குடியுரிமை சட்ட விதிகளை உருவாக்குவது தள்ளிவைப்பு!! (உலக செய்தி)
பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் நாடுகளில் மத ரீதியாக துன்புறுத்தப்பட்டு இந்தியாவுக்குள் அகதிகளாக வந்த இந்துக்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பௌத்தர்கள், சமணர்கள், பார்சிகளுக்கு குடியுரிமை கொடுக்க மத்திய அரசு சட்ட திருத்தம் கொண்டு வந்துள்ளது.
பாராளுமன்ற மக்களவையில் கடந்த 9 ஆம் திகதியும் மாநிலங்கள் அவையில் 11 ஆம் திகதியும் குடியுரிமை சட்ட திருத்தம் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டது. ஜனாதிபதி மறுநாளே (12 ஆம் திகதி) இந்த சட்ட திருத்தத்துக்கு ஒப்புதல் அளித்து கையெழுத்திட்டார்.
அரசிதழில் வெளியிடப்பட்ட குடியுரிமை சட்ட திருத்தத்தில் பல்வேறு புதிய விதிகளை சேர்த்து நாடு முழுவதும் அமல்படுத்த மத்திய உள்துறை முடிவு செய்து இருந்தது. இது தொடர்பாக சட்ட நிபுணர்களுடன் மத்திய உள்துறை மூத்த அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வந்தனர். திருத்தங்களும், புதிய விதிகளும் அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிராக அமைந்து விடக்கூடாது என்பதற்காக மத்திய உள்துறை அமைச்சகம் இதில் கவனமாக இருந்தது.
இதனால் குடியுரிமை சட்ட திருத்தத்துக்கான புதிய விதிகள் இன்னும் உருவாக்கப்படவில்லை. இந்த நிலையில் குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் தீவிரம் அடைந்து இருப்பதால் புதிய விதிகளை உருவாக்குவது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
குடியுரிமை சட்டத்துக்கு புதிய விதிகளை உருவாக்குவதை தள்ளிவைத்து இருப்பதாக மத்திய உள்துறை மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். எந்த சமுதாயத்துக்கும் பாதிப்பு வராத வகையில் புதிய விதிகளை உருவாக்க அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்று அவர் கூறினார்.
அந்த அதிகாரி மேலும் கூறுகையில், “குடியுரிமை சட்ட திருத்தத்தில் புதிய விதிகளை தயாரிப்பதில் மிக, மிக கவனம் செலுத்த வேண்டியதுள்ளது. எனவே தற்போது நடந்து வரும் போராட்டங்கள், வன் முறைகள் ஓய்ந்து அமைதி திரும்பிய பிறகே புதிய விதிகள் குறித்து முடிவு எடுக்கப்படும்” என்றார்.
Average Rating