறு சமூகங்கள், மக்கள்கூட்டங்கள், அரசியல் கட்சிகள் என்பன ‘தேர்தல் புறக்கணிப்பை’, தமது அபிப்பிராயத்தைக் கூட்டாக வௌிப்படுத்தும் ஜனநாயக ஆயுதமாகப் பயன்படுத்தி வந்திருப்பதை, காணக்கூடியதாக இருக்கிறது.

ஜமெய்கா, ஸ்லொவாக்கியா, பங்களாதேஷ், வெனிசுவேலா, பெர்கினா ஃபாஸோ, கானா, மாலி, ட்ரினிடாட் அன்ட் டொபாகோ, டோகோ, ஐவரி கோஸ்ட், வட அயர்லாந்து, கம்பியா, சேர்பியா, அல்ஜீரியா, யுகோஸ்லாவியா, தாய்லாந்து, கென்யா, புஏர்டோ றீகோ, கடலூனியா, மசடோனியா உள்ளிட்ட நாடுகளில், வௌிப்படையான தேர்தல் புறக்கணிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டமையால் வாக்குப்பதிவு சதவீதம் மிகப்பெருமளவு வீழ்ச்சிகண்ட சந்தர்ப்பங்களை இங்கு அடையாளம் காணலாம்.

இதனைத் தாண்டி, உலகின் பல்வேறு நாடுகளிலும் தேர்தல் புறக்கணிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதையும் அவதானிக்கலாம். தேர்தல் புறக்கணிப்பு பற்றிக் கருத்துரைக்கும் அறிஞர்கள் பலரும், இதை ஒரு ஜனநாயக ரீதியாகத் தமது எதிர்ப்பைப் பதிவு செய்யும் ஆயுதமாக, அரசியல் போராட்டத்தை முன்னெடுக்கும் கருவியாகவே பார்க்கிறார்கள்.

குறிப்பாகத் தேர்தல் மோசடிக்கான சாத்தியங்கள் அதிகம் என்று வாக்காளர்கள் கருதும் போது, நடைமுறையிலுள்ள தேர்தல் முறைமையானது தாம் சார்ந்த வேட்பாளர்களுக்குச் சார்பில்லாததாகவும் எதிரானதாகவும் இருக்கும் போது, அல்லது நடத்தப்படும் தேர்தல் சட்டரீதியான தன்மை இல்லாததாக இருக்கும் போது, அல்லது போட்டியிடும் வேட்பாளர்கள் மீது குறித்த மக்களுக்கு ஈர்ப்போ, ஆதரவோ இல்லாத போது, தேர்தல் புறக்கணிப்பு என்பது, மக்கள் தமது எதிர்ப்பை வௌிப்படுத்தும் ஆயுதமாக அமைவதை அவதானிக்கலாம்.

இதனைத் தவிர, வெகு சில சந்தர்ப்பங்களில் தேர்தல் தந்திரோபாயமாக தேர்தல் புறக்கணிப்பு கையாளப்படுவதையும் நாம் அவதானிக்கலாம்.

மறுபுறத்தில், வெகு சில சந்தர்ப்பங்களில், ‘தேர்தல் புறக்கணிப்பு’ என்பது மக்கள் மீது சில அமைப்புகள், ஆயுதக்குழுக்களால் அச்சுறுத்தல் ஊடாகத் திணிக்கப்படும் ஒன்றாகக் கூட அமைகிறது.

இந்தியாவில் மாவோயிஸ்ட் நக்ஸல்கள், தமது கட்டுப்பாட்டில் இருக்கும் மக்கள் மீது, ‘தேர்தல் புறக்கணிப்பு’ திணிப்பை மேற்கொண்டு வருகிறார்கள் என்ற குற்றச்சாட்டுகள், மிக நீண்டகாலமாக முன்வைக்கப்பட்டு வருவதை, இங்கு கருத்திற் கொள்ளலாம். ‘தேர்தல் புறக்கணிப்பு’ என்பது, அச்சுறுத்தல் ஊடாக முன்னெடுக்கப்படும் போது, அது அதன் ஜனநாயகத் தன்மையை இழந்துவிடுகிறது.

இலங்கையின் 2005ஆம் ஆண்டு, ஜனாதிபதித் தேர்தலானது தந்திரோபாய ரீதியான ‘தேர்தல் புறக்கணிப்பு’, ஆயுத இயக்கமொன்றின் செல்வாக்கின்படியான ‘தேர்தல் புறக்கணிப்பு’ ஆகிய இரண்டுக்கும் உதாரணமாக இருக்கிறது.

2005ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில், தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகள் உள்ளிட்ட வடமாகாணத்தின் பெரும்பகுதியில், வெறும் இரண்டு சதவீதத்துக்குக் குறைவான வாக்குகளே பதிவாகியிருந்தன.

இதற்கு முக்கிய காரணம், குறித்த தேர்தலைப் புறக்கணிக்குமாறு தமிழ் மக்களுக்கு, தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு அறிவித்திருந்தமையாகும். இந்த அறிவிப்பானது, தந்திரோபாய ரீதியாக அந்தத் தேர்தலில் வெற்றிபெற்ற மஹிந்த ராஜபக்‌ஷவுக்குச் சாதமாக அமைந்தது. குறித்த தேர்தலில் மஹிந்த ராஜபக்‌ஷ, ரணில் விக்கிரமசிங்ஹவை 1,80,786 வாக்குகளால் தோற்கடித்திருந்தார்.

அதேவேளை, தமிழ் மக்கள் வாக்களித்த பகுதிகளிலெல்லாம் ரணில் விக்கிரமசிங்க கணிசமான பெரும்பான்மையைப் பெற்றிருந்தார். ஒருவேளை, தேர்தலைப் புறக்கணிக்குமாறு தமிழ் மக்களுக்கு, தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு அறிவிக்காது விட்டிருந்தால், வடமாகாணத்திலும் ரணில் விக்கிரமசிங்க கணிசமான பெரும்பான்மையைப் பெற்று, வெற்றி பெற்றிருக்கக்கூடும் என்று பல அரசியல் ஆய்வாளர்களும் குறிப்பிடுகின்றனர்.

ஆகவே, குறித்த தேர்தல் புறக்கணிப்பு என்பது, தமிழ் மக்கள் தமது எதிர்ப்பை வௌிப்படுத்துவதற்கான கருவியாக அமைந்திருந்தாலும், தந்திரோபாய ரீதியாக அது மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு உதவிபுரிந்தது.

‘தேர்தல் புறக்கணிப்பு’ என்ற ஆயுதத்தைப் பயன்படுத்துவதில் உள்ள மிகுந்த சிக்கல் தன்மையை எடுத்துக்காட்ட இது ஒரு முக்கிய உதாரணமாகும். குறித்த தேர்தலில், ராஜபக்‌ஷ வெற்றிபெற வேண்டும் என்பது, தமிழ் மக்களின் விருப்பமல்ல; ஆனால், அவர்களின் தேர்தல் புறக்கணிப்பின் பக்கவிளைவாக, அது அமைந்தது.

இந்த இடத்தில்தான், ஜனநாயக ஆயுதமான ‘தேர்தல் புறக்கணிப்பை’ பயன்படுத்தும் போது, நாம் ஆழ்ந்து யோசிக்க வேண்டிய தேவை ஏற்படுகிறது. ‘வெறுமனே எடுத்தோம் கவிழ்த்தோம்’ என்று உணர்ச்சிவசப்பட்டு இயங்க முடியாது. ஏனென்றால் நமது நோக்கம், தூய்மையானதாகவே இருந்தாலும் விளைவுகளும் பக்கவிளைவுகளும் கசப்பானதாக அமைந்துவிடலாம்.Post a Comment

Protected by WP Anti Spam