புற்றுநோய் இல்லாத உலகம்!! (மருத்துவம்)

Read Time:17 Minute, 7 Second

புகைப்பிடித்தல் புற்றுநோயை உண்டாக்கும் மற்றும் உயிரைக் கொல்லும்!

SMOKING CAUSES CANCER-SMOKING KILLS!

இது 50 ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது. பழனிச்சாமி என் பள்ளித் தோழன். சேட்டைக்காரன் என்று பெயர் பெற்றவன். ஒரு நாள் மதியம் பள்ளியின் கழிப்பறைப் பக்கம் நான் சென்றபோது உள்ளுக்குள்ளிருந்து சுருள் சுருளாகப் புகை வந்துகொண்டிருந்தது. பதறிப்போய் உள்ளே சென்று பார்த்தேன். பழனிச்சாமி சிகரெட் புகைத்துக் கொண்டிருந்தான்.

‘எத்தனை நாட்களாக இந்தப் பழக்கம்?’ என கேட்டேன். ‘கொஞ்ச நாட்களாகத்தான்’ என்றான். ‘இன்றோடு இதை விட்டுவிடு. இது தப்பான பழக்கம்!’ என்றேன். ‘சரி… இதை யாரிடமும் சொல்லாதே’ என்று கேட்டுக் கொண்டான். நான் நல்ல பிள்ளையாக அவன் அப்பாவிடம் காட்டிக்கொடுத்து உதையும் வாங்கிக் கொடுத்தேன். ஆனாலும், நான் கல்லூரிக்குச் சென்ற காலம்வரை அவன் சிகரெட் பிடிப்பதை விடவே இல்லை.

அதற்குப் பிறகு நான் மருத்துவக் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோது ஒரு பஸ் பயணத்தில் அவனைச் சந்தித்தேன். ஆள் அடையாளமே தெரியவில்லை. காய்ந்த கருவாடாகப் போயிருந்தான். மொட்டை வேறு போட்டிருந்தான். ‘சௌக்கியமா கணேசன்?’ அவனாகத்தான் ஆரம்பித்தான். அந்தக் குரல் அவனைக் காட்டிக்கொடுத்தது. ‘நீ பழனிச்சாமிதானே?’. ‘ஆமாம்’ என்றான்.

அதற்குப் பிறகான பகிர்தலில் அவனுக்கு நுரையீரலில் புற்றுநோய் வந்து அடையாறில் சிகிச்சை எடுப்பதாகச் சொன்னான். ‘இப்போ போறது ஆறாவது கீமோ’ என்றான். அடுத்த ஒரு வருடத்தில் விடுதிக்கு என்னைப் பார்க்க வந்த அப்பா, ‘பழனிச்சாமி போய்ச் சேர்ந்துட்டான்’ என்றார். விவரம் புரியாத வயதில் விளையாட்டாக ஆரம்பித்த ஒரு விஷப் பழக்கம் வாழும் வயதில் ஓர் உயிரையே குடித்துவிட்டது.

இந்தியாவில் இப்படிப்பட்ட பழனிச்சாமிகளை நிறையப் பார்க்கலாம். பலருக்கும் பள்ளி, கல்லூரிக் காலங்களில் கூடா நட்பு இந்தப் பழக்கத்துக்கு உரம் போடுகிறது. அலுவலகங்களில் இது சிறு இடைவேளை உணவாகிறது; டாஸ்மாக் பார்களில் துணை உணவாகிறது; அநேகரின் மனச்சோர்வுக்குத் தற்காலிக மருந்தாகிறது; அலுவல் அழுத்தம் குறைகிறது. நாட்படும்போது இதுவே போதையாகிறது.

போதாக்குறைக்கு ‘புகை புற்றுநோயை உண்டாக்கும்’ என்று பொடி எழுத்தில் கட்டம் போட்டுக் காட்டிவிட்டு, ‘நீயும் ஊதித்தள்ளு… தலைவனாகலாம்’ என்று திரைப்பட ஊடகங்கள் உரக்கச் சொல்லி இந்தப் போதைப்பழக்கத்தை வளர்த்தெடுப்பதால் இன்றைய பதின்பருவ பட்டாளம் முதல் மூத்தோர் பாசறை வரை ஒரு பெரிய கூட்டம் புகையின் பிடியில் சிக்கிக் கொண்டு வெளியேற முடியாமல் தவிக்கிறது.

உலக சுகாதார நிறுவனத்தின் புள்ளிவிவரப்படி உலகில் சுமார் 70 கோடி பேர் தினமும் புகைக்கின்றனர். 80-களில் ஏழரைக் கோடியாக இருந்த இந்திய புகைப்போர் கூட்டம் சென்ற வருடம் 12 கோடியாக உயர்ந்திருக்கிறது. இங்கு 30 கோடி பேர் புகையிலை போட்டு
இன்புறுகின்றனர்.

புகையும் புற்றுநோயும்

உலக புற்றுநோயாளிகளின் எண்ணிக்கையைக் கணிசமாக உயர்த்தியதில் புகைக்குப் பெரும் பங்கு உண்டு. ஆண்டுதோறும் 80 லட்சம் பேர் வரை புற்றுநோயால் இறப்பதாக ஒரு கணக்கு இருக்கிறது. உலக அளவில் மக்களின் புகைக்கும் பழக்கம் ஆண்டுதோறும் அதிகரித்து வருவதுதான் இதற்குக் காரணம். வறுமை அதிகமாகவும் மக்களின் பொருளாதார வலிமை குறைவாகவும் உள்ள இந்தியா போன்ற நாடுகளில்தான் புகைப்போர் கூட்டம் அதிகம் என்கிறது உலக சுகாதார நிறுவனம்.

புகையால் ஏற்படும் புற்றுநோயில் முதன்மையானது நுரையீரல் புற்றுநோய். இந்தப் புற்றுநோய் நேற்று வரை வயோதிக விஷயமாகவே பார்க்கப்பட்டது. இன்றோ, இது இளைஞர்களின் நெஞ்சை மிதித்துக் கொல்லும் விஷப் புற்றாக மாறிவிட்டது. 95 சதவீதம் தடுக்கக்கூடிய சாத்தியம் உள்ள இந்தப் புற்றுநோயால் இந்தியாவில் மட்டும் வருடத்துக்கு 15 லட்சம் பேர் இறந்துபோவதை எப்படி எளிதி–்ல் கடந்து செல்வது?

நச்சுக்களின் அணிவகுப்பு

நிகோட்டியானா டெபாக்கம்(Nicotiana tabacum). புகையிலை தயாரிக்கப்படும் தாவரத்தின் பெயர் இது. இதன் இலைகளைக் காயவைத்து, பதப்படுத்தி, பீடி, சிகரெட், சுருட்டு, குட்கா, மெல்லும் புகையிலை, மூக்குப்பொடி எனப் பல வேஷங்களில் சந்தைக்கு அனுப்புகின்றனர். பயனாளிகள் அவரவர் வசதிக்கும் விருப்பத்துக்கும் ஏற்ப இவற்றில் ஒன்றைப் பயன்படுத்துகின்றனர்.

சிகரெட் / பீடி புகையில் 4,000-க்கும் மேற்பட்ட விஷப் பொருட்கள் உள்ளன. நிகோடின், கார்பன் மோனாக்சைடு, நைட்ரோபென்சீன், தார், ஆர்சனிக்
ஆகியவை முக்கியமானவை.

ஒரே நேரத்தில் 30 முதல் 60 மில்லி கிராம் வரையிலான நிகோடினை ஒருவர் எடுத்துக்கொண்டால் உடனடியாக அவருக்கு சங்கு ஊதிவிடலாம் என்கிறது ‘லான்சட்’ மருத்துவ இதழ். இது நம் சரீரத்தில் எங்கெல்லாம் தங்குகிறதோ, அங்கெல்லாம் அணுக்களைச் சுரண்டி, புற்றுநோய்க்கு விதை ஊன்ற குழி பறிக்கும் என்கின்றனர் கலிபோர்னியா பல்கலைக்கழகப் புற்றுநோய் ஆராய்ச்சியாளர்கள்.

நிகோடினைவிட ‘தார்’ எனும் பாலிசைக்ளிக் ஹைட்ரோகார்பன்தான். புற்றுநோயை உருவாக்குவதில் முன்னோடி. இது பீடி, சுருட்டு, குட்காக்களில் அதிகம். இந்த விஷ வஸ்து நம் செல்களில் உள்ள டி.என்.ஏ., சங்கிலிகளைச் சிதைத்து விடுகிறது. அப்போது வழிகாட்டி இல்லாமல் இஷ்டத்துக்குப் பயணம் செய்யும் பயணிகள்போல் அந்த செல்கள் கட்டுப்பாடில்லாமல் வளர்ந்து புற்றுநோயாகக் கிளைவிடுகின்றன.

அடுத்து சாதாரண சிகரெட்டைவிட ஃபில்டர் சிகரெட் உசத்தி என்றும் ஒரு கருத்து உண்டு. அதில் உண்மையில்லை. குக்கர் சமையல் சீக்கிரத்தில் முடியும். அதே நேரம் அதில் சாதம் குழைந்துபோக அதிக வாய்ப்பு உண்டு. அதுமாதிரி நுரையீரலுக்குள் தார் மற்றும் நிகோடின் அளவுகளை ஃபில்டர் குறைத்து அனுப்புகிறது என்பதால் அது உசத்திபோல் தோன்றுகிறது.

அதேநேரம், மிக நுண்ணிய புற்றுக் காரணிகளை(Carcinogens) அதிக அளவில் அது உள்ளே அனுப்புகிறது. அப்போது அவை உடனடியாக நுரையீரலில் ஒட்டிக்கொண்டு சீக்கிரத்தில் புற்றுக்கு வழிவிடுகிறது. ஆகவே, ஃபில்டர் சிகரெட்டிலும் பேராபத்து காத்திருக்கிறது.

புகையை சுவாசிப்பதும் குற்றம்!

இதுவும் முக்கியம்தான். புகைபிடித்தால்தான் ஆபத்து என்பதில்லை. புகைபிடிப்பவர்கள் விடும் புகையை அருகில் இருந்து சுவாசிப்பவர்களுக்கும் அதே ஆபத்துகள் அணி செய்கின்றன. பாஸிவ் ஸ்மோக்கிங்(Passive smoking) எனப்படும் இந்த மறைமுகப் புகைப்பழக்கத்தால் புற்றுநோய் வந்து இறப்பவர்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்து வருகிறது.

இதயத்துக்கும் ஆபத்து!

புகைப்பதால் புற்றுநோய் மட்டுமல்ல, மாரடைப்பும் வருகிறது. உடலில் அட்ரீனலின், நார்அட்ரீனலின் ஆகிய ஹார்மோன் சுரப்புகளை நிகோடின் அதிகரிக்கச் செய்வதால், ரத்த அழுத்தம் அதிகரிக்கிறது. அது ரத்தத் தட்டணுக்களை ஒரு திராட்சைக் கொத்துபோல் ஒட்டிக்கொள்ளச் செய்வதால், இதயத் தமனிகளில் ரத்தம் உறைந்து மாரடைப்பு ஏற்படுகிறது.

மேலும், நிகோடின் ரத்தக்குழாய்களைச் சுருங்கச் செய்வதால், மூளையில் ரத்தக்குழாய் அடைத்துப் பக்கவாதம் வருகிறது; கை, கால்களுக்குச் செல்லும் ரத்தம் குறைந்து விரல்கள் அழுகி, கை, கால்களையே அகற்ற வேண்டிய ஆபத்தான நிலைமையும் உருவாகிறது.

சிகரெட்டைப் புகைக்கும்போது உண்டாகும் கார்பன் மோனாக்சைடு விஷ வாயு, ரத்த ஹீமோ குளோபினோடு சேர்ந்து கார்பாக்சிஹீமோகுளோபினாக மாறிவிடுகிறது. ரத்தத்தில் ஹீமோகுளோபின் சுமந்து செல்லும் ஆக்ஸிஜனின் அளவு குறைந்து விடுகிறது. இதன் விளைவாக, மாரடைப்பு வருவதற்கான வாய்ப்பு 10 மடங்கு அதிகரிக்கிறது. புகையிலையில் உள்ள வேறு பல விஷங்கள் சுவாசப்பாதையைப் பாதிப்பதால், ஆஸ்துமா, சளி, நாட்பட்ட சுவாசத்தடை நோய் (COPD) எனப் பல நுரையீரல் நோய்களும் தாக்குகின்றன.

மேலும், ஆண் மலட்டுத்தன்மைக்குப் புகை ஒரு முக்கியக் காரணம். இதன் தாக்குதலுக்குக் கண், கணையம், எலும்பு, சிறுநீரகமும் தப்பவில்லை. புகையிலை, பாக்கு, பான்மசாலா மற்றும் குட்கா போடுவதால் வாய், நாக்கு, கன்னம், தொண்டை, உணவுக்குழாய் ஆகியவற்றில் புற்றுநோய் அரசமைக்கிறது.

வேதனை என்னவென்றால் ‘மனிதனுக்குப் புகைதான் பகை’ என அறியத் தொடங்கி 50 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டாலும், புகையை விட்டொழிக்கச் சரியான முனைப்பு இன்றும் தொடங்கப்படவில்லை. சிகரெட் விற்பனை பன்னாட்டு நிறுவனங்களின் கைகளில் இருக்கிறது.

வருடத்துக்குப் பல ஆயிரம் கோடி ரூபாய் வரி கொடுக்கும் வணிகம் இது. அதை இழப்பதற்கு எந்த அரசும் தயாரில்லை. அதனால், சட்டங்களாலும் நீதிமன்றங்களாலும் புகைப்பழக்கத்தைக் குறைப்பதற்குத்தான் விதிகள் விதிக்க முடிகிறதே தவிர நிரந்தரமாக இதை நிறுத்த வழி சொல்ல முடியவில்லை.

புகைப்பழக்கத்தை நிறுத்த நிகோடினை உள்ளடக்கிய மாத்திரை, பபுள்கம், பட்டை, இன்ஹேலர், ஸ்பிரே என பல உத்திகள் இருந்தாலும், மனக் கட்டுப்பாடு ஒன்றே இதற்கு நிரந்தரத் தீர்வு தரும் என்கிறது மருத்துவ அறிவியல். எனவே, உங்கள் சட்டைப்பையில் இருப்பது சிகரெட்டோ, குட்காவோ எதுவானாலும், அது விஷம். இந்த நிமிடத்திலிருந்து அதைத் தொடாதீர்கள்!

(படைப்போம்)

இ-சிகரெட்டும் அபாயம்தான்!

இ-சிகரெட் எனப்படும் எலெக்ட்ரானிக் சிகரெட் (Electronic cigarette) பார்ப்பதற்கு சிகரெட்டைப் போலவே இருக்கும் ஒரு மின்சாரக் கருவி. இதனுள்ளே ஒரு குப்பி இருக்கிறது. அதில் நிகோடினும் புரோபைலின் கிளைக்கால் திரவமும் நிரப்பப்பட்டிருக்கின்றன. அதைச் சூடுபடுத்துவதற்கு சிறு கருவியும் பேட்டரியும் இருக்கின்றன. சிகரெட் ஞாபகம் வரும்போது, இதை வாயில் வைத்து உறிஞ்சினால், பேட்டரி இயங்கி நிகோடின் சூடாகிறது. சிலவற்றில் இதை இயக்க ஒரு பொத்தான் இருக்கும். அதை அழுத்தியதும், நிகோடின் சூடேறி புகை கிளம்பும். புகைப்பவர் அதை உள்ளிழுக்க, சிகரெட்டைப் புகைப்பது போன்றே கிளுகிளுப்பை ஏற்படுத்தும்.

சந்தைக்கு வந்த புதிதில், புகைப்பழக்கத்துக்கு ‘டாட்டா’ காண்பிக்க நினைப்பவர்களுக்கு இது ஒரு மாற்று ஏற்பாடாக இருக்கும் என்றுதான் இதை நினைத்தனர்.

ஆனால், போகப்போகத்தான் புரிந்தது இது புகைபிடிக்கும் பழக்கத்துக்குத் தூண்டுகோலாகவும் நுழைவு வாயிலாகவும் இருக்கிறது என்பது. அதிலும் இன்றைய இளைஞர் கூட்டம் இந்தப் புதுவித போதைக்கு அடிமையாகிறது என்பதைப் புரிந்துகொண்ட மத்திய அரசு அண்மையில் இ-சிகரெட் பயன்பாட்டுக்கு இந்தியாவில் தடை விதித்து ஓர் அவசரச் சட்டம் பிறப்பித்துள்ளது.

உங்கள் சிகரெட் ஸ்கோர் என்ன?

உங்கள் புகைப்பழக்கம் பீடியா, சிகரெட்டா, குட்காவா, புகையிலைப் பாக்கா, மூக்குப் பொடிப் பழக்கமா? ஒருநாளைக்கு எத்தனை சிகரெட்? ஃபில்டரா, சாதாரணதா? எத்தனை வருடங்களாக இந்தப் பழக்கம்? அடுத்தவர் விடும் புகையைச் சுவாசிக்கிறீர்களா?

இந்தக் கேள்விகளுக்கு நீங்கள் கொடுக்கும் விடைகளை வைத்து உங்களுக்குப் புற்றுநோய் ஆபத்து எப்படி, எங்கே, எப்போது வரும் என்று சொல்லிவிடலாம். ‘ஸ்மோக்கிங் பேக் – இயர் இன்டெக்ஸ்’ (Smoking pack – year index) என்பதுதான் அந்த ஸ்கோர்.

நீங்கள் ஒரு நாளைக்கு எத்தனை சிகரெட்டுகளைப் புகைக்கிறீர்களோ அந்த எண்ணிக்கையை 20 ஆல் வகுத்துக் கொண்டு வந்த விடையை நீங்கள் எத்தனை வருடங்களாகப் புகைக்கிறீர்களோ அந்த எண்ணிக்கையால் பெருக்கினால் கிடைக்கும் விடைதான் உங்கள் ஸ்கோர்.

உதாரணம்: ஒரு நாளைக்கு 20 சிகரெட் வீதம் 20 வருடங்களாகப் புகைக்கிறீர்கள் என்றால், (20/20) x 20 = 20. உங்கள் ஸ்கோர் 20. இந்த ஸ்கோர் 15 என்னும் அளவில் இருந்தாலே புற்றுநோய் மற்றும் மாரடைப்பு வர அதிக வாய்ப்பிருக்கிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஆயுளின் அந்திவரை பிரியங்கள் சேர்த்து வைக்க…!! (அவ்வப்போது கிளாமர்)
Next post ஆஸ்காரை எதிர்நோக்கி காத்திருக்கும் சிறுமி!! (மகளிர் பக்கம்)