‘வேலை செய்யாத’ முஸ்லிம் கட்சிகள்!! (கட்டுரை)

Read Time:22 Minute, 12 Second

ஆனால், முஸ்லிம்களுக்கான அரசியலைப் பொறுத்தமட்டில், இவை இரண்டு பண்பியல்புகளையும் காணமுடியாது. முஸ்லிம் கட்சிகளோ, தனிப்பட்ட அரசியல் பிரதிநிதிகளோ முற்று முழுதாகச் சமூகநலனைக் கருத்தில் கொண்டு, அரசியல் செய்வதும் இல்லை; கட்சி வளர்ப்பதும் இல்லை.

அதுமட்டுமன்றி, பெருந்தேசியக் கட்சிகள், கீழே சரிந்துவிடாமல் தாங்கிப் பிடிக்கின்ற, முட்டுக் கம்புகள் போல, தொழிற்படுகின்ற முஸ்லிம் அரசியல் தலைவர்கள், அந்த வேலையைக் கூடச் சரியாகச் செய்வதில்லை என்றே கூற வேண்டும்.

கூட்டிக் கழித்துப் பார்த்தால், அவர்கள் முஸ்லிம் அரசியலையும் சரியாகக் கட்டியெழுப்பவில்லை; பெரும்பான்மைக் கட்சிகளுடனான இணக்க அரசியலையும் வெற்றிகரமாக முன்னெடுக்கவில்லை. இப்படியான ஒரு சூழலில்தான், இந்தத் தேர்தலையும் சந்தித்திருக்கின்றோம்.

2019 ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்புக்கு இன்னும் இரு வாரங்களே இருக்கின்றன. தபால்மூல வாக்களிப்பு நேற்றும் (31) இன்றும் (01) இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது. ஆனால், தேர்தலில் போட்டியிடுகின்ற பிரதான வேட்பாளர்களின் தேர்தல் விஞ்ஞாபனங்கள், அவர்கள் வழங்கியுள்ள வாக்குறுதிகள் பற்றி அடிமட்ட மக்களுக்கு இன்னும் கொண்டு செல்லப்படவில்லை. தேர்தல் பிரசாரங்கள், சாதரண மக்களின் காதுகளுக்குத் தெளிவாக எட்டியுள்ளதா என்பதிலும் சந்தேகமுள்ளது.

அத்துடன், யாருக்கு வாக்களிக்க வேண்டும், யாருக்கு வாக்களிக்கக் கூடாது என்பதையும் எவ்வாறு வாக்களிக்க வேண்டும், வாக்களிக்கும் முறை என்ன என்பதையும் மக்களுக்குத் தெளிவூட்டுவதில் முஸ்லிம் கட்சிகளும் அரசியல்வாதிகளும் இதுவரையும் இரண்டு அடியைத்தானும் முன்னோக்கி எடுத்து வைக்கவில்லை. ஏதோ, வேண்டா வெறுப்பாகப் பிரசாரம் செய்வது போலவே தெரிகின்றது.

அடிப்படையில், முஸ்லிம் கட்சிகள் ஆரம்பிக்கப்பட்டமை, தனித்துவ அடையாள அரசியலுக்காக ஆகும். முஸ்லிம்கள் ஒரு தனி இனம், தேசியம் என்றும் அவர்களது பிரத்தியேகமான பிரச்சினைகள், அபிலாசைகளுக்காக அரசியல் ரீதியில் போராடுவதற்காகவே மர்ஹூம் அஷ்ரபும் அவரோடு இருந்தவர்களும் முஸ்லிம் காங்கிரஸை ஆரம்பித்தார்கள். அதற்குப் பின்னர், வேறு பல காங்கிரஸ்களும் அவரது நோக்கத்தைச் சொல்லியே ஆரம்பிக்கப்பட்டன.

இந்த முஸ்லிம் கட்சிகள், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி உள்ளிட்ட பிரதான கட்சிகளுடன் ஓர் உடன்பாடு, நல்லெண்ண அடிப்படையிலான இணக்க அரசியலைச் செய்யலாமே தவிர, சுயம் இழந்து, அடையாளம் சிதைக்கப்படும் விதத்திலான சங்கம அரசியலைச் செய்ய முடியாது. அப்படியென்றால், அவை முஸ்லிம்களுக்கான தனித்துவக் கட்சிகளாவோ, அரசியல்வாதிகளாகவோ வகைப்படுத்தப்பட முடியாது.

ஆனால் நிஜத்தில், முஸ்லிம் காங்கிரஸ், மக்கள் காங்கிரஸ், தேசிய காங்கிரஸ் உள்ளிட்ட எல்லா முஸ்லிம் கட்சிகளும், இணக்க அரசியல் என்ற கோதாவில், பெரும்பான்மைக் கட்சிகளின் முகவர் கட்சிகள், உப கட்சிகள் போலவே இன்று மாறியிருக்கின்றன.

ஐக்கிய தேசியக் கட்சியிலும் சுதந்திரக் கட்சியிலும் மஹிந்த அணியிலும் இருக்கின்ற முஸ்லிம் அரசியல்வாதிகள் செய்கின்ற அதே பணியைத்தான், குழுக்களாகச் சென்று, முஸ்லிம் கட்சிக்காரர்கள் பொறுப்பெடுத்து இருக்கின்றார்கள்.

இதனால், உண்மையாகப் பார்த்தால், முஸ்லிம் கட்சிகளின் தனிப்பட்ட அரசியல், பாரிய சரிவைச் சந்தித்திருக்கின்றது. ஐ.தே.கவை, சு.கவை, பொதுஜன பெரமுனவை வளர்க்கும் முயற்சியில் ஈடுபட்டமையால், முஸ்லிம் காங்கிரஸ், மக்கள் காங்கிரஸ், தேசிய காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து முஸ்லிம் கட்சிகளினதும் தற்சார்பு அரசியல் என்பது, பின்னடைவைச் சந்தித்திருக்கின்றது.

இதைச் சம்பந்தப்பட்ட அரசியல் தலைவர்கள் உணராது இருக்கலாம்; உணர்ந்தும் உணராதது போல பாசாங்கு செய்யலாம். இருப்பினும், இதுவே களநிலைமையாகும்.

அடுத்த வாரம், ஒரு பொதுத் தேர்தல் நடைபெற்று, இந்த முஸ்லிம் அரசியல்வாதிகள் எல்லோரும், தங்களது சொந்தக் கட்சிச் சின்னத்தில் போட்டியிட்டு, வாக்குகளை எடுத்துக் காட்டுங்கள் என்றால், முஸ்லிம் கட்சிகளின் வாக்கு வங்கி, எவ்வாறு சரிந்திருக்கின்றது என்பது வெளிப்படும்.

சரி, அந்த வேலையைத்தான் ஒழுங்காகச் செய்யவில்லை; இப்போது பொறுப்பெடுத்துக் கொண்ட கதாபாத்திரத்தையாவது முறையாகச் செய்து, தேர்தல் பிரசாரங்களை முன்னெடுக்கின்றார்களா என்று பார்த்தால்…. அப்படி எந்த அத்தாட்சிகளையும் காணக் கிடைக்கவில்லை.

இத்தேர்தலில், ஒவ்வொரு முஸ்லிம் கட்சியும் ஒவ்வொரு நிலைப்பாட்டை எடுத்திருக்கின்றது. ரவூப் ஹக்கீம் தலைமையிலான ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், ரிஷாட் பதியுதீன் தலைமையிலான மக்கள் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் சஜித் பிரேமதாஸவை ஆதரிக்கின்றன.

அதாவுல்லாஹ் தலைமையிலான தேசிய காங்கிரஸ் கட்சி, கோட்டாபய ராஜபக்‌ஷவுக்கு ஆதரவு தேடுகின்றது. இதற்கிடையில் ஹிஸ்புல்லாஹ் தனியே போட்டியிடுகின்றார்.

சிராஜ் மஸ்ஹூரைத் தவிசாளராகக் கொண்ட நல்லாட்சிக்கான தேசிய முன்னணி, அநுர குமார திஸாநாயக்கவையும் எம்.ரி. ஹசனலியைச் செயலாளராகக் கொண்ட ஐக்கிய மக்கள் முன்னணி கோட்டாபயவையும் ஆதரிக்கின்றன. இந்த வேட்பாளர்களை, ஆதரிப்பதற்கான காரண காரியங்களை, ஒவ்வொரு கட்சியும் சொல்கின்றன.

உண்மையில், மேற்சொன்ன எந்த வேட்பாளரை ஆதரிப்பது என்று முடிவெடுத்தாலும், அதற்கான நியாயப்படுத்தல்களை, ஒவ்வொரு கட்சித் தலைவரும் முன்வைக்க முடியும். எவரை ஆதரிப்பதற்கும் சாதகமான காரணங்கள், நியாயங்கள் இருக்கவே செய்கின்றன.

கொஞ்சம் பொய் கலந்து, பூசி மெழுகி, மெருகூட்டிப் பிரசாரம் செய்வதுடன், அந்தக் குறிப்பிட்ட வேட்பாளருக்கு எதிரான குற்றச்சாட்டுகளைப் பொய் என்று பொய்ச்சத்தியம் செய்யவும், இந்த அரசியலில் தடையேதும் கிடையாது.

ஆனால், இங்கிருக்கின்ற கேள்வி என்னவென்றால், தாம் பொறுப்பெடுத்துக் கொண்ட வேலையை, பிரதான மூன்று முஸ்லிம் கட்சிகளும் சரியாகச் செய்திருக்கின்றனவா என்பதுதான்.

அந்த வகையில் நோக்கினால், சஜித் அல்லது கோட்டாவை ஏன் ஆதரிக்க வேண்டும் அல்லது ஆதரிக்கக் கூடாது என்பதற்கான தெளிவான காரணங்களை, முஸ்லிம் கட்சிகளும் அரசியல்வாதிகளும் மக்களுக்கு விளக்கமாகச் சொல்லவில்லை.

அதுமட்டுமன்றி, நிராகரிக்கப்படாத விதத்தில், எவ்வாறு சரியாக வாக்களிக்க வேண்டும் என்ற விடயத்தைக் கீழ், நடுத்தர, அடிமட்ட மக்களுக்குச் சொல்லிக் கொடுப்பதில், இவர்கள் பாரிய தவறை விட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.

பிரதான முஸ்லிம் கட்சிகளுக்கு, ஒவ்வோர் ஊரிலும் இணைப்பாளர்கள், அமைப்பாளர்கள், முக்கியஸ்தர்கள் இருக்கின்றார்கள். மு.கா, மக்கள் காங்கிரஸ் சார்பாகப் பிரதேசங்களில் இருக்கின்ற பேர்வழிகள் சிறியதும் பெரியதுமாகப் பல வரப்பிரசாதங்களை அனுபவித்துக் கொண்டிருப்பவர்கள். பதவி, சம்பளம் தொடக்கம் வாகனம், எரிபொருள் எனக் காற்றுள்ளபோதே தூற்றிக் கொள்பவர்கள் பலரும் உள்ளடக்கம்.

இதுவே, ஓர் உள்ளூராட்சி சபைத் தேர்தல் என்றால், இவர்கள் எல்லோரும் தலைவரிடம் சென்று பணத்தை வாங்கிக் கொண்டு, பிரசாரத்தில் இறங்கியிருப்பார்கள்.

இது கட்சித் தலைவர்கள், அரசியல்வாதிகளின் தேர்தல் இல்லை என்பதாலும் சஜித், கோட்டா என மேல்மட்ட போட்டி என்பதாலும், தலைவர்கள் எதையும் அதிகம் செலவு செய்ய விரும்பாமையாலும் இவ்வாறான உள்ளூர் அரசியல் எடுபிடிகளைக் களத்தில் காணக் கிடைக்கவில்லை.

தொழில்நுட்பம் வளர்ந்து விட்டது; எல்லோருடைய கையிலும் அலைபேசி இருக்கின்றது. எல்லோருக்கும் எல்லாத் தகவலும் தெரியும் என்று, முஸ்லிம் கட்சித் தலைவர்களும் எம்.பிக்களும் நினைக்கலாம்.

உண்மைதான்! அவ்வாறுதான் அதிகமானோர் இருக்கின்றார்கள் என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால், அதுபற்றிய அறிவு இல்லாத அடிமட்ட, பின்தள்ளப்பட்ட மக்களும் இருக்கின்றார்கள் என்பதையும் மறந்து விடக் கூடாது.

யார் யார் தேர்தலில் போட்டியிடுகின்றார்கள்? நீங்கள் அல்லது உங்களது கட்சி, யாரை ஆதரிக்கின்றது என்பதை அவர்கள் அறிவார்கள். ஆனால், ஏன் முஸ்லிம்கள் கோட்டாவுக்கு அல்லது சஜித்துக்கு வாக்களிக்க வேண்டும் என்பதற்கான நியாயங்கள் இந்த அரசியல்வாதிகளிடமிருந்து அவர்களின் கதவடிக்குச் சென்று சேரவில்லை. ஏனைய தேர்தல்களை விட, இத்தேர்தலில் இந்தப் பின்னடைவு அதிகமாகக் காணப்படுவதாகச் சொல்ல முடியும்.

யாருக்கு வாக்களிப்பது என்பதைக் காட்டிலும் எவ்வாறு வாக்களிப்பது என்பது பற்றிய குழப்பம் நாட்டிலுள்ள ஏனைய மக்களைப் போல முஸ்லிம்களுக்கும் ஏற்பட்டிருக்கின்றது. இத்தேர்தலில் 35 வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளதால் நீளமான வாக்குச்சீட்டில் வாக்களிக்க வேண்டியுள்ளது. புள்ளடியிடுதல், இலக்கமிடுதல் என வாக்களிப்பு முறைகள் காணப்படுகின்றன.

பிரதானமாக ஒருவருக்கு வாக்களித்து விட்டு, இரு விருப்பு வாக்குகளையும் அளிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், நிராகரிக்கப்படாதவாறு எவ்வாறு சரியாக வாக்களிப்பது என்பதை அறிவூட்டும் வேலையையும் முஸ்லிம் அரசியல்வாதிகள் மேற்கொள்ளத் தவறிவிட்டார்கள்.

இதுவிடயத்தில் கீழ்மட்ட மக்களுக்கு மட்டுமன்றி, நடுத்தர, மேல்நடுத்தர மக்களுக்கும் விளக்கமின்மை இருக்கின்றது. ஏன், நேற்றும் தபால்மூலம் வாக்களித்த அரச உத்தியோகத்தர்கள் பலருக்கும் இதே சந்தேகங்கள் இருந்ததைக் காணக் கூடியதாக இருந்தது.

ஜனாதிபதித் தேர்தலில் ஒரு குறிப்பிட்ட வேட்பாளருக்கு (சஜித்தோ, கோட்டாவோ, அநுரவோ) ஆதரவளிப்பதாக ஒரு முஸ்லிம் கட்சி, அரசியல் குழுவினர் முடிவெடுத்துவிட்டால் அதற்காக இடைவிடாது வேலை செய்ய வேண்டும்.

தாம் ஏன் குறித்த வேட்பாளருக்கு ஆதரவளிக்க முடிவெடுத்தோம் என்பதைக் குறிப்பிட்டு, ஒவ்வொரு குடும்பத்தையும் அவருக்கு வாக்களிக்கக் கோரும் களப் பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட வேண்டும்.

இதேவேளை, அரச ஊழியர்களின் தபால்மூல வாக்குகள் உள்ளடங்கலாகக் கடந்த காலத்தில் கணிசமான வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், 50 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெறுவதற்காகப் போட்டியிடும் பிரதான வேட்பாளர்களுக்கு, முஸ்லிம்களின் வாக்குகளைப் பெற்றுத் தருவதாக மேற்குறிப்பிட்ட முஸ்லிம் கட்சிகள், வாக்குறுதி வழங்கியிருக்கின்றன என்றால், அதற்காக வேலைசெய்ய வேண்டும்.

முஸ்லிம்களுக்கான அரசியலில் வேலைசெய்யாமல் வாழாவிருந்தது போலவே, தேர்தல் பிரசாரத்திலும் மக்களைத் தெளிவுபடுத்தாமல் உப்புக்குச்சப்பாக வேலைசெய்வது, வீண் முயற்சியாகவே அமையும். அதேபோன்று, பேஸ்புக், தொலைக்காட்சி செய்தி, பத்திரிகை, பிரசாரக் கூட்டங்களைப் பார்த்தே எல்லா முஸ்லிம்களும் ஓடோடி வந்து வாக்களிப்பார்கள் என்றும், எவ்வாறு நிராகரிக்கப்படாமல் வாக்களிப்பது என்பதைத் தாமாகவே கற்றுக் கொள்வார்கள் என்றும் முஸ்லிம் அரசியல் தலைவர்கள் நினைப்பார்களாயின், அது, மந்திரத்தால் மாங்காய் விழும் என எண்ணுவதைப் போன்றதாகவே இருக்கும்.

முகம் திறந்து வாக்களித்தல் அவசியம்

இம்முறை ஜனாதிபதித் தேர்தலில், வாக்காளர்களின் ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்தும் வகையில், முஸ்லிம் பெண்கள் முகத்தை மூடும் புர்கா போன்ற ஆடைகளை அணிவதற்குத் தடை விதிக்கப்படும் எனத் தெரிகின்றது.

புர்காவுடன் வாக்களிக்கத் தடை எனச் சில செய்திகள் வெளியாகியிருந்தாலும் கூட, தேர்தல் ஆணைக்குழு இதுபற்றிய ஊடக அறிக்கையை, சுற்றறிக்கையை இந்த நிமிடம் வரை வெளியிடவில்லை.

எவ்வாறாயினும், அநேகமாக இவ்வாறான ஒரு தடையைத் தேர்தல் ஆணைக்குழு கொண்டு வரும் வாய்ப்புள்ளது. எனவே, முஸ்லிம் பெண்கள் முகத்தை மூடாமல் சென்று, வாக்களிக்க வேண்டியது அவசியமாகும்.

வாக்களிப்பதற்காகச் செல்லும் நபர் ஒருவர், தனது ஆளடையாளத்தை நிரூபிப்பதற்காகத் தேசிய அடையாள அட்டை, தேர்தல்கள் ஆணையாளர் அனுமதித்த ஆளடையாள ஆவணங்களான செல்லுபடியான வெளிநாட்டுக் கடவூச்சீட்டு, செல்லுபடியான சாரதி அனுமதிப்பத்திரம், முதியோர் அடையாள அட்டை, ஓய்வூதிய அடையாள அட்டை, மதகுருமாருக்கான அடையாள அட்டை, தேர்தல்கள் திணைக்களத்தால் கிராம அலுவலர் ஊடாக விநியோகிக்கப்படுகின்ற தற்காலிக அடையாள அட்டை என்பவற்றில் ஏதேனுமோர் ஆவணத்தைக் கட்டாயம் எடுத்துச் செல்லுதல் வேண்டும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

அத்துடன், மேற்படி ஆளடையாள ஆவணங்களைப் பரிசீலித்துப் பார்த்து அதிலுள்ள நிழற்படமும் நபரின் முகத்தோற்றமும் ஒத்திசைவாகக் காணப்பட்டால் மாத்திரமே அவரது வாக்காளர் அட்டை பரிசீலிக்கப்பட்டு, வாக்குச்சீட்டு வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகவே, தேர்தல் விதிமுறைகளின் கீழ், ஆள்அடையாளத்தை உறுதிப்படுத்துவது கட்டாயமானதாகக் காணப்படுகின்றது.

கடந்த காலங்களில் முஸ்லிம் பெண்களின் ஆடைகள் பற்றிய அச்சமும் இருக்கவில்லை, இனவாதத்தின் கட்டுக்கதைகளும் இந்தளவுக்கு இருக்கவில்லை. எனவே, பல தேர்தல்களில் முகத்தை மூடிக்கொண்டும் முஸ்லிம் பெண்கள் வாக்களிப்பு நிலையத்துக்குச் சென்றார்கள். தேவையான சந்தர்ப்பத்தில் முகத்தைத் திறந்து காட்டி, ஆள்அடையாளத்தை உறுதிசெய்த பின்னர், வாக்களித்து விட்டு வந்தார்கள் என்பதை நாமறிவோம்.

ஆனால், இப்போது நிலைமைகள் மாறி விட்டன என்பதை மறந்து விடக் கூடாது. முகத்தை மூடும் ஆடைகளுக்கு அவசரகால சட்டத்தின் கீழ் விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்ட போதும், இப்போதும் முகத்தை மூடி ஆடை அணியும் பெண்கள் அசௌகரியங்களுக்கு முகம் கொடுக்க நேரிடுகின்றமை நாம் அறியாத விடயமல்ல.

முகத்தை மூட அனுமதி இருக்கின்றது என்பதற்காக, ஏனைய இன மக்கள் செறிவாக வாழும் இடங்களில், பகிரங்கமாக புர்கா, நிகாப் அணிந்து செல்வதும், முகத்தைத் திறந்து காட்டச் சொல்லிப் பொறுப்புள்ள ஓர் அதிகாரியால் கோரப்படும் போது, விதண்டாவாதம் பேசுவதும் புத்திசாலித்தனமான நடவடிக்கைகள் அல்ல.

தேவையான போது, ஆள்அடையாளத்தை உறுதிப்படுத்த வேண்டிய இலங்கைச் சட்டத்தின் படி அவசியம் என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும்.

இந்தப் பின்னணியில் வாக்களிப்பு நிலையத்துக்கு புர்கா, நிகாப் போன்ற முற்றாக முகத்தை மூடிய ஆடைகள் அணிந்து வாக்களிக்கச் செல்லும்போது அது, ஆளடையாளத்தை உறுதிப்படுத்தும் செயன்முறைக்கு தடங்கலை, தாமதத்தை ஏற்படுத்தும் என்பதையும் வேண்டாத பிரச்சினைகளைக் கொண்டு வரும் என்பதையும் முஸ்லிம்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

எனவேதான், ஊவா மாகாண சபைத் தேர்தல் காலத்திலும், தேர்தல்கள் ஆணைக்குழு இது பற்றிப் பிரஸ்தாபித்திருந்தது. இப்போது நிகாப், புர்கா அணிந்து வாக்களிக்கத் தடையோ கட்டுப்பாடோ விதிக்கலாம் எனத் தெரிகின்றது.

அப்படி தடை விதித்தாலும் விதிக்கவில்லை என்றாலும் கூட, முஸ்லிம் பெண்கள் முகம் திறந்து ஆளடையாளத்தை உறுதிப்படுத்த முன்வருவதே, சிக்கல்களை தவிர்க்க வழியாகும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அகத்தை சீராக்கும் சீரகம்!! (மருத்துவம்)
Next post மழைக்கால அழகுக்குறிப்புகள்!! (மகளிர் பக்கம்)