‘ஒருமித்த குரலில் பேசட்டாம்; ஒன்னா மண்ணா போகட்டாம்’ !! (கட்டுரை)

Read Time:6 Minute, 37 Second

ஒருமித்த கருத்தோடு, ஒரே பயணத்தில் இணைய எல்லோரையும் அழைக்கிறார்கள்.
இப்போது கொஞ்சக் காலமாய் ஓரே குரலில் பேச வேண்டியதன் அவசியம் பற்றி அடிக்கடி பேசப்படுகிறது. போதாக்குறைக்கு தமிழர்களின் மகுடவாசகம், ‘ஒருமித்த கருத்தும் ஒருமித்த பயணமும்’ என்ற அலப்பறைகள் வேறு.

இதில் பிரதானமாய்க் கேட்க வேண்டிய வினா, எந்தத் தமிழர்களின் மகுடவாசகம் அது என்பதுதான்; கோவிலுக்குள் நுழைய இயலாமல் வெளியே நிற்கின்ற தமிழன், தோட்டக்காட்டான் என்று புறக்கணிக்கப்படும் தமிழன், மட்டக்களப்பான் என்று ஒதுக்கப்படும் தமிழன் ஆகியோர், நிச்சயமாக இவர்கள் குறிக்கின்ற தமிழர்களுக்குள் அடங்கமாட்டார்கள். தமிழ்த்தேசிய அரசியலின் செல்செறி அப்படித்தான் இருந்து வந்திருக்கிறது.

ஓரே குரலில் பேசுவதில் உள்ள ஆபத்துகளில் முதலாவது, அந்த ஒரே குரல், யாரின் குரல் என்பதுதான் பிரதானமான கேள்வி.

அது ஒடுக்கப்பட்ட மக்களின் குரல்; போரில் பாதிக்கப்பட்டவர்களின் குரலும் அல்ல, மாறாக, அது அதிகாரத்தின் குரல்; சீரழிந்துபோன தமிழ்த் தேசிய நாடாளுமன்றக் கதிரை அரசியலின் குரல்; இது எவ்வாறு எல்லோரினதும் குரல் ஆகும்.

இரண்டாவது, ஒருமித்த கருத்து என்ற எண்ணவோட்டமே ஒருவித ஏதேச்சதிகாரப் போக்குடையது. இது, அன்று விடுதலைப் புலிகள், தங்களைத் தமிழர்களின் ஏக பிரதிநிதிகள் என்று அழைத்ததன் தொடர்ச்சிதான்.

மூன்றாவது, எமக்குள் ஏராளமான வேறுபாடுகளையும் ஒடுக்குமுறைகளையும் வைத்துக்கொண்டு, ஒரே பயணத்தை எவ்வாறு மேற்கொள்வது? ஒடுக்குவோரும் ஒடுக்கப்படுவோரும் ஒரே பயணத்தில் இணைய முடியாது. இவ்வாறு கோருவதே, ஒடுக்கப்பட்டோரின் பிரச்சினைகளை அடையாளம் காண மறுப்பதன் விளைவாகும். .

இலங்கையின் சுதந்திரம் வரையிலான காலத்திலும், அதற்குச் சிறிது பின்னரும் கூட, தமிழர்களது பிரதிநிதிகளாக இருந்தோர், யாழ்ப்பாண வேளாளருள் ஓர் அற்பச் சிறுபான்மையினரது நலன்களைப் பற்றிய அக்கறை உடையவர்களே.

இலங்கைக்குச் சர்வசன வாக்குரிமையை வழங்குவதற்கு, பிரித்தானிய எசமானர்கள் ஆலோசித்த போது, அதை இவர்களில் கணிசமானோர் எதிர்த்தனர். பெண்களும் தாழ்த்தப்பட்ட சாதியினரும் வாக்குரிமை பெறுவதை, இவர்கள் எதிர்த்ததில் வியப்பில்லை. ஆயினும், இன்றும் இவர்களைத் தமிழர்கள் அனைவரதும் நலனுக்காகப் போராடிய தலைவர்களாகவும் ஜனநாயகவாதிகளாகவும் பலர் கொண்டாடுவதே வியப்புக்குரியது.

1949இல் மலையகத் தமிழர் பிரச்சினையைக் காரணம் காட்டி உருவான தமிழரசுக் கட்சி, 1957இல் ஏற்பட்ட பண்டா- செல்வா உடன்படிக்கையில், அப்பிரச்சினையைத் தற்காலிகமாக ஒதுக்குவதற்கு உடன்பட்டது. 1960களில் அக்கட்சி மலையகத்தில் தனக்கு ஆதரவான ஒரு தொழிற்சங்கத்தை உருவாக்க முற்பட்டுத் தோல்வி கண்டது.

இவ்வாறே, வடக்கு, கிழக்கின் முஸ்லிம் மக்களைத் தன் தலைமைக்குக் கீழ்க் கொண்டு வருவதிலும் அது தோல்வி கண்டது. இந்த வேளாள மேட்டுக்குடி ஆதிக்க சிந்தனை, மட்டக்களப்பு, வன்னிப் பகுதி மக்களைத் தாழ்வானவர்களாகவும் மேற்குக் கரையோரத்துத் தமிழ்க் கத்தோலிக்க மக்களைத் தம்மில் ஒரு பகுதியினர் அல்லாதவர்களாகவும் மலையக மக்களை அந்நியராகவும் கருதியது.

தமிழர் விடுதலை எனப் புறப்பட்டோர், தமிழர் விடுதலையை முதன்மைப்படுத்திப் போராட்ட வியூகங்களை வகுப்பதற்குப் பதிலாக, மக்களை அடிமைப்படுத்தவும் எதிரிகளுடன் இணைந்து, அவர்கள் தயவில் ஜனநாயக வழிப் போராட்டங்களை முன்னெடுக்கவும் துணிந்தனர். இவர்கள் ‘ஆண்ட பரம்பரை, மீண்டுமொரு முறை ஆள நினைப்பதில் என்ன குறை’ எனக் கவிபாடி, தேசியத்தின் பழைமைக் குப்பைகளைக் கிளறி, சோழ மன்னரின் பொற்காலக் கனவுகளில், சமகால சுயநிர்ணயத்தைப் புரிந்து கொள்ள முயன்று தோற்றவர்கள்.

எனவேதான், தமிழர் தேசத்தைக் காணும் பணியில், ஏகாதிபத்தியவாதிகள் தயவில், தமிழர் தேசம் காணும் கனவில், புலம்பெயர்ந்தோர் மூழ்கிச் சரிந்தனர். இன்று அந்நியர் தயவில் அரசியல் தீர்வைக்காணும் ஜாம்பவான்களையோ வீரதீரர்களையோ தேடும் அவலம், நமது தமிழ்ச் சூழலில் ஏற்பட்டுவிட்டது.

ஈழத் தமிழர் சார்பாகப் பேசும் உரிமை, எவருடையது என்ற கேள்வி மீண்டும் மீண்டும் எழுகிறது. ஈழத்தமிழர் அனைவரும் ஒரே குரலில் பேசவேண்டும் என்ற ஆதங்கம் பழையது. ஆனால், தமிழ் மக்களின் தேசிய இன விடுதலைப் போராட்டம் கவனிக்கத் தவறிய முக்கியமான அம்சம் ஜனநாயகம்.

போரின் பின்னரான பத்தாண்டுகளில் கூட, அது தமிழ்த் தேசிய அரசியலில் முளைவிடவில்லை. அந்த ஜனநாயகச் சூழலை தமிழ்த் தேசிய அரசியல் உருவாக்காமல், ஒருமித்த கருத்தில் பயணம் போக அழைப்பது, இன்னொருமுறை ஒன்றாய் மண்ணாய் போவதற்கே.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கூந்தல்!! (மகளிர் பக்கம்)
Next post மோகத்திற்கு எதிரி முதுகுவலி! (அவ்வப்போது கிளாமர்)