கொவிட்-19: கியூபா கைகொடுக்கும் பொழுதுகள் !! (கட்டுரை)

Read Time:16 Minute, 33 Second

இன்று உலகம் எதிர்நோக்கியுள்ள நெருக்கடி புதிரானது. கண்ணுக்குத் தெரியாத, பொது எதிரியோடு போரிடும் யுத்தம் போன்றது.

கொரோனா வைரஸால் ஏற்பட்டுள்ள சிக்கல்களும் சவால்களும் பல்பரிமாணம் உடையவை. எந்த உலக ஒழுங்கு, உலகைக் கடந்த அரைநூற்றாண்டுக்கு மேலாக ஆட்சிசெய்தோ அது, இன்று அவலப்பட்டு நிற்கின்றது. அது அமைத்த விதிகள், நெறிமுறைகள் குறித்தெல்லாம் அக்கறை கொள்ள யாருக்கும் நேரமில்லை.

இன்று ஏதாவதொரு வழியில், தீர்வுகளை நோக்கியே எல்லா அரசாங்கங்களும் ஓடுகின்றன. உயிரிழப்புகளைத் தவிர்ப்பதும் நோய்த்தொற்றைக் குறைப்பதுமே பிரதான நோக்காக உள்ளன.

பொருளாதாரத்தைக் காப்பாற்றுங்கள், நடைமுறையில் உள்ள விதிகளை, உலக ஒழுங்கைக் காப்பாற்றுங்கள் போன்ற கோரிக்கைகள் எல்லாம், செவிடன் காதில் ஊதிய சங்காகப் போயுள்ளன.

கொரோனா நோய்த்தொற்று ஏற்படுத்தியுள்ள நெருக்கடிகளுக்கான தீர்வுகளுக்கான வழி, பல வகைகளில் சோசலிசம் நோக்கிய திருப்பமாகவே இருக்கிறது. இதை ஏற்றுக்கொள்வதற்கு, முதலாளித்துவத்தின் செல்வச்செருக்கில் ஊறித் திளைத்தவர்கள், தயாராக இல்லை. அவர்கள், சோசலிச வன்மத்தை, ஊடகங்களிலும் சமூக ஊடகப் பொதுவெளிகளிலும் கக்குகிறார்கள். எனவே, இது குறித்துக் கொஞ்சம் சொல்லியாக வேண்டியுள்ளது.

பாஞ்சாலியின் அழைப்புக்குக் கிருஷ்ணன் வந்தது போல, 2009இல் அமெரிக்கா வரும் என்று, எழுதியும் சொல்லியும் அவலத்துக்குள் தள்ளியோர் நிறைந்த சமூகத்திலேயே, நாம் வாழ்கிறோம் என்பதைத் துயரத்துடனும் எரிச்சலுடனும் நினைவூட்ட வேண்டியுள்ளது. அவலமும் நிச்சயமின்மையும் அச்சமும் நிலைகொண்டுள்ள இந்தக் காலத்தில், எமக்குத் தேவையானது நம்பிக்கையூட்டும் கதைகள் மட்டுமேயாகும்.

இத்தாலிக்கு உதவ வந்த கியூபா

இந்த நோய்த்தொற்றால், அதிகமான உயிரிழப்புகளைச் சந்தித்துள்ள நாடு இத்தாலி ஆகும். இந்த நோய்த்தொற்று பரவத் தொடங்கியவுடனேயே, ஐரோப்பிய ஒன்றியத்திடமும் ஏனைய ஐரோப்பிய நாடுகளிடமும் உதவிகளை, இத்தாலி கேட்டது. ஆனால், யாருமே உதவ முன்வரவில்லை.

ஏனைய நாடுகள், ஓரளவு உதவிகளை இத்தாலிக்குச் செய்திருந்தால், இத்தாலியில் கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையைக் குறைத்திருக்க முடியும் என, மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

ஏராளமான மருத்துவர்களும் மருத்துவப் பணியாளர்களும், இந்த நோய்த்தொற்றுக்கு ஆளாகியுள்ள நிலையில், மருத்துவப் பணியாளர்களும் மருத்துவர்களும் இல்லாமல், இத்தாலி மிக மோசமான நிலையில் இருக்கிறது.

இந்நிலையிலேயே, மிகமோசமாகப் பாதிக்கப்பட்ட இத்தாலியின் லொம்பாடி நகருக்கு, 50க்கும் மேற்பட்ட கியூப மருத்துவர்களும் ஏனைய மருத்துவப் பணியாளர்களும், இந்தவாரம் வருகை தந்துள்ளனர். அவர்களை, விமானநிலையத்தில் எழுந்து நின்று, இத்தாலியர்கள் வரவேற்றனர்.

சீனாவுக்கு அடுத்தபடியாக, இத்தாலிக்குக் கைகொடுத்துள்ள நாடு கியூபா ஆகும். இத்தாலிக்கு அனுப்பப்பட்டுள்ள மருத்துவக் குழுவானது, கொரோனா வைரஸுக்கு எதிராகப் போராடுவதற்காக, கியூபாவிலிருந்து அனுப்பப்பட்ட, ஆறாவது மருத்துவக் குழுவாகும்.

ஏற்கெனவே வெனிசுவேலா, நிக்கரகுவா, ஜெமேக்கா, சுரினாம், கிரனடா ஆகிய நாடுகளுக்கு, கியூப மருத்துவக் குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளன.

கியூப மருத்துவர்களை, இத்தாலி வரவேற்று ஏற்றுக் கொண்டுள்ளமை, பலவழிகளில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. உலகின் முதன்மையான முதலாளித்துவ நாடுகளில் ஒன்று, கரீபியக் குட்டி நாடொன்றிடம் உதவியை நாடி நின்றமை கவனத்தில் கொள்ளப்பட வேண்டியமையாகும்.

அதுவும், அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளுக்கு, கடந்த 60 ஆண்டுகளாக உட்பட்ட ஒரு நாடு, இன்று உதவிக்கரம் நீட்டுகிறது. அமெரிக்காவால் முடியாததை, ஐரோப்பாவால் முடியாததை, கியூபா செய்து காட்டுகிறது.

கியூபாவின் மனிதாபிமானமும் மருத்துவமும்

மார்ச் மாதம் 12ஆம் திகதி, பிரித்தானியாவுக்குச் சொந்தமான சொகுசுக் கப்பல் ஒன்றில் இருந்த 50 பேருக்கு, கொரோனா தொற்று இருப்பதற்கான அறிகுறிகள் தென்பட்டதைத் தொடர்ந்து, குறித்த கப்பலை ஒரு நாட்டின் துறைமுகத்தில் நிறுத்தி, பயணிகளை மீள அனுப்ப முடிவு செய்யப்பட்டது.

கப்பல் இருந்த இடத்துக்கு அண்மையில் இருந்த நாடு பஹாமாஸ். எனவே, அங்கு நங்கூரமிட அனுமதி கோரப்பட்டது. பிரித்தானியர்களைப் பிரதானமாகக் கொண்ட பிரித்தானியக் கப்பலை, பிரித்தானிய முடியின் கீழ் உள்ள நாடான பஹாமாஸ் அனுமதிக்க மறுத்துவிட்டது.

பிரித்தானிய வெளியுறவுத் துறையின் கடும் முயற்சிகள் பலனளிக்கவில்லை. பிரித்தானிய அரசியின் ஆட்சியின் கீழ் உள்ள பஹாமாஸின் நிலைப்பாடு, பிரித்தானியாவுக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது. 1,063 பேருடன் (682 பயணிகளும் 381 பணியாளர்களும்) செல்வதற்கு இடமின்றி, கடலில் இக்கப்பல் தத்தளித்துக் கொண்டிருந்தது.

இந்நிலையிலேயே, மார்ச் 18ஆம் திகதி, கியூபா, இக்கப்பலைத் தனது துறைமுகத்தில் நங்கூரமிடவும், பயணிகளை நாட்டுக்குள் ஏற்கவும் உடன்பட்டது. இதையடுத்து, கப்பல் நங்கூரமிடப்பட்ட போது பயணிகள், ‘நன்றி கியூபா! உங்களை, நாங்கள் விரும்புகிறோம்’ என்ற பதாகைகளை ஏந்தியிருந்தனர். பயணிகள் இறக்கப்பட்டு, மருத்துவப் பரிசோதனைகளுக்குப் பின்னர், பிரித்தானியாவுக்கு விமானத்தில் அனுப்பிவைக்கப்பட்டனர்.

இந்த அனுபவம் குறித்துக் கருத்துத் தெரிவித்த பயணி ஒருவர்; “எங்களுக்கு யாரும் உதவ முன்வரவில்லை. கையறு நிலையின் உச்சத்தை, நாம் உணர்ந்தோம். இங்கேயே நோய்த்தொற்றுக்கு உள்ளாகிப் பலியாகிவிடுவோமோ என்று அஞ்சினோம். கியூபா நீட்டிய உதவிக்கரமே, எங்களை இன்று உயிருடன் வைத்துள்ளது. கியூப மக்கள், வெறுப்புடன் எங்களை எதிர்கொள்வார்கள் என்று எதிர்பார்த்தோம். மாறாக, அன்புடன் எங்களை வரவேற்றார்கள். ஓர் ஏழ்மை நாடு, தங்கள் இதயத்தை எங்களுக்காகத் திறந்ததை, மிகுந்த நன்றியுடன் நினைவுகூர்கிறோம்” எனத் தெரிவித்திருந்தார்.

பிரேஸில் நாட்டில், வறுமைக்கு உட்பட்ட பகுதிகளில், மனிதாபிமான மருத்துவத்தின் ஒரு பகுதியாகக் கடமையாற்றிக் கொண்டிருந்த 8,000 கியூப மருத்துவர்களை, கடந்தாண்டு பிரேஸிலில் பதவிக்கு வந்த புதிய வலதுசாரி ஜனாதிபதி பொல்சனாரோ, திருப்பி அனுப்பினார்.

அதேபோல, பொலிவியாவில் சதியின் மூலம் கடந்தாண்டு, ஜனாதிபதி ஈவோ மொராலஸ் பதவி கவிழ்க்கப்பட்டதை அடுத்து, அங்கு பணியாற்றிய 700 கியூப மருத்துவர்கள் நாட்டுக்குத் திருப்பி அனுப்பப்பட்டார்கள்.

இன்று, பிரேஸில் கொரோனா வைரஸ் தொற்றைச் சமாளிக்க முடியாமல் திணறுகிறது. எந்த மருத்துவர்களை, பிரேஸில் ஜனாதிபதி திருப்பி அனுப்பினாரோ, அவர்களை மீளவும் பிரேஸிலுக்கு வந்து, அப்பாவி மக்களுக்காகப் பணியாற்றும்படி, கடந்த வாரம் வேண்டிக் கொண்டார்.

இப்போதைய கியூபாவின் இன்னொரு பேசுபொருள் Interferon Alpha 2B என்ற கியூப மருந்தாகும். கொரோனா வைரஸ் நோய்த்தொற்றுக்கு, மருந்து கண்டுபிடிக்கப்படாத நிலையில், குறித்த மருந்தானது சீனாவில் தொற்றுக்குள்ளான நோயாளிகளைக் குணப்படுத்தப் பயன்படுத்தப்பட்ட மருந்துகளில் ஒன்றாகும். சீனாவின் தேசிய உடல்நல ஆணைக்குழுவால் (Chinese National Heath Commission) பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளில் இதுவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. கொரோனா வைரஸுக்கான தடுப்பு மருந்துகளாக இருக்கக்கூடும் என, உலக சுகாதார நிறுவனம் பரிசீலிக்கும் நான்கு மருந்துகளில் இதுவும் ஒன்றாகும்.

இது, கொரோனா வைரஸ் நோய்த்தொற்றுக்கான, முற்றும் முழுமையான மருந்து அல்ல! இன்றுவரை, அதற்கான மருந்து கண்டுபிடிக்கப்படாத நிலையில், இந்த மருந்து வினைத்திறனுடன் செயலாற்றுகிறது என்பதை, உலக சுகாதார நிறுவனம் ஒத்துக் கொள்கிறது. அதனாலேயே இம்மருந்தை அது பரிசீலித்துள்ளது.

கொரோனா வைரஸுக்கான மருந்து உற்பத்தி என்பது, பலகோடி அமெரிக்க டொலர்கள் பெறுமதியுள்ள ஒரு வியாபாரம் ஆகும். மருந்து உற்பத்திக் கம்பெனிகள், தடுப்பு மருந்தைக் கண்டுபிடித்துவிட வேண்டும் என்று, இதற்காகவே முண்டியடிக்கின்றன.

கடந்தவாரம், இதற்கான மருந்தைக் கண்டுபிடிப்பதில் முன்னேற்றம் கண்டுள்ளதாக, ஜேர்மன் நிறுவனம் அறிவித்ததையடுத்து, அந்த மருந்தைப் பெருந்தொகை பணத்துக்கு ‘அமெரிக்காவுக்கு மட்டும்’ என, பிரத்தியேகமாக விற்பனை செய்வதற்கு, அமெரிக்க ஜனாதிபதி கோரிய செய்தி வெளியானது. இது, ஜேர்மனியில் கடுமையான எதிர்வினைகளைச் சந்தித்தது.

கியூபாவின் மருத்துவ உதவிகள் புதிதல்ல. குறிப்பாக, 2014ஆம் ஆண்டு ஆபிரிக்க நாடுகள், ‘எபோலா’ வைரஸ் தாக்கத்துக்கு உள்ளாகியபோது, கியூபா தனது மருத்துவப் பணியாளர்களை அனுப்பி, ஆபிரிக்காவில் இந்த வைரஸ் தாக்கத்தைக் கட்டுப்படுத்தியது. கியூபாவின் இந்தச் செயல், ‘எபோலா’ வைரஸ் உலகளாவிய ரீதியில் பரவி, பெரும் தாக்கமாக உருமாறாமல் காப்பாற்றியது. இதற்காக, கியூபாவுக்கு ஐ.நா நன்றி சொன்னது.

அமெரிக்காவின் தீவிர வலதுசாரி சோசலிச எதிர்ப்பு இதழான, ‘ரைம்’ – 2014 நவம்பர் மாத இதழில், ‘Why Cuba Is So Good at Fighting Ebola’ என்ற தலைப்பில், கட்டுரை ஒன்றைப் பிரசுரித்திருந்தது. அக்கட்டுரை இவ்வாறு நிறைவு பெறுகிறது:

‘கியூபாவின் முன்மாதிரி, சர்வதேச சமூகத்துக்கு வலுவான செய்தி ஒன்றைச் சொல்கிறது. மிக எளிமையான மக்களே, உலகளாவிய மக்கள் நலனுக்கு, வினைத்திறனுடன் கூடியதும் நின்றுநிலைக்கக் கூடியதுமான பங்களிப்பைச் செய்கிறார்கள். ஏனையோர் நோய்கள், தொற்றுகள் வரும்போது, தயாரில்லாமல் திணறிப் போகிறார்கள்.

உலகளாவிய மருத்துவமும் திட்டமிடலும் முன்நோக்கிய பார்வை கொண்டதாகவும், மருத்துவம் சுகாதார அமைப்புகளை வலுவாக்கியதாக இருத்தல் வேண்டும் என்பதாக, கியூபா சொல்லும் பாடம் அமைந்துள்ளது. பேரிடர்கள் வரும்போது, விழித்து எழுவதாக அமையக்கூடாது’ என்பதாகும்.

கியூபா, கொரோனா வைரஸ் நோய்த்தொற்றுக்குப் அப்பாற்பட்ட நாடல்ல. ஆனால், ஏனைய உலகநாடுகள் ஆபத்தில் இருக்கும் போது, மனிதாபிமான அடிப்படையில் உதவி செய்யத் தயங்கவில்லை. இன்று உலகளாவிய ரீதியில், 90,000 கியூப மருத்துவர்கள் உலகின் 107 நாடுகளில் பணியாற்றுகிறார்கள். அவர்கள், உலகின் மிக எளிய மக்களின் மருத்துவ உடல்நலன் சார் தேவைகளைப் பூர்த்தி செய்கிறார்கள்.

கியூப மருத்துவர்களினதும் மருத்துவப் பணியாளர்களினதும் உதவிகளை வேண்டி நிற்பது, உலகின் எளிய உழைக்கும் மக்களேயாவர். விரைவுணவுகளைத் தின்று, செரித்து, சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பும் அயோக்கியர்களுக்கு, இதன் பெறுமதி விளங்காது. நாளை, அவர்களது உயிரைக் காக்கவும் கூட, ஒரு கியூப மருத்துவரோ, கியூப மருந்தோ தேவைப்பட்டால், அதை முதலில் பெற்று, உயிரைக் காக்க முண்டியடிப்பதும் இந்த அயோக்கியர்களே ஆவர்.

1967ஆம் ஆண்டு, பொலிவியாவில், சேகுவேராவைச் சுட்டுக் கொன்ற மரியோ தெரோன், கண்பார்வை இழந்து துன்பப்படுகையில், 2007ஆம் ஆண்டு, பொலிவியாவில் தங்களது கண் சிகிக்சை முகாமில், தெரோனுக்கு சத்திரசிகிக்சை செய்து, அவருக்குக் கண்பார்வையை மீள அளித்தவர்கள் கியூப மருத்துவர்கள் என்பதும் நினைவு கொள்ளத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இந்திரா காந்தி கொல்லப்பட்ட கதை!! (வீடியோ)
Next post குடம்புளியின் மகத்துவம் தெரியுமா?! (மருத்துவம்)