இரு பிரதான கட்சிகளும் சிறுபான்மை மக்களை கைவிடுமா? (கட்டுரை)

Read Time:21 Minute, 39 Second

ஜனாதிபதித் தேர்தலை அடுத்து, தோல்வியடைந்த ஐக்கிய தேசியக் கட்சிக்குள், கருத்து முரண்பாடுகள் மிக மோசமான அளவில் தலைதூக்கியுள்ளன. இது அசாதாரண நிலைமையொன்றல்ல; தேர்தல்களில் தோல்வியடைந்த கட்சிகளுக்குள், இது போன்ற கருத்து முரண்பாடுகள் பல தோன்றுவது சகஜமே!

ஐ.தே.க தலைவர் ரணில் விக்கிரமசிங்க, ஆரம்பத்தில் சஜித்தை வேட்பாளராக நியமிக்க விரும்பாமல் இருந்தது போலவே, அவருக்குப் போதிய ஆதரவை வழங்கவில்லை என்றும் கட்சித் தேர்தல் பிரசாரப் பணிகளுக்காகப் போதியளவில் பணம் வழங்கவில்லை என்றும் சஜித்தின் ஆதரவாளர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

அதேவேளை, சஜித்தைக் கட்சியின் தலைவராகவும் நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவராகவும் நியமிக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

ரணிலின் ஆதரவாளர்கள் இந்தக் குற்றச்சாட்டுகளை மறுப்பதோடு, ரணிலே தொடர்ந்தும் கட்சியின் தலைவராக இருக்க வேண்டும் என்றும் வாதிடுகின்றனர். இந்த முரண்பாடு நீடித்தால், அது எதிர்வரும் பொதுத் தேர்தலின் போது, ஐ.தே.கவை மேலும் மோசமாகப் பாதிக்கலாம்.

தேர்தல் முடிவுகளைக் கூர்ந்து கவனித்துப் பார்த்தால், தோல்வியடைந்தாலும் ஐ.தே.கவுக்கு மகிழ்ச்சியடையக் கூடிய காரணங்களும் இல்லாமல் இல்லை. கடந்த வருடம் நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களின் பின்னர், ஐ.தே.க தனது வீழ்ச்சியைத் தடுத்துக் கொண்டுள்ளது மட்டுமல்லாமல், பொதுஜன பெரமுனவைப் பார்க்கிலும் சிறிதளவு வளர்ச்சியையும் கண்டுள்ளமை, ஐ.தே.கவின் விரக்தியைப் போக்காவிட்டாலும், முக்கியமாக கருத்தில் கொள்ளப்பட வேண்டிய விடயமாகும்.

எந்தவகையான வளர்ச்சியைக் கண்டாலும், தேர்தலில் ஒரு வாக்கு வித்தியாசத்திலேனும் தோல்வியடைந்தால், அதிகாரம் பறிபோய் விடுகிறது. எனவே, அந்த வளர்ச்சியால் என்ன பயன் எனச் சிலர் கேட்கலாம்?

அதிகாரம், இம்முறை இல்லாமல் போனமை உண்மைதான். ஆனால், தாம் இருப்பது வளர்ச்சிப் பாதையில் என்றால், ஐ.தே.கவுக்கு எதிர்காலத்தைப் பற்றிய நல்ல எதிர்பார்ப்போடு இருக்கலாம், என்பதே எமது வாதமாகும்.

கடந்த 16ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில், 35 வேட்பாளர்கள் போட்டியிட்ட போதிலும், உண்மையான போட்டி ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் கோட்டாபய ராஜபக்‌ஷவுக்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கும் இடையிலேயே நடைபெற்றது.

சில சிறிய கட்சிகளின் உதவியுடன் சஜித், புதிய ஜனநாயக முன்னணியின் சின்னமான ‘அன்னம்’ சின்னத்திலேயே போட்டியிட்டார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவும் அவருக்குக் கிடைத்தது.

அந்தச் சிறு கட்சிகளின் தனித்துவம் பாதிக்கப்படும் என்று, அக்கட்சிகள் எண்ணியதாலேயே சஜித் அவ்வாறு தமது கட்சியின் சின்னத்திலன்றி, மற்றொரு கட்சியின் சின்னத்தில் போட்டியிட்டார்.

பொதுஜன பெரமுனவும் பல சிறு கட்சிகளுடன் சேர்ந்து போட்டியிட்ட போதிலும், அக்கட்சி தமது சின்னமான தாமரை மொட்டுச் சின்னத்திலேயே போட்டியிட்டது.

கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களின் போது, சுமார் 15 இலட்சம் வாக்குகளைப் பெற்ற ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் ஆதரவும் அக்கட்சிக்குக் கிடைத்தது.

நாம் கடந்த வாரம் கூறிய ஒரு விடயத்தை, மீண்டும் ஞாபகப்படுத்த வேண்டியுள்ளது. கடந்த வருட உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களின் போது, ஐ.தே.க சுமார் 36 இலட்சம் வாக்குகளையே பெற்றது. ஆனால், இம்முறை அக்கட்சி, சுமார் 56 இலட்சம் வாக்குகளைப் பெற்றுள்ளது.

இதில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கடந்த வருடம் பெற்ற, மூன்றரை இலட்சம் வாக்குகளும் ஸ்ரீ ல.சு.க பெற்ற வாக்குகளில் ஓரிரு இலட்சமும் அடங்குகின்றன.

அதேவேளை, பொதுஜன பெரமுன கடந்த வருட உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களின் போது, 49 இலட்சம் வாக்குகளைப் பெற்றது. இம்முறை அக்கட்சி 69 இலட்சம் வாக்குளைப் பெற்றது. இதில் கடந்த வருடம் ஸ்ரீ ல.சு.க பெற்ற 15 இலட்சம் வாக்குகளில் 10 இலட்சத்துக்கும் மேற்பட்ட வாக்குகளும் அடங்கியிருக்க வேண்டும் என ஊகிக்கலாம்.

இரு கட்சிகளும் இருபது இலட்சம் வாக்குகள் வீதம், இம்முறை அதிகரித்துக் கொண்டுள்ள போதிலும், பிற கட்சிகளின் வாக்குகளைத் தவிர்ந்த, அக்கட்சிகள் சுயமாக அதிகரித்துக் கொண்ட வாக்குகளின் எண்ணிக்கையைப் பார்த்தால், கடந்த வருடத்தைப் பார்க்கிலும் ஐ.தே.கவின் வளர்ச்சி, பொதுஜன பெரமுனவின் வளர்ச்சியைப் பார்க்கிலும் சற்றேனும் அதிகம் என்றே ஊகிக்க முடிகிறது.

சிங்கள பௌத்த மக்களின் ஆதரவை, ஐ.தே.க இழந்தமையே அக்கட்சியின் தோல்விக்குக் காரணம் என்றதொரு கருத்துப் பரவியிருக்கிறது. அதனை, ஐ.தே.க தலைவர்களும் ஏற்றுக் கொண்டுள்ளனர்.

ஆனால், கடந்த ஒன்றரை ஆண்டுகளில் ஐ.தே.க அதிகரித்துக் கொண்டுள்ள 20 இலட்சம் வாக்குகளில், தமிழ்க் கூட்டமைப்பின் வாக்குகள் தவிர்ந்த, மிகுதி வாக்குகள் அனைத்தும் சிங்களப் பௌத்த வாக்குகளாகும்.

ஸ்ரீ ல.சு.க வாக்குகளையும் சேர்த்துக் கணக்கிடும் போது, அவ்வளவு சிங்களப் பௌத்த வாக்குகளை, அந்தக் காலப் பகுதியில் பொதுஜன பெரமுனவால் அதிகரித்துக் கொள்ள முடியவில்லை.

எனினும், சிங்களப் பௌத்த மக்கள் வாழும் பெரும்பாலான தேர்தல் தொகுதிகளில் சஜித்துக்கு 30 சதவீத வாக்குகளே கிடைத்தன. சில இடங்களில், அதிலும் குறைவாகவே கிடைத்தன.

இது பாரதூரமான விடயம் என்பது உண்மை; இருந்த போதிலும், இது கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களிலும் காணக்கூடியதாக இருந்த நிலைமையாகும். ஐ.தே.க வெற்றி பெற்ற கடந்த பொதுத் தேர்தலின் போதும், இந்த நிலைமை காணக்கூடியதாக இருந்தது.

சிறுபான்மை மக்களின் கண்ணோட்டத்தில், இங்குள்ள ஆபத்து என்னவென்றால், இப்போது சிங்களப் பௌத்த வாக்குகளைப் பெற வேண்டும் என்பதற்கு, ஐ.தே.கவும் தாம் ஏற்கெனவே பெற்ற சிங்களப் பௌத்த வாக்குகளைத் தக்கவைத்துக் கொள்வதற்கு, பொதுஜன பெரமுனவும் முன்னுரிமை வழங்கிச் செயற்பட்டால், இந்நாட்டுச் சிறுபான்மை மக்களின் நிலைமை என்னவாகும் என்பதே ஆகும்.

ஐ.தே.கவின் சில தலைவர்கள், சிங்கள பௌத்த மக்களின் மனம் புண்படும் வகையில் சில சந்தரப்பங்களில் அநாவசியமாகச் செயற்பட்டமை உண்மை தான்.

2015ஆம் ஆண்டு இறுதியில், புலம்பெயர் தமிழர்களின் மாநாடொன்றைக் கூட்டுவதற்கு, முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர முயற்சித்தார். அந்த மாநாட்டுக்கு, பெரும்பான்மை இனத்தவர்களால் பலத்த எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது.

இது போன்றதொரு மாநாட்டால், புலம்பெயர் தமிழர்களினதோ, இந்நாட்டுப் பெரும்பான்மையின மக்களினதோ கருத்துகள் மாறப் போவதில்லை. இது அநாவசியமான செயலாகும்.

இலங்கை பௌத்த நாடல்ல என, மங்கள சமரவீர அண்மையில் மற்றொரு சர்ச்சையைக் கிளப்பினார். அவர் கூறியது, தர்க்க ரீதியாக அமைந்துள்ளதாக வாதிட முடியுமாக இருந்த போதிலும், பௌத்த சமயத்துக்கு அரசமைப்பில் முக்கியத்துவம் வழங்க வேண்டும் என்பதை, தமிழ், முஸ்லிம் தலைவர்களே ஏற்றுக் கொண்டு இருக்கும் நிலையில், இந்த வாதம் தேவை தானா?

புத்த பெருமான், அவரது போதனைகள், மகா சங்கத்தினர் ஆகியோரது துணை என்பதைச் சுருக்கி, பௌத்தர்கள் ‘மும்மணிகளின் துணை’ என ஒருவருக்கொருவர் பிரார்த்தித்துக் கொள்கின்றனர்.

பிக்குகள் அரசியலில் ஈடுபட்டு, மிக மோசமாக நடந்து கொள்கிறார்கள் என்ற கருத்தில், மங்கள சமரவீர அண்மையில் மும்மணிகள் என்பதற்குப் பதிலாக, இரு மணிகள் (புத்தர், அவரது போதனைகள்) என்று மாற்றி உபயோகித்து இருந்தார். இவற்றால், பௌத்த மக்கள் மத்தியிலிருந்து எதிர்ப்பு உருவாகி வருமேயல்லாது, அவர்கள் மங்களவின் வாதத்தை ஏற்கப் போவதில்லை.

தாமே தேசபக்தர்கள் என்றும் ஐ.தே.க தலைவர்கள் வெளிநாட்டு அடிவருடிகள் என்றும் தேசியக் கலாசாரத்தைப் புறக்கணிப்பவர்கள் என்றும் பொதுஜன பெரமுனவினர் ஸ்தாபிக்க முயற்சிக்கும் கருத்துக்கு, இது போன்ற அநாவசிய வாதங்கள் துணைபோவது தவிர்க்க முடியாததாகும்.

ஆயினும், அவற்றால் தான் ஐ.தே.க தோல்வியடைந்தது என்று வாதிட முடியாது. ஏற்கெனவே கூறியதைப் போல், கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தோல்வியானது, இதைவிட மோசமான தோல்வியாகும். அப்போது, இரு கட்சிகளுக்கும் இடையே இருந்த வாக்கு வித்தியாசமே இன்றும் காணக்கூடியதாக இருக்கிறது. இரு கட்சிகளும், அதற்குப் பின்னர் இருபது இலட்சம் வாக்குகள் வீதம் அதிகரித்துக் கொண்டுள்ளன.

எனவே, தோல்வியின் இரகசியத்தை, உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தோல்வியிலேயே கண்டு பிடிக்க வேண்டும். அப்போது, ஒருவரும் பௌத்தம் பற்றியோ, தேசியம் பற்றியோ பேசவில்லை. இவற்றைக் கருத்தில் கொண்டே ஐ.தே.க தமது தந்திரோபாயங்களை வகுக்க வேண்டும்.

சிறுபான்மையினரை வென்றெடுக்க என்ன செய்ய வேண்டும்?

அநுராதபுரத்தில், ‘ருவன்வெலி சாய’ என்ற தூபியின் வளவில் நடைபெற்ற, தமது பதவிப் பிரமாண வைபவத்தின் போது, உரையாற்றிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ, “தமக்குச் சிறுபான்மை மக்களின் வாக்குகள் போதியளவில் கிடைக்கவில்லை” என்ற தமது ஆதங்கத்தையும் தெரிவித்துக் கொண்டார்.

சிறுபான்மை மக்கள், இதை விடக் கூடுதலாக வாக்களிப்பார்கள் என்று தாம் நினைத்ததாகவும் ஆனால், அவ்வாறு நடைபெறவில்லை என்றும் அவர் கூறினார். எனினும், தமக்கு வாக்களித்த, வாக்களிக்காத சகல மக்களினதும் ஜனாதிபதியாகத் தாம் செயற்படுவதாகவும் அவர் அப்போது குறிப்பிட்டார்.

கோட்டாபய ராஜபக்‌ஷவுக்கு சிங்கள பௌத்த மக்களின் ஏகோபித்த ஆதரவு கிடைத்தது. சில பகுதிகளில், சிங்கள மக்களில் 70 சதவீதத்துக்கும் அதிகமானவர்கள், அவருக்கு வாக்களித்து இருந்தனர்.

அதேவேளை வடக்கு, கிழக்கு பகுதிகளில் தமிழ், முஸ்லிம் மக்கள் வாழும் பிரதேசங்களில், 10, 15 சதவீதத்துக்கு மேல், கோட்டாவுக்கு வாக்குக் கிடைக்கவில்லை.

இந்த நிலையில், சிங்கள மக்களின் ஆதரவை, இதேபோல் தக்க வைத்துக் கொண்டு, சிறுபான்மை மக்களின் ஆதரவை, அவரால் பெற முடியாது போனது, ஏன் என்ற கேள்வி எழுகிறது.

எந்தக் காரணத்தால் பொதுஜன பெரமுனவுக்குச் சிங்கள மக்களின் ஆதரவு பெருகியதோ, அதுவே அக்கட்சிக்குத் தமிழ், முஸ்லிம் மக்களின் ஆதரவைக் கிடைக்காமல் செய்தது என்பதே உண்மை.
இதைப் புரிந்து கொண்டால், இரு சாராரினதும் ஆதரவை பெறுவதற்கான உத்திகளை, அவரால் எதிர்க் காலத்தில் வகுத்துக் கொள்ள முடியும்.

தமிழ், முஸ்லிம் மக்களைப் பற்றி, சிங்கள மக்கள் மனதில் ஊட்டி வளர்த்த பீதியே, பொதுஜன பெரமுனக் கட்சிக்கு, சிங்கள மக்களின் ஆதரவு பெருகுவதற்கு காரணமாகியது.

அக்கட்சியின் தலைவர்கள், தமிழ்த் தலைவர்கள் நாட்டைக் கூறு போட முயற்சிப்பதாகவே எப்போதும் கூறி வந்தனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களான சம்பந்தனும் சுமந்திரனும் ஆயுதப் போரினாலன்றி, சட்ட ரீதியாகத் தனித் தமிழ் நாட்டை உருவாக்க முயற்சிப்பதாகவே அவர்கள் எப்போதும் கூறுவர்.

தமிழ்த் தலைவர்களும் தமது மரபு ரீதியான யதார்த்தத்துக்கு முரணான சில கோரிக்கைகள், சொற் பிரயோகங்கள மூலம் அவர்களுக்குத் தீனி போட்டு வந்தனர்.

இதன் மூலம், பொதுஜன பெரமுனவினர் சிங்கள பௌத்த மக்களைக் கவர்ந்ததோடு, தமிழர்களை எப்போதும் பயங்கரமாகச் சித்திரித்ததன் காரணமாக, தமிழர்கள் அக் கட்சியின் பக்கம் திரும்பியும் பார்க்க விரும்பாத நிலைமை உருவாகியது.

அதேபோல், ஆரம்பத்தில் தமது ஆடைகள், உணவு வகைகள் மூலம், முஸ்லிம்கள் தமது கலாசாரத்தை அழிக்க முற்படுவதாகவும் இனப் பெருக்கத்தின் மூலம் நாட்டைக் கைப்பற்றிக் கொள்ள முயற்சிப்பதாகவும் மஹிந்த அணியைச் சார்ந்த சில தீவிரவாத அமைப்புகள் 2012 ஆம் ஆண்டு முதல், பிரசாரம் செய்து, முஸ்லிம்கள் எந்நேரமும் தாக்கப்படலாம் என்றதொரு நிலைமையை உருவாக்கின.

அதன் மூலம், மஹிந்தவின் ஆட்சியே, சிங்களப் பௌத்தர்களின் பாதுகாப்புக்கு உகந்தது என்றதோர் எண்ணத்தை, சிங்கள மக்கள் மனதில் ஊட்டினர். அதன் மூலம், அவர்கள் சிங்கள மக்களை வென்றெடுக்கும் போது, முஸ்லிம்கள் அதன் காரணமாகவே, அக்கட்சியை கைவிட்டுச் சென்றனர்.

எந்தக் காரணத்தால் பொதுஜன பெரமுனவுக்கு சிங்கள மக்களின் ஆதரவு பெருகியதோ, அதுவே அக் கட்சிக்குத் தமிழ், முஸ்லிம் மக்களின் ஆதரவைக் கிடைக்காமல் செய்தது என்று, அதனால் தான் ஆரம்பத்தில் கூறினோம்.

தாம் எதனால், சிறுபான்மை மக்களின் ஆதரவை இழந்தோம் என்று பொதுஜன பெரமுனவின் தலைவர்கள் தேர்தலுக்கு முன்னரே அறிந்திருந்தார்கள் போலும். ஆயினும், மிரட்டி, அச்சுறுத்தி சிறுபான்மை மக்களின் வாக்குகளைப் பெற முடியாது. ஏனெனில், இரகசிய வாக்கு முறையே நடைமுறையில் உள்ளது என்பதையும் அவர்கள் உணர்ந்தார்கள் போலும்.

எனவே தான், தேர்தல் காலத்தில், இனத்துவேசத்தைக் கக்குவோருக்கு, கடிவாளம் போடப்பட்டு இருந்தது. “இப்போது நாம் டொக்டர் ஷாபியைப் பற்றியோ, ரிஷாட்டைப் பற்றியோ பேச முடியாது; பேசினால் தொலைபேசியில் அழைத்துத் திட்டுகிறார்கள்” என, பேராசிரியர் சன்ன ஜயசுமன, சமூக ஊடகங்களில் வெளியான வீடியோ உரையொன்றில் கூறியிருந்தார்.

ஜயசுமன என்பவர், டொக்டர் ஷாபி விவகாரத்தின் போது, இனத் துவேசத்தைத் தூண்டுவதில் முன்னணியில் இருந்த ஒருவர். அவரது உரை, பொதுஜன பெரமுன தேர்தல் காலத்தில், அவர்களைக் கட்டுப்படுத்தி வைத்திருந்ததையே காட்டுகிறது.

அவர்களுக்கு, அப்போது கடிவாளமிட்டது போலவே, இனங்களுக்கிடையே பிரச்சினைகளை ஏற்படுத்துவோர் விடயத்தில், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என, ஓரிரு தினங்களுக்கு முன்னர், புதிய பாதுகாப்புச் செயலாளர் கமல் குணரத்தன கூறியிருந்தார்.

அதேபோல், கெரவலபிட்டிய, பாணந்துறை ஆகிய பகுதிகளில், வீதிகளின் பெயர்ப் பலகைகளில் தமிழ் எழுத்துகளை அழித்த சம்பவம் தொடர்பாக விசாரணை செய்து, சம்பந்தப்பட்டவர்களுக்க எதிராக நடவடிக்கை எடுக்குமாறு, பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ பொலிஸாருக்குப் பணிப்புரை வழங்கியிருந்தார்.

இவை தமிழ், முஸ்லிம் தலைவர்களின் தூண்டுதலின்றி, அரசாங்கம் எடுத்த நடவடிக்கைகளாகும். இதய சுத்தியோடு, இவ்வாறு தொடர்ந்து செயற்பட்டால், பொதுஜன பெரமுனவுக்கு நாட்டில் பல பகுதிகளில் வாழும் சிறுபான்மையினரை வென்றெடுக்க முடியும்.

உண்மையிலேயே, அரசாங்கம் சிறுபான்மையினரை வென்றெடுப்பதற்காக, அவர்களுக்கு எதனையும் கொடுக்கத் தேவையில்லை. நாட்டில் சட்டம், ஒழுங்கை நடுநிலையாக அமுலாக்கினால் அதுவே போதுமானதாகும்.

வடக்கில் தமிழ் மக்களை வென்றெடுப்பது, இவ்வளவு இலேசானதாக இருக்காது. ஏனெனில், அவர்களது தலைவர்கள், தமது அரசியல் சுலோகங்களிலேயே சிறைப்பட்டுவிட்டுள்ளனர்.

எந்தவோர் அரசாங்கமும் அந்தச் சுலோகங்களை நடைமுறைப்படுத்தப் போவதில்லை. எனினும், அரசாங்கம் அவர்களுடன் இதய சுத்தியுடன் கலந்துரையாட வேண்டும். அப்போது, சிலவேளை இணக்கப்பட்டுக்கு வழி பிறக்கக் கூடும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பறக்கும் தட்டு, பருவ மாற்றம், சந்திர பயணம் கிழிகிறது முகமூடி சுனவ்டன் கருத்து ! (வீடியோ)
Next post சட்டம் நமக்கானது! (மகளிர் பக்கம்)