திருவள்ளுவரின் உருவம் உருவானது எப்படி? (உலக செய்தி)

Read Time:12 Minute, 21 Second

திருவள்ளுவருக்கு காவி உடை அணிவித்து பாரதிய ஜனதா கட்சியினர் வெளியிட்ட படம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக வாழ்ந்ததாகக் கருதப்படும் திருவள்ளுவரின் உருவம் எப்படித் தோன்றியது?

தமிழ்நாடு அரசு அங்கீகரித்துள்ள திருவள்ளுவரின் உருவப்படத்தில் திருவள்ளுவர் வெள்ளை உடை அணிந்து அமர்ந்திருப்பது போல காட்சியளிக்கிறார்.

1959 வாக்கில் இந்தப் படம் வெளியிடப்பட்டு, பரவலான பிறகு, பெரிதும் இந்தப் படமே பயன்படுத்தப்பட்டுவருகிறது.

தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு, இந்தப் படத்தையே அதிகாரபூர்வ படமாக பயன்படுத்த வேண்டுமென அரசாணைகளும் வெளியிடப்பட்டுவிட்டன. இதற்குப் பிறகு மிக அரிதாகவே, அந்தப் படத்திற்கு மாறுபட்ட திருவள்ளுவரின் படங்கள் வரையப்பட்டுள்ளன.

திருவள்ளுவருக்கு காவி உடை அணிவித்து பாரதிய ஜனதா கட்சியினர் வெளியிட்ட படம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக வாழ்ந்ததாகக் கருதப்படும் திருவள்ளுவரின் உருவம் எப்படித் தோன்றியது?

தமிழ்நாடு அரசு அங்கீகரித்துள்ள திருவள்ளுவரின் உருவப்படத்தில் திருவள்ளுவர் வெள்ளை உடை அணிந்து அமர்ந்திருப்பதுபோல காட்சியளிக்கிறார். 1959வாக்கில் இந்தப் படம் வெளியிடப்பட்டு, பரவலான பிறகு, பெரிதும் இந்தப் படமே பயன்படுத்தப்பட்டுவருகிறது.

தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு, இந்தப் படத்தையே அதிகாரபூர்வ படமாக பயன்படுத்த வேண்டுமென அரசாணைகளும் வெளியிடப்பட்டுவிட்டன. இதற்குப் பிறகு மிக அரிதாகவே, அந்தப் படத்திற்கு மாறுபட்ட திருவள்ளுவரின் படங்கள் வரையப்பட்டுள்ளன.

ஆனால், முதன் முதலில் திருவள்ளுவருக்கு உருவம் கொடுக்கப்பட்டது எப்படி?

பத்தொன்பதாம் நூற்றாண்டின் துவக்கத்திலிருந்தே திருவள்ளுவருக்கு உருவம் கொடுக்கும் முயற்சிகள் துவங்கிவிட்டன.

அந்த காலகட்டத்தில் சென்னை மாகாணத்தின் ஆட்சியராக இருந்த பிரான்சிஸ் வைட் எல்லிஸ் திருவள்ளுவரின் உருவம் பொறித்த தங்க நாணயம் ஒன்றை வெளியிட்டிருக்கிறார். இந்த நாணயத்தின் ஒரு புறம் திருவள்ளுவரின் உருவமும் மற்றொரு புறம் நட்சத்திரமும் பொறிக்கப்பட்டுள்ளது.

இந்த நாணயத்தில் திருவள்ளுவர் ஒரு சமண முனிவரைப் போல காட்சியளிக்கிறார். முகமும் தலையும் மழிக்கப்பட்டு, தலை மேல் குடையுடன் இந்த நாணயத்தில் காணப்படுகிறார் திருவள்ளுவர்.

இந்தத் திருவள்ளுவரை உருவகப்படுத்த, எந்த உருவத்தையும் எல்லிஸ் மாதிரிக்கு எடுத்துக்கொண்டதாகத் தெரியவில்லை. “இவரை உருவகப்படுத்தியவர்கள், இவரை ஒரு சமண முனிவர் என்று கருதியுள்ளார்கள் எனத் தெளிவாகத் தெரிகிறது. திருக்குறளில் ´ஆதி பகவன்´, ´மலர்மிசை ஏகினான்´, ´அறவாழி அந்தணன்´ என்று வரும் சொல் தொடர்கள் வள்ளுவப் பெருமான் சமண சமயத்தினர் என்று கொள்வதற்கு வலுவான சான்றுகள் ஆகும்” என்கிறார் இது குறித்து எழுதியுள்ள கல்வெட்டு ஆய்வாளரான ஐராவதம் மகாதேவன்.

இதற்குப் பிறகு, 1904 ல் இந்து தியாலாஜிகல் மேல்நிலைப் பள்ளியில் தமிழ்ப் பண்டிதராக இருந்த கோ. வடிவேலு செட்டியார் என்பவர், ´திருக்குறள் மூலமும் பரிமேலழகருரையும்´ என்ற நூலை வெளியிட்டார். இரு பாகங்களாக வெளியான இந்தப் புத்தகத்தில் திருவள்ளுவரின் படம் ´திருவள்ளுவநாயனார்´ என அச்சிடப்பட்டிருந்தது.

அதில் ஜடாமுடியுடனும் தாடி மீசையுடனும் மார்புக்குக் குறுக்காக யோகப் பட்டை எனப்படும் துண்டை அணிந்தபடியும் திருவள்ளுவர் காட்சியளித்தார். ஒரு கையில் சின் முத்திரையுடன் ஜெப மாலையும் மற்றொரு கையில் ஒரு ஓலைச் சுவடியும் இருந்தது. நெற்றியில் பட்டையும் நடுவில் குங்குமமும் இருந்தது.

ஏன் இப்படி ஜடாமுடியுடன் கூடிய உருவம் கொடுக்கப்பட்டது என்பதற்கு ஒரு விளக்கமும் இந்த நூலில் இருக்கிறது. ´நாயனார் சொரூபஸ்துதி´ என்ற பாடலை அடிப்படையாக வைத்தே இந்த உருவம் திருவள்ளுவருக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது.

இதற்குப் பிறகு இந்த நூலின் ஆங்கிலப் பதிப்பு வெளியானபோது, அதிலும் ஒரு திருவள்ளுவர் படம் கோட்டுச் சித்திரமாக இடம்பெற்றிருந்தது. அதில் திருவள்ளுவர் ஒரு சைவ சமய அடியாரைப் போல காட்சியளிக்கிறார்.

கரங்களிலும் நெற்றியிலும் விபூதிப் பட்டையுடன் காட்சியளிக்கும் இவர், ஒரு மரத்தடியில் அமர்ந்திருப்பதைப் போலவும் அவரை இரு அடியார்கள் தொழுவதும்போலவும் அந்தப் படம் இடம்பெற்றிருந்தது. இதனை சம்பந்தன் என்பவர் வரைந்திருந்தார்.

இதற்குப் பிறகு சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் வெளியிட்ட நூல்களில் திருவள்ளுவர் படங்கள் ஏறக்குறைய இதே தோற்றத்தில் இடம்பெற்றிருந்தன.

இந்தப் படங்கள் தமிழ்நாட்டில் பல வீடுகளில் வைத்து வணங்கப்பட்டன. வேறு பலரும் திருவள்ளுவர் படங்களை வெளியிட்டார்கள். அதில் பல படங்களில் யோகப் பட்டைக்குப் பதிலாக மார்பின் குறுக்கே பூணூலும் இடம்பெற்றிருந்தது.

1950 களில் பாலு – சீனு என்ற சகோதரர்கள் கலை என்ற இதழை நடத்தினார்கள். அந்த இதழில் ஒரு திருவள்ளுவர் படம் இடம்பெற்றிருந்தது. அந்தப் படத்தில் திருவள்ளுவர் எந்த மதச் சின்னமும் இன்றி இருந்தார்.

“1950 களின் பிற்பகுதியில்தான் நாம் இப்போது காணும் வெள்ளுடை தரித்த வள்ளுவரை வரைவதற்கான முயற்சிகள் துவங்கின. இந்த முயற்சியைத் துவங்கியவர் கவிஞர் பாரதிதாசன். அவர் திராவிடர் கழகத்தைச் சேர்ந்த ராமச்செல்வன் என்பவருடன் சேர்ந்துவந்து, ஓவியர் வேணுகோபால் சர்மாவைச் சந்தித்தார். மூன்று பேரும் சேர்ந்து திருவள்ளுவர் படத்தை உருவாக்கும் திட்டமிட்டனர். இதற்கான செலவுகளை ராமச்செல்வன் ஏற்றுகொண்டார்” என்கிறார் திராவிட இயக்க ஆய்வாளரான க. திருநாவுக்கரசு.

சென்னைப் பல்கலைக்கழகத்தின் திருக்குறள் ஆராய்ச்சிப் பகுதி இந்தப் படம் வரையப்பட்டது குறித்து ´திருக்குறள் திருவுருவப் பட விளக்கம்´ என்ற ஒரு சிறிய வெளியீட்டைக் கொண்டுவந்தது. தற்போதைய திருவள்ளுவரின் படத்தை அவர் ஏன் அப்படி வரைந்தார் என்பதற்கான விளக்கம் அந்த வெளியீட்டில் இடம்பெற்றிருந்தது.

திருவள்ளுவர் கருத்துலகில், சிந்தனை வானில் வாழ்ந்தவர் என்பதால் அவரைச் சுற்றி மரம், செடி, கொடிகள், வீடுகள் ஏதும் இல்லாமல் அவரைச் சுற்றி அறிவொளி மட்டும் இருக்கும்படி இந்த உருவம் உருவாக்கப்பட்டது. தன்னுடைய சிந்தனை, செயல், ஆடை ஆகியவற்றை அழுக்குத் தீண்டாமல் இருப்பதற்காக அவர் ஒரு சிறிய மரப் பலகை மீது இருப்பது போன்று அமைக்கப்பட்டது.

´தூய்மை நிறைந்த உள்ளம், தூய்மை நிறைந்த நோக்கு, தூய்மை நிறைந்த வாக்கு´ ஆகியவற்றைக் கொண்டிருப்பதால் திருவள்ளுவர் அவருக்கு வெண்ணிற ஆடை உடுத்தப்பட்டதாக அந்த வெளியீட்டில் கூறுகிறார் வேணுகோபால் சர்மா.

பின்னால் வளர்க்கப்படும் குடுமியும் வெட்டப்பட்ட சிகையும் பல இனக் குழுக்களுக்கு அடையாளமாகிவிட்டதால், திருமுடியும் நீவப்படாத தாடியும் இருப்பதுபோல வரையப்பட்டது.

“இந்தப் படம் வரைந்து முடிக்கப்பட்ட பிறகு நாகேஸ்வரபுரத்தில் ஒரு வீட்டில் இந்தப் படத்தை வைத்தார் வேணுகோபால் சர்மா. காமராஜர், சி.என். அண்ணாதுரை, மு. கருணாநிதி, நெடுஞ்செழியன், எழுத்தாளர் கல்வி உள்ளிட்ட பல முக்கியப் பிரமுகர்களும் இந்தப் படத்தைப் பார்வையிட்டு பாராட்டிச் சென்றனர்.

பிறகு இந்தப் படம், 1960 ல் சி.என். அண்ணாதுரையால் காங்கிரஸ் மைதானத்தில் இந்தப் படம் வெளியிடப்பட்டது. பிறகு இதே படம், மத்திய அரசால் தபால் தலையாகவும் வெளியிடப்பட்டது.

தி.மு.க. சட்டமன்றத்திற்குள் வந்த பிறகு, திருவள்ளுவர் உருவப் படத்தை சட்டமன்றத்தில் வைக்க வேண்டுமென மு. கருணாநிதி கோரிக்கை வைத்தார். “அதற்குப் பதிலளித்த முதல்வர் பக்தவத்சலம், மு. கருணாநிதி ஒரு உருவப்படத்தை வாங்கியளித்தால், வைப்பதில் ஆட்சேபணையில்லை” என்றார்.

இதற்குப் பின் 1964 ஆம் ஆண்டு மார்ச் 23 ஆம் தேதி தமிழக சட்டமன்றத்தில் வேணுகோபால் வரைந்த திருவள்ளுவரின் உருவத்தை அன்றைய துணைக் குடியரசுத் தலைவரான சாகிர் உசேன் திறந்து வைத்தார்” என்கிறார் திருநாவுக்கரசு.

இதற்குப் பின், மு. கருணாநிதி முதல் அமைச்சராக இருந்த காலகட்டத்திலேயே இந்தப் படம் அரசுப் பேருந்துகள் அனைத்திலும் இடம்பெறச் செய்யப்பட்டது. இந்தப் படமே அரசால் அங்கீகரிக்கப்பட்ட திருவள்ளுவர் படமாக அறிவிக்கப்பட்டு தமிழக அரசால் அரசாணையும் வெளியிடப்பட்டது.

இந்தப் படத்தின் அடிப்படையிலேயே சென்னை மையிலாப்பூரில் அமர்ந்த நிலையில் திருவள்ளுவரின் சிலை உருவாக்கப்பட்டது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஆண்டி என அழைத்ததால் குழந்தையை மோசமாக திட்டிய நடிகை !! (சினிமா செய்தி)
Next post டிரம்ப் பதவி நீக்க விசாரணை – புதிய அறிவிப்பு !! (உலக செய்தி)