செல்லுலாய்ட் பெண்கள்!! (மகளிர் பக்கம்)

Read Time:25 Minute, 32 Second

அவரைப் பொறுத்தவரை மிகக் கவர்ச்சிகரமாக உடை உடுத்தி நடித்தவர் இல்லை. கண்ணியமான உடைகளிலேயே பெரும்பாலும் தோன்றியவர். கண்டாங்கிச் சேலையானாலும் இயல்பான சேலைக்கட்டு என்றாலும் பாவாடை, தாவணி, சல்வார் கமீஸ், ஸ்கர்ட் என இயல்பான உடைகளில் எதை அணிந்தாலும் கவர்ச்சிகரமாகத் தோன்றினார். அத்தனையும் அவர் உடல்வாகுக்குப் பாந்தமாகப் பொருந்தியது. முக்கியமாக நீச்சல் உடையில் அவர் திரையில் தோன்றியதே இல்லை. தமிழ், தெலுங்கு, கன்னடப் படங்களில் நடித்தபோதும் மலையாளப் படங்களில் அவர் நடிக்காததற்கும் கேரளத்தின் முண்டு போன்ற உடைகளும் ஒரு முக்கிய காரணம். அதற்காகவே மலையாளப் படங்களைத் தவிர்த்தார் சரோஜா தேவி. இந்த உடைத் தேர்வின் பின்னணியில் சரோஜா தேவியின் தாயாரும் இருந்தார் என்பதையும் குறிப்பிடத்தான் வேண்டும். மகளுக்கு உற்ற துணையாக பாதுகாப்பாக மட்டுமல்லாமல், அனைத்தையும் தீர்மானிக்கும் சக்தியாகவும் அவர் இருந்தார். அதனால் சில பட வாய்ப்புகளையும் சரோஜாதேவி இழக்க வேண்டியிருந்தது.

வீடு தேடி வந்த பிரமாண்ட படங்களின் தயாரிப்பாளர் மிகப் பிரமாண்டமான வெற்றிப் படங்களை எடுப்பதில் வல்லவரான ஜெமினி அதிபர் எஸ்.எஸ்.வாசன், நேரில் வீடு தேடி வந்து தன் படத்தில் நடிக்க வேண்டுமென கேட்டுக் கொள்ளும் அளவு சரோஜா தேவி உச்சத்தை நோக்கி நகர்ந்திருந்தார். அதுவரை அவர் நடித்த படங்கள் வெள்ளி விழாப் படங்களாகவே இருந்தன. அதிர்ஷ்டக்கார நட்சத்திரமாகவும் திரைவானில் அப்போது ஒளிர்ந்து கொண்டிருந்தார் சரோஜாதேவி. அப்படிப்பட்ட நட்சத்திரமான அவரைத் தன்னுடைய ‘இரும்புத்திரை’ படத்தில் இரண்டாவது நாயகியாக நடிக்க வேண்டுமென கேட்டுக் கொண்டார் வாசன். ஏற்கனவே அப்படத்துக்கு முதன்மை நாயகியாக வைஜெயந்தி மாலா ஒப்பந்தம் செய்யப்பட்டு விட்டார். நாயகன் சிவாஜி கணேசன். இந்தப் படத்தின் மற்றொரு சிறப்பு என்னவென்றால், 1930களின் நாயகியும் வைஜெயந்தி மாலாவின் தாயாருமான வசுந்தரா தேவி நீண்ட இடைவெளிக்குப் பின் இப்படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்படிருந்தார்.

வைஜெயந்தி மாலாவுக்கு தாயாக அவர் நடித்திருந்தார். சொத்து பிரச்சனையால் நீதிமன்றம், வழக்கு என பிரிந்திருந்த தாயையும் மகளையும் இந்தப் படத்தில் நடிப்பதன் மூலம் சேர்த்து வைத்த புண்ணியவான் எஸ்.எஸ்.வாசன் என்றால் அது மிகையில்லை. சரோஜா தேவியும் வைஜெயந்தி மாலாவும் சாயலில் ஒத்திருந்ததால் இருவரையும் சகோதரிகளாக நடிக்க வைக்க வேண்டும் என்பதாலேயே இப்படத்தில் சரோஜா தேவியை நடிக்க வைக்க விரும்பினார் எஸ்.எஸ்.வாசன். உண்மையில் வளர்ந்து வரும் வெற்றிகரமான நடிகையான தன் மகளை இரண்டாவது நாயகியாக, கதாநாயகியின் தங்கை வேடத்தில் நடிக்கச் செய்வதில் சரோஜா தேவியின் தாயார் ருத்ரம்மாவுக்குக் கொஞ்சமும் விருப்பமில்லை. இதனால் தன் மகளின் எதிர்காலம் பாதிக்கப்படுவதுடன், நல்வாய்ப்புகள் தடைபடக்கூடும் என்று எண்ணித் தயங்கியவர், திரையுலக ஜாம்பவான், நேரில் வந்து கேட்கிறார் என பலவற்றையும் அனுசரித்தும் வாசனின் வற்புறுத்தலுக்கு இணங்கியும் இப்படத்தை மகளை ஏற்கச் செய்தார்.

வாசனும் அதை நன்கு உணர்ந்து, சரோஜாதேவிக்கு எந்தச் சிக்கலும் ஏற்படாதவாறு படத்தின் டைட்டில் கார்டில் வைஜெயந்திமாலா – சரோஜாதேவி என இரு நாயகியரின் பெயரையும் ஒரே அலை வரிசையில் வருமாறு பார்த்துக் கொண்டார். அவர்களின் பெயருக்குப் பின்னரே நாயகன் சிவாஜி கணேசன் பெயர் இடம் பெற்றது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள் வாசனின் செல்வாக்கை. 1960ம் ஆண்டின் பொங்கல் வெளியீடான ‘இரும்புத்திரை’ முதலாளி – தொழிலாளி இருவரின் நல்லுறவைப் பேணும் அவசியத்தையும் பேசியது.

எந்தக் காலத்தில் இந்த இரு வர்க்கங்களும் ஒன்றாவது? பஞ்சாலையைக் கதைக்களனாகக் கொண்ட படம் என்பதால் பஞ்சாலைத் தொழிலாளர்களால் நிரம்பிய கோவையின் கர்நாடிக் தியேட்டரில் இப்படம் 25 வாரங்களைக் கடந்து ஓடியதுடன் வசூலையும் வாரிக் குவித்தது. இந்த வெற்றியை ருசித்த ஜெமினி பட நிறுவன அதிபர் எஸ்.எஸ்.வாசன் சும்மா இருப்பாரா? இதே கதையை இந்தியில் ‘பைகாம்’ என்ற பெயரில் அடுத்த 16 மாதங்களில் எடுத்து வெளியிட்டார். வைஜெயந்தி மாலா – சரோஜா தேவி இதே நாயகியர், நாயகன் திலீப் குமார். தமிழின் வெற்றியையும் கடந்து ஆண்டுக் கணக்கில் ஓடியது ‘பைகாம்’. நாயகி சரோஜா தேவிக்கு இது எண்ணிக்கையில் ஐந்தாவது வெள்ளி விழாப் படமானது.

அக்கா – தங்கை என்ற உறவு முறை தங்களுக்குள் இருக்கிறது என்பதை அறியாமலே கல்லூரித் தோழிகளாக இருவரும் நடித்திருந்தார்கள். படத்தின் அனைத்துப் பாடல்களும் இசையாலும் கருத்தாலும் மறக்க முடியாதவையாக மாறின. ’நெஞ்சில் குடியிருக்கும் அன்பருக்கு நானிருக்கும்’ காதலைப் பேசியதென்றால், ‘நன்றி கெட்ட மனிதருக்கு அஞ்சி நிற்க மாட்டோம்’ தொழிலாளர்களின் குரலாக ஓங்கி ஒலித்தது. தொழிலாளர் தினமான மே தினம் தோறும் தவறாமல் ஒலித்தது மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரத்தின் இப்பாடல். இவை தவிர, கல்லூரித் தோழிகளாக காரில் வலம் வந்தவாறே, சரோஜா தேவியும் வைஜெயந்தி மாலாவும் பாடுவதாக இடம் பெற்ற ‘படிப்புக்கும் ஒரு கும்பிடு, பட்டத்துக்கொரு கும்பிடு’ பாடல் அந்தக் காலக் கல்லூரி மாணவியரின் தேசிய கீதமானது. ஆனால், இரும்புத்திரை, பைகாம் படங்களுக்குப் பின் சரோஜா தேவி ஜெமினி நிறுவனத்தின் வேறு எந்தப் படத்திலும் நடிக்கவில்லை என்பதும் புரியாத புதிர்தான்.

ஓய்வு என்பதையே நினைக்க முடியாத அளவு மிகவும் பிஸியான நடிகையாகவும் சரோஜாதேவி மாறிப் போனார். ‘அக்கம்பக்கம் பார்க்காதே ஆளைக் கண்டு மிரளாதே…’ ‘கல்யாணப் பரிசு’ வெற்றிக் கூட்டணியான ஜெமினியுடன் அதன் பின் பல படங்களில் தொடர்ந்து நாயகியாக நடித்தார். முக்கியமாகக் குறிப்பிடப்பட வேண்டியவை ‘கைராசி’, ‘ஆடிப் பெருக்கு’ போன்ற படங்கள். சாவித்திரியுடன் இணைந்து நடித்த படங்கள் ஜெமினி கணேசனுக்கு எந்த அளவுக்கு பெயரையும் புகழையும் சம்பாதித்துக் கொடுத்ததோ அதே அளவு சரோஜா தேவியுடன் இணைந்து நடித்த படங்களும் வெற்றிப் படங்களாகவும், பெயர் சொல்லும் படங்களாகவும் அமைந்தன. ‘கல்யாணப் பரிசு’ படத்தில் சைக்கிள் ஓட்டும் காட்சிகள் இடம் பெற்றன. அதற்காக சைக்கிள் ஓட்டக் கற்றுக் கொண்டார் சரோஜா தேவி. ‘வாடிக்கை மறந்தது ஏனோ..’ பாடல் காட்சியிலும் நாயகன் ஜெமினியுடன் இணைந்து சைக்கிள் ஓட்டிச் செல்வார்.

அதன் பின் பல ஆண்டுகள் கழித்து 1963ல் எம்.ஜி.ஆர் – சரோஜாதேவி இணை நடிப்பில் வெளியான ‘நீதிக்குப் பின் பாசம்’ படத்திலும் சைக்கிள் ஓட்டும் காட்சிகள் இடம் பெற்றன. இதில் சிறப்பு என்னவென்றால், நன்றாக சைக்கிள் ஓட்டத் தெரிந்த சரோஜா தேவிக்கு, எம்.ஜி.ஆர் சைக்கிள் ஓட்டக் கற்றுக் கொடுப்பதாகக் காட்சிகள் இடம் பெறும். அசல் கிராமத்துப் பெண்ணாகக் கண்டாங்கிச் சேலை கட்டிக் கொண்டு, தூக்கிக் கட்டிய கொண்டையும், நத்து, புல்லாக்கு என நகை நட்டுகளுடன் வலம் வரும் கதாநாயகிக்கு சைக்கிள் ஓட்டக் கற்றுக் கொடுப்பார் நாயகன் கோபால். அந்தப் பாடல் காட்சியும் பாடலும் பின்னர் மிகப் பிரபலமாயின. அப்போது முதல் சைக்கிள் ஓட்டக் கற்றுக் கொடுக்கும் நபர்கள், ‘அக்கம் பக்கம் பார்க்காதே.. ஆளைக் கண்டு மிரளாதே..’ என்று இந்தப் பாடலைப் பாடுவதும் வழக்கமானது. சைக்கிள் ஓட்டிகளின் கானம் என்றாலும் தவறில்லை. எம்.ஜி.ஆர், சரோஜா தேவி நடிப்பில் சின்னப்ப தேவர் தயாரித்த அப்படமும் 100 நாட்கள் ஓடிய வெற்றிப் படம்தான்.

நடிப்பில் சோடை போகாத நாயகிகள் மீனா, சாந்தி, சாந்தா, லதா சிவாஜி கணேசனுடன் இணை சேர்ந்து நடித்த ‘ஆலயமணி’, ‘பாலும் பழமும்’, ‘இருவர் உள்ளம்’ போன்ற படங்கள் வெற்றிப் படங்கள் மட்டுமல்லாமல் சரோஜா தேவியின் நடிப்புத்திறமைக்கு சான்றான படங்களும் கூட. ‘ஆலயமணி’ மீனா முற்றிலும் வித்தியாசமானவள். காதலில் விழுந்தபோதும் அந்தக் காதல் தன்னை முழுமையாக ஈர்க்கவில்லை என்பதை உணர்ந்து, வேறொருவரை விரும்பும் மனநிலையை இயல்பாக ஏற்றுக் கொள்பவள். 60களில் இப்படியான கதாபாத்திரங்கள் எளிதாகப் புறக்கணிக்கப்பட்டு விடும் ஆபத்துகள் உண்டு. ஆனால், கதையின் போக்கும், நாயகியின் அற்புதமான நடிப்பும் இதையெல்லாம் அக்கால ரசிகர்களை மனம் கோணாமல் ஏற்க வைத்தது என்பதுதான் உண்மை. அத்துடன் தமிழ்ப்படம் ஒன்றில் கதாநாயகன் வக்கிர மனமும் ஆபத்தான குணமும் கொண்டவனாகப் படைக்கப்பட்டதும் இதுதான் முதல்முறை.

‘பாலும் பழமும்’ படத்தின் நர்ஸ் சாந்தி பொறுமையும் தியாக மனமும் படைத்தவள். தன் நோயால் கணவன் துன்பப்படக் கூடாது எனப் பிரிந்து செல்பவள். பின் குணமானதும் மீண்டு வந்து பல்வேறு துன்பங்களை சத்திய சோதனையாக எதிர்கொண்டு மீண்டும் தன் கணவனைச் சேர்பவள். அதற்கிடையில் அவள் அனுபவிக்கும் துன்பங்களுக்கு அளவேது? உயிர்க்கொல்லி நோயாக அதுவரை சொல்லப்பட்டு வந்த, காட்சிப்படுத்தப்பட்டு வந்த காச நோய்க்கு (T.B) மருந்து கண்டுபிடிக்கப்பட்டதாகவும், அந்நோயை முற்றிலும் குணப்படுத்த முடியும் என்பதையும் கூட இப்படம் பேசியது. ‘இருவர் உள்ளம்’ சாந்தாவோ இவர்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டவள். தான் விரும்பாத ஒருவனை மணாளனாக ஏற்க வேண்டிய நிலைக்கு ஆளாகிறாள். வெறுப்பின் அலைகள் சூழ வாழ்க்கையை நகர்த்த வேண்டிய நிர்பந்தத்தில், போக்கிடம் இல்லாமல், பெற்ற தகப்பனும் தன்னைப் புறக்கணிக்க ஏது செய்வது என்பதை அறியாத நிலையில் விரும்பாத கணவனுடன் அவன் வீட்டில் வாழ வேண்டிய நிலையில் ஒரு பெண்ணின் மனம் என்ன பாடுபடும் என்பதை அவ்வளவு அழகான நடிப்பின் வழி சரோஜாதேவி காட்சிப்படுத்தியிருப்பார்.

மிகச் சவாலான ஒரு வேடம். வெறுப்பு மனநிலையை விருப்பத்தை நோக்கி மெல்ல மெல்ல நகர்த்திக் கொண்டு செல்லும் மனநிலையும் சூழலும் வாய்க்க, பின் இனிதே நிறைவு பெறும் காதலும் மணவாழ்வும் என எதிர்பாராத திருப்பங்கள். நாயகன் சிவாஜி கணேசன் அடக்கி வாசிக்க, முழுக்க முழுக்க நாயகியின் நடிப்புக்கு மட்டுமே இடமளித்த படங்களில் ஒன்றாக இதனைச் சொல்லலாம். பெண்ணின் விருப்பத்துக்கு இங்கு எந்த மதிப்பும் இல்லை என்பதை ஆணித்தரமாகப் பேசிய படம். எழுத்தாளர் லஷ்மியின் எழுத்தில் வெளியான ‘பெண் மனம்’ நாவலின் திரை வடிவமே இப்படம். வசனம் எழுதியவர் கலைஞர் கருணாநிதி. இதே படத்தின் தொடர்ச்சியாக மீண்டும் சிவாஜி – சரோஜா தேவி – விஜய் நடிக்க, எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் ‘ஒன்ஸ்மோர்’ என வெளியானது. நீண்ட இடைவெளிக்குப் பின் சிவாஜியுடன் இணைந்து நடித்தார் சரோஜாதேவி.

‘புதிய பறவை’ சிவாஜி கணேசனின் சொந்தப் படம், வண்ணப்படம். அதிலும் நாயகி லதாவாக மின்னினார். கதைக்களம் கப்பல் தளம், இந்தியா, மலேயா என நிகழும். மிக வித்தியாசமான துப்பறியும் நிபுணராக தன் குழுவினருடன் நாயகனை நம்ப வைத்து அவருடைய மர்மம் நிறைந்த கடந்த கால நிகழ்வுகளைப் பெற்று, அவரையே கைது செய்வார். ஆனால், இவை அனைத்தையும் காதலியாக நடித்தே நிறைவேற்றினாலும் உள்ளூர அவரைக் காதலிக்கும் நிலைக்கும் தள்ளப்படுவார். எதிர்பாராத முடிவுகளைக் கொண்ட படம் இது. இன்று வரை இளைய தலைமுறை ரசிகர்களாலும் நினைவுக்கூறப்படுவது அவரின் அந்த ‘கோப்ப்பால்’ என்ற உச்சரிப்பு தான். எத்தனையோ பேர் அந்தப் பெயரை உச்சரித்திருந்தாலும் சரோஜா தேவியின் கொஞ்சு தமிழ் உச்சரிப்பில் ‘கோப்ப்பால்’ சாகா வரம் பெற்று உலவுகிறான்.

இந்த அனைத்துப் படங்களிலுமே நாயகன் சிவாஜிக்கு ஈடாக நடித்து அசத்தியவர் நாயகி சரோஜாதேவி. ‘ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன்’ ‘நான் பேச நினைப்பதெல்லாம்’, ‘காதல் சிறகை காற்றினில் விரித்து’, ‘என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய்’, ‘மானாட்டம் தங்க மயிலாட்டம்’, ‘கண்ணான கண்ணனுக்கு அவசரமா’, ‘கல்லெல்லாம் மாணிக்கக் கல்லாகுமா’, ‘நதி எங்கே போகிறது?’, ‘அழகு சிரிக்கின்றது’, ‘இதயவீணை தூங்கும்போது பாட முடியுமா?’, ‘உன்னை ஒன்று கேட்பேன்’, ‘சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து’, ‘பார்த்த ஞாபகம் இல்லையோ’ என இப்படங்களின் பாடல்களும் காலம் கடந்தும் பாடப்படுபவையாக நினைக்கப்படுபவையாக இருக்கின்றன.

எம்.ஜி.ஆர் படங்களின் எவர்க்ரீன் நாயகியாக…எம்.ஜி.ஆர். படங்களின் எவர்க்ரீன் நாயகியாக இப்போதுவரை கொண்டாடப்படுபவர் சரோஜா தேவிதான். எத்தனை எத்தனை படங்களில் இந்த ஜோடி ரசிகர்களைக் கொண்டாட்டத்தில் திளைக்க வைத்தது. பணத்தோட்டம், பணக்காரக் குடும்பம், பெரிய இடத்துப் பெண், படகோட்டி, தெய்வத்தாய், எங்க வீட்டுப் பிள்ளை, பெற்றால்தான் பிள்ளையா என பட்டியலிட அவை நீண்டு கொண்டே போகும். சிவாஜியின் படங்களில் அதிகம் நடிப்பதற்கான வாய்ப்புகள் இருந்ததென்றால், எம்.ஜி.ஆர் படங்களில் கனவுக்கன்னியாக துள்ளலும் துடிப்புமாக குறும்புத்தனம் கொப்பளிக்கும் வேடங்கள் ஏராளமாக அவருக்கு அமைந்தன.

‘படகோட்டி’ முதன்முறையாகத் திரையில் பரதவர் வாழ்க்கையைப் பேசியது. கதாநாயகி முத்தழகியாக எதிர்த்தரப்பைச் சேர்ந்த இளைஞன் மாணிக்கத்தின் காதலியாக வண்ணப்படத்தில் வண்ணமயமாகத் தோன்றினார் சரோஜாதேவி. ‘பெரிய இடத்துப் பெண்’ படத்திலோ பணத்திமிரும் படித்தவள் என்ற கர்வமும் நாடி நரம்பெல்லாம் நிறைந்திருக்க எளியவர்களை எள்ளி நகையாடும் குணம் கொண்ட நாயகி புனிதாவாக ரசிகர்களின் வெறுப்பையும் கோபத்தையும் ஒருசேர சம்பாதித்தார் சரோஜாதேவி. படித்த மனைவி, படிக்காத கணவன் கதையம்சம் கொண்ட இப்படம் அதன் பின் பல்வேறு பெயர்களில் மறு அவதாரம் எடுத்து விட்டது என்றாலும், ‘சகலகலா வல்லவன்’ எல்லாவற்றிலும் உச்சம். எம்.ஜி.ஆர். படங்களின் பாடல்கள் வெற்றிக்குக் கேட்க வேண்டுமா? அத்தனை படங்களின் பாடல்களும் காதல், தத்துவம், நாயக, நாயகிக்கான தனித்துவம் மிக்க பாடல்கள் என்று இன்றுவரை கொண்டாடப்பட்டு வருகின்றன.

முடிவில்லாத நாயகனும் நாயகியின் முடிந்து போன வாழ்க்கையும் 1961 மார்ச் ‘பேசும் படம்’ சினிமா இதழில் வாசகர்கள் முக்கியமான ஒரு கேள்வியை எழுப்பியிருந்தனர். ‘பத்மினியின் இடத்தைப் பிடிக்கப் போவது யார் சாவித்திரியா? சரோஜா தேவியா?’ என்பதுதான் அந்தக் கேள்வி. 1950களில் நடிக்க வந்தவர்களான பத்மினி, சாவித்திரியின் இடத்தை சரோஜா தேவி எட்டிப் பிடித்து விட்டார் என்பதையே இம்மாதிரியான கேள்விகள் வெளிச்சம் போட்டுக் காண்பிக்கின்றன. ஆனால், இதே பத்திரிகையில் 1967ஆம் ஆண்டு ஒரு வாசகரின் கேள்வி வேறுவிதமாக இருந்ததும் உண்மை. ‘திறமை இருந்தும் சாவித்திரி, பத்மினி இருவராலும் சரோஜா தேவியின் ஸ்தானத்தை அடைய முடியவில்லையே…!’ என்பதுதான் அந்தக் கேள்வி. கால மாறுபாடு என்பது இதுதான் போலும்.

இந்த நிலையும் 1965ல் ‘ஆயிரத்தில் ஒருவன்’ ஜெயலலிதாவின் வருகைக்குப் பின் மாறியது.எம்.ஜி.ஆர் படங்களில் சரோஜா தேவியின் முக்கியத்துவம் குறைய ஆரம்பித்தது. ஜெயலலிதா முதன்மை நாயகியானார். ‘எங்க வீட்டுப் பிள்ளை’ படம்தான் சரோஜாதேவி – எம்.ஜி.ஆர் இணையின் கடைசி வெற்றிப் படம். அதற்குப் பின் 6 மாதங்கள் வரை எம்.ஜி.ஆர். – சரோஜாதேவி படங்கள் புதிதாக ஒப்பந்தம் செய்யப்படவில்லை. அதற்கு முன்னதாக ஒப்புக்கொண்ட நாடோடி, தாலி பாக்கியம், பறக்கும் பாவை, அரச கட்டளை படங்களில் மட்டுமே சரோஜாதேவி நடித்து வந்தார். ஏ.வி.எம். நிறுவனம் தங்களின் 50வது படமான ‘அன்பே வா’ படத்தை வண்ணத்தில் தயாரிக்க முடிவெடுத்தபோது, வழக்கம்போல் கலர் படங்களின் கதாநாயகியாகக் கொண்டாடப்பட்ட சரோஜா தேவியையே முன்னிறுத்தியது.

இந்த நிறுவனத்துக்காக முதலும் கடைசியுமாக எம்.ஜி.ஆர். நடித்த ஒரே படம் ’அன்பே வா’ மட்டும்தான். கதை என்று பெரிதாக இல்லை என்றாலும் இளைஞர்களுக்கான கொண்டாட்டம் மிகுந்த படமாக ஆடலும் பாடலுமாக அமர்க்களமாக அமைந்தது. காதலை முதன்மைப்படுத்திய படமாக கதாநாயகனின் படமாக இல்லாமல் இயக்குநரின் படமாக ஏ.சி.திருலோகசந்தர் பெயரைச் சொல்லும் படமாகவும் இது அமைந்தது. படத்தின் 100வது நாள் விழாவில் எம்.ஜி.ஆரே இதைக் குறிப்பிட்டுப் பேசியிருக்கிறார். மகிழ்ச்சியாகத் துவங்கிய திருமண பந்தம் ‘பெற்றால்தான் பிள்ளையா?’ எம்.ஜி.ஆர், சரோஜாதேவி இணையில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய ஒரு படம். வித்தியாசமான ஒரு கிளி ஜோசியக்காரப் பெண் மோகினியாக வேடமேற்றிருந்தார் சரோஜாதேவி. இந்தப் படத்தில் நடித்துக் கொண்டிருக்கும்போதே, சரோஜா தேவிக்குத் திருமண ஏற்பாடுகளைச் செய்ய ஆரம்பித்து விட்டார் அவரது தாயார்.

‘அரச கட்டளை’ படம் எம்.ஜி.ஆருடன் இணைந்து நடித்த இறுதிப் படமாக அமைந்தது. ஜெர்மனியில் என்ஜினியரிங் படித்து பெங்களூர் பெல் நிறுவனத்தில் பொறியாளராகப் பணியாற்றிக் கொண்டிருந்த 28 வயது பி.கே.ஸ்ரீஹர்ஷாவுக்கும் சரோஜா தேவிக்கும் 1967 மார்ச் முதல் நாளன்று திருமணம் பெங்களூரில் சிறப்பாக நடந்தேறியது. மணமக்கள் இருவரும் சம வயதினர் என்பது குறிப்பிடத்தக்கது. திருமணத்துக்குப் பின் நடிக்கப் போவதில்லை என்ற முடிவுடன் திருமண பந்தத்தில் நுழைந்தாலும், கணவர் ஹர்ஷா அதை ஆமோதிக்கவில்லை. பெண்கள் நடிப்பதில் தவறில்லை, மீண்டும் நடிக்கலாம் என்று பச்சைக்கொடி காட்டினார். தாயார் ருத்ரம்மாவுக்கு அதில் கொஞ்சமும் விருப்பமில்லை. என்றாலும் மகள் மற்றும் மருமகன் இருவரின் விருப்பத்துக்கும் செவி சாய்த்தார். திருமணத்துக்குப் பின்னும் ஏராளமான பெண் மையப் படங்களில் நடித்து சாதனை படைத்தார் சரோஜாதேவி. அடுத்த இதழிலும் சரோஜாதேவியின் சாதனைகள் தொடரும்…

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வினாக்களுடன் கடந்து சென்ற மகளிர் தினம் !! (கட்டுரை)
Next post காதல் இல்லா உலகம்? (அவ்வப்போது கிளாமர்)