சுஜித் உடல் அடக்கம் – கண்ணீர் மல்க இறுதி அஞ்சலி செலுத்திய மக்கள்!! (உலக செய்தி)
திருச்சி மணப்பாறை அருகே 25 ஆம் திகதி மாலை 5.40 மணிக்கு ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது குழந்தை சுஜித்தை மீட்கும் பணிகள் நான்கு நாட்களுக்கும் மேலாக நடைபெற்று வந்தது. மீட்புக் குழுவினரின் பல்வேறு முயற்சிகள் தோல்வியடைந்தன.
இதனால் அருகில் மற்றொரு பெரிய ஆழ்துளை கிணறு தோண்டி, குழந்தை இருக்கும் இடத்தை நெருங்கியதும் பக்கவாட்டில் சுரங்கம் தோண்டி குழந்தையை மீட்கும் பணிகள் தொடங்கின. ஆனால், கடினமான பாறைகள் இருந்ததால் குழி தோண்டுவதற்கு மிகவும் காலதாமதம் ஆனது.
இந்நிலையில், ஆழ்துளை கிணற்றில் இரவு 10.30 மணியளவிலிருந்து குழந்தையின் உடலில் இருந்து துர்நாற்றம் வீசுவதாகவும், ஆழ்துளை கிணற்றில் சிக்கியிருந்த குழந்தை உயிரிழந்ததாகவும் இன்று அதிகாலை 2.30 மணியளவில் வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் அறிவித்தார்.
அதன்பின்னர் ஆழ்துளை கிணற்றில் 88 அடி ஆழத்தில் இருந்து குழந்தை சுர்ஜித்தின் உடல் அழுகிய நிலையில் மீட்கப்பட்டு பிரேதபரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் எடுத்துச் செல்லப்பட்டது.
பிரேத பரிசோதனை முடிந்து சுஜித் உடல் மணப்பாறை அரசு மருத்துவமனையில் இருந்து இன்று காலை கரட்டுப்பட்டி அருகே பாத்திமாபுதூர் கல்லறைத் தோட்டத்திற்கு கொண்டுவரப்பட்டு இறுதிச்சடங்கு நடைபெறுகிறது.
பாத்திமாபுதூர் கல்லறை தோட்டத்தில் சுஜித் உடலுக்கு திருச்சி ஆட்சியர் சிவராசு, எம்.பி.ஜோதிமணி இறுதி அஞ்சலி செலுத்தினர். அதனை தொடர்நது சிறுவன் சுஜித் உடலுக்கு உறவினர்களும், ஆயிரக்கணக்கான பொது மக்கள் அஞ்சலி செலுத்தினர். மெழுகுவர்த்தி ஏற்றியும், பிரார்த்தனை செய்தும் இறுதிச்சடங்குகள் நடைபெற்றன. இதையடுத்து சுஜித் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
Average Rating