தேர்தல் புறக்கணிப்பு: அரசியலில் யதார்த்தம் வேறு; தத்துவார்த்தம் வேறு!! (கட்டுரை)

Read Time:17 Minute, 23 Second

இலங்கையின் தேர்தல்களைப் பொறுத்தவரையில், குறிப்பாக ஜனாதிபதித் தேர்தலைப் பொறுத்தவரையில், குறித்த தேர்தலானது ஒற்றைமாற்று (தனிமாற்று) வாக்கு முறைப்படி நடத்தப்படும்.

இதன் பிரகாரம், மூன்று வேட்பாளர்களுக்குக் குறைவாகப் போட்டியிடும் சந்தர்ப்பத்தில், வாக்காளர்கள் தமது முதலாவது, இரண்டாவது விருப்பத்தெரிவுகளின் அடிப்படையில் வாக்களிக்கலாம். மூன்றுக்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் போட்டியிடுமிடத்து, மூன்றாவது விருப்பத்தெரிவையும் சேர்த்து வாக்களிக்கலாம்.

உதாரணமாக, அ,ஆ,இ என மூன்று நபர்கள் போட்டியிடுமிடத்து, வாக்காளர்கள் தாம் விரும்பியவர்களுக்கு முதலாவது, இரண்டாவது, மூன்றாவது விருப்புவாக்குகளை விருப்ப வரிசையில் அளிக்கலாம்.

வாக்குகளின் எண்ணிக்கையில், முதலாவதாக முதன்மை விருப்பு வாக்குகள் மட்டுமே எண்ணப்படும். அதில் செல்லுபடியான மொத்தவாக்குகளில் 50 சதவீதத்துக்கும் அதிகமாக யார் வாக்குகளைப் பெறுகிறாரோ அவரே ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்படுவார்.

ஒருவேளை எந்த வேட்பாளரும் செல்லுபடியான மொத்தவாக்குகளில் 50 சதவீதம், அதற்கு மேற்பெறாதவிடத்து, முதல் விருப்பு எண்ணிக்கையில், அதிக தொகை வாக்குகள் பெற்ற முதல் இருவர் தவிர்த்த ஏனையோர் போட்டியிலிருந்து நீக்கப்படுவர். இதன் பின்னர், போட்டியிலிருந்து நீக்கப்பட்டவர்கள் பெற்ற முதல் விருப்பு வாக்குச்சீட்டுகளிலிருந்து, போட்டியிலுள்ள இருவரில் எவருக்காவது இரண்டாம் விருப்பு வாக்கு இருந்தால் அது, அவர்களது வாக்குகளுடன் சேர்க்கப்பட்டு எண்ணப்படும்.

ஆகவே, இந்தத் தேர்தலைப் பொறுத்தவரையில், வாக்குச் சீட்டிலுள்ள நபர்களுக்கு ஒரு வாக்காளர் தனது முதலாவது, இரண்டாவது, மூன்றாவது விருப்பத் தெரிவு அடிப்படையில் வாக்களிக்கலாமே அன்றி, போட்டியிடும் எவருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை என்ற விருப்பத் தெரிவைக் குறிப்பிடுவதற்கான எந்த ஏற்பாடுகளும் இல்லை.

ஆகவே, வாக்காளர் ஒருவருக்குப் போட்டியிடும் எந்த வேட்பாளர் மீதும் விருப்பமில்லை எனில், அந்த வாக்காளருக்கு இருக்கும் தெரிவுகளானவை, ஒன்றில் வாக்களிக்காமல் விடுதல், வாக்கைச் செல்லா வாக்கு ஆக்குதல் என்பனவாகும்.

ஒரு வாக்கைச் செல்லா வாக்கு ஆக்கும் போது, அந்த வாக்கு ஏன் செல்லா வாக்கு ஆனது என்பது வௌிப்படையாகத் தெரியாது. ஆகவே, தேர்தலில் போட்டியிடும் எந்த வேட்பாளர்களுக்கும் வாக்களிக்க விருப்பமில்லாதவர்கள், எதிர்ப்பை வௌியிட விரும்புபவர்களுக்குத் தேர்தலைப் புறக்கணிப்பது மட்டுமே இருக்கின்ற இலகுவான தெரிவு.

மறுபுறத்தில் சிலர், போட்டியிடும் வேட்பாளர்கள் எவரிலும் திருப்தி இல்லையென்றால் தாம் விரும்பும் வேட்பாளரைக் களமிறக்கலாமே என்ற வாதத்தை முன்வைக்கலாம். இந்த வாதத்தில் சிக்கல் இருக்கிறது. தொழில்நுட்ப ரீதியில் பார்த்தால், இலங்கையின் ஜனாதிபதித் தேர்தலில் ‘எவரும்’ போட்டியிட முடியாது. ஒன்றில் குறித்த நபர் அங்கிகரிக்கப்பட்ட அரசியல் கட்சியொன்றினூடாக வேட்பாளராக வேண்டும்; அன்றில் அவர் சுயேட்சை வேட்பாளராகக் களமிறங்க வேண்டுமாயின், அவர் இந்நாள் அல்லது முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினராக இருத்தல் வேண்டும் என்பதுடன், போட்டியிடும் வேட்பாளர் கட்டுப்பணம் கட்டவும் வேண்டும்.

ஆகவே, அங்கிகரிக்கப்பட்ட அரசியல் கட்சியொன்றைச் சாராத, சாதாரண நபரொருவர், இலங்கையின் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியாது. மேலும், ஓர் உதாரணத்துக்குப் பார்த்தால், ஒரு தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களைக் கொள்கையளவில் நிராகரிக்கும் ஒரு மக்கள் கூட்டத்தின் உறுப்பினர்கள் யாவரும், அதே ஒருமித்த நிலைப்பாட்டுடன், வேறொரு மாற்று வேட்பாளரை ஆதரிப்பார்கள் என்று எடுகோள் கொள்ள முடியாது. போட்டியிடும் வேட்பாளர்களை நிராகரிப்பதற்கு உள்ள நியாயங்கள், ஒரு மாற்று வேட்பாளரை ஆதரிப்பதற்கு நேரடியாகப் பொருந்தி வராது. நிற்க!

கட்டாய வாக்களிப்பு உள்ள இடங்களில் கூட, வாக்களிக்காமல் விடுதல் என்பது ஒரு ‘போராட்ட’, ‘ஒத்துழையாமை’ கைங்கரியமாகக் கையாளப்படுவதை நாம் அவதானிக்கலாம். இந்த இடத்தில், வாக்களிப்பதற்கான உரிமை இருப்பதைப்போன்று, வாக்களிக்காமல் விடுதல், ஓர் உரிமையா என்ற கேள்வி எழுகிறது.

வாக்களிக்காமல் விடுவதும், ஓர் உரிமை என்று சிலர் வாதிடுவார்கள். இது பற்றிக் கருத்துரைக்கும் அரசறிவியல் ஆய்வாளர் லீஸா ஹில், “வாக்களிக்காமல் விடும் முறையை, ஓர் உரிமையாக அங்கிகரிக்க முடியாது; ஏனெனில், அது பொதுமைப்படுத்தப்பட முடியாது. அவ்வாறு செய்வது தற்போது நடைமுறையிலுள்ள, ‘ஜனநாயகம் ஒரு கூட்டு நன்மை’ என்ற அடிப்படையிலான அரசாங்கத்தின் வடிவத்தைக் குறைமதிப்பிடுவதற்கு உட்படுத்தும். வாக்களிக்காது விடும் உரிமை என்பதற்கு, முறையான சட்ட அல்லது தார்மீக அங்கிகாரம் இருக்கக்கூடாது. தன்னார்வ வாக்களிப்பு, நடைமுறையிலுள்ள இடங்களில் உள்ள பல குடிமக்கள், தங்களுக்கு ஏற்றவாறு வாக்களிப்பதைத் தவிர்க்கலாம். ஆனால், அவர்கள் வாக்களிப்பதைத் தவிர்ப்பதானது, ஒருபோதும் ஓர் உரிமையாகக் கருதப்பட முடியாது; கருதப்படவும் கூடாது” என்கிறார்.

ஆகவே, தேர்தல் புறக்கணிப்பானது ஜனநாயக விரோதம் என்று சொல்லிவிடுவது எவ்வளவு சிக்கலானதோ, அதேயளவுக்கு வாக்களிக்காது விடுதல் ஓர் உரிமை என்று சொல்வதும் சிக்கலானது.

ஆனால், இது வெறுமனே தத்துவார்த்த ரீதியில் மட்டும் அணுகப்படக்கூடிய விடயமல்ல; அரசியலில் நடைமுறை யதார்த்தம் என்பது மிக முக்கியமானது. ஏனென்றால், அரசியலில் எடுக்கப்படும் ஒவ்வொரு முடிவுக்கும் விளைவுகள் உண்டு. அரசியலில், தமது ஒவ்வொரு முடிவையும் எடுக்கும் ஒரு மக்கள் கூட்டம், அந்த முடிவுகளின் விளைவுகளையும் அனுபவிக்க வேண்டி வரும். ஆகவேதான், வெறும் தத்துவார்த்த அடிப்படையில் மட்டும் அரசியல் அணுகப்பட முடியாது.

கடந்த 2015ஆம் ஆண்டின் ஜனாதிபதித் தேர்தலின் போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஆட்சி மாற்றத்துக்காக அன்றைய பொது வேட்பாளராகக் களமிறங்கிய மைத்திரிபால சிறிசேனவை ஆதரித்திருந்தது. ஆனால், அந்தத் தேர்தலைத் தமிழ் மக்கள் புறக்கணிக்க வேண்டுமெனத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கேட்டுக்கொண்டது. அதற்கு, அவர்களிடம் பலமான தத்துவார்த்த நியாயமொன்று இருந்தது.

தேர்தலைப் புறக்கணிக்கக் கோரிய தமது ஊடகவியலாளர் சந்திப்பில், அவர்கள் பின்வரும் விடயத்தை குறிப்பிட்டிருந்தனர்: “எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் யார் வெற்றி பெற்றாலும், தமிழ் மக்களுக்கு எதிரான கட்டமைப்பு சார் இன அழிப்புக் கொள்கையில், எந்த மாற்றமும் ஏற்படாது. ஆட்சி மாற்றம் என்ற போர்வையில், வெறும் ஆள்மாற்றம் மட்டுமே இடம்பெறப்போகின்றது. மஹிந்த ராஜபக்‌ஷ, தமிழ் மக்கள் மீது இன அழிப்பை மேற்கொண்டவர்; தொடர்ந்தும் கட்டமைப்பு சார் இன அழிப்பை மேற்கொண்டு வருபவர்; மிகக் கொடூரமான ஆட்சியைத் தமிழ் மக்கள் மீது நடத்திக் கொண்டிருப்பவர்; அவர் நிராகரிக்கப்படல் வேண்டும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது.

“மைத்திரியை எடுத்துக்கொண்டால், அவருக்கு முன்பாக ரணில் எனும் சமாதான முகமும், தமிழருக்கு சார்பானவர் என்ற முகமூடியும் போடப்படுகின்றது. ஆனால், அவருடன் அருகில் இருப்பது ரணில் போன்று காட்டப்பட்டாலும் உண்மையில் அவருக்குப் பக்கபலமாக உள்ளவர்கள், இனவாதக் கட்சிகளான ஹெல உறுமய, ஜே.வி.பி, சந்திரிகா போன்றோராவர்.

“இந்தச் சந்திரிகா ஆட்சியில் நடந்தது என்ன? சமாதான தேவதையாகத் தன்னைக்காட்டி, தமிழ் மக்களுக்கு சமஷ்டித் தீர்வு கொடுப்பேன் என்று வெளிப்படையாகக் கூறி, 62 சதவீதமான வாக்குகள் பெற்று ஆட்சிபீடமேறினார்.

பின்னர், சமாதானத்துக்கான யுத்தம் நடத்தி, ஐந்து இலட்சம் மக்களைக் குடாநாட்டிலிருந்து பலவந்தமாக இடம்பெயர வைத்தார். ‘சத்ஜெய’, ‘எடிபல’, ‘ஜெயசிக்குறு’ போன்ற இராணுவ நடவடிக்கைகள் உள்ளிட்ட தீவிரமான போர் நடவடிக்கைகளை நடத்தியவர். பல்லாயிரம் பேரைச் செம்மணியில் கொன்று புதைத்தவர். நவாலி தேவாலயம், மடுத் திருத்தலப் படுகொலைகள் உள்ளிட்ட, தமிழர் தேசத்தில் பெருமளவு படுகொலைகளை அரங்கேற்றியவர். தமிழ் மக்களது சுயநிர்ணய உரிமைக்காகக் குரல் கொடுத்த மாமனிதர் குமார் பொன்னம்பலத்தைக் கொலை செய்தவர். ரணிலுக்கும் புலிகளுக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடைபெற்ற போது, புலிகள் இடைக்கால தன்னாட்சி அதிகார சபை வரைபை முன்வைத்த போது, ரணிலிடமிருந்த முக்கிய மூன்று அமைச்சுகளைப் பறித்து, சமாதான சூழலைக் குழப்பியவர்.

“அன்று வாகரையிலும் முள்ளிவாய்க்காலிலும் தமிழ் மக்கள் இலட்சம் இலட்சமாகக் கொல்லப்பட்ட போது, இந்த மைத்திரிபால, ராஜபக்‌ஷவுடன் கூடியிருந்து யுத்தத்தை நடத்தியவர். சர்வதேச ரீதியில் போரையும் ராஜபக்‌ஷ வையும் நியாயப்படுத்தியவர். இன்று ராஜபக்‌ஷவுக்கும் இராணுவத்தினருக்கும் எதிரான போர்க்குற்ற விசாரணைக்கு இடமளியேன் என்று தெளிவாகக் கூறியிருக்கின்றார். சமஷ்டித் தீர்வு கொடேன்; ஒற்றையாட்சியைப் பேணிப் பாதுகாப்பேன்; பௌத்தத்துக்கு அரசமைப்பிலுள்ளவாறு முன்னுரிமை என்று இனவாதக் கட்சிகளுடன் ஒப்பந்தமிட்டுள்ளார். எனவே, மைத்திரியின் ஆட்சியிலும் போர்க்குற்றங்களில் ஈடுபட்டவர்கள் தண்டிக்கப்பட வாய்ப்பில்லையெனின், தமிழர்கள் விடயத்தில், சட்டத்தின் ஆட்சி நல்லாட்சி என்ற பேச்சுக்கும் இடமில்லை.

“இந்நிலையில் போட்டியிடும் பிரதான வேட்பாளர்களில் எவருக்கேனும் தமிழ் மக்கள் தமது வாக்குகளை வழங்குவதானது, எதிர்காலத்தில் அந்த வேட்பாளர் வெற்றி பெற்ற பின்னர், தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்போகும் இன அழிப்பைத் தமிழர்களே சரி என்று ஏற்றுக் கொள்வதாகவே அமையும்”.

தத்துவார்த்த ரீதியில், தமிழர்களுடைய அரசியல் அபிலாசைகள் தொடர்பான நிலைப்பாட்டில் மஹிந்தவும் ஒன்று, மைத்திரியும் ஒன்றுதான் என்ற இவர்களுடைய வாதத்தில் அர்த்தமிருக்கலாம். ஏனெனில், இலங்கையிலுள்ள எந்தப் பிரதான தேசியக் கட்சியும் தமிழர்களுடைய ‘தாயகம், தேசியம், சுயநிர்ணயம்’ ஆகியவற்றை ஏற்றுக்கொள்ளவில்லை; ஏற்றுக்கொள்வதற்கான சாத்தியக்கூறுகளும் மிகக் குறைவு.

ஆகவே யார் வந்தாலும், கொள்கையளவில் எந்த மாற்றமும் ஏற்படப்போவதில்லை என்ற வாதம், தத்துவார்த்த ரீதியில் பொருந்தினால்கூட, நடைமுறை யதார்த்தம் என்பது வித்தியாசமானது. மஹிந்தவின் ஆட்சியின் கீழிருந்த ‘வௌ்ளை வான்’ முதலான அடக்குமுறைகள் மைத்திரி ஆட்சியில் இல்லாது போயுள்ளன.

இறுதி யுத்தத்துக்கான நீதி தொடர்பில் மஹிந்த, மைத்திரி ஆட்சியில் வேறுபாடுகள் இல்லாது இருந்தாலும், தமிழருக்கெதிரான மனித உரிமை மீறல்கள் கணிசமாகக் குறைந்துள்ளன.

இந்த நடைமுறை யதார்த்தம், மேற்குறித்த தத்துவார்த்த அணுகுமுறைக்குள் அடங்காது; ஆனால், யதார்த்த வாழ்வில் இது பெரும்மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்றால் அது மிகையல்ல.

ஆகவே, அரசியல் முடிவுகள் வெறும் தத்துவார்த்த அடிப்படையிலும், கடந்தகாலத்தை மட்டும் கருத்திற்கொண்டும் எடுத்துவிடக் கூடியதொன்றல்ல; மாறாக, அது நடைமுறை யதார்த்தம், அன்றாட வாழ்வியல் தேவைகள், எதிர்காலம் என்பவை குறித்த சிந்தனை, தந்திரோபாயம் என்பவற்றின் அடிப்படையில் எடுக்கப்பட வேண்டியதாகிறது.

2015இல் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி குறிப்பிட்ட மேற்குறித்த நியாயங்கள், இன்றைக்கு கோட்டாவுக்கும் சஜித்துக்கும் கூடப் பொருந்திப்போகக் கூடியவைதான். ஆனால், மேற்குறித்த அதே காரணங்களுக்காக இந்தச் சூழலில் தமிழ் மக்கள் தேர்தலைப் புறக்கணிக்க வேண்டுமா, இல்லையா என்ற கேள்வி சிந்தித்து ஆராயப்பட வேண்டியதொன்றாகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post திருமணத்திற்கு கிழிந்த சேலையை தான் அணிந்தேன்!! (சினிமா செய்தி)
Next post மிரள வைக்கும் நின்ஜா வீரர்கள் பற்றிய இரகசியங்கள்! (வீடியோ)