வாழையடி வாழை! (மகளிர் பக்கம்)

Read Time:13 Minute, 13 Second

பழைய பழமொழிதான்; இருந்தாலும், பெயரிலேயே அறிந்து கொள்ளலாம் இதன் மகத்துவத்தை. ஆண்களின் உயிரணுக்களை பெருக்கும் சிறப்புத்தன்மை இருப்பதாலேயே, வாழையடி வாழையாக குடும்பம் தழைக்க வேண்டும் என்பதற்காக, திருமணத்தில் குலையோடு வாழைமரத்தை கட்டும் பழக்கம் நம் தமிழகத்தில் பின்பற்றப்படுகிறது.

தனிப்பட்ட துவர்ப்பு சுவை மற்றும் மணத்தினைக் கொண்டிருப்பதால், இப்பூ மருந்தாகவும் பயன்படக் காரணமாகிறது. வாழை மரத்தின் இலைகள், தண்டுகள், பூக்கள், காய்கள், பழங்கள், நார்கள் என அனைத்துப் பகுதிகளும் ஏதோ ஒரு வகையில் மருந்தாக பயன்படுத்தப்படுகின்றன. எனவே தான் வாழை மரமானது நம் நாட்டில் வீட்டுத் தோட்டங்களிலும் வளர்க்கப்படுகிறது. வாழை ‘மியுசா’ என்ற பேரினத்தைச் சார்ந்தது. இதன் தாயகம் தென்கிழக்கு ஆசியாவாகும். வெப்ப மற்றும் மித வெப்ப மண்டலங்களில் வாழை அதிகமாக வளர்கிறது. வாழை செழித்து வளர நல்ல வளமான மண் மற்றும் போதுமான நீர் தேவை.

வாழைப்பூவில் உள்ள ஊட்டச்சத்துக்கள்

வாழைப்பூவில் விட்டமின் ஏ,சி, இ போன்றவை காணப்படுகின்றன. தாதுஉப்புகளான பொட்டாசியம், கால்சியம், பாஸ்பரஸ், மாங்கனீசு, செம்புச்சத்து, இரும்புச்சத்து, மெக்னீசியம் போன்றவை இப்பூவில் உள்ளன. இதில் புரதச்சத்து, நார்சத்து, கார்போஹைட்ரேட் ஆகியவையும் காணப்படுகின்றன. இவற்றைத்தவிர, ஃப்ரீ ரேடிகல்ஸ்களுக்கு எதிராக செயல்புரியும் ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ் நிறைந்தது.

வாழைப்பூவின் மருத்துவப் பண்புகள்

சர்க்கரை நோயாளிகளுக்கு

சர்க்கரை நோயானது இன்சுலின் சுரப்பு குறைவு அல்லது உறிஞ்சு திறன் குறைபாட்டினால் ஏற்படுகிறது. வாழைப்பூவில் உள்ள பீனாலிக் சேர்மங்கள் இன்சுலின் உறிஞ்சு திறனை அதிகரிக்கிறது. இதன்மூலம் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு கட்டுப்படுத்தப்படுகிறது. சர்க்கரை நோயாளிகள் தொடர்ந்து 1 மாதம் வரை வாழைப்பூவை உணவில் எடுத்துக் கொள்வதன் மூலம் ரத்தத்தில் சர்க்கரையின் அளவினை கட்டுப்படுத்தலாம்.

பெண்களுக்கு

பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் ஏற்படும் அடிவயிறு, இடுப்பு வலி போன்ற கோளாறுகளை வாழைப்பூ சரிசெய்வதோடு, அதிக உதிரப்போக்கையும் கட்டுப்படுத்துகிறது. அதோடு, பாலூட்டும் தாய்மார்களுக்கு பால்சுரப்பினை அதிகரிக்கச் செய்வதோடு நல்ல செரிமானத்தையும் ஏற்படுத்துகிறது. பெண்களின் பல்வேறு உடல் உபாதைகளுக்கு இப்பூ தீர்வாக அமைகிறது.

செரிமானம் மற்றும் மலச்சிக்கல்

வாழைப்பூவில் கரையும் மற்றும் கரையாத நார்ச்சத்துகள் அதிகமாக உள்ளன. கரையும் நார்ச்சத்தானது உணவினை நன்கு செரிக்கச் செய்து உணவின் மூலம் கிடைக்கும் ஊட்டச்சத்துகளை உடல் உறிஞ்சிக் கொள்ள துணை புரிகிறது. கரையாத நார்ச்சத்து குடலில் உள்ள செரிமானமாகாத நச்சுப்பொருட்களை ஒன்று திரட்டி கழிவாக வெளியேற்றுகிறது. இதனால் மலச்சிக்கல், மூல நோய் ஆகியவற்றிற்கு இப்பூ தீர்வாகிறது. குடல்நோய் எரிச்சல் குறைபாடு (Irritable Bowel Syndrome) நோயாளிகள் அடிக்கடி வாழைப்பூவை சேர்த்துக் கொள்வதன் மூலம் வாழைப்பு சிறந்த நிவாரணியாகிறது.

தொற்றுநோயைக் குணப்படுத்துதல்

இயற்கை வழியில் தொற்றுநோயை குணப்படுத்த விரும்புபவர்கள் வாழைப்பூவினைத் தேர்வு செய்யுங்கள். ஏனெனில் வாழைப்பூ சாற்றில் உள்ள எத்தனால் தொற்றுநோய் ஏற்படாமல் தடைசெய்கிறது.மேலும் காயங்களையும் தொற்றுநோய் தாக்கத்திலிருந்து வாழைப்பூ பாதுகாத்து விரைந்து குணப்படுத்துகிறது. வாழைப்பூ சாறானது மலேரியாவை உண்டாக்கும் கிருமிகளிலிருந்து பாதுகாப்பு அளிப்பதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
நமது உடலின் வளர்ச்சிதை மாற்றத்தால் உண்டாகும் ப்ரீ ரேடிக்கல்களின் செயல்பாடுகளை வாழைப்பூவில் உள்ள டானின், ஃப்ளவனாய்டுகள், ஆன்டிஆக்ஸிஜென்டுகள் ஆகியவை கட்டுப்படுத்துகின்றன. இதன்மூலம் ஆக்ஸிஜனேற்றதால் உடலில் ஏற்படும் விளைவுகளைக் குறைக்கிறது. இதனால் புற்றுநோய் உண்டாதல், விரைவாக உண்டாகும் சருமச்சுருக்கம் போன்றவை தடை செய்யப்படுகின்றன.

உற்சாக மனநிலையைப் பெற

வாழைப்பூவில் உள்ள அதிகளவு மெக்னீசியம் மனப்பதட்டத்தைக் குறைத்து மனஉற்சாகத்தை உண்டாக்குகிறது. பக்கவிளைவுகள் ஏற்படுத்தாத இயற்கை எதிர்ப்பு மனதளர்ச்சி காரணியாக வாழைப்பூவைச் சொல்லலாம். வாழைப்பூவினை உணவில் சேர்த்து உற்சாகமான மனநிலையைப் பெறலாம்.

அனீமியா குறைபாட்டினை நீக்க

ரத்த சிவப்பணுக்களின் குறைபாட்டினால் அனீமியா நோய் ஏற்படுகிறது. வாழைப்பூவானது ரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கிறது. இதனால் ஊட்டச்சத்துக்கள் உடலின் எல்லா பாகங்களுக்கும் எடுத்துச் செல்லப்பட்டு உடல் உறுப்புகள் சீராக இயங்குகின்றன. அனீமியா குறைபாடுள்ளவர்கள் வாழைப்பூவினை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வது அவசியம்.

ஆரோக்கியமான எடை இழப்பிற்கு

வாழைப்பூவில், குறைந்த அளவே கலோரிகள் மற்றும் கார்போஹைட்ரேட் இருப்பதாலும், நார்ச்சத்துகள் மிகுந்து காணப்படுவதால், இதை உண்பதால், நீண்ட நேரத்திற்கு பசி எடுக்காது. அதே நேரத்தில், இதில் ஊட்டச்சத்துகள் மிகுந்திருப்பது, ஆரோக்கியமும் பாதுகாக்கப்படுகிறது. எனவே ஆரோக்கியமான உடல் எடை குறைக்க விரும்புபவர்கள் வாழைப்பூவினை நிறைய சேர்த்துக் கொள்ளலாம்.

ஆஸ்துமாவிற்கு…

வைட்டமின் ‘C’ மிகுந்திருப்பதால், மூச்சுக்குழாய் அழற்சியை மேம்படுத்துவதற்கான துணை சிகிச்சையாக வாழைப்பூவைப் பயன்படுத்தலாம். திசு சரிசெய்தல் மற்றும் காயம் குணப்படுத்துவதை ஊக்குவிப்பதில் வைட்டமின் சி முக்கிய பங்கு வகிக்கிறது.

வாழைப்பூவினை தேர்வு செய்யும் முறை

இவ்வளவு சத்துக்களையும் முழுமையாக பெற வேண்டுமென்றால், சரியான வாழைப்பூவை தேர்வு செய்வது மிக முக்கியம். வாழைப்பூவினை தேர்வு செய்யும்போது, புதிதாகவும், உறுதியாகவும் இருக்க வேண்டும். வாழைப்பூவின் மேற்புறத்தோல் ஒரே சீரான நிறத்துடன் மடல்கள் இறுக்கமாக இணைக்கப்பட்டிருக்க வேண்டும். மேல்தோலில் வெட்டுக்காயங்கள் ஏதுமின்றி மென்மையாக இருக்க வேண்டும். பூவின் காம்புப் பகுதி உறுதியாகவும், புதிதாகவும் இருக்க வேண்டும். வாழைப்பூவினை வாங்கி ஓரிரு நாட்களில் பயன்படுத்த வேண்டும். குளிர்பதனப் பெட்டியில் மூன்று நாட்கள் கவரில் சுற்றி வைத்துப் பயன்படுத்தலாம். வாழைப்பூவானது எளிதில் ஆக்ஸிஜனேற்றம் அடைந்து நிறம் மாறுவதால் இதனை மோரில் அல்லது உப்பு தண்ணீரில் சிறிது நேரம் வைத்திருந்து பயன்படுத்தலாம்.

வாழைப்பூவினை சுத்தம் செய்யும் முறை

வாழைப்பூவின் வெளிப்புற மடல்களை நீக்கிவிட வேண்டும். இப்பூவின் உட்புறம் உள்ள மலரின் தடித்த தோல் பகுதிகள், கள்ளான் என்று சொல்லப்படும் நரம்பு போல் இருப்பதை நீக்கிவிட்டு வெளிர் மஞ்சள் நிற இதழ்களை பயன்படுத்த வேண்டும். பூவின் உட்புறத்தில் உள்ள மென்மையானவற்றை முழுவதுமாக பயன்படுத்தலாம்.

வாழைப்பூவானது குழம்பு, பொரியல், சாலட், ஊறுகாய், சட்னி, சூப் தயார் செய்யப் பயன்படுத்தப்படுகிறது. சமையல் கலைஞர் நித்யா நடராஜன் எல்லோருக்கும் பிடித்த வாழைப்பு வடை செய்யும் முறையை விளக்குகிறார்…

வாழைப்பூ வடை

தேவையான பொருட்கள்

வாழைப்பூ – 1 (உள் நரம்புகள் நீக்கி பொடிப்பொடியாக நறுக்கியது)
வடைபருப்பு – ¼ கிலோ
வெங்காயம் – 2 (பெரியது
பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் – 4 (பொடியாக நறுக்கியது)
பூண்டு – 5 பல்
இஞ்சி – 1 துண்டு
பட்டை – 1 துண்டு
காய்ந்த மிளகாய் – 3
கொத்தமல்லி – ஒரு கைப்பிடி (பொடியாக நறுக்கியது)
கறிவேப்பிலை – 1 ஆர்க்கு (பொடியாக நறுக்கியது)
சோம்பு – 1 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – பொரிக்க தேவையான அளவு.

செய்முறை

வாழைப்பூவை கொதிக்கும் நீரில் போட்டு அரைப்பதம் வேகவைத்து தண்ணீர் வடிகட்டி பிழிந்து வைத்துக் கொள்ளவும். இப்போது வடைபருப்பை 1 மணி நேரம் ஊறவைத்து தண்ணீரை வடிகட்டி, மிக்ஸியில் கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும். அரைப்பதற்கு முன் ஊறிய பருப்பை கொஞ்சம் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும். காய்ந்த மிளகாய், இஞ்சி, பட்டை, பூண்டு ஆகியவற்றை மிக்ஸியில் அரைத்து வைத்துக் கொள்ளவும். பின், அரைத்த வடை பருப்பு, அரைத்த மசாலா விழுது, வெங்காயம், மல்லி, கறிவேப்பிலை, சோம்பு உப்பு ஆகியவற்றை சேர்த்து கெட்டியாக பிசைந்து கொள்ளவும்.

அதன்மேல் கடைசியாக வாழைப்பூவை சேர்த்து, சிறு சிறு உருண்டைகளாக எடுத்து தட்டி, எண்ணெயில் (மிதமான தீயில்) பொரித்து எடுக்க வேண்டும்.
இந்த மழைக்காலத்திற்கு ஈவினிங் ஸ்நாக்சாக குழந்தைகளும், பெரியவர்களும் சாப்பிடலாம். மருத்துவ குணம் நிறைந்த துவர்ப்பு சுவை மிக்க பொட்டாசியம், வைட்டமின் ‘இ’ அதிகம் உள்ள வாழைப்பூவினை உணவில் அடிக்கடி எடுத்துக் கொண்டு ஆரோக்கியமான வாழ்வு வாழ்வோமே.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post குழந்தைகளை குறி வைக்கும் வைரஸ்! (மருத்துவம்)
Next post 40 வயதில் 44 பிள்ளைகளை பெற்ற ஆபிரிக்க பெண் பற்றிய சுவையான செய்தி ! (வீடியோ)