பொம்மை பொம்மை பொம்மை பார்…. பொம்மை செய்யுங்க மாதம் ரூ.20,000 சம்பாதியுங்க!! (மகளிர் பக்கம்)

Read Time:9 Minute, 53 Second

குழந்தைகளின் விளையாட்டு பொருட்களில் முக்கிய இடம் வகிப்பது பொம்மைகளே… அந்த பொம்மைகள் ஆயிரம் கதைகள் சொல்லும். குழந்தைகள் தொடங்கி பெரியவர்கள் வரை பொம்மைகளை விரும்பாதவர்களே கிடையாது. ஒவ்வொருவருக்கும் ஒரு பொம்மை பிடிக்கும். ஆண் குழந்தைகளுக்கு கார் பொம்மை என்றால் பெண் குழந்தைகளுக்கு பார்பி பொம்மைகள். புதிதாக கல்யாணமாகி கருவுற்று இருக்கும் பெண்ணுக்கு குழந்தை போல் இருக்கும் பொம்மைகள் பிடிக்கும். இப்படி பொம்மைகளின் ரசனைகள் ஒவ்வொருவருக்கும் மாறிக் கொண்டே இருக்கும். அதனால் தான் தங்களது கைப்பை, வீட்டு அலங்காரம், நவராத்திரி விழா, திருமண விழா என எல்லா விழாக்களிலும் பொம்மைகள் முக்கிய இடம் வகிக்கின்றன. இதை நன்றாக புரிந்துள்ளார் நிஷா.

சென்னை மடிப்பாக்கத்தில் வசித்து வரும் இவர் ‘ஸ்ரீகோல்காபுரி’ என்ற பெயரில் கடந்த இரண்டு ஆண்டுகளாக பொம்மை தயாரிப்பு தொழிலில் ஈடுபட்டு வருகிறார்.‘‘களிமண், பிளாஸ்டிக், பஞ்சு… எந்த முறையில் பொம்மைகள் இருந்தாலும், அது நம்முடைய கண்களை வியக்க வைக்கும். அழகழகான பொம்மைகளை எங்கு பார்த்தாலும், நாம் இரு கைக் கொண்டு அள்ளிடத் தோன்றும். பெரிய பெரிய கைவினைக் கலைப்பொருள் கடைகள், குழந்தைகளுக்கான விளையாட்டு கடைகள்… ஏன் சிறிய ஃபேன்சி கடைகளில் கூட பொம்மைகள் இல்லாமல் இருக்காது. சில சமயம் அதிக வேலைப்பாடு கொண்ட கைவினை பொம்மைகள் நம் கண்களை கவர்ந்தாலும், அதன் வேலைப்பாடுகளைப் பார்த்ததும், விலையும் அதிகமாகவே இருக்குமோ என நினைத்து வாங்காமல் வந்திடுவோம்.

ஆனால் அதே பொம்மை களை நீங்களே சுலபமாக உங்கள் கைப்பட செய்து, உங்கள் வீட்டையும் அழகுபடுத்தலாம், விற்பனை செய்து, கை நிறைய வருமானமும் ஈட்டலாம். ஒரு சிறு தொழில் முனைவோராக மட்டுமல்லாது, ஒரு சிலருக்கு வேலைவாய்ப்பும் வழங்கலாம். நான் என்னோட சொந்த முயற்சியில் தான் இந்த தொழிலைக் கற்றுக்கொண்டு செய்ய ஆரம்பித்தேன். மரப்பாச்சி, துணி பொம்மைகள் என இதில் பல வகைகள் உள்ளன. தலை மட்டும் ரெடிமேடா கிடைக்கும். மற்றபடி கை, கால் நம்முடைய விருப்பத்திற்கு ஏற்ப உருவத்தை அமைப்பது தான் இதன் தனிச் சிறப்பு’’ என்றவர், கற்றுக் கொள்ள ஆர்வமுள்ளவர்களுக்கு பயிற்சியும் அளித்து அவர்களுக்கான வாழ்வாதாரத்திற்கு வழி காட்டுகிறார்.

‘‘கையால் தயாரிக்கும் பொம்மைகளுக்கு எப்போதும் எங்கேயும் வரவேற்பு இருக்கும். அடிப்படை நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டால், அதன் பிறகு நம்முடைய கிரியேட்டிவிட்டி தான். அதை கொண்டு புதிது புதிதாக, லேட்டஸ்ட் மாடல் பொம்மைகளை உருவாக்கி அசத்தலாம். ஆண்டு முழுவதும் நம்மை பிசியாக வைத்துக்கொள்ள, இந்தத் தொழில் ஒரு சரியான தேர்வாக இருக்கும். இன்றைக்கு பெரும்பாலான திருமணம், மஞ்சள் நீராட்டு விழா போன்ற விழாக்களில் பொம்மை அலங்காரங்கள் முக்கிய இடம் பெறுகின்றன’’ என்றவர் இதனை தயாரிக்க தேவையான பொருட்கள் மற்றும் அதன் விவரங்களை பகிரந்து கொண்டார்.

பொம்மை தயாரிக்க தேவையான மூலப்பொருட்கள்…

காட்டன் துணி (நீளமானது, மீடியம் அளவிலானது மற்றும் குட்டையானது), வெல்வெட் துணி, 10ம் நம்பர் நூல், அதற்கேற்ற ஊசி, நைலான் பஞ்சு, கண்கள், மூக்குகள், பேக்கிங் கவர் (சாதா ரகம் மற்றும் ஸிப் வைத்தது). இது பொம்மை தயாரிப்புக்கான பொருட்கள் விற்கும் கடைகளில் கிடைக்கும். ஒரு மீட்டர் காட்டன் துணி (நீளமானது) 35 ரூபாய். ஒரு மீட்டர் வெல்வெட் துணி 100 ரூபாய். நைலான் பஞ்சு 1 கிலோ 100 ரூபாய். ஊசி 10 ரூபாய், நூல் 10 ரூபாய். ஒரு ஜோடி கண்களின் விலை 20 ரூபாய். மூக்கின் விலை 20 ரூபாய். பொம்மைக்கான தலை சாமி உருவம், பெண், குறத்தி… என பல மாடல்கள் உள்ளன. நாம் விரும்பும் தலையை தேர்வு செய்து கொள்ளலாம். பொம்மையின் உடல் பகுதி மற்றும் அலங்கரிக்க கம்பி, உல்லன் நூல், ஜரிகை நூல், டிஷ்யூ துணி, பஞ்சு, பசை, மரப்பலகை போன்றவற்றை தனித்தனியாக உருவத்திற்கு ஏற்ப வாங்கிக் கொள்ளலாம்.

கடைகளில் இவை எல்லாம் தனித்தனியாக தான் கிடைக்கும். இதை நாம் பொம்மையின் தலையுடன் இணைத்து நாம் தான் அதற்கான ஒரு அழகான உருவம் மற்றும் உடையும் செய்து பொம்மையை அலங்கரிக்க வேண்டும். உடம்புப் பகுதிக்கு பஞ்சு சுத்தியும், உடைக்கு உல்லன் நூல் வச்சும், முண்டாசுக்கு ஜரிகை நூல் வச்சும் பொம்மையை தயார் செய்யலாம். கல்யாண செட், வளைகாப்பு செட், கிருஷ்ணரும் கோபியரும்னு செட் என பல டிசைன்களில் நம்முடைய விருப்பம் போல் பொம்மைகளை செய்யலாம். பொம்மைகளை தயார் செய்த பிறகு கடைசியில் அதனை மரப்பலகையில் அடிக்க வேண்டும். பெரிய பொம்மைகள் செய்கிற போது, வெட்டி எறியப்படுகிற சின்னத் துண்டுத் துணிகளில் காரில் தொங்க விடுகிற குட்டி பொம்மைகளும், பப்பட் டாய்ஸும் செய்யலாம். இந்தத் தொழிலைத் தொடங்க சுமாராக ரூ.10,000 தேவைப்படும். நமது உழைப்பு, ஈடுபாடு, மார்க்கெட்டிங்கைப் பொறுத்து வீட்டில் இருந்து தொழில் செய்தபடியே மாதம் ரூ.20 ஆயிரம் தொடங்கி ரூ.50 ஆயிரம் வரை வருமானம் ஈட்ட முடியும்.

உதாரணத்துக்கு ஒரு கிருஷ்ணர் பொம்மை செய்ய வேண்டுமானால், துணி, பஞ்சு, உல்லன் நூல், வெல்வெட் துணி, அலங்காரப் பொருட்கள் எல்லாம் சேர்த்து ரூ.500 செலவாகும். இதனை ரூ.1000க்கு விற்பனை செய்யலாம். கிட்டத்தட்ட 50 சதவிகித லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது. இதே போன்று ஒவ்வொரு பொம்மை களையும் நமது கற்பனைத் திறனுக்கு ஏற்பவும், உபயோகிக்கும் பொருட்களுக்கு ஏற்றவாறு விலை நிர்ணயித்து விற்பனை செய்யலாம். பிறந்த நாள், காதலர் தினம், திடீர் அன்பளிப்பு, புத்தாண்டுப் பரிசு என எந்த சந்தர்ப்பத்துக்கும் பொம்மைகளைக் கொடுக்கலாம் என்பதால் வருடம் முழுக்க விற்பனை வாய்ப்புகளுக்குப் பஞ்சம் இருக்காது. காதி கிராப்ட், குறளகம் மாதிரியான இடங்கள் மற்றும் கைவினைப் பொருள் கண்காட்சிகளிலும் இந்த பொம்மைகளுக்கு நல்ல வரவேற்புள்ளது. நவராத்திரி சீசனில் ஆர்டர் அதிகமாக வரும்.

தவிர புதிதாகத் திறக்கப்படும் ஃபேன்சி ஸ்டோர் மற்றும் திருமண விழாக்களில் கேட்டரிங் கான்டிராக்ட் உள்ளிட்ட வேலைகளை எடுப்பவர்களிடம் முன்கூட்டியே ஆர்டர் பிடிக்கலாம். முதல்முறை நாம் சப்ளை செய்கிற பொம்மைகளுக்கு கை மேல் பணம் தர மாட்டார்கள். மொத்தமும் விற்ற பிறகு, அடுத்த முறை சப்ளை செய்யும்போது, முதலில் விற்றதற்கான தொகையைப் பெற்றுக்கொள்ளலாம். அக்கம் பக்கத்தினர், நண்பர்கள் மூலமும் ஆர்டர் ஏற்பாடு செய்யலாம். எல்லா காலத்திலும் விற்பனைக்கான வாய்ப்பு பொம்மைகளுக்கு பிரகாசமாக இருக்கும்’’ என்றார் நிஷா.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மாதவிலக்கு!! (அவ்வப்போது கிளாமர்)
Next post ஆபத்தான ஜெயில்களை கொண்ட 10 நாடுகள்!! (வீடியோ)