முடிவுகளை எட்டாத கோரிக்கை உடன்படிக்கைகள்!! (கட்டுரை)

Read Time:12 Minute, 55 Second

தமிழ்த் தேசிய அரசியல் வரலாற்றுப் பின்புலத்தில், வடக்கு, கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களின் பெரும் முயற்சியில் முன்னெடுக்கப்பட்ட, தமிழ் அரசியல் கட்சிகளின் ஒன்றிணைப்பு முயற்சியானது, பாராட்டப்பட வேண்டிய ஒன்றாகும்.

ஏனெனில், ‘சிறுபிள்ளை வேளாண்மை வீடு வந்து சேராது’ என்று கடந்த காலங்களில், இளைஞர் முன்னெடுப்புகளைத் தட்டிக் கழித்த தமிழ்த் தலைமைகள், இன்று அவர்களின் அழைப்பில்பேரில் ஒன்றுபட்டது, தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் பாராட்டத்தக்கது; ஒரு முற்போக்கான முயற்சியாகவும் அமைந்துள்ளது.

தமிழ் வாக்குகள் பிளவுபடாமல், கணிசமான அளவில் ஒன்றிணைப்பதுடன், தமிழர் தம் பலத்தை ஒரே குரலாய், சிங்கள தேசத்துக்கும், சர்வதேசத்துக்கும் அழுத்திச் சொல்லக்கூடிய பலமாக அமையும் எனலாம்.

ஆயினும், இந்த முன்னெடுப்பில் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் கட்சியின் நிலைப்பாடு, யாவரும் எதிர்பார்த்த ஒன்று. ஏனெனில், அவரது தற்கால அரசியல் கோரிக்கை என்பது, சிங்களத் தேசியவாத அரசியலால், கருத்தில் கொள்ளவே முடியாத விடயம் ஆகும். ஆயினும், இந்த ஒன்றிணைவுகளின் பின்புலத்தில் முன்வைக்கப்படும் கோரிக்கைகள், சிங்கள ஆட்சியாளர்களாலும் அவர்கள் தெரிவுகளாக உள்ள ஜனாதிபதி வேட்பாளர்களாலும் ஏற்றுக்கொள்ள அல்லது அங்கிகரிக்கப்படப் போகிறது என்பது, எந்த அளவுக்குச் சாத்தியப்பாடு உடையதாக அமையும் என்பதே, தமிழ் மக்களிடம் தற்போது எழுந்துள்ள மிகப்பெரிய ஐயப்பாடாகும்.

ஏனெனில், தமிழர்களின் அபிலாசைகள் தொடர்பாக, கடந்த 70 ஆண்டுகளில் அகிம்சை வழியிலும் ஆயுத ரீதியிலும் போராடி, மிகப்பெரிய ஆயுத பலத்துடன் பேரம் பேசியும் அடைய முடியாத கோரிக்கைகளைத் தற்கால சூழலில் தமிழ் மக்கள் எவ்வாறு அடைய முடியும் என்பதே, இன்றுள்ள வினாவாகும்.

இந்தவகையில், பல்கலைக்கழக மாணவர் வழிகாட்டலில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளான இணைந்த வடக்கு, கிழக்கில், சமஷ்டி அடிப்படையிலான தீர்வு, ஒற்றையாட்சியை ஏற்றுக் கொள்ள முடியாது, தமிழ் மக்களின் அன்றாடப் பிரச்சினைகளுக்கு மூன்று மாத காலத்தில் தீர்வு, காணாமல் போனோர் விவகாரம், பொதுமக்களின் காணி விடுவிப்பு, தொல்பொருள் திணைக்களத்தின் ஆக்கிரமிப்புக் காணிகள் விடுவிப்பு, தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை, போர்க்குற்றம் தொடர்பான பொறுப்புக்கூறல் போன்ற முக்கிய விடயங்களை அடிப்படையாகக் கொண்டே, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுபவர்களுடன் பேரம் பேசவும் உடன்படிக்கை செய்யவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஆயினும், மேலே வலியுறுத்தப்பட்ட விடயங்களின் சாத்தியப்பாடுகள் தொடர்பாக, இப்பேச்சு வார்த்தையில் கலந்து கொண்ட தமிழ் அரசியல் கட்சிகள் ஐந்துக்கும், இக்கோரிக்கைகளின் யதார்த்தம் என்ன என்பது, தெளிவாகப் புரியும்.

ஆயினும், இந்த யதார்த்தங்களை நன்கு புரிந்துகொண்டு இருந்தும், அதன் பலாபலன்கள் சாத்தியப்படப் போவதில்லை என்பதை விளங்கிக் கொண்ட கஜேந்திரகுமார் பொன்னம்பலம், புதிய அரசமைப்பு வரைவின் இடைக்கால அறிக்கையை இரத்துச் செய்யும்படி கோரிக்கையை முன்வைத்து, இந்த அரசியல் சிக்கலிலிருந்து, மறுதலையாகத் தப்பித்துக் கொண்டார் என்பதே உண்மை எனலாம்.

ஏனெனில், கஜேந்திரகுமார் தவிர்ந்த ஏனைய கட்சித் தலைமைகள், மாணவர்களது கோரிக்கை உடன்படிக்கைக்குச் சம்மதம் தெரிவித்திருந்த போதும் கூட, அவர்களுக்கு கோரிக்கைகளின் உண்மை நிலையும், அவ‌ற்றை எதிர்கால ஜனாதிபதி வேட்பாளர் சில சந்தர்ப்பங்களில், முற்று முழுவதுமாகவோ அல்லது பகுதியளவிலோ நிராகரிப்பார்கள் என்பதை நன்கு அறிந்துள்ளனர் எனவும் கருத முடியும்.

இந்த வகையில், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் போட்டி நிலை வேட்பாளர்களாகக் கருதப்படும் சஜித் பிரேமதாஸவும் கோட்டாபய ராஜபக்‌ஷவும் அநுர குமாரவும் எந்த அளவுக்குத் தமிழர் தரப்புக் கோரிக்கைகளை ஏற்றுக் கொள்வார்கள் என்பது, மிகத் தௌிவான விடயமாகும்.

ஏனெனில், ஒன்றிணைந்த வடக்கு, கிழக்கு மாகாணத்தைச் சட்டரீதியாகத் தனித்தனி மாகாணங்களாகப் பிரித்த பெருமை ஜே.வி.பி கட்சியைச் சாரும். அதுவே, தமிழர் தம் மேற்படி உடன்படிக்கையின் முதலாவது கோரிக்கையை ஏற்றுக் கொள்ளாது.

இந்த இலட்சணத்தில், சிங்களத் தேசியவாத சிந்தனை மேலோங்கிய மக்களின் பெரும் ஆதரவைப் பெற்ற, பொதுஜன பெரமுனவினர், பொறுப்புக்கூறலையும் தமிழர் தீர்வுகளையும் சர்வதேச அழுத்தங்களையும் உதாசீனம் செய்து தட்டிக்கழித்தவர்கள்; எனவே, இவர்களும் இந்தக் கோரிக்கைகளை ஒருபோதும் ஏற்றுக் கொள்ளப்போவதில்லை.

மேலும், தற்போதைய நல்லாட்சி ஆட்சிக் காலத்திலும், கட்சிகளின் உள் முரண்பாடுகள் காரணமாகத் தமிழர் தீர்வு கிடப்பில் போடப்பட்டது. ஆயினும் சில விடயங்களில் குறிப்பிடத்தக்க முன்னேற்றகரமான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டிருந்த போதிலும், தற்போதைய முரண்பாட்டு அரசியல் சூழ்நிலை, ஆரோக்கிய அரசியலுக்கு இடம்கொடுக்கவில்லை.

மேலும், நல்லிணக்க ஆட்சியாளர்கள் வாக்குறுதியளித்தது போல், பொறுப்புக்கூறல், அரசியல் தீர்வு, அரசியல் கைதிகள் விடுதலை, காணாமல் ஆக்கப்பட்டோர் போன்ற முக்கிய விடயங்களில், பெரிய அளவில் கரிசனை காட்டவில்லை.

இத்தகைய சூழலில், சிங்களப் பேரினவாத சகதிக்குள் சிக்கியுள்ள தலைமைகள், எக்காரணம் கொண்டும் இணைந்த வடக்கு, கிழக்கையோ, சமஷ்டித் தீர்வையோ, ஒற்றையாட்சி முறையைத் தவிர்க்கும் தீர்வையோ, பொறுப்புக்கூறலையோ நிபந்தனையாக ஏற்றுக் கொள்ள முன்வரமாட்டார்கள். ஏனெனில், தமது இனத்தைத் தலைவர்கள் காட்டிக் கொடுக்கிறார்கள் என்ற பரஸ்பர குற்றச்சாட்டுகளுக்கு அவர்கள் ஆளாக வேண்டிவரும். எனவே, இந்த விஷப் பரிட்சையைத் தங்கள் இன மக்களிடம் வெளிப்படுத்தி, தங்கள் அரசியல் வாழ்க்கை முற்றுபெற அடி கோலமாட்டார்கள் எனலாம்.

மேலும், இந்திய – சீனப் பூகோள உறவுகள், மாமல்லபுரப் பேச்சுவார்த்தையின் பின், புதிய பரிமாணம் பெற்றுள்ளது. இந்தச் சூழலில், எதிர்காலத்தில் ஐரோப்பிய ஒன்றியம் போல், ஆசிய ஒன்றியம் அமைப்பதற்கான சாத்தியப்பாடுகளுக்கான அடிகோலிடலாக அமைகின்ற சூழலும், இதனால் மேற்கத்தேய நாடுகளின் அரசியல் நகர்வுகள் தெற்காசிய அரசியலை மேலும் புறந்தள்ளக் கூடிய சூழ்நிலைகள் தென்படுவதால், பூகோள, இராஜதந்திர அரசியல் நகர்வுகள், தமிழர் சார்ந்த மேலைத்தேய அனுசரணை நகர்வுகளைக் கிடப்பில் போடலாம்; அன்னியப்படுத்தலாம். இத்தகைய பின்புலங்கள், தற்போதைய தமிழர்தம் எதிர்பார்ப்புகளை, மேலும் செயலிழக்கச் செய்யக்கூடியவை.

மறுபுறத்தில், தமிழர் பிரச்சினை தொடர்பாக, வெளிநாடொன்றின் கரிசனையில் செய்யப்பட்ட ஒப்பந்தம், 1987 இல் கைச்சாத்திடப்பட்ட இந்திய – இலங்கை ஒப்பந்தம் எனலாம். இந்த ஒப்பந்தத்தை வலுப்படுத்த இந்தியா விரும்புகிறது. இதன் காரணமாகவே, அது ஏனைய நாடுகளின் செயற்பாடுகளை, யுத்த பொறுப்புக்கூறலை, சமஷ்டித் தீர்வு விடயங்களை, அங்கிகரிக்கக் கரிசனை செலுத்தாமல் காலம் தாழ்த்தி வருகிறது.

ஏனெனில், பூகோள ரீதியில் இந்த ஒப்பந்தத்தை விடக் கூடுதல் அதிகாரங்கள் வழங்கப்பட்டால், இந்திய மாநில அரசியலில் சிக்கல்கள் ஏற்படுவதோடு, இந்திய இராஜ்ஜியத்தைச் சிதைக்கும் காரணியாகியும் விடும் என இந்தியா கருதுகிறது.

இந்த வகையில், மாணவர்களால் முன்னெடுக்கப்பட்ட முயற்சிகளும் அதன் அடிப்படையில் அமைந்த கோரிக்கைகளும் இந்திய மாநில ஆட்சி முறையிலான சமஷ்டியைத் தவிர, அதற்கு மேலான தீர்வைப் பெற்றுக் கொடுக்கப் போவதில்லை. இந்தப் பேச்சுவார்த்தை மேடையில் பங்கு கொண்ட அனைத்துத் தரப்பினருக்கும் இது புரியும். ஆயினும் தாங்கள் மக்களின் கோரிக்கைகளுக்கும் அபிலாசைகளுக்கும் பூரணமாக கட்டுப்பட்டவர்களாகக் காட்டவே பேச்சு மேசையில் கலந்து, ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.

தமிழரின் முடிவுகளை, ஜனாதிபதி வேட்பாளர்கள் எவராலும் முற்றுமுழுதாக ஏற்க்கப்படாமல் போகப்போகும், இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் மேலும் ஒரு கையறு நிலைக்குத் தமிழ் மக்களை கொண்டுபோய் சேர்க்கப் போகிறது.

இந்தவகையில், இந்திய அரசின் அழுத்தத்தில் 13ஆவது திருத்தச் சட்ட மாகாண அமைப்பு முறையே, இத்தீவில் அதியுயர்ந்த பட்ச அரசியல் தீர்வாக அமையுமே தவிர, வேறெதுவும் நடைபெறப் போவதில்லை. இதைவிடக் கொடுப்பதற்குப் பெரும்பான்மை ஆட்சியாளர்கள் தயாராகவும் இல்லை.

ஏனெனில், சிங்கள இனவாத அரசியலில் தமிழர் பிரச்சினை தீர்வு என்பது, அவர்களது அரசியல் மரணப் பொறியே என்ற நிலைமையே காரணமாகும். எனவே, தமிழர் தப்பிப் பிழைக்க ஒரே வழி, இணக்க அரசியல்; அல்லது, 13 ஆவது திருத்தச் சட்ட அமைப்பு முறை. இதை விடப் பெரிதாகக் கிடைத்தால், அது இறைவன் தந்த வரம் ஆகும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ராஜராஜ சோழன் எப்படி? கொலைச்செய்யப்பட்டார்? (வீடியோ)
Next post கவர்ச்சி தரும் நக அழகு!! (மகளிர் பக்கம்)