சுயஉரிமையுடன் மக்கள் வாழ உறுதிபூண்ட பேராயர் !! (கட்டுரை)

Read Time:11 Minute, 54 Second

மக்களோடு வாழ்ந்து, மக்களுக்காகச் சேவை செய்து, மக்களுக்காகவே மரித்து, இன்றும் இறைசமூகத்தில் வாழ்பவர்களை, நினைவுகூர வேண்டியது தற்காலச் சமூகத்தின் தலையாய கடமையாகும்.

ஏனெனில், வருங்காலச் சமூகம் இவ்வண்ணம் வாழ்ந்தவர்களை அறிந்து கொள்ளவும் அவர்கள் காண்பித்த முன்னாதிரியான வாழ்க்கையைத் தாமும் தம்வாழ்வில் கடைப்பிடிக்கவும் அதன் மூலமாக வன்முறைகள் நிறைந்த தற்கால உலகில் மனிதப் பண்புகள் நிறைந்த, நாகரிக விழுமியங்கள் கொண்ட உன்னதமான சமூகத்தை உருவாக்கிடவும் அவர்களால் முடியும்.

இவ்வகையில் நம்மிடையே வாழ்ந்து, இல்லை – நம்முடனேயே வாழ்ந்து கொண்டிருக்கும் பேராயர் டி. ஜே. அம்பலவாணர், தமிழ் பேசும் மக்கள் மத்தியில் வரலாறு படைத்தவர். அதாவது, அவர் ‘காலம்’ ஆகி உள்ளார்.

பேராயருடைய பெரும்பணிகள்

தென்னிந்திய திருச்சபை, யாழ்ப்பாணப் பேராயத்தின் இரண்டாவது பேராயராகப் பணியாற்றிய இவர், 22 வருடங்கள் ஓய்வின்றிப் பணியாற்றிய பின்னர், 28. 02. 1993இல் இளைப்பாறி, மானிப்பாய் கிறீன் வைத்தியசாலை வளாகத்தில் உள்ள மிசன் இல்லத்தில் வாழ்ந்து வந்தார். இயற்கையை அதிகமாக நேசித்த இவர், எப்போதுமே மரங்களை நாட்டுவதிலும் அவற்றைப் பராமரிப்பதிலும், அவை கனி கொடுக்கின்றபோது, அதைக் கண்டு மகிழ்வதிலும் நேரத்தைச் செலவழித்தார்.

இக்காலப் பகுதியில் போரின் கோரத்தாண்டவத்தால் மக்கள் சொல்லொணாத் துயரங்களை அனுபவித்து வந்தனர். இறுதிவரை மக்களுடன் மக்களாகவே வாழ்ந்த அவர், நோய்வாய்ப்பட்டு, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, 10. 10. 1997இல் கர்த்தருக்குள் நித்திரையடைந்தார். இவருடைய நல்லடக்க வழிபாடு வட்டுக்கோட்டைப் பேராலயத்தில் 15. 10. 1997இல் நடைபெற்றது. இவருடைய பூதவுடல் அனைத்துச் சபை மக்களுடைய வரலாறு காணாத நீண்ட பவனியுடனும் இறுதிமரியாதையுடனும் எடுத்துச் செல்லப்பட்டு, உடுவில் மிசன் கல்லறைத் தோட்டத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இவருடைய வழிநடத்தல்களும் ஆலோசனைகளும் ஞானமானவை. எப்போதும் தீர்க்கதரிசனப் பார்வையுடனேயே இவர் பணிகளைச் செய்து வந்தார். சபைமக்களுடன் நெருக்கமாகப் பழகிய இவர், அவர்களை அதிகம் நேசித்தார்.

இவருடைய இறையியல், மெய்யியல் பார்வை மகத்தானது. இவர் நூல்கள் எவற்றையும் எழுதாவிட்டாலும் வரலாற்றை உருவாக்கியுள்ளார். 1971 இல் யாழ்ப்பாணக் குடாநாட்டுக்குள் காணப்பட்ட திருச்சபையின் பணிகளை பரந்துபட்ட வன்னியின் பெருநிலப் பரப்பிலும் பின்னர், வவுனியாவையும் கடந்து, கிழக்கு மாகாணத்தின் மூன்று மாவட்டங்களிலும் விஸ்தீரணப்படுத்தி, தேவையில் உள்ள மக்கள் ஆறுதலும் அமைதியும் அடையும்படிக்கு வழி சமைத்தார்.
‘கரிசனை இறையியல்’

டி. ஜே. அம்பலவாணர் 1971ஆம் ஆண்டு பேராயராக அபிஷேகம் பண்ணப்பட்ட வேளையில், யாழ்ப்பாணப் பேராயத்தின் பணிகள் யாழ்ப்பாணக் குடாநாட்டுக்குள்ளேயே காணப்பட்டன. பேராயருடைய தரிசனம் மிக்க பார்வையாலேயே திருச்சபையின் பணி, ஆனையிறவுக்கு அப்பால் ஆன்மீகப் பணியாகவும் சமூகப்பணியாகவும் துயர் துடைக்கும் பணியாகவும் விஸ்தரிக்கப்பட்டன.

மலையகத் தமிழ் மக்கள், மலையகத்தில் இருந்து விரட்டப்பட்ட வேளையில் அவர்கள், மிக அதிகமாக வன்னிப் பெருநிலப்பரப்பிலேயே தஞ்சமடைந்தனர். நிர்க்கதிக்குள்ளான இம்மக்களைப் பராமரிப்பதற்காகப் பல திட்டங்களைப் பேராயர் அம்பலவாணர் மேற்கொண்டிருந்தார். வீட்டுத் திட்டங்கள், பாலர் பாடசாலைகள், தொழிற்பயிற்சி நிலையங்கள், சிறுவர் இல்லங்கள், பலநோக்குப் பண்ணைகள் போன்ற பல சமூக மய்யப் பணிகளை உருவாக்கி மக்களுக்கு உதவினார்.

இப்பகுதிகளில் பணிபுரியும் இறைபணியாளர்கள் வடக்கு, கிழக்குப் பகுதிகளிலேயே பயிற்றுவிக்கப்பட வேண்டும் என்று விரும்பிய இவர், மருதனார்மடத்தில் 1983ஆம் ஆண்டு இறையியற் கல்லூரியை நிறுவினார். இறையியல் உருவாக்கம் எம்முடைய மக்களினுடைய பாடுகளின் மத்தியில் இருந்து உருவாகும் போதே, அது அர்த்தமுள்ள இறையியலாக அமையும் என்பதோடு அது மக்களுக்கு ஆறுதலையும் கொடுக்கும் என உறுதியாக நம்பினார்.

பேராயர் அம்பலவாணரின் இறையியல் என்பது, ‘மக்கள் உயிர் வாழ்வுக்காகப் போராடும்போது, அதற்குப் பதிலளிப்பதும் உதவி செய்வதுமான கரிசனை மிக்க இறையியலாகும். திருப்பணி என்பது, திருவிவிலியம் தரும் நற்செய்தியை அடிப்படையாகக் கொண்டது. மேற்குலக சூழல் போன்றது அல்ல எமது சூழல்; மேற்குலக இறையியல் போன்றது அல்ல, எமது இறையியல்’. என்பதாக இருந்தது.

“எமது வடக்கு, கிழக்கு மாகாண மக்களுடைய உடனடித் தேவை ஒப்புரவு, விடுதலை என்பது அல்ல; மக்கள் உயிரோடு வாழ்வதற்கான சூழலை ஏற்படுத்துவதே உடனடித் தேவை. சமூகங்களுக்கு இடையேயான ஒப்புரவு என்பது, தமிழ்ச் சமூகமானது சமத்துவத்துடனும், சுயகௌரவத்துடனும் அங்கிகரிக்கப்பட்ட, மதிக்கப்பட்ட சமூகமாக ஏற்றுக்கொள்ளப்பட்டதன் பின்னர் கிடைக்கின்ற விடுதலையின் பின்பாகவே சிந்திக்கப்பட வேண்டியது. மக்களுடைய வாழ்வுக்கே அச்சுறுத்தல் இருக்கின்ற போது, எவ்வாறு ஒப்புரவைப் பற்றிப் பேசமுடியும்? இவ்வாறான சூழலிலே திருச்சபையினுடைய காத்திரமான பணி என்பது, மக்களுக்கு வாழ்வளிக்கும் பணியேயாகும்” என்று அவர் உறுதியாகக் கூறுவார்.

பேராயர் அம்பலவாணர், திருச்சபையின் தலைவராக மாத்திரமல்லாமல் தமிழ் மக்களினுடைய நம்பிக்கைக்கு உரிய ஒருவராகவே வாழ்ந்து வந்தார். தமிழ் மக்களின் மீதான அடக்குமுறைகள், அவர்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்து விடப்பட்ட போர் என்பனவற்றுக்கு எதிராகக் குரல் கொடுத்தார். இவர் பிறநாடுகளுக்குச் சென்று, கலந்துகொண்ட கூட்டங்களில் நீதிக்காகவும் நீதியுடன் கூடிய சமாதானத்துக்காகவும் குரல் கொடுத்தார். நீதிக்காகப் பேசுவது, நீதிக்காக உழைப்பது போன்ற பணிகளை ஒருபோதும் அந்தக் குறிப்பிட்ட மக்களுடைய அடக்குமுறைச் சூழமைவை விட்டு வெளியே இருந்து செய்ய முடியாது.

பேராயர் துன்பங்களைக் கண்டு அஞ்சாமல் துன்பங்கள், இழப்புகளை அனுபவித்த மக்களோடு வாழ்ந்தமையானது மக்களுக்கு நம்பிக்கையைக் கொடுப்பதாக அமைந்தது. அதுமாத்திரமல்லாமல் தலைநிமிர்ந்து நிற்கவும், நீதிக்காகக் குரல் கொடுக்கவும் துணிவோடு வாழவும் மக்களை ஏவிவிடும் முன்மாதிரியான தலைமைத்துவத்தை, துன்பங்கள் நிறைந்த சூழமைவில் நிறைவாக வழங்கியிருந்தார்.

1983ஆம் ஆண்டுக்குப் பின்னர், யாழ்ப்பாணப் பேராயத்தில் பணிபுரிந்த, ஆங்கில அறிவு நிறைந்த பலர், ஐரோப்பிய நாடுகளுக்குச் சென்று, அங்கு குடியேறினர். பல பணியிடங்கள் வெற்றிடமாகின. ஊழியர் பற்றாக்குறை காணப்பட்ட வேளை, பலர் எம்மை விட்டுச் சென்றது பலருக்கும் மனச்சோர்வையும் துக்கத்தையும் அளித்தன. ஆனால், பேராயர் சோர்ந்து போகவில்லை. அவருடைய மெய்யியல் பார்வை என்னவென்றால் “ஒருதுளி பாலுக்காக அழுதுகொண்டிருக்காமல் புதிய பசுக்களைக் கண்டுபிடித்துப் பாலைப் பெற்றுக்கொள்ள வேண்டும்” என்பதேயாகும்.

துணிச்சல் மிக்க பேராயர்

பேராயரின் சமகாலத்தில் கத்தோலிக்கத் திருச்சபையின் பேராயராக விளங்கியவர் ஆயர் தியோகுப்பிள்ளை ஆண்டகை. இவர்கள் இருவரும் இரு திருச்சபைகளையும் இணைக்கும் பாலமாக விளங்கியது மட்டுமல்லாமல், தமிழ் மக்களுடைய வாழ்வில் மிகக் கடினமான போர்ச்சூழல்கள் நிலவிய காலங்களில் இணைந்து, தமிழ் மக்களுடைய பாதுகாவலர்களாகவும் விளங்கினார்கள். பேராயர் அம்பலவாணரோடு இணைந்து பணியாற்றிய பேராயர் தியோகுப்பிள்ளை இப்படிக் கூறியிருக்கிறார். “நாங்கள் இணைந்து பணியாற்றிய காலம், தமிழ் மக்களுடைய வரலாற்றில் மிக முக்கியமான காலம். வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வாழ்ந்த தமிழ் மக்கள் வார்த்தைகளால் விவரிக்க முடியாத துன்பங்களை அனுபவித்த காலம். இந்தச் சவால்கள் நிறைந்த பணியில், பேராயர் அம்பலவாணர் மிகவும் ஒத்துழைத்து என்னுடன் செயற்பட்டார். இவர் மிகுந்த துணிவு கொண்டவராகவும் மாறாத நேர்மையும் உற்சாகமும் கொண்டவராகவும் விளங்கினார். இவர் தமிழ் மக்கள் அமைதியாகவும் சுய உரிமைகளோடும் வாழ வேண்டும் என்பதிலே உறுதியாக இருந்தார்” என்று கூறியுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post யோகா டீச்சர்!! (மகளிர் பக்கம்)
Next post இதுவரை உங்கள் வாழ்நாளில் பார்த்திராத மிரளவைக்கும் விஷயங்கள்!! (வீடியோ)