By 19 October 2019 0 Comments

விண்வெளியில் சாகசப் பயணம்!! (மகளிர் பக்கம்)

தேனியை சேர்ந்த மாணவி விண்வெளியில் சாகசப் பயணம் நிகழ்த்தி அசத்தி உள்ளார்.

தேனியை சேர்ந்த சிறுகதை எழுத்தாளர் அல்லிநகரம் தாமோதரன் – அமுதா தம்பதியரின் மகள் உதயகீர்த்திகா (21). ஏழ்மையான குடும்பம். ஆனால் கல்வியறிவில் சிறந்த குடும்பம். மாணவி உதயகீர்த்திகா தேனியில் பிரசன்டேசன் கான்வென்ட் மேல்நிலைப்பள்ளியில் தமிழ் வழியில் பிளஸ் 2 முடித்து 92.5 சதவீதம் மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றார். சிறு வயதில் மாடியில் படுத்துக் கொண்டு விண்வெளியில் விளையாடுவதை போல் மகள் காணும் கனவினை, தந்தை தாமோதரன் பெரிதுப்படுத்தவில்லை.

பிளஸ் 2 முடித்ததும், ‘அடுத்த என்னம்மா படிக்கப்போற?’ என தன் மகளிடம் கேட்ட தாமோதரனுக்கு மகள் உதயகீர்த்திகா ‘விண்வெளி ஆய்வு தொடர்பான படிப்பு படிக்கணும்ப்பா’ என்று சொன்ன பதில் நிலைகுலைய வைத்தது. ‘மகளின் ஆர்வத்தை எப்படி நிறைவேற்றப் போகிறோம்’ என கலங்கிய அவர், அதற்கு ஆகும் செலவினை மதிப்பிட்டதும் கிட்டத்தட்ட மயங்கித்தான் போனார். அப்போது அவரது நண்பர்கள் சிலர் கொடுத்த ஆறுதல் தாமோதரனை தலைநிமிர வைத்தது. துணிச்சலில் உக்ரைன் நாட்டில் உள்ள விமானப்படை பல்கலைக்கழகத்தில் ஏரோஸ்பேஸ் அண்ட் ஏர்கிராப்ட் மெயின்டெனென்ஸ் என்ற நான்கு ஆண்டு பொறியியல் படிப்பில் தன் மகளை சேர்த்தார். நான்கு ஆண்டுகளும் மகளை படிக்க வைக்க தாமோதரன் – அமுதா தம்பதியினர் நெருப்பாற்றில் தான் நீந்தினர்.

படிப்பில் உச்சம் தொட்ட மாணவி, உக்ரைனில் இருந்து வரும் போதே ‘போலந்தில் விண்வெளி வீராங்கனை பயிற்சிக்கு தேர்வாகி உள்ளேன்’ என்ற தகவலோடு வந்தார். இவ்வளவு துாரம் நம்மை வழி நடத்திய கடவுள் இனிமேல் கை விட மாட்டார் என்ற நம்பிக்கையுடன் தாமோதரன் தம்பதி, மீண்டும் நண்பர்களின் உதவியுடன் தங்கள் மகளை போலந்திற்கு அனுப்பி வைத்தனர். அங்கு இரண்டு மாதம் கடும் பயிற்சி. இந்த பயிற்சியில் உள்ள கடுமையை வார்த்தைகளில் கொண்டு வர முடியாது. தனது தாய், தந்தை தன்னை எந்த அளவு நெருக்கடியான சூழலில் அனுப்பி வைத்துள்ளனர் என்பதை அறிந்த உதயகீர்த்திகா, போலந்தில் தனது முழுத்திறனையும் வெளிப்படுத்தவே, தன்னை பெற்றவர்களுக்கு தான் செய்யும் கைமாறுதல் என்பதை உணர்ந்திருந்தார்.

போலந்து நாட்டில் உள்ள அனலாக் அர்ஷனால்ட் பயிற்சி மையத்திற்கு பல்வேறு உலக நாடுகளில் இருந்து ஆண்கள், பெண்கள் என பலரும் வந்திருந்தனர். ஒவ்வொருவரும் ஒன்றிரண்டு பயிற்சிகளுடன் முடித்துக் கொண்டனர். உதயகீர்த்திகாவோ உயிரை பணயம் வைத்து 10 பயிற்சிகளையும் நிறைவு செய்து வந்திருந்தார். அவரை இல்லத்தில் சந்தித்தோம். ‘‘போலந்து நாட்டில் கிராக்கோசிட்டி, பிலா, வர்ஷா, ஆல்ஸ்டின் நகரங்களில் பயிற்சிகள் நடந்தன. சந்திரன், செவ்வாய் கிரகங்களில் ஆய்வு செய்யும் பயிற்சிகள் முதல்கட்டமாக நடந்தது. அந்த பயிற்சி மையத்திலேயே செவ்வாய், சந்திரன் கிரகங்களின் சூழல் உருவாக்கப்பட்டு அங்கு ஏழு நாட்கள் பயிற்சி நடந்தது.

மேகங்களுக்கு மேல் மிதந்து விண்வெளியில் ஆய்வு செய்யும் பயிற்சி, உடலில் ஆக்ஸிஜன் டேங்க் கட்டி கடலுக்கு அடியில் நீந்தும் பயிற்சிகள் நடந்தன. வழக்கமாக நாம் சுவாசிக்கும் காற்றில் 30 சதவீதம் மட்டுமே ஆக்ஸிஜன் இருக்கும். ஆனால் நாங்கள் பயிற்சி பெறும் போது, உடலில் நூறு சதவீதம் ஆக்ஸிஜன் சுவாசம் கொடுப்பார்கள். அப்போது உடலில் உள்ள ஒட்டுமொத்த நைட்ரஜனும் வெளியேறி விடும். அந்த சமயத்தில் நமக்கு சில வேலைகள் கொடுப்பார்கள். நாம் வேலை செய்யும் போதே சுவாசிக்கும் ஆக்ஸிஜனை நிறுத்தி விடுவார்கள். அதனை நாங்கள் உணர்கிறோமா என்பதை கண்காணிப்பார்கள். நான் அந்த தேர்விலும் வெற்றி பெற்றேன்.

அடுத்த பயிற்சி ராக்கெட்டை நாங்களே உருவாக்கி பறக்கவிட வேண்டும். நான் உருவாக்கிய ராக்கெட் ஆயிரம் அடி உயரம் பறந்து மீண்டும் பத்திரமாக தரையிறங்கியது. அடுத்து விண்வெளியில் இருந்து பாராசூட் மூலம் குதிக்க வேண்டும். இதில் சில விதிமுறைகள் உள்ளன. விதிகளை மீறினால் உடலில் அடிபட்டு விடும். நாங்கள் விண்வெளிக்கு சென்று திரும்புகையில் ஏதாவது ஒரு வனச்சூழலிலோ, கடல் சூழலிலோ சிக்கிக் கொண்டால் தப்பி உயிர் பிழைக்கும் பயிற்சிகளும் அளிக்கப்பட்டன. விண்வெளியில் உயரே செல்ல செல்ல அழுத்தம் பன்மடங்கிற்கு அதிகரிக்கும். அப்போது நாம் எப்படி செயல்பட வேண்டும் என்ற பயிற்சியும் கொடுத்தாங்க.

3 ஆயிரம் மீட்டர், 4 ஆயிரம் மீட்டர் என பயிற்சியின் உயரம் அதிகரிக்கப்பட்டு 10 ஆயிரம் மீட்டர் உயரம் வரை செல்லும்போது நம் உடலின் தாங்கும் திறன் உட்பட பல்வேறு பயிற்சிகள் வழங்கினர். இதுவும் உயிரை குடிக்கும் அளவு சவாலான பயிற்சி தான். கடைசி இரண்டு கட்ட பயிற்சிகள் போலந்து நாட்டின் ராணுவ அகாடமியில் நடந்தது. ராணுவத்தினர் எப்போதும் கடினமாகவும், மிகவும் கவனமாகவும் நடந்து கொள்வார்கள். மென்மைத்தன்மையை எதிர்பார்க்க முடியாது. இதனால் இந்த பயிற்சியை அவர்கள் வழங்கினர்’’ என்றவர் பயிற்சியின் அபாயத்தை கேட்டு பலர் பின்வாங்கியதாக தெரிவித்தார்.

‘‘பயிற்சிகள் ரொம்பவே கடினமாகத் தான் இருக்கும்ன்னு எனக்கு தெரியும். என்ன ஆனாலும் பரவாயில்லைன்னு பயிற்சி எடுக்க முன்வந்தேன். இந்த பயிற்சியின் போது ஒரு செகண்டிற்கு 8 கி.மீ வேகத்தில் பறக்கும் பயிற்சி அளிக்கப்பட்டது. அப்போது இருதயத்திற்கு வரும் ரத்தம் நின்று போகும். இருதயம் செயல் இழக்கும். நரம்பு, கண் பார்வை, கேட்கும் திறன், சுவாசிப்பது ஏன் ஒட்டுமொத்த உடல் உறுப்புகளுமே செயல் இழந்து உயிரே போய்விடும் அபாயம் உண்டு. இதை பற்றி எல்லாம் நான் கவலைப்படவில்லை. என் பெற்றோர் என்னை எதற்கு அனுப்பி வைத்தனரோ, அவர்களுக்கு உயர்வைத் தர வேண்டும் என்ற எண்ணம் மட்டும் தான் என் மனதில் ஆழமாக பதிந்து இருந்தது.

அதனால் எப்படியாவது எல்லா பயிற்சியினையும் நிறைவு செய்ய வேண்டும் என்று பிடிவாதமாக இருந்தேன். ராணுவ டாக்டர்கள், பொறியாளர்கள் அடங்கிய குழுவின் கண்காணிப்புடன் எனக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டன. எனக்கு கிடைத்த மிகப்பெரிய கொடை, இந்த பயிற்சிகளை மீண்டும், மீண்டும் நான் பெறுவதற்கு ஏற்ற சூழலை பயிற்சியாளர்கள் உருவாக்கி கொடுத்தனர். பயிற்சியில் சில கடினங்களை வார்த்தைகளில் பகிர முடியாது. என் பெற்றோருக்கு கூட நான் பயிற்சி பெறும்போது எதையும் தெரிவிக்கவில்லை. தெரிந்தால் என்னை பயிற்சி பெற அனுமதிக்க மாட்டார்கள். இப்போது நான் ஒரு முழுமையான விண்வெளி வீராங்கனையாக தேர்ச்சி பெற்று விட்டேன்.

இந்த தகுதி எனது தாய் நாடான இந்தியாவின் ககன்யான் 2021 திட்டத்தில் (விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் திட்டம்) சேருவதற்கான தகுதியை வழங்கி உள்ளது. இதுவரை விண்ணில் பறந்த முதல் இந்தியரான ராகேஷ்சர்மா ரஷ்யாவின் விண்கலத்திலும், கல்பனா சாவ்லா அமெரிக்காவின் விண்கலத்திலும் பயிற்சி விண்ணுக்கு சென்றனர். நான் இந்தியாவின் ககன்யான் திட்டத்தில் செல்லும் முதல் பெண் என்ற சிறப்பினை எட்டுவேன். நான் படித்த படிப்பினை பொருளாதார ரீதியாக கையாண்டு பொருள் குவிக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இல்லை. என் தாய் நாட்டிற்கு சேவை செய்ய வேண்டும். என் தாய்நாட்டிற்காக விண்ணில் பறந்து ஆய்வு செய்ய வேண்டும். இதுவே என் இலக்கு’’ என்றார் உதயகீர்த்திகா .Post a Comment

Protected by WP Anti Spam