ஆட்சியமைக்கும் வாய்ப்பை இழந்த நேட்டன்யாஹூ!! (உலக செய்தி)
இஸ்ரேலில் கடந்த மாதம் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில், பிரதமர் பெஞ்சமின் நேட்டன்யாஹூவின் லிகுட் கட்சி உள்பட எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதையடுத்து எதிர்க்கட்சியான புளூ அன்ட் ஒயிட் கட்சியுடன் கூட்டணி வைத்து தேசிய அரசை அமைக்க பெஞ்சமின் நேட்டன்யாஹூ முயற்சி செய்தார். ஆனால் புளூ அன்ட் ஒயிட் கட்சியின் தலைவரும், முன்னாள் ராணுவ தளபதியுமான பென்னி கான்ட்ஸ் கூட்டணிக்கு மறுத்துவிட்டார்.
அதனை தொடர்ந்து ஆட்சியமைக்க வரும்படி பெஞ்சமின் நேட்டன்யாஹூவுக்கு அந்நாட்டின் அதிபர் ருவென் ரிவ்லின் அழைப்பு விடுத்தார். 28 நாட்களுக்குள் மந்திரிசபையை அமைக்க அவருக்கு காலக்கெடு விதிக்கப்பட்டது. ஆட்சியமைக்க 61 உறுப்பினர்களின் தேவை என்ற நிலையில் நேட்டன்யாஹூ சிறிய கட்சிகளின் ஆதரவை பெற கடுமையாக முயற்சித்தார்.
எனினும் அவரால் 55 உறுப்பினர்களின் ஆதரவை மட்டுமே பெற முடிந்தது. இதனால் அவர் ஆட்சியமைக்கும் வாய்ப்பை இழந்தார். ஆட்சியமைப்பதற்கான காலக்கெடு முடிய இன்னும் 2 நாட்கள் இருக்கும் நிலையில் நேட்டன்யாஹூ முன்னதாகவே தனது தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளார். அதிபர் ருவென் ரிவ்லின் உடனான சந்திப்புக்கு பிறகு நேட்டன்யாஹூ இதனை அறிவித்தார்.
இதையடுத்து, ஆட்சியமைக்க வரும்படி புளூ அன்ட் ஒயிட் கட்சியின் தலைவர் பென்னி கான்ட்சுக்கு ஜனாதிபதி ருவென் ரிவ்லின் அழைப்பு விடுப்பார். அவருக்கும் 28 நாட்கள் காலக்கெடு வழங்கப்படும். அவரும் ஆட்சியமைப்பதற்கான வாய்ப்பை இழக்கும் பட்சத்தில் பெரும்பான்மையை பெறுவார் என நினைக்கும் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரை ஆட்சிஅமைக்க ஜனாதிபதி அழைப்பார்.
21 நாட்களுக்குள் அதுவும் நடக்கவில்லையென்றால் நாட்டில் புதிய பொதுத்தேர்தலை ஜனாதிபதி அறிவிப்பார். அப்படி தேர்தல் நடந்தால் அது ஒரே ஆண்டில் நடக்கும் 3-வது பொதுத்தேர்தலாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
Average Rating