சிறுநீரில் ரத்தம் வெளியேறுவதை குணப்படுத்தும் அருகம்புல்!! (மருத்துவம்)
நலம் தரும் நாட்டு மருத்துவத்தில், சிறுநீரில் ரத்தம் கலந்து வெளியேறும் பிரச்னைக்கு தீர்வுகாணும் மருத்துவத்தை காணலாம். சிறுநீரகத்தில் ஏற்பட்ட அழற்சி, சிறுநீர் பை, சிறுநீரக கற்கள் காரணமாக சிறுநீரில் ரத்தம் கலந்து வெளியேறுகிறது. நன்னாரியை பயன்படுத்தி இதற்கான மருந்து தயாரிக்கலாம். நன்னாரி வேர் பொடி, நெறிஞ்சில் பொடி, சந்தனப்பொடி ஆகியவற்றை தலா கால் ஸ்பூன் அளவுக்கு எடுக்கவும்.
இதில், பனங்கற்கண்டு சேர்த்து ஒரு டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைக்கவும். வடிகட்டி காய்ச்சிய பால் சேர்த்து கலந்து குடித்துவர சிறுநீரில் ஏற்படும் எரிச்சல், ரத்தம் வெளியேறுதல் பிரச்னைகள் சரியாகும். பல்வேறு நன்மைகளை கொண்ட நன்னாரி உடலுக்கு குளிர்ச்சியை அளிக்க கூடியது. நன்னாரி, நெறிஞ்சில் ஆகியவை சிறுநீர் பெருக்கியாக விளங்குகிறது. சிறுநீரக கற்களால் ஏற்படும் உள் காயங்களால் சிறுநீரில் ரத்தம் கலந்து வெளியாகிறது.
சிறுநீர் பையில் நீர் இல்லாமல் வற்றி இருக்கும்போது இப்பிரச்னை ஏற்படும். சிறுநீர் பாதையில் தொற்று ஏற்படும்போதும் ரத்தம் வெளியாகிறது. அருகம்புல்லை பயன்படுத்தி சிறுநீர் தாரையில் ஏற்படும் எரிச்சல், ரத்தம் வெளியேறுதலுக்கான மருந்து தயாரிக்கலாம். அருகம்புல்லை துண்டுகளாக்கி சிறிது நீர்விட்டு அரைத்து சாறு எடுக்கவும். 50 மில்லி அருகம்புல் சாறுடன், அதே அளவு மோர் எடுத்து கலந்து காலை, மாலை வேளைகளில் குடித்துத்துவர சிறுநீரில் ரத்தம் கலந்து வெளியாவது சரியாகும்.
சிறுநீர் தாரையில் ஏற்படும் வலி, புண்கள் குணமாகும். ரத்தம் சுத்தமாகும். மருத்துவ குணங்களை கொண்ட அருகம்புல் ரத்தத்தை கெட்டிப்படுத்தும் தன்மை உடையது. நோய் நீக்கியாக விளங்குகிறது. மாதுளம் பூக்களை பயன்படுத்தி மருந்து தயாரிக்கலாம். மாதுளம் பூக்களின் இதழ்களை எடுக்கவும். இதனுடன் சிறிது பனங்கற்கண்டு சேர்க்கவும். ஒரு டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டி காலை, மாலை வேளையில், 10 மில்லி அளவுக்கு குடித்துவர சிறுநீரில் ரத்தம் வெளியேறுவது நிற்கும். எரிச்சல் குணமாகும்.
மாதுளை பூ, பிஞ்சு, தோல் ஆகியவை துவர்ப்பு உடையது. துவர்ப்பு தன்மை புண்களை ஆற்றும். ரத்தத்தை உறைய வைக்கும் தன்மை உடையது. இளம் தாய்மார்களுக்கு பால் சுரப்பை அதிகரிக்கும் மருத்துவத்தை பார்க்கலாம். லவங்கப் பட்டையை பொடித்து கால் ஸ்பூன் அளவுக்கு எடுக்கவும். இதை தேன் அல்லது நெய்யோடு சேர்த்து கலந்து சாப்பிட்டால் தாய்பால் அதிகரிக்கும்.
Average Rating