கடமை !! (கட்டுரை)

Read Time:24 Minute, 58 Second

“சஜித் பிரேமதாஸவின் வெற்றி என்பது, ஐக்கிய தேசியக் கட்சியின் வெற்றியல்ல; அது முஸ்லிம் காங்கிரஸ் தலைவரின் வெற்றி” என்று, அந்தக் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் கூறியிருக்கின்றார்.

மேலும், முஸ்லிம் காங்கிரஸ் ஸ்தாபகத் தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப், ரணசிங்க பிரேமதாஸவை ஜனாதிபதியாகக் கொண்டு வந்தது போல, தற்போதைய வேட்பாளரான பிரேமதாஸவின் மகனை, ஜனாதிபதியாக முஸ்லிம் காங்கிரஸ் கொண்டு வரவேண்டும்” என்றும் ஹக்கீம் கோரிக்கை விடுத்திருக்கிறார்.

அதேவேளை, “சஜித் பிரேமதாஸவை வெல்ல வைப்பது, முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்களின் கடமையாகும்” என்றும் அவர் கூறியிருக்கின்றார்.

நிந்தவூரில் நடைபெற்ற முஸ்லிம் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட மத்திய குழுக் கூட்டத்திலேயே, இந்த விடயங்களைக் ஹக்கீம் தெரிவித்திருக்கின்றார்.

ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் போட்டியிடும் அந்தக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவு வழங்கும் பொருட்டு, முஸ்லிம் காங்கிரஸின் உயர் பீடத்தினுடைய அங்கிகாரத்தை அந்தக் கட்சியின் தலைவர் ஹக்கீம், இதுவரை பெறவில்லை என்ற தகவல் கசிந்துள்ளது.

தற்றுணிவின் பேரிலேயே, சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவை வழங்க ஹக்கீம் தீர்மானித்துள்ளார் எனவும் அறிய முடிகின்றது. ஆனால், இது குறித்து கட்சிக்குள்ளிருக்கும் எவரும், இதுவரை எதிர்க் கேள்வி எழுப்பவில்லை.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்பது, இலங்கையில் கணிசமான முஸ்லிம்கள் வாக்களிக்கின்றதொரு கட்சியாகும். எனவே, அந்தக் கட்சியின் அரசியல் செயற்பாடுகள், முஸ்லிம் சமூகத்தின் மீது பெருமளவில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதையும் மறந்து விடலாகாது.

ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர் சஜித் பிரேமதாஸவுக்கு எந்தவித நிபந்தனைகளுமின்றித் தமது ஆதரவை, முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அறிவித்திருக்கிறார். தீர்க்கப்படாத ஏகப்பட்ட பிரச்சினைகள் முஸ்லிம் சமூகத்துக்கு இருக்கின்ற போது, நிபந்தனைகள் எவையுமின்றி சஜித் பிரேமதாஸவை ஏன் ஆதரிக்க ஹக்கீம் துணிந்தார் என்கிற கேள்விக்கு, இதுவரை பதில்களில்லை.

தவறான ஒப்பீடு

“சஜித் பிரேமதாஸவின் தந்தையார் ரணசிங்க பிரேமதாஸவை, 1988ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில், அஷ்ரப் வெற்றிபெறச் செய்தமை போன்று, அவரின் மகனையும் இந்த ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெறச் செய்தல், முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்களின் கடமை” என்று ஹக்கீம் கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

1988ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில், ரணசிங்க பிரேமதாஸவுக்கு முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவை வழங்குவதற்காக, அஷ்ரப் முன்வைத்த நிபந்தனையானது வரலாற்றுப் புகழ்மிக்கதாகும்.

தேர்தல்களில் போட்டியிடும் அரசியல் கட்சிகள், அந்தந்தத் தேர்தல்களில் அளிக்கப்படும் செல்லுபடியான மொத்த வாக்குகளில், 12 சதவீதமானவற்றைப் பெற்றிருந்தால் மட்டுமே, பிரதிநிதிகளைப் பெறுவதற்கான தகுதியை அடைந்து கொள்ள முடியும் என்கிற சட்டம் அப்போது இருந்தது.

இந்த நிலையானது, சிறிய மற்றும் சிறுபான்மைக் கட்சிகளுக்குப் பிரதிநிதிகளைப் பெற்றுக் கொள்வதில் பாரிய தடையாக இருந்தது. எனவே, 12 சதவீதம் எனும் அந்த வெட்டுப்புள்ளியை ஐந்து சதவீதமாகக் குறைக்க வேண்டும் என்றும், அவ்வாறு செய்தால் முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவை வழங்குவதாகவும் பிரேமதாஸவுக்கு நிபந்தனை விதித்து, அஷ்ரப் அதில் வெற்றியும் கண்டார்.

இத்தனைக்கும் முஸ்லிம் காங்கிரஸுக்கு, அப்போது நாடாளுமன்றத்தில் ஓர் ஆசனம் கூட இருக்கவில்லை. அவ்வாறானதொரு நிலையில்தான், இப்படியொரு பாரிய விடயத்தைப் பேரம்பேசி, அஷ்ரப் வென்றெடுத்தார்.

ஆனால், நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் சஜித் பிரேமதாஸவுக்கு, முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவை வழங்கும் பொருட்டு, எந்தவித பேரங்கள் பேசப்பட்டன? அல்லது, நிபந்தனையற்ற ஆதரவுதான் வழங்கப்பட்டுள்ளதா? இந்த நிலையில், ரணசிங்க பிரேமதாஸவுக்கு அஷ்ரப் வழங்கிய ஆதரவையும் சஜித் பிரேமதாஸவுக்கு ஹக்கீம் வழங்கும் ஆதரவையும் ஒப்பிடக்கூடிய வாய்ப்புகள் உள்ளனவா என்பதை வாசகர்கள்தான் முடிவுசெய்ய வேண்டும்.

முஸ்லிம்களின் தீர்க்கப்படாத பிரச்சினைகள் நிறையவே உள்ளன. முஸ்லிம்கள் வென்றெடுக்க வேண்டிய உரிமைகள் எத்தனையோ இருக்கின்றன. முஸ்லிம்களின் நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்கள் அரசாங்கத்தால், ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன.

கரையோர நிர்வாக மாவட்டம் எனும், முஸ்லிம்களின் நீண்டகாலக் கோரிக்கை கிடப்பில் போடப்பட்டுள்ளது. நுரைச்சோலையில் முஸ்லிம்களுக்காக சவூதி அரேபியா நிர்மாணித்துக் கொடுத்த 500 வீடுகள், 10 வருடங்களுக்கும் மேலாகப் பாழடைந்து கிடக்கின்றன. ஒலுவிலில் முஸ்லிம்களின் காணிகளைச் சுவீகரித்து நிர்மாணிக்கப்பட்ட துறைமுகம், எந்தவித பயன்களுமின்றிச் ‘சும்மா’ கிடக்கின்றது.

நல்லாட்சி அரசாங்கம் அமைந்த போது, “‘முஸ்லிம் காங்கிரஸுக்கு, இது வசந்த காலம்” என்று அந்தக் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் அடிக்கடி கூறிவந்தார். ஆனால், முஸ்லிம்கள் எதிர்கொண்டு வரும், எந்தவொரு பிரச்சினைக்கும், தமது வசந்த காலத்தில் தீர்வைப் பெற்றுக் கொடுக்க, நல்லாட்சி அரசாங்கத்தால் முடியவில்லை என்பதுதான் கசப்பான உண்மையாகும்.

எந்தவோர் ஆட்சியிலும் இல்லாத நெருக்குவாரங்களை, நல்லாட்சியில் எதிர்கொள்ளும் நிலை முஸ்லிம்களுக்கு ஏற்பட்டது. குர்ஆனை வைத்திருப்பதற்கே முஸ்லிம்கள் அச்சப்பட்ட சூழ்நிலையொன்று, இந்த ஆட்சியில்தான் உருவானது.

ஜனாதிபதித் தேர்தல் என்பது, பேரம்பேசல்களில் ஈடுவதற்கான நல்ல தருணமாகும். எனவே, முஸ்லிம் சமூகத்துக்கு நன்மைகளைப் பெற்றுக் கொடுக்கும் வகையிலான கோரிக்கைகளை நிபந்தனைகளாக முன்வைத்து, அவற்றை ஏற்றுக் கொள்ளும் தரப்பினருக்குத் தமது ஆதரவை வழங்குவதற்கு, முஸ்லிம் காங்கிரஸ் முன்வந்திருக்க வேண்டும் என்பதே, சமூக அக்கறையுடையோரின் வாதமாகும்.

கிடப்பில் விழுந்த வாக்குறுதிகள்

இன்னொருபுறம், கடந்த தேர்தல்களின்போது, தற்போதைய ஆட்சியாளர்கள் முஸ்லிம்களுக்கு வழங்கிய முக்கியமான வாக்குறுதிகள் எவையும் நிறைவேற்றப்பட்டதாகத் தெரியவில்லை.

இந்த அரசாங்கம் ஆட்சியமைத்து, கிட்டத்தட்ட நான்கு வருடங்கள் கடந்து விட்டபோதும், தேர்தல் மேடைகளில் அப்போது முஸ்லிம் மக்களுக்கு இந்த ஆட்சியாளர்கள் வழங்கிய வாக்குறுதிகள் கிடப்பிலேயே உள்ளன.

கல்முனை சந்தாங்கேணி மைதானத்தில் நடைபெற்ற, கடந்த பொதுத் தேர்தலுக்கான பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, “சாய்ந்தமருதுக்கு உள்ளூராட்சி சபை வழங்குவேன்” என்றார்.

“ஒலுவில் துறைமுகத்தைச் சர்வதேச துறைமுகம் ஆக்குவேன்” எனக் கூறினார்.
“இங்கு கைத்தொழில் பேட்டையை உருவாக்குவேன்” என்று வாக்குறுதி வழங்கினார்.

ஆனால், அவர் கூறிய எதுவும் இன்றுவரை நடக்கவில்லை. அப்போது ஓரளவாயினும் இயங்கிக் கொண்டிருந்த ஒலுவில் மீன்பிடித் துறைமுகம் கூட, இப்போது மணல் மூடிய நிலையில் செயலற்றுப் போய்க் கிடக்கிறது.

நிலைமை இப்படியிருக்க, எந்தவித கோரிக்கைகளுமின்றி சஜித் பிரேமதாஸவை முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஆதரிப்பதற்கு எடுத்த தீர்மானத்துக்கான நியாய தர்மங்களையாவது, மக்களுக்கு அவர் சொல்ல வேண்டும்.

மக்கள் மந்தைகளில்லை

கட்சிகளின் தலைவர்கள் சொல்கிறபடியெல்லாம், ஆதரவாளர்கள் செய்வார்கள் என்கிற நம்பிக்கையில், தாம் விரும்பியவாறெல்லாம் ஆதரவாளர்களை மேய்ப்பதற்கு, அரசியல் கட்சிகளின் தலைவர்கள் முயலக் கூடாது.

மறுபுறம், ஏன், எதற்கு என்கிற கேள்விகளற்று, கட்சித் தலைவர்களின் சுண்டு விரல் அசைவுகளுக்கெல்லாம் கட்டுப்படுகின்ற மந்தைகளாகவும் ஆதரவாளர்கள் மாறி விடக்கூடாது.

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவரை, ஏன் ஆதரிக்க வேண்டும், ஏன் ஆதரிக்கக் கூடாது என்பதற்குரிய நியாயமான காரணங்களை, மனச்சாட்சியின் அடிப்படையில், உள் விருப்பு – வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டு, ஒவ்வொரு வாக்காளனும் பட்டியலிட்டுக் கொள்ளும் போது, யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதற்கான விடையைக் கண்டறிந்து கொள்ள முடியும்.

ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு, நிபந்தனையற்ற ஆதரவை வழங்குவதற்கு முஸ்லிம் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் எடுத்துள்ள முடிவுகளால், யாருக்கு வாக்களிப்பது என்கிற கேள்விக்கு, அறிவு ரீதியானதொரு தீர்மானத்தை முஸ்லிம் வாக்காளர்கள் எடுக்க வேண்டியது அவசியமாகும்.

சஜித் பிரேமதாஸவுக்கு முஸ்லிம்கள் வாக்களிக்க வேண்டுமா? இல்லையா என்பது பற்றி இந்தக் கட்டுரை பேச முற்படவில்லை. ஆனால், முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் கூறுகின்றமைபோல், சஜித் பிரேமதாஸவுக்கு முஸ்லிம்கள் வாக்களிக்க வேண்டுமென்றால், அதற்குரிய நியாயமான காரணங்கள் கூறப்பட வேண்டும் இல்லையா? அல்லது, தான் ஆட்சிக்கு வந்தால், முஸ்லிம்களுக்கு ‘எவ்வாறான நன்மைகளையெல்லாம் செய்வேன்’ என்று, சஜித் பிரேமதாஸவாவது வாக்குறுதிகளை வழங்க வேண்டும்.

இவை எதுவுமில்லாமல், தலைவர்கள் சொல்கிறார்கள் என்பதற்காக, வேட்பாளர்களை மக்கள் ஆதரிப்பதென்பது, பகுத்தறிவுடைய செயற்பாடாக அமையாது.

அரசியலில் மக்கள் எப்போதும் கட்சிப் ‘பித்து’ப் பிடித்த நிலையில் இயங்குவதில்லை. அதற்குக் கடந்த ஜனாதிபதித் தேர்தல், நல்ல உதாரணமாகும். கட்சிகளையும் தலைவர்களையும் அநாதரவாக விட்டுவிட்டு, மைத்திரியை ஆதரிப்பதற்கு முஸ்லிம்கள் எடுத்த முடிவு, அரசியலரங்கில் மிக முக்கியமான வரலாற்று நிகழ்வாகும்.

அரசியல் கட்சிகளின் செல்வாக்குகளுக்கு அப்பாற்பட்டு, தங்களாலும் முடிவுகளைத் தனித்து எடுக்க முடியும் என்பதற்கு, கடந்த ஜனாதிபதித் தேர்தலில், முஸ்லிம் மக்கள் எடுத்த தீர்மானம் நல்ல உதாரணமாகும். மட்டுமன்றி, முஸ்லிம் அரசியல் தலைவர்களுக்கு, அது நல்லதொரு பாடமாகவும் அமைந்திருந்தது. அந்தவகையில், மக்கள் எடுக்கப் போகும் முடிவுகளை அவ்வளவு எளிதாக அனுமானித்து விடவும் முடியாது. சத்தமில்லாமல் பல ஆட்சிகளை வாக்குச் சீட்டுகளால் மக்கள் புரட்டிப் போட்டிருக்கிறார்கள்.

எனவே, தாம் சொல்வதையெல்லாம் சிரம் மேற்கொண்டு, மக்கள் நிறைவேற்றி விடுவார்கள் என, அரசியல் தலைவர்கள் நினைத்து விடக்கூடாது. எதற்காக, ஒரு வேட்பாளனுக்கு வாக்களிக்க வேண்டும் என்பதற்கான விளக்கத்தை விஞ்ஞானபூர்வமாக வழங்குதல் அரசியல் தலைவர்களினது கடமையாகும்.

என்ன நினைக்கின்றார்கள் வாக்காளர்கள்?

அரசை ஆளும் அதிகாரம் சட்டரீதியாக சமூகத்திலுள்ள எல்லா அங்கத்தவர்களிடமும் ஜனநாயகத்தின் அடிப்படையில் உள்ளது.

“ஒரு குறிப்பிட்ட வர்க்கம் அல்லது வர்க்கங்களிடம் ஆளும் அதிகாரம் வழங்கப்படமாட்டாது” என்கிறார் கோர்னர் என்பவர்.

“ஜனநாயகம் என்பது ஓர் அரசாங்க முறையாகும். இது இறைமை அதிகாரத்தை மக்கள் தமக்கிடையில் பகிர்ந்து கொள்கின்ற உரிமைகளை வழங்குகின்ற ஒன்றாகும்” என்று அவர் மேலும் கூறுகின்றார்.

வரைவிலக்கணங்களினூடாக பெறக் கூடிய உண்மை அரச அதிகாரத்தின் இறுதிப் பொறுப்பு,, மக்களிடமேயுள்ளது. இயற்கையாக மக்களின் நேரடி பங்குபற்றலால் அல்லது அவர்களின் பிரதிநிதிகளினூடாக உருவாக்கப்படுகின்ற அரசாங்கம் என்பதாகும்.

ஜனநாயகம் என்பது சிறப்பாக இயங்க வேண்டுமாயின் சில அடிப்படை அம்சங்கள் காணப்படல் வேண்டும்.

சமத்துவமும் சுதந்திரமும்

சமத்துவமும் சுதந்திரமும் ஜனநாயகத்தின் இரண்டு பிரதான அடிப்படைத் தத்துவங்களாகும். ஜனநாயக தத்துவத்தின்படி சட்டத்தின் முன் எல்லோரும் சமமானவர்களாகும். ஜனநாயக அரசாங்கம் ஒன்று சமூகஇ பொருளாதார வாய்ப்புக்களை சமத்துவமாக எல்லோருக்கும் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். சுதந்திரம் என்பது ஒரு மனிதன் தனது சுய முன்னேற்றத்திற்கு அவசியமானது எனக் கருதும் எல்லாவற்றையும் சமூகத்தின் ஏனைய அங்கத்தவர்களுக்கு எவ்வித பாதிப்புமின்றி செய்வதற்குள்ள உரிமையாகும். இச்சுதந்திரங்கள் ஒவ்வொரு பிரசைக்கும் கிடைப்பதை ஜனநாயகம் உத்தரவாதப்படுத்த வேண்டும்.

1.சகிப்புத் தன்மை:

ஜனநாயகம் சகிப்புத் தன்மையினை முதன்மைப்படுத்துகிறது. சகிப்புத் தன்மையில்லாவிட்டால் ஜனநாயகம் என்பது வெற்றி பெற முடியாது.

2. சுதந்திர சமூக முறைமை:

சுதந்திரம், சமத்துவம், சகிப்புத் தன்மை என்பவற்றுடன் இச் சமூக முறைமை மிகவும் நெருக்கமான தொடர்பு கொண்டதாகும்.

3. சம்மதத்தினாலான நிர்வாகம்:

சுதந்திரமான சமூகத்தில் ஒவ்வொருவரினதும் சம்மதத்தின் அடிப்படையிலேயே தீர்மானங்கள்

4. கலந்துரையாடலிலான தீர்மானங்கள்:

ஜனநாயகம் சிறப்பாக இயங்க வேண்டுமானால் ஒவ்வொரு பிரச்சினை தொடர்பாகவும் முடிவு எடுப்பதற்கு முன்னர் நீண்ட விவாதங்கள் நடைபெற வேண்டும்.

5. பிரசித்த இறைமை:

முழுச் சமூக அமைப்பும் ஜனநாயகத்தில் மிகவும் உயர்ந்த ஸ்தானத்திலேயே உள்ளது. ரூசோவின் வார்த்தையில் கூறுவதாயின் உண்மையான ஜனநாயகம் என்பதில் மக்களின் குரலே கடவுளின் குரலாக மதிக்கப்படும்.

6. அரசமைப்பு ரீதியான அரசாங்க மாற்றம்:

ஜனநாயகத்தில் மக்களிடமே இறுதி அதிகாரம் காணப்படுவதினால் அவர்கள் அரசாங்கத்தினை மாற்றியமைக்கும் சக்தி கொண்டவர்களாக காணப்படுகிறார்கள்.

ஜனநாயகம் தொடர்பாக ஆய்வு செய்பவர்கள் நேரடி ஜனநாயகமா? ஜனநாயக நாடொன்றில் தனக்கு விரும்பிய கருத்தை வெளியிடுவதற்கும், தனக்கு விருப்பமான அரசியல் கட்சியை அல்லது நபர் ஒருவரை ஆதரிப்பதற்குமான உரிமை ஒவ்வொருவருக்கும் உள்ளது.

அந்தவகையில், நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில், சமூக ஊடகங்களில் வெளிப்படுத்தப்பட்டுள்ள கருத்துகளை இங்கு தொகுத்து வழங்குகிறோம்.

நாடுகளின் விளையாட்டு

நாளுக்கொரு வேட்பாளர் தேர்தல் களத்துக்குத் தயாராகிக் கொண்டிருக்கிறார்.
சிலர் promising (நம்பிக்கைக்குரியவர்) ஆகவும் தெரிகிறார்கள்.
எந்த வகையில் promising என்றால் வெல்லமாட்டார்கள்; ஆனால், கணிசமான வாக்குகளைப் பெறுவார்கள்.
அந்த வாக்குப்பிரிப்பு, யாரோ ஒருவரை மறைமுகமாக வெல்ல வைக்க அல்லது வெற்றிபெறும் வாய்ப்புள்ள ஒருவரைத் தோற்கடிக்க வல்லது.
முன்னாள் இராணுவத் தளபதியின் தேர்தல் பிரவேசம், சாதாரண ஒரு விளையாட்டு அல்ல; அவரோடு இருந்தவர்கள் கவனிக்கத்தக்கவர்கள்.
அது, வெறும் ஜனாதிபதி தேர்தலுக்கான பிரவேசம் என்று மாத்திரம், இலகுவாக எடை போட்டு விட இயலாது.
நமது நாட்டின் அடுத்த ஜனாதிபதியைத் தீர்மானிக்கும் வேள்வியில் மூன்று தேசங்கள் முண்டியடித்துக்கொண்டு, பல பில்லியன்களை இறைக்கத்தொடங்கி விட்டன.
அவைதான் நேரடி வேட்பாளர்களையும் மறை முக வேட்பாளர்களையும் பொறுக்கியிருக்கின்றன.
இந்த விடயம் சில வேட்பாளர்களுக்குக் கூடத் தெரியாது.
அமெரிக்கா, சீனா, இந்தியா என்கிற பேரண்டங்களின் பந்தயத்தில், அவர்களில் ஒருவர் வெல்லப்போவதும் திருவாளர் பொது ஜனங்கள் தோற்கப்போவதும் உறுதி.

-முஜீப் இப்றாகிம்

பழிசொல்ல வேண்டாம்

யார் ஜனாதிபதியானாலும் அவருடன் உள்ள முஸ்லிம் தலைமைகள் மக்களுக்குப் பணி செய்வர்.
யாரையும் யாரும் துரோகி என்றோ காட்டிக்கொடுப்பவர் என்றோ பழி சுமத்த வேண்டிய அவசியமில்லை. எல்லோரையும் போலவே, முஸ்லிம்களும் எல்லாத் தரப்புக்கும் ஆதரவளிப்பர்.
எல்லா முட்டைகளையும் ஒரே கூடையில் வைக்கக்கூடாது.

-சட்டத்தரணி எம்.எம். பஹீஜ்

வேசம்

ஒட்டகத்தக் கட்டிக்கோ
மொட்டுவோடு ஒட்டிக்கோ
மட்டுப் பக்க மாயக்காரி

ஒத்துழைக்க ஒத்துக்கோ
மத்ததெல்லாம் பொத்திக்கோ
வித்த காட்டும் சாலக்காரி

விட வேண்டும் ரோசத்தை
தொட வேண்டும் நேசத்தை
விடிகாலை செய்தி சொல்லுமடி வேசத்தை.

-டொக்டர் ஆகில் அஹமட் சரீப்டீன்

கோட்டா

ஒருவர்: நாம் கோட்டாவுக்கு ஓட்டுப்போடாது, அவர் வெற்றிபெற்றால் அடிவாங்குவது நிச்சயம்.
அடுத்தவர்: நாம அவருக்கு ஓட்டுப்போட்டு வெற்றிபெற்றாலும் அடிவாங்குவது நிச்சயம்.
மூன்றாமவர்: அவருக்கு ஓட்டுப்போட்டு அடிவாங்குவதை விட ஓட்டுப்போடாமல் அடிவாங்குவது மேல்.
நான்காமவர்: அவரை வெற்றிபெற விடாமல் தடுத்தால், அடிவாங்கவேண்டிய அவசியமே இருக்காது.
இவ்வாறு சம்பாஷணை தொடர்ந்தது.

-சிரேஷ்ட ஊடகவியலாளர் தாஹா முஸம்மில்

வாடகை மனிதர்கள்

‘இடது சாரிகளை வாடகைக்கு அமர்த்த முடியும்’ என 1972ஆம் ஆண்டு ஸ்ரீமா, நக்கலாகச் சொன்னதுதான் நினைவுக்கு வந்து தொலைக்கிறது.

-றியாஸ் குரானா

போதை

கள்ளினும் காமத்தினும் போதை மிக்கது அதிகாரமாகும். அதிக அதிகாரம் அளவு கடந்த போதையைத்தரும்.
அதிகாரத்தைக் கையாண்டு ஒரு முறை அனுபவப்பட்டு விட்டவர்கள், வெகு சுலபத்தில் அதனைக் கைவிடத் துணியார் என்றும் தன்னிடத்திலேயே அதிகாரம் சிரஞ்சீவியாக நிலைத்திருக்கவும் பார்த்துக் கொள்வர்
அந்தச் சுயநல விதிக்கமைய சஜித் பிரேமதாஸவின் வெற்றி ரணில் விக்கிரமசிங்கவை அரசியலில் எதிர்கால சந்திரிகா அம்மையாராக ஆக்கிவிடும் என்ற அச்சம் சஜித் பிரேமதாஸவின் தோல்வியை தீர்மானிக்கும்.

-தாவூத் நஸீர்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஜப்பானியர்களின் நீண்ட ஆயுளுக்கான காரணம் இவைதான்!! (மருத்துவம்)
Next post ஒரு லட்சம் புத்தகங்கள்! (மகளிர் பக்கம்)