வாழ்வென்பது… பெருங்கனவு!! (மகளிர் பக்கம்)

Read Time:11 Minute, 48 Second

ஒவ்வொரு குழந்தைகளிடமும் ஏதோ ஒரு திறமை ஒளிந்து கிடக்கிறது, அதை ஆசிரியர்கள் கண்டறிந்து அவர்களை ஊக்கப்படுத்தி நம்பிக்கையை விதைத்து வெளிக்கொணர வேண்டும். ஆசிரியரானவர் அறிவுக் கதவுகளைத் தட்டித் திறப்பவர்கள். சமூகத்தில் அனுபவம் என்ற வெளிக்காற்றை மாணவர்களுக்கு சுவாசிக்க கற்றுத் தருபவர்கள். அறியாமை என்னும் இருட்டைத் திறந்து அறிவு என்ற ஒளி தருபவர்கள். அப்படிப்பட்ட கல்விப் பணியை இளம் வயதிலேயே தமிழ்நாட்டின் சிறந்த பத்து பள்ளிகளுள் ஒன்றாகிய சீயோன் மற்றும் ஆல்வின் குழுமப் பள்ளிகளின் இயக்குநராக பொறுப்பேற்று அதில் சாதித்து வருவதையும், தன் வாழ்வின் பெருங்கனவையும் நம்மோடு பகிர்ந்துகொள்கிறார் ரேச்சல் ஜார்ஜியானா.

‘‘நான் அடிப்படையிலேயே ஆசிரியர் குடும்பத்தில் பிறந்தவள். என் தந்தை ராஜ்குமார் செல்லையா அரசாங்கப் பள்ளியில் தலைமையாசிரியராக இருந்து ஓய்வு பெற்றவர். இவர் மாநில அளவில் இங்கிலீஷ் லாங்குவேஜ் டீச்சர் டிரெய்னர் (English Language Teacher Trainer)-ஆகவும் பணிபுரிந்தார். என்னுடைய தாயார் முனைவர் ரோஸலின்ட் விஜயா சென்னையில் புகழ்பெற்ற ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் ஆங்கிலத்துறை பேராசிரியராகவும் மற்றும் குருநானக் கல்லூரியில் ஆங்கிலத்துறை தலைவராகவும் பணிபுரிந்தவர். இந்தக் குடும்பப் பின்னணிதான் என்னைக் கல்வித்துறையில் நான் சாதிக்க வேண்டும் என்ற ஒரு லட்சியக் கனவை எனக்குள் ஏற்படுத்தியது.

நான் சிறுவயதில் பள்ளியில் படிக்கும்பொழுது ஒரு ஆசிரியராக வேண்டுமென்று விரும்பினேன். பள்ளியில் நடக்கும் மாறுவேட போட்டியில் ஒருமுறை ஆசிரியராகவே வேடம் அணிந்தேன். மேல்நிலைப் பள்ளி படிக்கும்பொழுது மென்பொருள் துறையில் அல்லது பேராசிரியர் வேலை செய்யலாம் என்று நான் நினைத்தேன். தகவல் தொழில்நுட்பத்துறையில் விருப்பம் இருந்ததால் நான் B.Tech படிப்பில் ஐ.டி. துறையில் இளங்கலைப் பட்டம் பெற்றேன். கல்லூரி நேர்முகக் காணலில் தேர்வு செய்யப்பட்டு மென்பொருள் துறையில் பணிபுரிந்தேன். அப்பொழுதே வணிக நிர்வாகத்தில் முதுகலைக் கல்வி முடித்தேன். பிறகு எனக்கு திருமணம் நடந்தது, அந்தத் திருமணப் பந்தத்தால் இணைந்த குடும்பம் என் வாழ்க்கை திசையை மாற்றியமைத்தது. நான் புகுந்த வீடும் மிகச் சிறந்த கல்விப் பின்னணியைக் கொண்டது.

என் கணவர் ஏ.ஆல்டஸ் ஹக்ஸ்லி பள்ளி துணைத்தலைவர் மற்றும் அவருடைய தந்தை முனைவர். விஜயன், இந்திய விமானப் படையில் சேவை செய்து ஓய்வு பெற்று இப்பள்ளியை ஆரம்பித்தார். இந்த சிறிய விதை வேரூன்றி முளைத்து தழைத்து பெரியதொரு ஆலமரம் விழுதுகள்போல் பரவியுள்ளது. இவர் சிறந்த கல்விப் பணிக்காக நல்லாசிரியர் விருதை முன்னாள் பாரதத் தேசத்தின் குடியரசுத்தலைவர் மறைந்த டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் அவர்களிடமிருந்து பெற்றார் மற்றும் அவரது கல்விப்பணி மூலம் சமுதாயத்திற்குச் செய்த பணிக்காக முன்னாள் குடியரசுத்தலைவர் ஸ்ரீமதி பிரதிபா பாட்டீல் அவர்களிடம் கௌரவமிக்க சில்வர் ஸ்டார் (Silver Star) விருது பெற்றவர். இந்த மிகப் பெரிய குடும்பத்தில்தான் காலடி எடுத்துவைத்தேன்.

என்னைக் கவர்ந்த சிறப்புக்குரிய காரியம் என்னவென்றால் பள்ளி முதல்வர் மாணவர்களின் வளர்ச்சிக்காக அக்கறையும், பள்ளி முன்னேற்றத்துக்காக இடைவிடாத உழைப்பும். மேலும் என்னை கல்வித்துறைக்கு வரும்படி என்னுடைய கணவரோ அவருடைய தந்தையோ என்னை வற்புறுத்தவில்லை. நான் விரும்பினால் பணியாற்றிக் கொண்டிருந்த மென்பொருள் வேலையிலேயே ஒரு நிர்வாகம் தொடங்க உதவுமாறு கூறினார். ஆனால் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் குறிப்பிட்டதைப்போல் “கனவு என்பது தூக்கத்தில் வரும் கனவுபோல் அல்ல… உங்களை தூங்கவிடாமல் செய்வது தான்” என்ற வாக்குப்படி என்னுடைய கல்வி பணியின்மேல் ஈர்ப்பு இன்னும் அதிகமானது. இந்தக் கல்விச் செல்வத்தைப் பெருக்க ஆவல்கொண்டு பள்ளி செயல்பாட்டில் இணைந்தேன்; ஏனெனில் எத்தனையோ செல்வங்கள் நாம் பெற்றாலும். கல்வி செல்வம்போன்று உயர்ந்த செல்வம் ஏதுமில்லை’’ என்றவர் முழுமையாக தன்னை கல்விப் பணியில் ஈடுபடுத்த ஆரம்பித்தார்.

‘‘எங்க பள்ளியில் பயிலும் மாணவர்களின் பெற்றோர்கள் 40 சதவீதம் படிப்பறிவு இல்லாதவர்கள். இவ்வாறாக இருந்தும் அனைத்து வகையான குழந்தைகளுக்கும் தரமான கல்வி கொடுப்பதன் மூலம் பெற்றோர் மத்தியில் மிகுந்த பாராட்டுப் பெற்றுள்ளது. ஒரு வளர்ந்து வருகின்ற பள்ளியைச் சிறந்த பள்ளியாக மாற்றுவது ஒரு வகையான சவாலென்றால், ஏற்கனவே வளர்ச்சி பெற்ற சிறந்த பள்ளியை எதிர்கால சவால்களுக்கு ஏற்ப வளர்ப்பது மிகப் பெரிய சவாலாகும், இதை ஏற்று புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மேலும் மாநிலத்திலேயே சிறந்த பள்ளியாக மாற்ற முயற்சி செய்து வருகிறேன். ஆனாலும் பள்ளியின் முதல்வராக பணிபுரிய B.Ed தேவைப்பட்டது, B.Tech படித்தவருக்கு B.Ed படிக்க அக்காலக்கட்டத்தில் வாய்ப்பில்லை. அந்த தடையும் சில ஆண்டுகளுக்கு முன்பு B.Tech படித்தவர்கள் B.Ed படிக்கலாம் என்று அரசு அனுமதி கிடைத்தவுடன் நான் மகிழ்ந்து உடனடியாக அதற்கு என்னை பதிவு செய்தேன்.

கற்பித்தலைத் தொழில்நுட்பத்தோடு ஒருங்கிணைத்துக் கற்பித்தலும், கற்றலும் இப்போட்டி நிறைந்த காலகட்டத்தில் மேம்பட வேண்டும் என்ற Technology and Pedagogy-ஐ Integrate பண்ணினேன். அதன்படி Zion Software என்ற மென்பொருளை உருவாக்கி, அதனை வகுப்பறையில் Smart Board மூலம் கற்பித்தோம். இது பாடங்களின் உட்கருத்தை எளிமையாகப் புரிந்துகொள்வதற்கு உதவியது. Animation முறையில் காண்பிப்பதன் மூலம் ஆர்வத்துடனும் எளிமையுடனும் மாணவர்களால் புரிந்துகொள்ள முடிந்தது. இதன் மூலம் மாணவர்கள் அறிவைப் பெறவும், சிந்திக்கும் ஆற்றலைப் பெறவும் தூண்டப்பட்டனர். ஏட்டுச்சுரைக்காய் கறிக்கு உதவாது என்பதை உணர்ந்து, புத்தகப் படிப்போடு நிறுத்தாமல் Activity Based, Application Oriented முறையில் கற்பிப்பதற்கு ஆசிரியர்களுக்கு Inservice Training-ஐ கொடுப்பதை வழக்கமாக முறைப்படுத்தினேன். இதன் மூலம் மாணவர்களின் தனித்திறமையும், ஆளுமைத்திறனையும் வெளிக்கொண்டுவர உதவியது.

இருபதாயிரம் மாணவர்களையும், ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்களையும் கொண்ட மிகப் பெரிய கல்வி குழுமத்தைப் புதிய தொழில்நுட்பத்தின் உதவியுடன் முன்னேற்றப்பாதையில் அழைத்துச்செல்லும் மிகச் சவாலான பணியை மனவுறுதியுடனும் விடாமுயற்சியுடனும் ஏற்றுச் செய்து வருகிறேன். ஒரு ஆங்கிலப் பத்திரிகை தென்சென்னைப் பகுதிகளிலுள்ள சுமார் 200-க்கும் மேற்பட்ட CBSE பள்ளிகளில் நடத்திய survey-யில் எங்களது பள்ளி தேசிய அளவில் முதல் ரேங்க் பெற்றது. இதன்மூலம் எங்களது தரமான கல்வியைக் கொடுக்கின்ற அணுகுமுறையை மேலும் உறுதிப்படுத்தியுள்ளது.

எனக்கு இரு குழந்தைகள் இருக்கின்றார்கள், இவர்கள் மழலையர் பிரிவில் மற்றும் தொடக்கப் பள்ளியில் பயின்று வருகின்றனர். இவர்களுக்கு கல்வி கற்பிப்பதால், எங்கள் பள்ளிக் குழந்தைகளின் தேவைகள் மற்றும் பிரச்னைகளைப் பூர்த்தி செய்து, குழந்தைகள் பள்ளியில் எளிமையாகவும் மற்றும் மகிழ்ச்சியாகவும் கற்றுக்கொள்ள ஏதுவாக உள்ளது. என் கணவர் ஊக்குவித்ததோடு மட்டுமல்லாமல் நவீன தொழிற்நுட்பமுறையைப் பயன்படுத்திக் கற்பிக்க வழிகாட்டியாக இருந்ததால் நான் சாதிப்பதற்குப் பெரு உதவியாக இருந்தது.

இந்தியாவிலேயே தலைசிறந்த பள்ளிகளாக உருவாக்கும் எனது கல்விப்பணியை அறப்பணியாகக் கொண்டு இச்சேவைப் பணியை இப்பள்ளிகளின் தலைவர் அவர்களின் வழிகாட்டுதலின் மூலமும், என் கணவர் அவர்களின் உதவியோடு எனது கடமையைத் தொடர்ந்து செய்து நல்ல ஒழுக்கம் நிறைந்த மாணவர்களை உருவாக்கப் பாடுபட்டு வருகிறேன். நமது வெற்றி என்பது இறுதியில் இல்லை, ஆனால் ஒவ்வொரு அடியிலும் உள்ளது என்பதை உணர்ந்தவளாக, என்னைச் சார்ந்தவர்களுக்கும் என் பள்ளி மாணவர்களுக்கும் எடுத்துக்கூறும் வகையில் என் பணியை தொடர்கிறேன்’’ என்றார் ரேச்சல் ஜார்ஜியானா.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post போன் செய்தால் பார்சல் தயாராக இருக்கும்!! (மகளிர் பக்கம்)
Next post உடல் வலி தீர மூலிகை மருத்துவம்!! (மருத்துவம்)