குழந்தைகள் ஜாக்கிரதை! (மருத்துவம்)

Read Time:20 Minute, 39 Second

நண்பர் ஒருவரைப் பார்க்கச் சென்றிருந்தேன். ஹாலில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தோம். அவர்களின் ஆறு வயது மகன் டி.வியின் அருகில் அமர்ந்து பார்த்துக்கொண்டிருந்தான். இத்தனைக்கும் அந்தச் சிறுவன் ஏற்கெனவே கண்ணாடி போட்டிருக்கிறான். அப்படி இருந்தும் டி.வியின் மிக அருகில் அமர்ந்து அதை மும்முரமாகப் பார்த்துக்கொண்டிருக்கிறான். நண்பரோ நண்பரின் மனைவியோகூட அந்தக் குழந்தையை ஒன்றுமே சொல்லவில்லை. ஏன் இப்படி என்று கேட்டால், தள்ளி அமர வைத்தால் அழுது ஆர்ப்பாட்டம் செய்வானாம்.

எதற்குத் தொல்லை என்றுதான் அவனை அவன் போக்கிலேயே விட்டுவிட்டோம் என்றார்கள். இன்று நிறையக் குடும்பங்களில் இதுதான் நடக்கிறது. குழந்தைகளை கண்டிக்க வேண்டிய விஷயங்களில் கண்டிக்காமல் அவர்கள் இஷ்டத்துக்கு விட்டுவிடுவது பிறகு அதற்கு ஏதேனும் உடலுக்கு வந்த பிறகு தவிக்க வேண்டியது. இருவரும் சம்பாதிக்கும் வீடுகளில் உள்ள பெற்றோர், குழந்தையுடன் அதிக நேரத்தை செலவழிக்க முடியவில்லையே என்ற குற்றவுணர்விலும் ஏக்கத்திலுமே அந்தக் குழந்தை கேட்பதை எல்லாம் வாங்கிக்கொடுக்கின்றனர்.

குழந்தை மனம் கோணுமே என்று அவர்கள் இஷ்டத்துக்குவிட்டுவிடுகின்றனர். அந்தக் குழந்தையும் கேட்பாரின்றி ஆரோக்கியமற்ற கண்ட உணவுகளையும் உண்டு, ஆரோக்கியமற்ற விளையாட்டுகளில் தன்னையும் தன் நேரத்தையும் மூழ்கடிக்கின்றனர். விளைவு, விதவிதமான லைஃப் ஸ்டைல் நோய்கள். நம் முன்னோர்களுக்கோ நாம் குழந்தையாக இருந்தபோது நமக்கோ வராத வித்தியாசமான நோய்கள் எல்லாம் நம் குழந்தைகளுக்கு ஏன் வருகின்றன என்று பார்த்தால் அதற்குப் பின்புறம் ஆரோக்கியமற்ற வாழ்க்கைமுறை இருக்கும்.

குழந்தைகளைப் பாதிக்கும் லைஃப் ஸ்டைல் நோய்கள் என்னென்ன வாங்க பார்க்கலாம். உடல் பருமன் குழந்தை கொழுகொழுவென குண்டாக இருக்க வேண்டும் என்பதுவே பெரும்பாலான பெற்றோரின் மனப்போக்காக இருக்கிறது. உண்மையில் ஆரோக்கியம் என்பது வேறு. குண்டாக இருப்பது என்பது வேறு. குண்டாக இருக்கும் குழந்தைகள் எல்லாம் ஆரோக்கியமாக இருக்கிறார்கள் என்று பொருள் இல்லை. பி.எம்.ஐ என்று ஓர் அளவு கோல் உள்ளது. ஒவ்வொரு மனிதனும் தன் உயரத்துக்கு ஏற்ற எடையுடன் இருக்க வேண்டியது அவசியம்.

இதை, உயரம், எடை இரண்டின் விகிதத்தையும் கணக்கிட்டு அதை பி.எம்.ஐ என்ற அளவால் குறிப்பார்கள். குழந்தை அதன் வயதுக்கேற்ற உயரம், உடல் எடையுடன் இருக்கிறதா என்பதை எப்போதும் கவனியுங்கள். வயதுக்கு அதிகமான உடல் எடை என்பது ஒபிஸிட்டி பிரச்சனையாகவும் இருக்கலாம். குழந்தைகளுக்கு ஒபிஸிட்டி பிரச்சனை ஏற்பட உடலில் ஏற்படும் ஹார்மோன் கோளாறுகள், பாரம்பரியம் உட்பட பல்வேறு காரணங்கள் இருந்தாலும் ஆரோக்கியமற்ற வாழ்க்கைமுறையும் முக்கியமான காரணம். ஆரோக்கியமான உணவுகள், விளையாட்டு, போதுமான உறக்கம் இவை குழந்தைகளுக்கு மிகவும் அவசியம்.

இன்றைய காலகட்டத்தில் குழந்தைகள் நிறைய ஜங்க் ஃபுட்ஸ் சாப்பிடுகிறார்கள். ஃபாஸ்ட் ஃபுட்கள், பீஸா, பர்கர் போன்ற சாட் ஐட்டங்கள், ப்ரெசர்வேட்டிவ்ஸ் எனும் பதப்படுத்திகள் சேர்க்கப்பட்ட உணவுகள், ப்ராசஸ்டு உணவுகள், செயற்கையான சுவையூட்டிகள் சேர்க்கப்பட்ட உணவுகள், கார்ன் சிரப், சுகர் சிரப் போன்ற அதிக சர்க்கரை நிறைந்த உணவுகள், கோலா போன்ற கார்போனேட்டட் பானங்கள், சாக்லேட்ஸ், செயற்கையான பழரசங்கள் என ஆரோக்கியமற்ற உணவுகளைத்தான் பெரும்பாலான குழந்தைகள் இன்று உண்கிறார்கள்.

இவை எதுவுமே ஆரோக்கியமான உணவுகள் இல்லை. இந்த உணவுகள் உடலில் எல்.டி.எல் எனும் கெட்ட கொழுப்பை உருவாக்கி தொப்பை, உடல் பருமனை உருவாக்குகிறது. மறுபுறம், இன்றைய குழந்தைகளில் பலரும் ஓடியாடி விளையாடுவதே இல்லை. எந்நேரமும் படிப்பு படிப்பு என்று மாய்ந்து மாய்ந்து படித்துக்கொண்டே இருப்பதால் உடல் உழைப்பே இல்லாமல் போகிறது. குழந்தைகளுக்கு உடற்பயிற்சி என்பதும் உடல் உழைப்பு என்பதும் விளையாட்டுதான். இன்று பல பள்ளிகள் பி.டி. பீரியட் எனும் விளையாட்டுப் பயிற்சியே இல்லாமல் இருக்கிறது.

பெற்றோரும் விளையாட நேரம் தராமல் இழுத்துப் பிடித்து படிக்கச் சொல்லும் பள்ளிகளையே நல்ல பள்ளிகள் என நம்புகிறார்கள். இது எல்லாம்தான் உடலில் தேவையற்ற கொழுப்பை உருவாக்கி உடல் பருமனைக் கொண்டு வருவதற்கான முக்கியமான காரணங்கள். அதுபோலவே, உறக்கம் மிகவும் அவசியம். குழந்தைகள் ஆறு வயது வரை தினசரி எட்டு முதல் பத்து மணி நேரமாவது தூங்க வேண்டும். அதற்குப் பிறகு எட்டு மணி நேரத் தூக்கம் மிகவும் அவசியம்.

குழந்தைகள் உறங்கும்போதுதான் அவர்கள் உடலில் வளர்சிதை மாற்றம் ஏற்பட்டு, குழந்தை வளர்வதற்கான முக்கியமான செயல்பாடுகள், க்ரோத் ஹார்மோனின் இயக்கம் ஆகியவை சிறப்பாக நடைபெறும். போதுமான தூக்கம் இல்லாது போகும் குழந்தைகளுக்கு ஹார்மோன் பிரச்சனைகள் ஏற்பட்டு வளர்ச்சிக் குறைபாடு மற்றும் கொழுப்புச்சத்து சேர்வதால் உடல் பருமன் ஆகிய நோய்கள் ஏற்படக்கூடும். எனவே, போதுமான அளவு தூங்குவதற்கான வாய்ப்பையும் குழந்தைகளுக்கு ஏற்படுத்தித் தர வேண்டியது அவசியம்.

உயர் ரத்த அழுத்தம் ஓடுற பாம்பை மிதிக்கிற வயசு என்றுதான் குழந்தைப் பருவத்தைச் சொல்வார்கள். அந்தக் குழந்தைகளுக்கே உயர் ரத்த அழுத்தம் எனும் பி.பி ஏற்படுமா என்றுதான் பலரும் வியக்கிறார்கள். உண்மையில் இந்தியாவில் பதினைந்து வயதுக்குட்பட்டவர்களில் சுமார் இருபத்தொரு சதவிகிதம் பேருக்கு உயர் ரத்த அழுத்தம் இருக்கிறது என அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது ஒரு புள்ளிவிவரம். ஒருவருக்கு உயர் ரத்த அழுத்தம் ஏற்பட பல்வேறு காரணங்கள் உள்ளன. இவற்றை அடிப்படைக் காரணங்கள், இரண்டாம் நிலை காரணங்கள் என்று இரண்டாகப் பிரிப்பார்கள்.
அடிப்படையான உயர் ரத்த அழுத்தம் ஏற்பட குறிப்பிட்ட காரணம்தான் உள்ளது என்று சொல்ல முடியாது. உடலில் ஏற்படும் வளர்சிதை மாற்றங்கள், மரபியல் மற்றும் வாழ்க்கைமுறைக் கோளாறுகள் எனப் பலவிதமான காரணங்களால் இன்று பி.பி உருவாகிறது. மேலும், சிறுநீரக நோய்கள், தைராய்டு உள்ளிட்ட நாளமில்லா சுரப்பி பிரச்சனைகள், ட்யூமர் எனப்படும் கட்டிகள் உடலில் இருப்பது போன்ற நோய் பாதிப்பின் விளைவாகவும் சிலருக்கு உயர் ரத்த அழுத்தம் இருக்கக்கூடும்.

பொதுவாக, இந்தக் கால குழந்தைகளுக்கு உயர் ரத்த அழுத்தம் எனும் பிரச்சனை ஏற்பட ஆரோக்கியமற்ற வாழ்க்கைமுறை, உணவுகள் போன்ற சமூகக் காரணங்களே அதிகமாக இருக்கிறது. மன அழுத்தம் இன்றைய குழந்தைகளின் பால்யம் நம் காலத்தின் பால்யத்தைப் போல சுதந்திரம் நிறைந்தது அல்ல. பல குழந்தைகள் இன்று அதிக மதிப்பெண் எடுக்க வேண்டும் என்பதற்காக அதிகாலைலேயே எழுந்து படிக்கிறார்கள். பிறகு பள்ளிக்குச் சென்றும் படிக்கிறார்கள். இரவு வீடு திரும்பி நள்ளிரவு வரை படிக்கிறார்கள்.

இப்படி, இடைவெளியின்றி விளையாடப் போகாமல், ரிலாக்ஸ் செய்யாமல் படிப்பு படிப்பு என்று அதிலேயே ஈடுபடும்போது மனச்சோர்வு ஏற்படுகிறது. சில சமயங்களில் இந்த சோர்வு மன அழுத்தமாக மாறும்போது அது உடலைப் பாதிக்கிறது இதனாலும் சில குழந்தைகளுக்கு ரத்த அழுத்தம் போன்ற பிரச்சனை ஏற்படுகிறது. எந்நேரமும் படிப்பு படிப்பு என இல்லாமல் கிரிக்கெட், கால்பந்து, ஹாக்கி போன்ற அவுட்டோர் விளையாட்டுகளை விளையாட அனுமதிப்பது. அவர்கள் உடல், மனவளர்ச்சிக்கு மிகவும் அவசியம்.

மேலும், எப்போதும் கல்வியைத் திணிக்காமல் கல்வியின் அவசியத்தை அவர்களுக்கு உணர்த்துவதாகவே நம்முடைய அணுகுமுறை இருக்க வேண்டும். பல் பிரச்சனைகள் இன்று இரண்டில் ஒரு குழந்தைக்குப் பல் பிரச்சனை உள்ளது என்று சொல்கிறது ஒரு புள்ளிவிவரம். சொத்தைப் பல் இல்லாத குழந்தையே இல்லை எனும் அளவுக்கு நீக்கமற நிறைந்திருக்கின்றன பல் பிரச்சனைகள். ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கவழக்கங்கள், வாழ்க்கைமுறையே இதன் அடிப்படையான காரணங்கள். பொதுவாக, சர்க்கரை, சாக்லேட் போன்ற இனிப்புகள், ஐஸ்க்ரீம் போன்ற அதிகக் குளிர்ச்சியான உணவுகள் பற்சொத்தைகளின் நண்பர்கள்.

ஆனால், துரதிர்ஷடவசமாகக் குழந்தைகளுக்கு இவைதான் மிகவும் பிடித்த உணவாகவும் இருக்கின்றன. முடிந்தவரை இந்த உணவுகளைக் குழந்தைகளுக்கு மிகக் குறைவாகக் கொடுப்பதுதான் நல்லது. குழந்தைகள் சாக்லேட் சாப்பிடுவதைக் கட்டுப்படுத்த அவர்கள் ஏதேனும் நற்காரியங்கள் செய்தால் அதைப் பாராட்டுவதற்கான பரிசாக சாக்லேட் கொடுப்பது என்ற பழக்கத்தை ஏற்படுத்தலாம். இதனால், சாக்லேட் சாப்பிடுவது எப்போதாவது செய்ய வேண்டியது என்ற எண்ணமும் குழந்தைகள் மனதில் பதியும். நல்ல விஷயங்களைக் கற்றுக்கொண்டது போலவும் இருக்கும்.

மேலும், சாக்லேட் போன்ற இனிப்புகள் சாப்பிட்ட பத்து நிமிடங்களுக்குள் நன்றாக வாய் கொப்பளிக்க வேண்டியது அவசியம். இரவு படுக்கப்போகும் முன்பு பல் துலக்கும் பழக்கதைக் கற்றுத் தரலாம். குழந்தைகளுக்கு ஏற்ற தரமான ப்ரெஷ்கள், ஃப்ளோரைடு குறைவான பற்பசைகள் என அவர்களுக்கு ஏற்றதாக வாங்கிக்கொடுக்கலாம். இன்று பெரியவர்களுக்கான பேஸ்டுகள் சிலவற்றில் அதிக ஃப்ளோரைடு கலப்பு உள்ளது. அதிகப்படியான ஃப்ளோரைடு சில சமயங்களில் பல்லின் மேற்புறத்தை அரித்துவிடக்கூடும். இதனாலும் பற்சிதைவு போன்ற பிரச்சனைகள் உருவாகும்.

வாய் பராமரிப்பை குழந்தைகளுக்கு மிகச் சிறிய வயதிலேயே சொல்லித்தர வேண்டியது அவசியம். சொத்தைப் பல் இருந்தால் நீங்களாகவே சிகிச்சை எடுக்காமல் பல் மருத்துவரிடம் செல்வதுதான் நல்லது. இன்று சொத்தைப் பல்லை அடைப்பது உட்பட பல்வேறு நவீன பல் மற்றும் வாய் சீரமைப்புச் சிகிசைகள் புழக்கத்தில் உள்ளன. மருத்துவரின் ஆலோசனைப்படி இவற்றை மேற்கொண்டு பல் மற்றும் வாயைச் சீரமைக்கலாம். கண் பார்வைக் குறைபாடு அளவுக்கு அதிகமான செல்போன், டி.வி, கணிப்பொறி பயன்பாடு குழந்தைகளுக்கு கிட்டப்பார்வைக் குறைபாடு, ஃபோட்டோ போபியா போன்ற கண் பிரச்சனைகளை உருவாக்குகின்றன என்கிறார்கள் கண் மருத்துவர்கள்.

நம் கண்ணில் உள்ள கருவிழி என்பது ஒரு கேமராவின் ஜுமுக்கு இணையானது. பக்கத்தில் உள்ள ஒரு பொருளைப் பார்க்கும்போது அது ஜூம் ஆவதற்கும் தொலைவில் உள்ள பொருளைப் பார்க்கும்போது ஜூம் ஆவதற்கும் வித்தியாசம் உள்ளது. அதுபோலவேதான் அதிக ஒளியுள்ள பொருளைப் பார்க்கும்போது ஜூம் ஆவதும். லைட் எக்போசர் அதிகமாகும்போது தொடர்ச்சியான ஒளித் தாக்குதலால் கண்ணில் போட்டோ போபியா ஏற்படுகிறது. மேலும், பார்வைத்திறன் பாதிக்கும்போது சிறுவயதிலேயே கண்ணாடி அணிய நேர்கிறது. சில குழந்தைகளுக்கு அறுவைசிகிச்சை வரை நிலைமை மோசமாவதும் உண்டு.

தினசரி ஒரு மணி நேரத்துக்கு மேல் தொலைக் காட்சி பார்க்க குழந்தைகளை அனுமதிக்காதீர்கள். குழந்தைகள் செல்போனைக் கண்டாலே தாவி வந்து எடுப்பார்கள். கொடுக்க மறுத்தல் அழுது அடம்பிடிப்பார்கள். எதையும் கற்றுக்கொள்ள வேண்டும். புதியனவற்றை அறிய வேண்டும். பெரியவர்கள் போல் நடந்துகொள்ள வேண்டும் என விரும்பும் அவர்கள் வயதுக்கு அது இயல்புதான். ஆனால், குழந்தைகளின் கண்களுக்கு நிச்சயம் அது நல்லதுஅல்ல. செல்போனின் நியூட்ரான் ஒளிர்திறை குழந்தையின் கண்களை பாதிக்கும் ஒளிக்கற்றைகள் கொண்டது. எனவே, குழந்தைகளிடம் செல்போனைத் தரவே தராதீர்கள். பதினைந்து வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள்களுக்கு மட்டுமே செல்போன் தருவதே நல்லது.

உடலை காக்கும் உணவுமுறை!

ஆரோக்கியமான உணவுப் பழக்கம்தான் ஆரோக்கியமான உடலுக்கு அடிப்படை. ஆனால், இன்றைய குழந்தைகள் பீஸா, பர்கர், சாக்லேட், கோலா பானங்கள், பானி பூரி, பேல் பூரி, மசாலா பூரி போன்ற சாட் ஐட்டங்கள், மசாலா உணவுகள், ஜங்க் ஃபுட்ஸ், செயற்கையான ரசாயனப்பொருட்கள் சேர்க்கப்பட்ட பலரச பானங்கள், ஹெல்த் டிரிங்க்ஸ், எண்ணெயில் பொரிக்கப்பட்ட உணவுகள் போன்ற ஆரோக்கியமற்ற உணவுகளை அதிகம் உட்கொள்கிறார்கள்.

இதுதான் உயர் ரத்த அழுத்தம், உடல் பருமன், சர்க்கரை எனக் கொண்டுவருகிறது. தரமற்ற இந்த உணவுகளால் ஏற்படும் அதிகப்படியான தொப்பை, உடல்பருமன் இதய நோய்களைக்கூட உருவாக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. நாம் உண்ணும் உணவில் கொழுப்புச்சத்து, கார்போஹைட்ரேட் எனும் மாவுச்சத்து, புரதச்சத்து, வைட்டமின்கள், நார்ச்சத்து, நுண்ணூட்டச்சத்துக்கள், தாதுஉப்புக்கள் போன்ற அனைத்துச் சத்துக்களும் சமச்சீரான அளவில் இருக்க வேண்டியது அவசியம்.

இன்றைய குழந்தைகள் காலையில் பள்ளிக்குச் செல்லும் அவசரத்தில் காலை உணவை உண்பது இல்லை. இரவில் வெகு நேரம் நாம் உண்ணாததால் பசியுணர்வு ஏற்பட்டு, உணவைச் செரிப்பதற்காக அமிலங்கள் சுரந்து தயார்நிலையில் இருக்கும். நாம் காலை உணவைத் தவிர்க்கும்போது நம் இரைப்பையையும் குடலையும் அந்த அமிலச் சுரப்பு பாதிக்கிறது. மேலும், இதனால், உடலின் வளர்சிதை மாற்றம் பாதிக்கப்படுவதால் உடல் பருமன், பி.பி ஏற்பட வாய்ப்புகள் உள்ளன.

எனவே எந்தக் காரணத்தை முன்னிட்டும் காலை உணவைத் தவிர்க்கக் கூடாது. உணவு இடைவேளையில் ஆரோக்கியமற்ற உணவுகளைத் தவிர்த்துவிட்டு பழங்கள், நட்ஸ், சுண்டல் போன்ற புரதங்கள் நிறைந்த ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். மதியம் அனைத்துச் சத்துக்களும் கொண்ட சமச்சீரான உணவாக எடுத்துக்கொள்ள வேண்டும். வெறும் கார்போஹைட்ரேட் நிறைந்த அரிசியை மட்டுமே உண்ணாமல் கம்பு, கேழ்வரகு, வரகு, பனிவரகு, சாமை, சோளம் போன்ற சிறுதானியங்களையும் அவ்வப்போது உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது.

இரவில் செரிமானத்துக்கு எளிதான உணவை அளவாக எடுத்துக்கொள்ள வேண்டும். இரவில் கடினமான உணவை உண்ணும்போது செரிமானம் தாமதமாவதால் உறக்கமும், உடலின் பிற வளர்சிதை மாற்றப் பணிகளும் பாதிப்பட்டு உடல் பருமன் ஏற்படக்கூடும். உயர் ரத்த அழுத்தம் இருப்பவர்கள் உப்பை கட்டுப்பாட்டில் வைக்க வேண்டும். அதே போல் சர்க்கரையையும் கட்டுப்பாட்டில் வைக்க வேண்டும். வாய்ப்பு இருந்தால் வெள்ளை உப்புக்கு பதிலாக இந்துப்பு எனப்படும் கறுப்பு உப்பையும், வெள்ளைச் சர்க்கரைக்கு பதிலாக கருப்பட்டி, கரும்புச்சர்க்கரை, பிரவுன் சுகர் போன்றவற்றைப் பயன்படுத்தலாம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இஸ்ரேலுக்கும் சிரியாவுக்கும் இடையே ஏவுகணை தாக்குதல்கள்! (வீடியோ)
Next post இனவெறி கையாளலும் பரந்துபட்ட மக்கள் ஒற்றுமையும்!! (கட்டுரை)