டயாபட்டீஸ்!! (மருத்துவம்)

Read Time:8 Minute, 51 Second

கவலைப்பட ஒன்றும் இல்லை. ‘நீரிழிவின் தலைநகரமாகிறது இந்தியா’ என்று ஆராய்ச்சிகள் ஒருபுறம் அதிர்ச்சி தருகின்றனதான். ஆனாலும் நீரிழிவு பற்றிய விழிப்புணர்வும் அதைவிட அதிகமாகவே பொதுமக்களிடம் ஏற்பட்டு வருகிறது. ஒரு நோய் சமூகத்தில் பரவுவதற்கும், அதைக் கட்டுப்படுத்தி வெற்றி கொள்வதற்கும் விழிப்புணர்வே முக்கியமானது என்பது எல்லோரும் அறிந்த ஒன்றுதான். அந்த வகையில் நீரிழிவு பற்றி இப்போது பலருக்கும் தெளிவாகத் தெரிந்திருக்கிறது.

ஆரம்ப காலத்தில் சர்க்கரை நோய் என்றால், சர்க்கரை சாப்பிட்டால் வரும் நோய் என்று அப்பாவியாக புரிந்து வைத்திருந்தவர்கள் பலர். ஆனால், இன்று Diabetes Mellitus என்ற மருத்துவ வார்த்தையையே சுருக்கமாக டயாபட்டீஸ் என்று சாதாரணமாகப் பேச ஆரம்பித்திருக்கிறோம். இந்த விழிப்புணர்வு தொடரும்பட்சத்தில் இந்தியாவை விட்டு நீரிழிவை விரட்டவும் நம்மால் முடியும். டயாபட்டீஸ் பற்றிய சில அடிப்படை விழிப்புணர்வுத் தகவல்களையும், அதன் முக்கியமான நான்கு வகைகளையும் இன்னும் தெளிவாகத் தெரிந்துகொள்வோம்…

நீரிழிவு நோய் என்பது ரத்தத்தில் குளுக்கோஸ் அளவை அதிகரிக்க செய்யக்கூடிய ‘வளர்சிதை மாற்றங்களின் (Metabolism) சீர்குலைவு தொகுப்பு’ என மருத்துவ உலகினரால் குறிக்கப்படுகிறது. நமது உடல் தேவையான இன்சுலினை உற்பத்தி செய்யாமல் விடுதல் அல்லது உடலில் தயாரான சர்க்கரையை முறையான வழியில் பயன்படுத்தாமல் இருத்தல் ஆகிய இரண்டு நிலைகளே நீரிழிவு என முடிவாகிறது. இதன் அடிப்படையில் சர்க்கரை நோயாளிகளின் ரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அளவு, ஆரோக்கியமான நீரிழிவு இல்லாத மனிதரின் குளுக்கோஸ் அளவைவிட கூடுதலாக காணப்படும்.

ரத்தத்தில் உள்ள இன்சுலின் அளவு சீரான நிலையில் இருந்து இப்படி மாறுபடுவதால், சமச்சீரற்ற நிலைமை, உடலின் சீர்குலைவு(Physical Disorder) என
சொல்லப்படுகிறது. நீரிழிவு நோயின் வகைகள், அதற்கான காரணங்கள், யார்யாரெல்லாம் இந்நோயால் பாதிக்கப்படுவார்கள்? என்ன மாதிரியான பாதிப்புகள் ஏற்படும்? அவற்றிற்கான சிகிச்சை முறைகள் போன்றவை குறித்து, இனி காண்போம்.

அடிக்கடி சிறுநீர் கழித்தல், அதிக பசியுணர்வு மற்றும் அடிக்கடி தாகம் ஏற்படுதல், மிகுந்த களைப்புடன் காணப்படல் ஆகியவை இதன் முக்கியமான அறிகுறிகளாக இருக்கிறது.

முதலாம் வகை நீரிழிவு நோய்

சர்க்கரை நோயில் Type 1 என முதலாவது வகையாக சுட்டப்படுகிற இந்த வகை இன்சுலின் சார்ந்த நீரிழிவு நோய்(Insulin Dependent Diabetes Mellitus) என குறிப்பிடப்படுகிறது. இந்த முதலாம் வகை நீரிழிவு மழலைப் பருவத்திலேயே தொடங்கி விடுகிறது. குழந்தைகள், சிறுவர், சிறுமியர் மற்றும் இளம்வயதினர் ஆகியோரைப் பெருமளவில் பாதிக்கக் கூடியதாக உள்ளது. இவர்களுடைய இன்சுலின் சுரப்பிகள் செயல்படும் தன்மை சிறிதளவு கூட இல்லாமல் காணப்படும்.

டைப் 1 நீரிழிவு நோய் மரபணு காரணமாக குழந்தைப் பருவத்திலேயே ஏற்பட்டு விடுவதால், ‘இளம் வயது டயாபட்டீஸ்’ எனவும் அழைக்கப்படுகிறது. இந்த பிரச்னை காரணமாக கணையம் செயல் இழத்தல், இன்சுலின் சுரக்காமை போன்ற பாதிப்புக்கள் ஏற்படுவதோடு கண்கள், சிறுநீரகம் மற்றும் நரம்புகளும் பாதிப்புக்குள்ளாகும். மேலும், இதயம் தொடர்பான நோய்கள், பக்கவாதம் வரவும் வாய்ப்பு உள்ளது. இன்சுலின் மருந்தைத் தொடர்ந்து எடுத்து கொள்வதுதான் இதற்கான ஒரே சிகிச்சை முறையாகும்.

இரண்டாம் வகை நீரிழிவு நோய்

Non Insulin Dependent Diabetes Mellitus என குறிப்பிடப்படுகிற இந்த இரண்டாம் வகை நீரிழிவு முதியவர்களிடம் அதிகம் ஏற்படுகிறது. நம்முடைய உடலில் போதுமான அளவிற்கு இன்சுலின் சுரக்காமல் இருத்தல் அல்லது சுரக்கப்படும் இன்சுலினுக்கு எதிராக மாற்று வினை உண்டாகுதல் ஆகியவற்றின் காரணமாக இந்த வகை சர்க்கரை நோய் ஏற்படுவதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

வாழ்க்கை முறை மாற்றங்கள், தவறான உணவுப்பழக்கம் போன்றவற்றால் மிதமிஞ்சிய உடல் பருமனால் அவதிப்படுபவர்கள் இந்த நீரிழிவு நோயின் தாக்கத்திற்குப் பெருமளவில் ஆளாகுகின்றனர். உடல் எடையைக் குறைத்தல், உணவு கட்டுப்பாடு மற்றும் முறையான உடற்பயிற்சிகள் ஆகியவற்றால் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தலாம்.

கர்ப்ப கால சர்க்கரை நோய்

பெண்கள் கருவுற்ற காலத்தில் ஏற்படுகிற Gestational Diabetes Mellitus நீரிழிவு நோய் மூன்றாவது வகையாக கருதப்படுகிறது. GDM எனச் சுருக்கமாக குறிப்பிடப்படுகிற தாய்மை அடைந்தபோது ஏற்படுகிற சர்க்கரை நோயால் 7 சதவீத பெண்கள் அவதிப்படுவதாகவும், இக்கட்டான நிலைக்கு ஆளாவதாகவும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், கருவுற்ற காலத்தில் ஏற்படுகிற இந்நோயின் தாக்கம் 14 சதவீதம் வரை இருப்பதாகவும் கண்டறியப்பட்டு உள்ளது.

கருவுற்ற பெண்களுக்கு பிரசவத்துக்கு முன்னதாகவே இந்த வகை சர்க்கரை நோயால் வருகிற பாதிப்புகள் எத்தகைய தன்மை உடையதாக இருக்கும் என்பது மதிப்பீடு செய்யப்படுகிறது. குழந்தை பிறந்தவுடன் தானாகவே இந்த வகை நோய் வந்த சுவடு எதுவும் தெரியாமல் மறைந்துவிடுகிறது. ஆனாலும், எதிர்வரும் காலங்களில் தாய் மற்றும் குழந்தைக்கு இந்த நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் எனவும் மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள்.

நான்காம் வகை நீரிழிவு நோய்

சர்க்கரை நோய் வகைகளில் நான்காவது மற்றும் இறுதி வகையாக மருத்துவ நிபுணர்களால் அழைக்கப்படுகிறது. சேய்க் இன்ஸ்டியூட் லேபை(Saik Institute Lab) சேர்ந்த அறிவியல் வல்லுனர்கள் ரொனால்ட் ஈவான்ஸ், ஹி செங் ஆகியோர் இந்நோயைக் கண்டறிந்துள்ளனர். இந்த வகை நீரிழிவு நோய் உடல் எடையைவிட முதுமைப் பருவத்தோடு நெருங்கிய தொடர்புடையதாக இவர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

இந்நோய் தொடர்பாக, ஆய்வு மேற்கொண்ட இந்த இரட்டையர் நோய் எதிர்ப்புத் திறனுக்குக் காரணமான செல்களின் அளவுகடந்த செயல்பாடுதான் நான்காம் வகை நீரிழிவு நோய்க்குக் காரணமாக அமைகிறது என்றும், பெரும்பாலானோர், ஒல்லியான உடல்வாகு கொண்டிருந்தால் இந்தவகை நீரிழிவு தங்களுக்கு வராது என நினைப்பதாகவும் இவர்கள் கூறுகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சர்க்கரைக்கும் கட்டுப்பாடு வேண்டும்!! (மருத்துவம்)
Next post ஆயுளின் அந்திவரை பிரியங்கள் சேர்த்து வைக்க…!! (அவ்வப்போது கிளாமர்)