மரியாவின் கனவு!! (மகளிர் பக்கம்)

Read Time:11 Minute, 51 Second

ஓர் இளம் பெண்ணின் வாழ்வினூடாக பணத்துக்காக அரங்கேறும் கொடூர நிகழ்வுகளையும், போதைப் பொருள் கடத்தலுக்குப் பின்னால் இருக்கும் அப்பாவிப் பெண்களின் துயரங்களையும் கண் இமைக்காமல் பதிவு செய்கிறது ‘மரியா ஃபுல் ஆஃப் க்ரேஸ்’. கொலம்பியாவின் அழகிய ஒரு குக்கிராமம். அங்கே அம்மா, பாட்டி மற்றும் காதலனைப் பிரிந்து தனியாக கைக்குழந்தையுடன் இருக்கும் மூத்த சகோதரியுடன் வாழ்ந்து வருகிறாள் மரியா.

17 வயதான அவள் வீட்டுக்கு அருகிலிருக்கும் பூங்கொத்து தயாரிக்கும் நிறுவனத்தில் குறைந்த வருமானத்துக்கு வேலை செய்கிறாள். அம்மாவும், சகோதரியும் எந்த வேலைக்கும் செல்வதில்லை. குடும்பத்தில் வருமானம் ஈட்டும் ஒரே நபர் மரியா மட்டுமே. அவளை நம்பியே அக்குடும்பத்தின் வாழ்க்கைச் சக்கரம் சுழல்கிறது.

அதிகாலையில் மலர் தோட்டத்தில் ரோஜா மலர்களை காம்புடன் பறிப்பது, அப்போது முட்களின் கீறலில் விரல்களில் காயம் ஏற்பட்டு குருதி வழிந்தோடுவதை வாயில் உறிஞ்சிக்கொண்டே பொறுத்துக் கொள்வது, பிறகு எதையும் பொருட்படுத்தாமல் காம்பில் இருக்கும் இலைகளையும், முட்களையும் அகற்றி, மலர்களை அழகாக ஒன்று சேர்த்து பூங்கொத்தாக வடிவமைப்பது என்ற ஒரே மாதிரியான வேலை அவளை சலிப்பூட்டுகிறது. இருந்தாலும் குடும்பச் சுமையைப் போக்க வேண்டா வெறுப்புடன் அந்த வேலையைத் தொடர்ந்து செய்துவருகிறாள். அவளுடன் வேலை செய்கின்ற தோழி ப்ளான்கா மட்டுமே ஆறுதலாக இருக்கிறாள்.

மரியாவிற்கு மெக்கானிக்காக இருக்கும் இளைஞன் ஒருவனுடன் காதல் மலர்கிறது. காதலுடனான நெருக்கத்தால் கர்ப்பம் அடைகிறாள். திருமணம் சம்பந்தமாக இருவருக்கும் இடையில் பிரச்சனை ஏற்பட்டு பிரிந்துவிடுகிறார்கள். இந்தச் சூழலில் மரியாவிற்கு மேலாளருடன் முரண்
பாடு ஏற்படுகிறது. வேலையைத் தூக்கிப் போட்டுவிட்டு வெளியேறிவிடுகிறாள்.

மரியா வேலைக்குப் போகவில்லை என்றால் குடும்பம் நடுத்தெருவுக்கு வந்துவிடும் என்பதால் அவளின் அம்மாவும், சகோதரியும் மரியாவை மேலாளருடன் சமாதானமாகி, மறுபடியும் அங்கேயே வேலைக்குப் போகும்படி வற்புறுத்துகிறார்கள். மரியா யார் பேச்சையும் கேட்காமல் தனக்குப் பிடித்த வேலையைத் தேட ஆரம்பிக்கிறாள்.

இந்நிலையில் மரியாவிற்கு ஃப்ராங்க்ளின் என்பவனின் அறிமுகம் கிடைக்கிறது. மரியாவின் சூழலைப் புரிந்துகொண்ட அவன், ‘‘ஒரு வேலை இருக்கிறது. துணிச்சலாகச் செய்தால் சீக்கிரத்திலேயே பணக்காரி ஆகிவிடலாம்…’’ என்று போதைப் பொருள் கடத்தலில் மரியாவை சேர்த்து விடுகிறான்.

தான் செய்யப்போவது எவ்வளவு ஆபத்து மிகுந்தது, தவறானது என்று தெரிந்தும் பொருளாதாரத் தேவைக்காக மரியா அந்தத் தொழிலில் இறங்குகிறாள். சுமார் 10 கிராம் எடையுள்ள கோகைன் துகள்களை 4.2 செ.மீ நீளமும், 1.2 செ.மீ.அகலமும் கொண்ட கேப்சூல்களில் அடைத்திருப்பார்கள்.

அவளின் பணி என்னவென்றால் அந்த கேப்சூல்களை விழுங்கி, வயிற்றுக்குள் பத்திரமாக வைத்து நியூயார்க்கிற்குக் கொண்டு சேர்க்க வேண்டும். அதாவது போதை மருந்துகளை கடத்தும் கண்டெய்னர் போல அவள் செயல்பட வேண்டும். வயிறு சம்பந்தமான எந்தப் பிரச்சனையும் இருக்கக்கூடாது என்பதுதான் இந்த வேலைக்கான ஒரே தகுதி.

மரியா ‘சரி’ என்றதும், நியூயார்க் செல்வதற்காக விசா, பாஸ்போர்ட், விமான டிக்கெட் எல்லாம் துரித நேரத்தில் தயாராகிறது. மரியாவுடன் இந்தத் தொழிலுக்கு ப்ளான்காவும் இணைந்துவிடுகிறாள். இதில் அனுபவசாலியாக இருக்கும் லூசியும் கைகோர்க்கிறாள். லூசிக்கு நியூயார்க்கில் ஒரு சகோதரி இருக்கிறாள். மரியா பல நாட்கள் பயிற்சிகளுக்குப் பிறகு 62 கேப்சூல்களை விழுங்கி தயாராகிறாள். மரியா, லூசி, ப்ளான்கா மூவரும் ஒரே விமானத்தில் கொலம்பியாவிலிருந்து நியூயார்க்கிற்கு பறக்கிறார்கள்.

அமெரிக்காவில் விமானம் தரை இறங்கியதும் மரியாவின் மீது கஸ்டம்ஸ் அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டு விசாரணைக்கு அழைக்கப்படுகிறாள். ஒருவித பதற்றம், பயத்துடன் விசாரணையை மரியா எதிர்கொள்கிறாள். ‘‘வயிற்றை எக்ஸ்-ரே எடுத்துப் பார்க்க வேண்டும்…’’ என்கிறார் ஒரு அதிகாரி. அவள் கர்ப்பம் தரித்திருப்பதால் எக்ஸ்-ரே எடுப்பதற்கான அனுமதி மறுக்கப்படுகிறது. அவளின் கர்ப்பம் அவளை காப்பாற்றிவிடுகிறது.

போதை மருந்து கடத்தும் கும்பலைச் சேர்ந்த இரு இளைஞர்கள், ஏர்போர்ட்டிற்கு வெளியே தயாராக காத்திருக்கிறார்கள். மரியா, லூசி, ப்ளான்கா மூவரையும் அழைத்துக்கொண்டு ஒரு ஹோட்டலுக்குச் செல்கின்றனர். மூவருக்கும் வேகமாக மலம் கழிப்பதற்கான மருந்து கொடுக்கப்படுகிறது.

சில நிமிடங்களில் கேப்சூல் தயாராக இருக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. மலத்தில் வெளியேறும் கேப்சூல்களை தங்களின் கைகளாலே எடுத்து சுத்தம் செய்து தருகின்றனர். லூசியின் வயிற்றுக்குள் இருக்கும் கேப்சூல் வெடித்து விடுகிறது.

அவளை கொன்று வயிற்றைக் கிழித்து அந்த கேப்சூல்களை எடுக்கின்றனர் அந்த இளைஞர்கள். லூசியின் உடலை அவர்கள் அப்புறப்படுத்தும்போது அதை மரியா கவனித்துவிடுகிறாள். இங்கிருந்தால் நம் உயிருக்கு ஆபத்து என்று உணர்ந்த மரியாவும், ப்ளான்காவும் கேப்சூல்களுடன் ஹோட்டலில் இருந்து தப்பிக்கின்றனர். லூசியின் சகோதரியின் வீட்டில் இருவரும் தஞ்சமடைகின்றனர்.

லூசி இறந்த விபரம் அவளின் சகோதரிக்குத் தெரியவர பிரச்சனை பெரிதாக வெடிக்கிறது. லூசியின் சகோதரி மரியாவையும், பளான்காவையும் வீட்டைவிட்டு துரத்திவிடுகிறார். எங்கு போவதென்று தெரியாமல் இருவரும் அலைக்கழிக்கப்படுகின்றனர். வேறு வழியில்லாமல் கேப்சூல்களை அந்த இளைஞர்களிடம் ஒப்படைத்துவிட்டு தாங்கள் செய்த வேலைக்கு உரிய பணத்தைப் பெறுகின்றனர்.

கிடைத்த பணத்தில் லூசியை கொலம்பியாவில் அடக்கம் செய்வதற்கான வேலைகளை மரியா செய்கிறாள். கடைசியில் தோழிகள் இருவரும் கொலம்பியாவிற்குத் திரும்ப முடிவு செய்கின்றனர். தடுமாறும் மரியா கொலம்பியாவிற்குச் செல்லாமல் அமெரிக்காவிலேயே தங்க முடிவு செய்ய, ப்ளான்கா சொந்த நாட்டுக்குச் செல்வதோடு படம் நிறைவடைகிறது.

பூங்கொத்து நிறுவனத்தில் அதிகமாக இளம் பெண்கள்தான் வேலை செய்கின்றனர். கழிப்பறைக்குச் செல்வதற்குக் கூட மேலாளரிடம் அனுமதி கேட்க வேண்டிஇருக்கிறது. அங்கே தயாரிக்கப்படும் பூங்கொத்துகள் அயல் நாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதால் வேலை படுவேகமாக நடைபெறுகிறது. மரியா, மேலாளரிடம் கழிப்பறைக்குச் செல்ல அனுமதி கேட்கிறாள்.

அவன், ‘‘சும்மா, சும்மா போயிட்டே இருப்பயா…’’ என்று கடிந்து கொள்கிறான். அப்போது அவர்களுக்கு இடையே சண்டை ஏற்படவே மரியா வேலையை விடுகிறாள். கொலம்பியாவில் வறுமையில் வாடுகின்ற பெண்களின் நிலையையும், அங்கே வேலை செய்யும் இடத்தில் அவர்களுக்கு நிகழ்கின்ற குரூரங்களையும் அற்புதமாகப் பதிவு செய்கிறது இந்தப் படம்.

பொதுவாக போதைக் கும்பல் சார்ந்த படங்களில் ஹீரோயிசம், கவர்ச்சி, ஸ்பெஷல் எபெக்ட்ஸ், கார் சேஸிங், துப்பாக்கிச் சண்டை என்று ஆக் ஷன் காட்சிகளும், நாயகன் போதைக் கும்பலை வேரறுப்பதுமான காட்சிகளும்தான் அதிகமாக இருக்கும். ஆனால், இந்தப் படத்தில் அப்படி எதுவுமே இல்லை.

போதை மருந்து வியாபாரத்தில் பலியாகின்ற அப்பாவிகளின் கண்ணீரைத், துயரை பார்வையாளர்கள் தனக்குள் உணர்ந்து கொள்ளும்படி படமாக்கியிருக்கிறார் இயக்குனர் ஜோஸ்வா மார்ஸ்டன். மரியாவாக நடித்த மோரேனோவின் நடிப்பு பல நாட்களுக்கு நம் கண்ணுக்குள்ளேயே நிற்கும்.

‘ஆயிரம் உண்மைக் கதைகளை அடிப்படையாகக் கொண்டது இந்தப் படம்’ என்ற டேக் லைனுடன் படத்தின் போஸ்டர்களை பார்க்கும்போதும் இது மரியாவின் கதை மட்டுமல்ல; மரியாக்களின், லூசிக்களின் கதை, பணத்தேவைகளுக்காக தடம் மாற்றப்பட்ட பெண்களின் கதை என்று படம் பார்க்கின்ற ஒவ்வொருவருக்கும் புலப்படும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஒன்பது வயதில் உலக சாதனையாளர்கள்… கவுரவ டாக்டர் பட்டம்…கலக்கும் ட்வின்ஸ்! (மகளிர் பக்கம்)
Next post கொஞ்சம் நிலவு… கொஞ்சம் நெருப்பு…!! (அவ்வப்போது கிளாமர்)