சாரா செய்த மேஜிக்!! (மருத்துவம்)
பாலிவுட்டின் லேட்டஸ்ட் கனவுக்கன்னி சாரா அலிகான். ‘கேதார்நாத்’ ஹிந்தி படம் மூலம் நடிகையாக அறிமுகமான இவர் பிரபல பாலிவுட் நடிகர் சயிப் அலிகானின் மகள் என்பது ஸ்பெஷல் தகவல். நியூயார்க்கில் படித்துக் கொண்டிருந்தபோது 96 கிலோ எடையிலிருந்தவர்தான் சாரா. உடல்பருமனானவராகவே சாராவைப் பார்த்துப் பழகிய அவரது நெருக்கமான உறவுகள் வட்டாரம், தற்போது அவரது டிரான்ஸ்ஃபார்மேஷனைப் பார்த்து அதிர்ச்சியில் இருக்கிறது. இந்த அதிரடி மாற்றம் எப்படி சாத்தியம் ஆனது?!
‘என்னைப் பொறுத்தவரை எடை குறைப்பு மேஜிக் நியூயார்க்கிலேயே தொடங்கிவிட்டது. நான் பட்டம் பெறுவதற்கு ஒரு வருடம் இருந்த நிலையில் 96 கிலோவாக என்னுடைய எடை இருந்தது. ஆமாம்… கொலம்பியா பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருந்தபோது பீட்சா, பர்கர் மற்றும் நொறுக்குத் தீனிகள் மீதுள்ள பிரியத்தினால் எடை 96 கிலோவுக்கு எகிறியது. படிப்புக்கு நடுவில் குடும்பத்தை பார்க்க, நியூயார்க்கிலிருந்து இந்திய விமான நிலையத்தில் இறங்கினேன். அப்போது என்னுடைய அம்மாவால் என்னை அடையாளம் கொள்ள முடியவில்லை என்றால் பாருங்கள். அந்த நிகழ்வு என் இதயத்தை உடைத்துவிட்டது. மீண்டும் நியூயார்க் சென்ற பிறகு என் உடல் எடையைக் குறைக்காமல் என் அம்மாவோடு வீடியோ காலில் கூட பேச மாட்டேன் என்று முடிவெடுத்தேன். உடல் எடையைக் குறைத்தபிறகுதான் என் அம்மாவிடம் பேசினேன்.
‘சைஸ் ஜீரோ’ ஆவதெல்லாம் என் எண்ணம் கிடையாது. மேலும் உருவம் சம்பந்தப்பட்ட தாழ்வு மனப்பான்மை என்பதும் இல்லை. உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பதே என் விருப்பம். என்னுடைய இந்த உடல்பருமன் PCOS-னால் வந்த விளைவு என்பதை அறிந்திருந்தேன். அதனால் மருத்துவரீதியாக எடை குறைப்பு முயற்சிகளை மேற்கொண்டேன். கடுமையான உணவுக் கட்டுப்பாடு அல்லது உடற்பயிற்சிகளையெல்லாம் முயற்சிக்கவில்லை. ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுவது, மிதமான நடைப்பயிற்சி என்ற அளவில்தான் மெதுவாக பயணத்தைத் தொடங்கினேன். ஃபங்ஷனல் டிரெயினிங், குத்துச்சண்டை முதல் சைக்கிளிங் வரை பலவிதமான வகுப்புகள் கொலம்பியாவில் இருந்தன. ஆனால், நான் அதிக எடையோடு இருந்ததால் ஆரம்பத்தில் மிதமான நடைப்பயிற்சி, சைக்கிளிங் மற்றும் ட்ரெட்மில் வாக்கிங் போன்ற கார்டியோ உடற்பயிற்சிகளை மட்டும் செய்ய ஆரம்பித்தேன்.
பீட்சாவிலிருந்து சாலட்டுக்கு மாறினேன். சோம்பலிலிருந்து கார்டியோ பயிற்சிக்குச் சென்றேன். அதன்பிறகே இந்த எடை குறைப்பு மேஜிக் சாத்தியம் ஆனது. தற்போது என்னுடைய கவனம், குறைத்த எடையை எப்படி தக்க வைத்துக் கொள்வது என்பதே! கடுமையான படப்பிடிப்பு ஷெட்யூலின் போதும், ஃபங்ஷனல் ட்ரெயினிங் மற்றும் அதிக எடை தூக்கும் கார்டியோ பயிற்சிகளை கண்டிப்பாக மிஸ் பண்ண மாட்டேன். ஒரு நடிகையாக என்னுடைய வேலையில் நேரம், மனநிலை அர்ப்பணிப்பு மற்றும் கவனம் முழுமையாக தேவைப்படுகிறது. எல்லா இடங்களிலும் என்னுடைய ஹார்மோன் பிரச்னையை சுமந்து கொண்டு செல்ல முடியாது. என்னைப் பொறுத்தவரை எடையிழப்பு என்பது என்னுடைய உடல்நலம் மற்றும் தன்னம்பிக்கை சார்ந்த விஷயம் என்பதால், அதற்கு முன்னுரிமை கொடுத்தேன்’ என்கிறார்.
ஆமாம்… வாரத்தில் 6 நாட்களிலும், குறைந்தது ஒன்றரை மணி நேரமாவது கண்டிப்பாக ஜிம்மில் பயிற்சிகள் செய்வதை வழக்கமாகவும் வைத்திருக்கிறார் சாரா. அன்றாட பயிற்சிகளில் பவர் யோகா மற்றும் பில்லட்ஸ் (Pilates) பயிற்சிகள் கண்டிப்பாக இருக்கும். இவையிரண்டும் பிஸியான படப்பிடிப்பில் உடற்பயிற்சி செய்ய முடியாமல் போகும் நாட்களில் தன்னுடைய உடலை பாதுகாக்கும் கேடயங்களாக சொல்கிறார். சாராவிற்கு பிடித்தமான உடற்பயிற்சியென்றால் அது ‘பில்லட்ஸ்’. இதை பிரபலங்களின் பில்லட்ஸ் பயிற்சியாளரான நம்ரதா புரோஹித்திடம் கற்றுக் கொள்கிறார். எடையைக் குறைத்து ஸ்லிம் ஃபிட் ஆனதால் பாலிவுட்டில் நுழைந்து ரசிகர்களின் கனவுக்கன்னியாகவும் தற்போது மாறியிருக்கிறார் சாரா அலிகான். சாரா அலிகானின் இந்த உடல்மாற்றம் நிச்சயம் மற்றவர்களுக்கு ஒரு உந்துதலைத் தரும் என்பதை மறுக்க முடியாது. ‘உடற்பயிற்சியே என்னுடைய முதுகெலும்பு’ என்ற சாராவின் நம்பிக்கை வார்த்தைகள் எடை குறைக்க விரும்புகிறவர்களுக்கான எனர்ஜி டானிக்!
Average Rating