கொரோனா வைரஸ் ஜெர்மனி, கனடாவிலும் பரவியது!! (உலக செய்தி)
சீனாவை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பற்றி நாம் அனைவரும் அறிந்ததே. புதிய கொரோனா வைரஸ் உருமாற்றம் அடைந்து மற்ற நாடுகளுக்கும் பரவலாம் என சீனா எச்சரிக்கை விடுத்தது.
சுவாசக் கோளாறுகள் ஏற்படுத்தி உயிரிழப்பை உண்டாக்கும் இந்த வைரசினால் இதுவரை சீனாவில் 132 பேர் உயிரிழந்துள்ளனர்.
வவ்வால்களை உண்ணும் கட்டுவிரியன் பாம்புகளில் இருந்து பரவும் இந்த வைரஸ் ஜப்பான், தென் கொரியா, தாய்லாந்து, தைவான் ஆகிய நாடுகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தியது கண்டறியப்பட்டது.
ஆசியா கண்டத்தை தாண்டி, அவுஸ்திரேலியா, அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் நாடுகளிலும் இந்த வைரசினால் சிலர் பாதிக்கப்பட்டனர்.
இந்நிலையில், கனடா மற்றும் ஐரோப்பிய நாடான ஜெர்மனியிலும் இந்த வைரஸ் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என அந்நாடுகள் உறுதி செய்துள்ளன.
ஜெர்மனியின் பவேரியா மாநிலத்தில் உள்ள ஸ்டான்பெர்க் நகரைச் சேர்ந்த ஒருவருக்கு கொரோனோ வைரஸ் தாக்கியதின் அறிகுறி இருப்பதாகவும் அவர் தனிப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாக அம்மாநில அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதேபோல், கனடாவின் ஒன்டாரியோ மாநிலத்தைச் சேர்ந்த ஒரு தம்பதிக்கும் இந்த வைரஸ் தாக்குதல் அறிகுறி இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.
சீனாவும் வுகான் நகரில் இருந்து கடந்த 22 ஆம் திகதி டொரோண்டோ நகருக்கு திரும்பிய அந்த தம்பதியினரில், கணவருக்கு வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் தனிப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது மனைவி தீவிர கண்காணிப்பில் உள்ளார், என அம்மாநில அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Average Rating