தினமும் என்னை கவனி!! (மருத்துவம்)

Read Time:8 Minute, 3 Second

‘‘மனித இனமே ஒருவரை ஒருவர் சார்ந்து வாழும் தன்மை கொண்டது. இதனால் மற்றவரின் கவனம் தன் மேல் பட வேண்டும் என்று ஒவ்வொருவருமே ஏதேனும் ஒருவிதத்தில் மெனக்கெட்டுக் கொண்டிருக்கிறார்கள். இது இயல்பாகவே நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதற்கு Attention Seeking behaviour என்று பெயர்’’ என அறிமுகம் செய்கிறார் உளவியல் மருத்துவர் குறிஞ்சி.இதுபற்றி அவரிடம் விரிவாகக் கேட்டோம்…

‘‘சக பெண்களின் பார்வை தன் பக்கம் திரும்ப வேண்டும் அல்லது ஓர் ஆண் தன்னை ரசிக்க வேண்டும் என்று ஒரு பெண் தன்னை அலங்காரம் செய்துகொள்வதும், பெண்களின் மனம் கவர விநோதமான சேட்டைகள் செய்வதும், சக நண்பர்களிடம் தன்னை ஹீரோவாக காண்பித்துக் கொள்ள அதிவேக பைக் சாகசம் போன்ற ஆபத்தான வேலைகளில் ஈடுபடுவதெல்லாம் அதே வகை உளவியல்தான்.

இதேபோல், அழுகையின் மூலம் அம்மாவின் கவனம் ஈர்க்க வேண்டும் என்று நினைப்பது, சமூக வலைதளங்களில் தன் புகைப்படத்தை பதிவு செய்வது, மிகவும் பிரபலமானவர் பற்றி அவதூறு கருத்துகள் செய்து சமூகத்தின் கவனத்தை ஈர்க்க நினைப்பது என்று இதில் நிறைய வகைகள் உண்டு.

இந்த Attention Seeking behaviour கணவன் – மனைவி உறவில் இன்னும் வித்தியாசமாக, நுட்பமாக இருக்கும். தன்னை கண்டுகொள்ளாமல் இருக்கும் கணவனை தன் பக்கம் ஈர்க்க மனைவி அவருக்கு பிடித்த உடை அணிவது, பிடித்தமான உணவு சமைப்பது அல்லது முகத்தை சோகமாக வைத்து பேசாமல் இருப்பது, தேவையின்றி அழுது புலம்புவது, வீண்வம்பு வளர்த்து சண்டை போடுவது போன்ற இவை அனைத்தையும் Attention seeking behaviour-க்கு உதாரணமாக சொல்லலாம்.

இதுபோன்ற விஷயங்கள் எப்பொழுதாவது நடந்தால் சுவாரஸ்யமாக இருக்கும். ஆனால், இதுவே வழக்கமாகிப் போனால், வாழ்க்கையே நரகமாகிவிடும். அப்படிப்பட்டவருடன் சேர்ந்து வாழ்வதென்பது மற்றவருக்கு மன அழுத்தத்தையும் அந்த உறவின் மீது மனக்கசப்யையும் ஏற்படுத்திவிடும்’’ என்றவரிடம், Attention seekinig behaviour யாருக்கு ஏற்படுகிறது என்று கேட்டோம்…

‘‘இந்தப் பழக்கம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதினரிடமும், இருபாலரிடமும் காணப்படுகிற பிரச்னையாக உள்ளது. Temper Tantrums என்று சொல்லப்படும் குழந்தைகளிடம் காணப்படும் அதிகமாக அடம் பிடிக்கும் செயலும் ஒரு வகையான Attention seeking behaviour-தான். வயோதிகத்தால் கை, கால் குடைகிறது என்றும், கீழே விழுந்து விடுவேனோ என்று பயமாக இருக்கிறது என்று கூறி எப்பொழுதும் அடுத்தவரின் துணை மற்றும் அருகாமையை தேடுவதும்கூட ஒரு வகையான Attention seeking behaviour என்று சொல்லலாம். இதுபோன்ற பிரச்னை உடையவர்களுக்கு நம்முடைய கவனிப்பு தேவைப்படுகிறது.’’

இது மனநல பிரச்னையா?

‘‘ஒருவர் தனக்கென செயல்படாமல், அடுத்தவரின் கவனத்தை ஈர்க்கும் பொருட்டே செயல்பட்டு வந்தால், அது அவருடைய தன்னம்பிக்கையற்ற தன்மையைக் குறிக்கிறது. அடுத்தவரின் ஒப்புதலோ, பாராட்டோ கிடைத்தால்தான் அவருக்கு தன் செயல் மீதும், தன் மீதும் நம்பிக்கை பிறக்கிறது. ஒருவேளை அடுத்தவர் தன்னை கவனிக்காவிட்டால் தன்மீது ஏதோ குறை இருப்பதாகவும், தன்னை இந்த சமூகமே ஒதுக்கி விட்டதாகவும் தனிமைப்படுத்தப்பட்டதாகவும் உணர்கின்றனர்.

இதன் காரணமாக இத்தகையவர்களுக்கு மன அழுத்தமும், பதற்றமும்கூட உண்டாகும். ஆகையால் இதுவும்கூட ஒரு வகையான மனநலப் பிரச்னையை உண்டாக்குகிறது. இந்தப் பிரச்னையை Histrionic Personality Disorder என்று அழைக்கிறோம். இந்தப் பிரச்னை ஒரு வகையான ஆளுமைக் கோளாறு உள்ளவர்களிடம் அதிகம் காணப்படுகிறது.

பெண்களிடம் இந்தக் கோளாறு அதிகமாகக் காணப்பட்டாலும், ஆண்களும் இந்தப் பிரச்னையால் பாதிக்கப்படுவதுண்டு. இந்த மனநிலைக்கு ஆளானவர்கள், தான் இருக்கும் இடத்தில் தான் முக்கியமானவராகக் கருதப்பட வேண்டும் என்பதற்காக அதிக ஒப்பனை, அதிக பேச்சு, மயக்கும் மாய வார்த்தைகள் என்று ஏதாவது ஒன்றை செய்த வண்ணம் இருப்பார்கள்.

Facebook, Instagram, WhatsApp போன்ற சமூக வலைதளங்களில் அதிகமாக செல்ஃபிக்களை எடுத்து பதிவிடுபவர்களும் இவர்களே. அதில் தனக்கு கிடைக்கும் லைக்குகள் மற்றும் பாராட்டுதல்கள் இவர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதோடு, ஒருவித அங்கீகாரம் கிடைத்தது போன்ற உணர்வினையும் உண்டாக்குகிறது.’’

இதற்கான சிகிச்சைகள் என்ன?

‘‘இந்தப் பிரச்னைக்கு மிக முக்கியமான சிகிச்சை ‘கவனம் செலுத்தாமை’. அதாவது இதுபோன்ற பிரச்னை உடையவர்கள், குறிப்பாக நம் கவனத்தை ஈர்ப்பதற்காகவே செய்யும் செயல்களைக் கண்டுகொள்ளவே கூடாது. இயல்பாக நடந்து கொள்ளும் பொழுது நன்கு கவனித்துக் கொள்ள வேண்டும். நல்ல செயல்களை செய்யும்போது அவர்களை பாராட்டலாம் அல்லது பரிசுப் பொருட்கள் கொடுக்கலாம்.

இந்தப் பழக்கத்தைக் கண்டு கொள்ளாமல் இருப்பதென்பது ஒரு முறை, இருமுறை அல்ல, தொடர்ந்து அவர்கள் மாறும் வரை எதற்காகவும் கண்டு கொள்ளவே கூடாது. அந்தப் பழக்கம் அதிகமானாலும் அவர்களை கண்டு கொள்ளாதீர்கள். உதாரணமாக, குழந்தைகள் அழுது புரண்டு அடம்பிடித்தால் கண்டு கொள்ளாமல் விட்டுவிட வேண்டும்.

சமத்தாக நடந்து கொண்டால் அவர்களை அரவணைத்துக் கொள்வது, பாராட்டுவதோடு, பரிசும் கொடுக்கலாம். நாம் அந்தப் பழக்கத்தைத்தான் விரும்பவில்லை. அந்தக் குழந்தையை விரும்புகிறோம் என்பதை அந்தக் குழந்தைக்கு நாம் உணர்த்த வேண்டும். இது குழந்தைகளுக்கு மட்டுமல்ல, காதலிக்க வேண்டும் என்று கூறி கையைக் கிழித்துக் கொள்ளும் விடலைப் பருவத்தினருக்கும், வரம்பு மீறும் பெரியவர்களுக்கும் இந்த சிகிச்சை முறையே சிறந்தது.

இதுபோன்ற பிரச்னை உடையவர்களை மனநல மருத்துவர் அல்லது மனநல ஆலோசகரிடம் அழைத்துச் சென்று அவர்களின் ஆலோசனைப்படி சிகிச்சை மேற்கொள்ளலாம்’’ என்கிறார் மருத்துவர் குறிஞ்சி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post புற்றுநோய்… வாழ்க்கையை வாழ கற்றுத் தந்தது!! (மகளிர் பக்கம்)
Next post உங்கள் துணை உச்ச கட்டத்திற்கு தயாரா ? (அவ்வப்போது கிளாமர்)