கொரோனாவின் வீரியம் குறைகிறது!! ( மருத்துவம்)
டிசம்பர் இறுதியில் இருந்து உலகை உலுக்கி வந்த கொரோனா புயல் சற்று ஓயத்தொடங்கியுள்ளது. சீனாவிலேயே கொரோனா வைரசினால் புதிதாக பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளதால், இனி கொரோனா அச்சம் முற்றிலும் விலகலாம் என்ற ஆறுதலும் கிடைத்திருக்கிறது.
சீனாவின் ஹூபெய் மாகாணத்தில் உள்ள வுகானில் கடந்தாண்டு டிசம்பரில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ், அந்நாட்டை ஆட்டி படைத்து வருகிறது. கோவிட்-19 என பெயரிடப்பட்ட இந்த வைரஸினால் நாள்தோறும் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், இறப்போரின் எண்ணிக்கையும் பல மடங்காக அதிகரித்துக் கொண்டே வந்தது.
நோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆயிரக்கணக்கான மருத்துவர்கள், செவிலியர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர். தற்போது, கொரோனாவின் வீரியம் குறையத் தொடங்கி உள்ளதாக கூறப்படுகிறது. காரணம், இந்த வைரஸால் புதிதாக பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது. இது பற்றி சீனாவின் தேசிய சுகாதார ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், புதிதாக நோய் பாதித்தவர்களின் எண்ணிக்கை 394 ஆக குறைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. கடந்த டிசம்பரில் பரவத் தொடங்கிய இந்த வைரஸ் நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தற்போதுதான் குறைய தொடங்கியுள்ளது. மேலும் இந்த அறிக்கையில், ‘ஹூபெய் மாகாணத்துக்கு வெளியே நோய் பாதித்தவர்கள் எண்ணிக்கை பிப்ரவரி 3-ம் தேதியன்று 890 ஆக இருந்த நிலையில், இப்போது புதிதாக நோய் பாதித்தோரின் எண்ணிக்கை 45 ஆக குறைந்துள்ளது.
மருத்துவமனையில் இருந்து 1779 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதுவரை மொத்தம் கொரோனா பாதித்த 16,155 பேர் சிகிச்சை முடிந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இனி வரும் நாட்களில், கொரோனா முழுமையாக விலகினாலும், மீண்டும் திரும்ப வராத வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்துகொள்ள வேண்டிய பொறுப்பும் இருக்கிறது. இதையும் மறந்துவிடக் கூடாது என்பதே கொரோனா நமக்குக் கற்றுத் தந்திருக்கும் பாடம்!
Average Rating