இரவுக்கு ஆயிரம் கண்கள்!! (மகளிர் பக்கம்)

Read Time:11 Minute, 19 Second

மன்னர் ஆட்சிக் காலத்தில் அரண்மனையை வித விதமான விளக்குகள் அலங்கரித்தன. அரண்மனை, மாடம், வீடுகள், கோயில் என எங்கு பார்த்தாலும் 2000க்கும் மேற்பட்ட பலவித விளக்குகள் புழக்கத்தில் இருந்தன. பழங்கால விழாக்களில் கதாநாயகனே விளக்குகள்தான். அந்நாளில் கற்களில் வீடுகள், அரண்மனைகள் இருந்ததற்கு முக்கிய காரணமும் விளக்குகள் தான். குறிப்பாக எண்ணை விளக்குகள் தான் இரவின் கண்களாய் இருந்து வந்தது.

காலம் மாறியது. தொழில்நுட்பம் வளர்ந்தது. மின்சாரம் வந்தது. அதற்குப்பின் விளக்குகளின் தேவைகள் படிப்படியாக குறைந்துவிட்டது. தற்போது 600 வகை விளக்குகள் மட்டுமே எஞ்சியுள்ளன. இப்போதெல்லாம் திருக்கார்த்திகை மற்றும் தீபாவளி பண்டிகையின் போது மட்டுமேதான் நம் வீட்டினை விளக்குகள் அலங்கரிக்கின்றன.

பாரம்பரிய நெல் ரகங்கள், மாடுகள், மரங்கள் அழிந்தது போல் விளக்குகளும் அழிந்துவிட்டன. பயன்பாடுகள் குறைந்து விட்ட காரணத்தால், தற்போது பூஜை அறைகளில் மட்டுமே விளக்குகள் பயன்படுத்தப்படுகின்றன என்று ஆதங்கப்படுகிறார் சென்னையை சேர்ந்த ராஜலட்சுமி.

‘‘நான் பிறந்தது தூத்துக்குடி அருகில் உள்ள வேப்பலோடை என்ற கிராமம். நான் வீட்டில் ஆறாவது பெண். அப்பா விவசாயமும், வியாபாரமும் செய்து வந்தார். ஊரில் பெரிய குடும்பங்களில் எங்க குடும்பமும் ஒன்று. கிராமத்தில் பெரிய குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்றால், அவர்
களுக்கு ஒரு தனி மரியாதை மற்றும் மதிப்பு இருக்கும். அதை சொல்லித்தான் அப்பா என்னை வளர்த்து வந்தார். அதனாலேயே நான் பள்ளிப் படிப்பைக்கூட முடிக்கவில்லை.

அப்பாவின் நிழலில் வளர்ந்ததால் வியாபாரத்துடன் சேர்ந்து தலைமைப் பண்பும் என்னிடம் ஒட்டிக்கொண்டது. ஊரில் குறிப்பிட்ட வயது வந்த
வுடன் பெண்களுக்கு திருமணம் செய்திடுவாங்க. அப்படித்தான் எனக்கும் திருமணம் நடைப்பெற்றது. என் கணவர் சிவசங்கரன், பொறியியல் பட்டதாரி. அவர் படித்தவர், நானோ படிக்காதவள்னு எனக்குள் ஒரு தாழ்வு மனப்பான்மை இன்றும் இருந்து வருகிறது. இந்த குறையை போக்க நானும் என் வாழ்க்கையில் ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்குள் ஓடிக் கொண்டே இருந்தது.

ஆனால் என்ன செய்ய வேண்டும் என்று அப்போது எனக்கு தெரியவில்லை. அதனால் முதலில் நான் ஒரு பட்டதாரியாக வேண்டும் என்று நினைச்சேன். என் மகள் எல்.கே.ஜி படிக்கும்போது நான் தொலைதூரக் கல்வி மூலம் எம்.பி.ஏ படித்து முடித்தேன். என் மாமனார், புகழ்பெற்ற ஆன்மிக சொற்பொழிவாளர். பல கோயில்களை புதுப்பித்து புனரமைத்து வந்தார்.

அவரின் வழிகாட்டல் எனக்கு பெரிய அளவில் உதவியது. நானும் என் நண்பர் விஷ்ணுக்குமாரும் இணைந்து ‘ஆர்.எல் ஹேண்ட் கிராப்ட்’ என்ற பெயரில் ஒரு விளக்கு கடையை ஆரம்பித்தோம். அதில் பூஜைக்கு தேவையான பொருட்களுடன் விதவிதமான விளக்குகளை விற்பனை செய்தோம். காமாட்சி விளக்கு, அகல் விளக்கு, தூண்டாமணி விளக்கு, காரைக்குடி விளக்கு என நாங்கள் சுமார் 300க்கும் மேற்பட்ட விளக்குகள் சேகரித்து வைத்திருக்கிறோம்.

தமிழகத்தில் திருமணமான பெண்களுக்கு விளக்கு கொடுத்து அனுப்புவது பண்பாடு. ஒவ்வொரு ஊருக்கும் மற்றும் குடும்ப பாரம்பரியத்திற்கு ஏற்ப விளக்குகள் கொடுப்பது வழக்கம். இது தற்போதும் நடை முறையில் இருப்பதால் அவரவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப ஆர்டரின் பேரில் விளக்குகளை வடிவமைத்து தருகிறோம்’’ என்றவர் ஒவ்வொரு விளக்கு மற்றும் அதன் பெருமையை பற்றி விளக்கினார்.

‘‘நம் எல்லாருடைய வீட்டிலும் இருப்பது காமாட்சி விளக்கு. இது இல்லாத பூஜை அறையே இருக்காது. விளக்குகளில் புனிதமானது. பூஜைக்கு முன்பு பூவும், பொட்டும் வைத்து மங்கலத்துடன் தீபம் ஏற்றி, தினமும் வழிபடத்தக்கது. பல வீடுகளில் இந்த காமாட்சி விளக்கினை பொக்கிஷமாகவே பாதுகாத்து வருகின்றனர்.

இதற்கு அடுத்து குத்துவிளக்கு. காமாட்சி விளக்கைப் போலவே மிகவும் புனிதமானது. செங்குத்தாக நிமிர்ந்து நிற்கும் விளக்கு என்பதால் நாம் அதை குத்துவிளக்கு என்று பெயரிட்டு அழைக்கிறோம். ஐந்து முக விளக்குகள் சுவாமி படங்களுக்கு இரண்டு பக்கத்தில் எரிந்தால் வீடு மிகவும் மங்கலமாக இருக்கும். பாவை விளக்கு, ஒரு பெண் அகல் விளக்கை ஏந்தி இருப்பதுபோல் இருக்கும்.

கடவுளுக்கு முன் ஒளி தரும் விளக்குகளாக பயன்படுத்துகிறோம். தீபங்கள் பதினாறு, தூப தீபம், ஓல தீபம், புஷ்ப தீபம், நாததீபம், புருஷா மிருக தீபம், கஜ தீபம், ரூயாஜத தீபம், வியாக்ர தீபம், ஹம்ஸ தீபம், கும்ப தீபம், குக்குட தீபம், விருஷ தீபம், கூர்ம தீபம், நட்சத்திர தீபம், மேரூ தீபம், கற்பூர தீபம் என 16 வகைப்படும். தூக்கு விளக்குகள் எட்டு, வாடா விளக்கு, தூக்கு விளக்கு, துண்டாமணி விளக்கு, நந்தா விளக்கு, கூண்டு விளக்கு, புறா விளக்கு, சங்கிலி தூக்கு விளக்கு, கிளித்தூக்கு விளக்குகள் என்று 8 வகைப்படும்.

பூஜைக்கான விளக்குகள் ஒன்பது வகைப்படும். சர்வராட்சத தீபம், சபூத தீபம், பிசாஜ தீபம், கின்னர தீபம், வித்யாதர தீபம், கந்தர்வ தீபம், பிராக தீபம். சரவிளக்குகளில் நிலை விளக்கு, கிளித்தட்டு விளக்கு கோயிலில் ஏற்றப்படுபவை. ஈசான தீபம், இந்திர தீபம், வருண தீபம், யம தீபம் நால்வகை திக்பாலர் தீபங்கள். ஐராவத தீபம், புண்டரீக தீபம், குமுத தீபம், ஜனதீபம், புஷ்கந்த தீபம், சார்மபவும தீபம், பித்ர தீபம் என அஷ்டகஜ தீபங்கள் உள்ளன’’ என்றார் பெருமூச்சு விட்டபடி.

‘‘சிலர் தங்களின் ஜாதகத்திற்கு ஏற்ப ஜோசியரின் ஆலோசனை பேரில் விளக்குகள் கேட்பாங்க. அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப தயார் செய்து தருகிறோம். தற்போது குத்துவிளக்கில் சிலுவை இருப்பது போல் கூட தயார் செய்து கொடுத்திருக்கிறோம். இந்தியா மட்டும் இல்லை எங்களின் விளக்குக்கடை.காம் இணையம் மூலமாக வெளிநாடுகளுக்கும் விளக்குகளை தயார் செய்து அனுப்புகிறோம்’’ என்றவர் ஹயக்கிரீவர் கலை மற்றும் பண்பாடு மையம் பெயரில் நாட்டியப்பள்ளி நடத்தி வருகிறார்.

‘‘நாம் அடையாததை நம் குழந்தைகள் அடைய வேண்டும் என்பது தான் பல பெற்றோரின் கனவாக உள்ளது. அப்படித்தான் என்னால் பயில முடியாத பரத நாட்டியத்தை என் குழந்தைக்கு கற்றுத் தர விரும்பினேன். ஆனால் அவளால் பள்ளி முடித்துட்டு நடனப் பள்ளி சென்று வரவேண்டும் என்பதால் வீட்டில் பள்ளி பாடங்களை படிக்க மிகவும் சிரமப்பட்டாள். எனவே வீட்டிலேயே பரதம் கற்றுக் கொள்ள ஏற்பாடு ெசய்தேன்.

என் மகளை தொடர்ந்து அவள் தோழிகள், உறவினர்களின் குழந்தைகள் என கொஞ்சம் கொஞ்சமாக ஆட்கள் சேர்ந்தார்கள். எல்லாருக்கும் வீட்டில் வைத்து சொல்லித் தரமுடியாது என்பதால், ஒரு நாட்டியப் பள்ளியை ஏன் துவங்கக்கூடாதுன்னு தோன்றியது. தற்போது போரூர், காட்டுப்பாக்கம், திருவேற்காடு என மூன்று கிளைகளாக எங்களின் நாட்டியப் பள்ளி விரிவடைந்துள்ளது. இங்கு தற்போது பத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு பரத நாட்டிய பயிற்சி கொடுத்து அரங்கேற்றம் செய்துள்ளோம்.

கும்பாபிஷேகம் மற்றும் கோயில் விழாக்களில் கலை நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளோம். என் நாட்டியப் பள்ளி மாணவர்களுக்கு போட்டிகள் நடத்தி பரிசுகள் கொடுப்பது வழக்கம். அப்படி நடைபெற்ற ஒரு போட்டிக்காக, வெண்கலத்தில் திருவள்ளுவர் சிலையை பரிசாக கொடுக்க நினைச்சேன். பல இடங்களில் தேடியும் அந்த சிலை கிடைக்கவில்ைல.

விளக்குகள் போல் சிலைகளை ஏன் வடிவமைக்கக் கூடாதுன்னு எண்ணம் எழுந்தது. தஞ்சாவூர், கும்பகோணம், வடமாநிலங்கள் சென்று சிலைகள் வடிவமைப்பதையும் கற்றுக்கொண்டேன். இப்போது பூஜை பொருட்கள், விளக்குகளுடன் சிலைகளும் வடிவமைத்து வருகிறோம். ஆர்டரின் பேரிலும் செய்து தருகிறோம்’’ என்றார் ராஜலட்சுமி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கல்முனை தமிழ்ப் பிரிவு: துருப்புச் சீட்டா? (கட்டுரை)
Next post என் பாதை தனித்துவமானது!! (மகளிர் பக்கம்)