உங்கள் குழந்தை பத்திரமா?! (மருத்துவம்)

Read Time:12 Minute, 48 Second

பெற்றோர் ஆவதற்காக நிறைய பேர் தவம் இருக்கின்றனர். கோவில், குளம், மருத்துவமனை என நேரத்தையும் பணத்தையும் தண்ணீராக செலவழிக்கின்றனர். காரணம் குழந்தைகள்தாம் நம் வாழ்க்கைக்கான அர்த்தம் கொடுப்பவர்கள். நம் வாழ்க்கையை சுவாரஸ்யப்படுத்துபவர்கள். ஆனால் There’s no gain without pain என்று ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு. பெற்றோர் ஆகிவிடுதல் வேண்டுமானால் சுலபமாக இருக்கலாம். ஆனால், பெற்றோருக்கான பொறுப்பு என்பது அத்தனை சுலபமானதல்ல.

பிள்ளைகளை வளர்த்து ஆளாக்குவது என்பது பெரும் சவாலான விஷயம். அதிலும் சிறு குழந்தைகளை பாதுகாப்பது என்பது கூடுதல் கவனத்துடனும் பொறுப்புடனும் இருக்கவேண்டிய காலகட்டம். சிறு குழந்தைகள் மற்றும் இளம் பிள்ளைகளை பாதுகாப்பாக வளர்ப்பது குறித்து நமக்காக இங்கே சில ஆலோசனைகளை கொடுத்திருக்கிறார் மன நல ஆலோசகர் வந்தனா. பெற்றோராக இருத்தல் வாழ்வின் மிக முக்கியமான அம்சம். அதில் நாம் மூன்று ரோல்கள் பண்ண வேண்டியது கட்டாயம்.

அவை… ஒன்று குழந்தைகளை ஆரோக்கியமாகவும் பாதுகாப்பாகவும் வளர்ப்பது, இரண்டு பாதுகாப்பான சிறப்பான வாழ்க்கைக்காக குழந்தைகளை தயார்ப்படுத்துவது, மூன்று நம் முன்னோர்கள் நமக்கு வழங்கிய நம் பண்பாட்டையும், நீதிநெறிகளையும் அவர்களிடம் முறையாக கொண்டு சேர்ப்பது ஆகிய மூன்று விஷயங்கள், நல்ல பெற்றோராக இருப்பதற்கு முக்கிய பங்கு வகிப்பன எனலாம். அதுமட்டுமில்லாமல் பெற்றோராக இருக்கும்போது நான்கு -‘C’ க்கள் ரொம்ப முக்கியம்.

CARING, CONSISTENCY, CHOICES, CONSEQUENCES.CARING – எல்லாவிதத்திலும் கவனமாக பார்த்துக்கொள்ளுதல் CONSISTENCY – குழந்தைகளுக்கு மூன்று வயதாகும்போது அவர்களுக்கு 90 சதவிகித மூளை வளர்ச்சி ஏற்பட்டுவிடும். எனவே, நாம் சொல்வதை நன்றாக புரிந்துகொள்ள ஆரம்பிப்பார்கள். அதனால் சில விஷயங்களை தொடர்ந்து நாம் சொல்லித் தரும்போது புரிந்து கொள்வார்கள். உதாரணத்திற்கு பல் துலக்குதல், சாப்பிடும் முறை, சாப்பிடும் முன் கை கழுவும் முறை என தொடர்ந்து நாம் சொல்லிக் கொடுக்க கொடுக்க அது அவர்களுக்குப் பழக்கமாகிவிடும்.

CHOICES – எந்த ஒரு விஷயத்திலும் நம்முடைய விருப்பத்தை அவர்கள் மீது திணிக்காமல் அவர்களின் விருப்பத்தையும் கேட்க வேண்டும். இது வேண்டுமா அல்லது அது வேண்டுமா என கேட்க வேண்டும். கேட்ட பின் முடிவு எடுக்க வேண்டும். ஆரம்பத்திலேயே வேண்டாம் என்று சொல்லக் கூடாது. CONSEQUENCES – அவர்கள் கேட்டது சரியான விஷயம்தான், அவர்களுக்குத் தேவையான ஒன்றுதான் என்றால் உங்களால் வாங்க இயலும் என்றால் வாங்கித் தரலாம். அவங்களுக்குத் தேவையற்ற ஒன்றை, அவர்களின் ஆரோக்கியத்தைக் கெடுக்கும் ஒரு பொருளையோ வாங்க நினைக்கும்போது அவர்களுக்கு அதன் விளைவுகளை சொல்லிக் கொடுக்க வேண்டும். இது ஏன் வாங்க வேண்டும்.

இதை ஏன் வாங்கக்கூடாது. அதன் பின் விளைவுகள் என்ன என்பதைப் புரிய வைக்க வேண்டும். பொருட்கள் என்று மட்டும் இல்லை, எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் அவர்களுக்கு சாய்ஸ் கொடுக்க வேண்டும். அது சரி வராது எனில் அது ஏன் என அவர்களுக்குப் புரிய வைக்க வேண்டும். அவர்களுக்கு சாய்ஸ் கொடுக்கும்போது ஈகோ மோதல் வராது. குழந்தைகள் கேட்டவுடன் முடியாது என கண்டிப்பாக மறுப்பதும் தவறு. கேட்டுவிட்டார்கள் என எல்லாவற்றையும் கொடுப்பதும் தவறு. குழந்தைகளிடம் அதிக கண்டிப்பும் வேண்டாம். ரொம்ப செல்லமும் வேண்டாம்.
தற்போதைய காலக்கட்டத்தில் கூட்டுக்குடும்பங்கள் குறைந்துவிட்டன. பெரும்பாலான குடும்பங்கள் தனிக்குடித்தனம்தான்.

அதிலும் பெரும்பாலான பெண்கள் வேலைக்குச் செல்பவர்களாக இருக்கிறார்கள் அல்லது எங்காவது அவசர வேலையாக போகிறோம் என்றால் கூட இப்போது இருக்கும் சூழ்நிலையில் அக்கம் பக்கத்து வீடுகளிலும் குழந்தைகளை பாதுகாப்பாக விட்டுச் செல்ல முடிவதில்லை. அக்கம் பக்கம் இருப்பவர்களும் கூட வேலைக்குச் செல்பவர்களாக இருக்கலாம். எனவே, பிள்ளைகளுக்குப் பாதுகாப்பு வழிமுறைகளைச் சொல்லிக் கொடுக்க வேண்டியது இப்போது கட்டாயத் தேவையாக இருக்கிறது. மூன்று வயதிற்குப் பின் நாம் சொல்வதை அவர்கள் புரிந்து கொள்வார்கள் என்பதால் அப்போதிலிருந்தே பாதுகாப்பு வழிமுறைகளை சொல்லிக் கொடுக்கலாம்.

திரும்பத் திரும்ப சொல்லும்போது புரிந்து கொள்வார்கள். உதாரணத்திற்கு ‘அடுப்புக்கு அருகில் செல்லக்கூடாது’ என மறுபடி மறுபடி வலியுறுத்தினால் அங்கு செல்லக்கூடாது என புரிந்து கொள்வார்கள். ‘படிக்கட்டின் முனையில் நின்று விளையாடக் கூடாது’, ‘மொட்டை மாடியில் அஜாக்கிரதையாக விளையாடக்கூடாது’, ‘குட் டச்… பேட் டச்’ என எல்லா விஷயங்களையும் மெல்ல மெல்ல சொல்லிக் கொடுத்தால் அவர்கள் புரிந்து கொள்வார்கள்.
எந்த ஒரு விஷயத்திற்கும் பெற்றோர்கள் முன்னுதாரணமாய் இருக்க வேண்டும். சாப்பிடும் முன் கைகளை கழுவ வேண்டும் என்று சொல்லிக் கொடுக்கும்போது, நாம் அந்த முறையை சரியாகப் பின்பற்றினால் அவர்களும் அதைப் பார்த்துக் கற்றுக்கொள்வார்கள்.

அதாவது நாம் சொல்லிக் கொடுப்பவர்களாக மட்டுமில்லாமல் செய்து காட்டுபவர்களாகவும் இருக்க வேண்டும். நாம் எந்நேரமும் செல்போனுடன் புழங்கிக் கொண்டிருந்தால் அவர்கள் மனதும் செல்போனுக்கு அடிமையாவார்கள். பெற்றோர்தானே முதல் ஆசிரியர். சில விஷயங்களை அறிவியல் ரீதியாக புரிய வைக்கலாம். இப்படி செய்வதனால் என்ன தீமை ஏற்படும்; ஏன் செய்யக்கூடாது என விளக்கமாக சொல்லி புரிய வைக்கலாம். சில விஷயங்களை உணர்வுப்பூர்வமாக புரிய வைக்கலாம். நிகழ்ந்த சில உண்மைச் சம்பவங்களை அடிப்படையாக வைத்து எப்படி பாதுகாப்பாக இருப்பது என்பதை புரிய வைக்கலாம். சில விஷயங்களை அழகிய குட்டிக் குட்டிக் கதைகளாக சொல்லிப் புரிய வைக்கலாம்.

ஒரு பிறந்த நாள் பார்ட்டி கொண்டாடுகிறீர்கள் என்றால், வெறும் கேக் வெட்டுவது என வெற்றுக் கொண்டாட்டமாக மட்டுமில்லாமல் சில விளையாட்டுகள் போல் வைத்து அவர்களுக்குத் தேவையான நல்ல விஷயங்களை அதன் மூலம் கற்றுத் தரலாம். பாதுகாப்பு வழிமுறைகள் பற்றி அங்கு பேசலாம். அவர்களையும் பேச வைக்க வேண்டும். அவர்கள் தரப்பு விஷயங்களை கேட்ட பின் அவர்களுக்குத் தேவையான ஆலோசனைகளையும் சொல்லலாம். இப்போது சில இடங்களில் Kiddies party என்று சும்மா 15 நாட்களுக்கு ஒரு முறை ஒரு பார்ட்டி ஏற்பாடு செய்து கொண்டாடுகிறார்கள்.

அதுபோல் கிடைக்கும் அருமையான சந்தர்ப்பங்களில் சமூகரீதியான வாழ்க்கைமுறை பற்றி புரிய வைக்கலாம். அங்கு பாட சம்பந்தமான விஷயங்கள் வேண்டாம். வாழ்வியல் விஷயங்கள் மட்டும் சொல்லிக் கொடுக்கலாம். 24 மணி நேரமும் பெற்றோர்கள் பிள்ளைகளின் உடனேயே இருக்க முடியாது. அதனால் வாழ்வில் பாதுகாப்பாக எப்படி இருக்க வேண்டும் என நாம்தான் அவர்களுக்குக் கற்றுக் கொடுக்க வேண்டும். கட்டாயம் கற்றுக் கொடுக்க
வேண்டும். தைரியமாக இருக்கக் கற்றுக் கொடுக்க வேண்டுமென்றால் முதலில் நாம் தைரியசாலியாக இருக்க வேண்டும். நம்மை பார்த்து அவர்கள்
வளர்வார்கள்.

காலையில் நேரமாக எழுந்திருப்பது, உடற்பயிற்சி செய்வது என நாம் நல்ல பழக்கவழக்கங்களை கையாண்டால் அவர்களும் அப்படியே நடப்பார்கள். ரோல் மாடல், கேட் கீப்பர், டிரெண்ட் செட்டர் என குழந்தைகளுக்கு எல்லாமாக நாம் இருந்துதான் ஆக வேண்டும். இப்போது இருக்கும் குழந்தைகளுக்கு அறிவுக்கூர்மை, மூளை செயல்பாட்டுத் திறன் அதிகமாகி வருகிறது என அறிவியல்ரீதியாக நிரூபித்திருக்கிறார்கள். எனவே, நாம் முறையாகக் கற்றுத் தந்தால் எந்த விஷயத்தையும் சுலபமாகக் கையாள அவர்கள் கற்றுக் கொண்டே வளர்வார்கள். சில பிள்ளைகள் என்ன சொன்னாலும் புரிந்து கொள்ள மாட்டார்கள்.

அவர்களுக்கு மெதுவாக சொல்லி புரிய வைக்க வேண்டும். எல்லா விதத்தையும் கையாண்ட பின்னும் அவர்களுக்குப் புரிய வைக்க முடியவில்லை என்றால், அந்த பிள்ளையை எப்படிக் கையாள்வது என தெரிந்து கொள்ள அந்த பெற்றோர் ஒரு நல்ல மன நல ஆலோசகரையோ, மனநல மருத்துவரின் துணையையோ நாடலாம். எந்த ஒரு சம்பவமும், அது பாலியல் வன்முறையோ, சிறு குழந்தைகளின் எதிர்பாராத மரணமோ அது ஏற்பட்ட பிறகு தான், இப்படி நடந்துவிட்டதே என பதறுகிறோம். உடனே அதைப் பற்றி தீவிரமாக பேசுகிறோம். பின் சில காலங்கள் கழித்து மறந்து போகிறோம். அப்படி இல்லாமல் குழந்தைகள் விஷயத்தில் பெற்றோர்கள் எப்போதும் விழிப்புணர்வுடன் இருப்பதே மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு உத்தரவாதம் தரும்!

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சவாலான பணியில் சாதிக்கும் மங்கை!! (மகளிர் பக்கம்)
Next post நோய்த்தொற்றை சமாளிக்க புதிய வழி!! (மருத்துவம்)