வாழவைக்கும் வல்லாரை!! (மருத்துவம்)
வல்லமை மிக்க கீரை என்பதால் ‘வல்லாரைக் கீரை’ என்று பெயர் பெற்றது. கல்வி அறிவு, ஞாபக சக்திக்கு உதவி செய்வதால் ‘சரசுவதி கீரை’ என்று அழைக்கப்படுகிறது.
* வல்லாரைக் கீரையில் இரும்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து, உயிர்ச்சத்து, தாது உப்புக்கள் என எண்ணற்ற சத்துக்கள் அடங்கியுள்ளன. சரிவிகித உணவு என்பதற்கு சரியான உதாரணம் இது.
* வல்லாரைக்கீரையை பறித்த சில மணிநேரங்களுக்குள் பச்சையாக சாப்பிட்டால் மூளை சுறுசுறுப்பாக செயல்பட்டு, நினைவு நரம்புகள் தூண்டப்படும்.
* ஒரு கைப்பிடி அளவு வல்லாரைக்கீரையை பச்சையாக மென்று விழுங்கிய பின், பசும்பால் உண்டு வர மாலைக்கண் நோய் குணமாகும்.
* வல்லாரையை நன்கு காய வைத்து பொடி செய்து, குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு சாதத்தில் நெய் கலந்து தரலாம்.
* தொண்டைக்கட்டு, காய்ச்சல், உடற்சோர்வு என பல நோய்களுக்கு வல்லாரை ஒரு சிறந்த தீர்வு. எந்த வகையிலாவது உணவில் சேர்த்து கொண்டால் நிவாரணம் கிடைக்கும்.
* காலை வேளையில் வல்லாரைக்கீரையுடன், மிளகு சேர்த்து உண்டால் உடல் சூடு தணியும்.
* வல்லாரைக்கீரையைக் கொண்டு பல் துலக்கினால் மஞ்சள் கறை நீங்கும்.
* வல்லாரைத் துவையல் மலச்சிக்கலை அகற்றும். குடல் வயிற்றுப்புண்களை ஆற்றும்.
* வல்லாரையுடன், தூதுவளை சேர்த்து இடித்து சாறு பிழிந்து, ஒரு டீஸ்பூன் அளவு சாப்பிட்டு வர, இருமல், சளி ஓடிப் போகும்.
* வல்லாரை செரடோனின் என்ற சத்தை நிரம்ப கொண்டது. பள்ளிக் குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு மிக முக்கியமானது. குழந்தைகளின் மூளை நன்கு வேலை செய்ய வாரத்தில் ஒரு முறையாவது செய்து தர வேண்டும். மூளைக்கு வலுவூட்டி நினைவாற்றலைப் பெருக்கும் தன்மை கொண்டது.
Average Rating