பெண்களின் ஆரோக்கியத்துக்கு யோகா!! (மகளிர் பக்கம்)

Read Time:16 Minute, 15 Second

பெண்கள் வீட்டு வேலை, குழந்தைகளை கவனிப்பது, வேலைக்குச் செல்வது என ஒரே நேரத்தில் பல சுமைகளைச் சுமக்கும்போது, வேலைப் பளுவின் அழுத்தம் தாங்காமல் விரைவில் சோர்வடைவதுடன், சரியான நேரத்திற்கு உணவு உண்ணாமல், உறக்கத்தையும் இழந்து விரைவில் சோர்வடைகின்றனர். பெண்களின் இந்நிலையை மனதில் இருத்தி, பெண்களின் உடல் மற்றும் மனவளத்தை எப்படி சரிசெய்வது என்ற கேள்விகளுடன் எம்.எஸ்.ஸி. யோகா மற்றும் பிஸியோ தெரபிஸ்ட் பயிற்சி பெற்றவரும், கடந்த ஐந்தாண்டுகளாக குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு யோகா பயிற்றுவிப்பவருமான, யோகா ஆசிரியர் வித்யா லட்சுமியை அணுகியபோது, மிகவும் மகிழ்ச்சியோடு பெண்களுக்கான யோகா குறித்த செய்முறைகளுடன் நமக்கு விளக்க ஆரம்பித்தார்.

வீட்டையும் வேலையையும் தாண்டி, பெண் தனக்கான நேரத்தை கண்டிப்பாக ஒதுக்கிக்கொள்ள வேண்டும் என்று பேசத் துவங்கினார். பெண்கள் பருவம் அடையும் வயதில் துவங்கி இல்வாழ்க்கை, குழந்தைபேறு, மெனோபாஸ், மற்றும் முதுமைவரை என்னென்ன பிரச்னைகள் உள்ளன என்றும் தொடர்ந்து அதற்கான யோகா பயிற்சிகளை இடைவெளியின்றி தொடர்ச்சியாக தினமும் இருபது நிமிடங்கள் செய்வதன் மூலம் ஆரோக்கியமான வலுவான உடலையும், நல்ல மனநிலையையும் பெற முடியும் என்கிறார் இவர்.

“பருவம் அடைதல், திருமணம், குழந்தைபேறு என அடுத்தடுத்த கட்டத்தை நோக்கி நகரும் பெண்களுக்கு பெரும் பிரச்னையாக அதிகமான உதிரப் போக்கு, சுழற்சி தவறிய மாதவிடாய், திருமணத்திற்கு பின் ஏற்படும் தொடர்ச்சியான கருச்சிதைவு, குழந்தையின்மை, குழந்தைபேற்றுக்குப்பின் வரும் உடல் மாற்றம், அதிகப்படியான உடல் பருமன், மன அழுத்தம், நாற்பது வயதைத் தாண்டி வரும் இறுதி மாதவிடாய் (மெனோபாஸ்) பிரச்னை அதைத்தொடர்ந்து வரும் கர்ப்பப்பை பிரச்னை, முதுகு வலி, முழங்கால் வலி என அனைத்திற்கும் யோகாவில் தீர்வு உண்டு.

மின் இயந்திரங்களின் வருகைக்கு முன்பு, பெண்கள் அதிகம் வேலைக்குச் செல்லாமல் வீட்டிலே இருந்ததால், துணி துவைப்பது, அம்மி ஆட்டுக்கல் கொண்டு உடலை அசைத்து வேலை செய்வது, கீழே அமர்ந்து காய்கறிகளை அரிவது என பல வேலைகளை செய்து வந்தனர். இவை அனைத்திலும் உடலுக்குத் தேவையான பயிற்சி கிடைத்தது. ஆனால் இன்று பெண்கள் படித்து, அனைத்துத் துறையிலும் முன்னேறி வரும் சூழலில், வீட்டு வேலைகளில் பெரும்பாலும், உடல் உழைப்பு குறைந்து மின் இயந்திரங்களின் ஆதிக்கம் பெருகிவிட்டதால் உடல் அசைவுக்கென சில உடற்பயிற்சிகள் அதிகம் தேவைப்படுகின்றன.

பெண்களின் உடல்ரீதியான பெரும்பாலான பிரச்னைகளுக்கு ஹார்மோன்களே முக்கியப் பங்கு வகிக்கின்றன. ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோட்டோசோன் போன்றவை சரியான நிலையில் வேலை செய்யவில்லை என்றால் பெண்களுக்கு மாதவிடாய் பிரச்னையில் துவங்கி தொடர்ச்சியாக ஒவ்வொரு பிரச்னையாக உருவாகும். அடிக்கடி உருவாகும் தலைவலி மற்றும் மன அழுத்தம் போன்ற பிரச்னைகளுக்குக் கூட ஹார்மோன் சமநிலையின்மையே காரணம்.

இதனால் முப்பது முப்பத்தி ஐந்து வயதிலே மூட்டு வலி மற்றும் முதுகு வலி நோய்கள் பெண்களுக்கு அதிகம் வருகிறது. சிலருக்கு அதிக உடல் எடை, முகச் சுருக்கம், முகப்பரு, வயது மூப்புத் தோற்றம் போன்றவையும் வருகிறது. 80% பெண்கள் இத்தகைய பிரச்னைகளை சந்திக்கின்றனர். தினம் ஒரு முறையாவது கீழே உட்கார்ந்து எழ வேண்டும். மேலும் இன்டியன் டாய்லெட் பொஸிஸன் பயன்படுத்த வேண்டும். இதனால் இடுப்பு எலும்பு வலுப்பெறும்.

நமது உணவு முறைகளும் இயற்கையானதாக இருத்தல் வேண்டும். உணவில் பச்சை நிற காய்கறி, பால், தயிர், முட்டை, மீன் போன்ற உணவுகளை தொடர்ச்சியாக சேர்க்க வேண்டும். பெண்கள் மாதவிடாய் சுழற்சி பற்றி முழுமையாக அறிந்து கொள்ளுதல் வேண்டும். கர்ப்பப்பையினை மாதாமாதம் சுத்தப்படுத்துவதே மாதவிடாய். 35 நாட்களுக்கு மேல் பீரியட்ஸ் வரவில்லை என்றால் கர்ப்பப்பை பிரச்னை. மாதவிடாய் பிரச்னையில் துவங்கும் இது குழந்தையின்மை பிரச்னைவரை கொண்டு செல்லும்.

நமது உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்பையும் சுத்தமாக்க வழி உள்ளது. இதயம், வயிறு, கர்ப்பப்பை போன்றவற்றை வேலை செய்ய வைத்து சுத்தப்படுத்த அதற்கென சில யோகா பயிற்சிகள் உள்ளன. ஜிம்முக்கு போய் உடலை சரிபண்ணினால் வெளித்தோற்றம் மட்டும்தான் மாறும். ஜிம்மில் உடற்பயிற்சி செய்வதை விட்டுவிட்டால் உடல் இரண்டு மடங்கு எடைபோடும். ஜிம்மில் உடலின் உள்உறுப்புகள் வேலைசெய்யாது.

யோகா உள் உறுப்புடன் தொடர்புடையது. நம் உடல் எடை மெதுவாகக் குறையும். ஆனால் மறுபடி ஏறாது. தினம் ஒரு 20 நிமிடம் முதல் 30 நிமிடம் வரை செய்தால் போதும். இதனால் பெண்களுக்கு ஹார்மோன்கள் மூலம் வரும் சிக்கல்கள் சரியாகும். பீரியட்ஸ், குழந்தையின்மை, மெனோபாஸ் பிரச்னைகளுக்கு நிரந்தரத் தீர்வு கிடைக்கும். இதனால் மன அழுத்தத்தில் இருந்தும் பெண்கள் விடுதலை பெறலாம். யோகாவை தொடர்ந்து செய்வதன் மூலம் முக அழகைக் கூட்டி, இளமையை தக்க வைக்க முடியும்.

யோகாவை பெரும்பாலும் காலையில் செய்தால் மிகவும் நல்லது. நேரமில்லாதவர்கள் கிடைத்த நேரத்தில் செய்யலாம். உணவு சாப்பிட்டால் இரண்டு மணி நேரம் கழித்தும், சிற்றுண்டியாக இருந்தால் அரை மணிநேரம் கழித்தும் செய்ய வேண்டும். முதல் பத்து நிமிடம் சூரிய நமஸ்காரம். அதன் பிறகு 5 நிமிடம் யோகா பயிற்சி செய்ய வேண்டும். கடைசி 5 நிமிடம் பிராணாயாமம் எனப்படும் மூச்சுப் பயிற்சி செய்தல் வேண்டும். மொத்தம் தினம் 20 நிமிடங்கள் ஒதுக்கினால் போதும்.

முதன் முறையாக யோகாவை செய்யத் துவங்குவதற்கு முன்பு சிறிது நேரம் உடலை “அங்க பிரதட்சணம்” (Rolling) செய்தல் வேண்டும். இதன் மூலம் உடலுக்கு தளர்ச்சி கிடைக்கும். உடல் பிடிப்பு ஏற்படாது. அங்க பிரதட்சணம் செய்யும்போது, தரையில் படுத்து இடது வலதாக புரண்டால் உடல் நன்றாக தளர்ச்சி அடையும். முதல் ஒருவாரம் அங்கபிரதட்சனம் செய்த பிறகே யோகாவை செய்யத் துவங்க வேண்டும். ஒவ்வொரு ஆசனத்திற்கும் ஒவ்வொரு உடல் உறுப்பை செயல்படுத்தக்கூடிய தன்மை உள்ளது.

1. பாலாசனம்

இதைச் செய்வதால் முதுகில் இருக்கும் தசைகள் தளர்ச்சி ஆகும். முதுகுவலி மற்றும் முதுகில் இருக்கும் சதை குறையும். முதுகு, இடுப்பு, கால், முட்டி எல்லாம் வலுவடையும். சீரான ரத்த ஓட்டம் கிடைக்கும். சுருள் நிரை நாளங்களில் (varicose veins) தைராய்டு நாளமும் ஒன்று. அது சரியான முறையில் சுரக்கவில்லை என்றால் உடல் எடை கூடும். பாலாசனம் இந்தப் பிரச்னையை சரி செய்யும்.

2. அதோமுக சுவானாசனம்

பெண்களுக்கு 40 வயதுக்கு மேல் மாதவிடாய் நிற்கும் நிலையில் வியர்க்கும். தூக்கமின்மை, மன அழுத்த பிரச்னை இருக்கும். இது எல்லாவற்றையும் இந்த ஆசனம் சரிசெய்யும். குழந்தை பிறந்த பிறகு வரும் கால் வலி, குதிகால் வலி சரியாகும். தலைக்கு செல்லும் ரத்த ஓட்டம் சரியாகும்.

3. புஜங்காசனம்

இடுப்பு வலி சரியாகும். அட்ரினல் சுரப்பியைத் தூண்டும். இது மன அழுத்தம் தொடர்பான ஹார்மோனை சரிபண்ணக்கூடியது. கர்ப்பப்பையை பலப்படுத்தும். குழந்தையின்மை பிரச்னையை சரிபண்ணும். மாதவிடாய் சரியான முறையில் வராதவர்கள் இந்த ஆசனத்தை செய்தால், கருமுட்டை வலுப்படும். செயற்கை முறை கருத்தரிப்பு, ஆபரேஷன் மூலம் குழந்தைபேறு இவற்றை தடுக்கலாம்.

4. சுப்த பாத கோனாசனம்

பெண்கள் கருத்தரித்திருக்கும் காலத்தில் கடைசி மூன்று மாதம் இந்த ஆசனத்தை செய்தால் குழந்தை 90% சுகப் பிரசவமாகப் பிறக்கும். மாதவிடாய் பிரச்னை சரியாவதுடன், இந்த ஆசனம் செய்தால் பெண்களின் இனப்பெருக்க உறுப்புகள் சரியான முறையில் வேலை செய்யும். கருப்பையை வலுப்படுத்தும். மெனோபாஸ் பிரச்னையும் சரியாகும். குழந்தையின்மை பிரச்னை வராது.

5. பரத்வாஜாசனம்

துணியை கசக்கி பிழியும்போது அழுக்கு எப்படி வெளியேறுகிறதோ அதுபோல் உடம்பை திருப்புவதன் மூலம் செய்யும் ஆசனம். இதைச் செய்வதால் உடலில் உள்ள செரிமான உள் உறுப்புகள் அதன் வேலையினை சரியான முறையில் செய்யத் துவங்கும். வயிற்றில் உள்ள அழுக்குகள் வெளியேறும். அதிக ரத்தப்போக்கு கட்டுப்படுத்தப்படும். அட்ரீனல் சுரப்பியை வேலை செய்ய வைக்கும். வயிறு தொடர்பான அனைத்து பிரச்னைக்கும் இந்த ஆசனம் ஏற்றது.

6. கீஜெல்ஸ் பயிற்சி

இந்தப் பயிற்சியை பெண்கள் எந்த நேரத்திலும், உட்கார்ந்து, நின்று, படுத்துக்கொண்டு எந்த நிலையிலும் செய்யலாம். பெண் பிறப்புறுப்பை உள்ளிழுத்து, மூச்சை அடக்கி பின் விடுதல் வேண்டும். ஒரு நாளைக்கு ஐந்து முதல் பத்து முறை இதைச் செய்தால் கேன்சர், கருப்பை தொடர்பான எந்த பிரச்னையும் பெண்களுக்கு வராது. பெண் உறுப்பை உள்ளிழுக்கும்போது ரத்த ஓட்டம் கருப்பைக்கு சீராகச் செல்வதுடன், சுத்தம் செய்து அழுக்கை வெளியேற்றும். பெண்களுக்கு குழந்தைபேற்றுக்குப் பின் உறுப்பு தொய்வடைவதைத் தடுக்கும்.

குழந்தை பேற்றுக்குப் பின் பிறப்புறுப்பைச் சுற்றியுள்ள தசைகள் தளர்வாகும். இதனால் பெண்கள் இருமும்போதும், தும்மும்போதும் சிறுநீர் சற்று வெளியேறும். இந்தப் பிரச்சனைகளை பெண்கள் வெளியில் சொல்லத் தயங்குவார்கள். குழந்தையின் எடையினை சுமந்ததால் கர்ப்பப்பை பிறப்பு உறுப்பினை நோக்கி 2 அல்லது 3 டிகிரி கீழே இறங்கியிருக்கும். இந்தப் பயிற்சியை தொடர்ந்து நேரம் கிடைக்கும்போது செய்வதால் கீழே இறங்கிய கர்ப்பப்பை மேலே நகரும்.

இந்தப் பயிற்சியை செய்யத் துவங்கிய ஒரு வாரத்திலேயே இதன் பயன் தெரியும். பெண்கள் கருவுற்றிருக்கும் அத்தனை மாதங்களும் இந்த பயிற்சியினை எத்தனை முறைவேண்டுமானாலும் செய்யலாம். இதனால் குழந்தைபேற்று நேர வலி குறையும். உறுப்பு வலுவடையும். புண் விரைவில் குணமாகும். மாதவிடாயின் ஆரம்பகட்டத்தில் இருந்து இறுதிகட்டமான மெனோபாஸ் வரை இந்தப் பயிற்சியை தொடர்ந்து செய்யலாம்.

ரத்த ஓட்டத்தை சீர்படுத்தவும், இதயத்தை வலுப்படுத்தவும். நுரையீரலை சரியாக வைத்துக்கொள்ளவுமே பிராணாயாமம் செய்ய வேண்டும். பிராணாயாமத்தை சரியான முறைப்படி செய்தல் வேண்டும். வலது கை கொண்டே மூக்கை தொட வேண்டும். நேராக நிமிர்ந்து உட்கார்ந்து செய்தல் வேண்டும். மூச்சை உள்இழுக்கும்போது வயிறை வெளியிலும், மூச்சை வெளிவிடும்போது வயிறு உள்ளும் இழுக்கப்படவேண்டும். இதுவே சரியான முறை.

தவறான முறையில் இதைச் செய்தால் பயனிருக்காது. ரத்தம் தலைக்கு ஏறி தலைசுற்றல் ஏற்படும். முறைப்படி கற்ற பிறகே பிராணாயாமம் செய்தல் வேண்டும். பிராணாயாமம் செய்வதால் சளி பிடிக்காது. முகம் பிரகாசம் அடையும். ரத்த ஓட்டம் சரியான முறையில் செல்வதால். முகச் சுருக்கம் வராது. நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். நீண்டநாள் நோயின்றி வாழலாம். 40 வயதுக்குமேல் புற்றுநோய் வருகிறது. கர்ப்பப்பை சுத்தம் ஆகாமல் மாதவிடாய் சரியாக வராததால் கருமுட்டை புற்றுநோயாக மாறுகிறது. யோகா செய்வதால் புற்றுநோய் வராமல் காத்துக்கொள்ளலாம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post குறைவான சுய இன்பம் நிறைவான மகிழ்ச்சி : அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு!! (அவ்வப்போது கிளாமர்)
Next post கர்ப்ப கால ரத்தப்போக்கு!! ( மருத்துவம்)