வாழ்வென்பது பெருங்கனவு !! (மகளிர் பக்கம்)

Read Time:11 Minute, 9 Second

‘‘எனக்கு சொந்த ஊர் திருநெல்வேலி. அம்மாவின் உறவினர்களில் பெரும்பாலானோர் தொழில்முனைவோராகத்தான் இருந்தனர். மளிகைக் கடை மற்றும் சிறுதொழில் என வைத்திருந்தனர். எனது தாத்தா திருநெல்வேலி வியாபாரிகள் சங்கத் தலைவராக இருந்தார். அப்பா ராணுவத்தில் பணிபுரிந்து விருப்ப ஓய்வு பெற்றவர். அவருக்கு திருச்சியில் ஒரு நிறுவனத்தில் அக்கவுன்டிங் வேலை கிடைத்ததால் குடும்பத்துடன் திருச்சிப் பக்கம் போய் செட்டிலானோம். அம்மா நல்லதொரு குடும்பத் தலைவியாக எங்களைப் பார்த்துக்கொண்டார். பள்ளிக்கல்வி திருச்சியில் உள்ள பெரியார் மணியம்மை பள்ளியிலும், அடுத்து மதுரை காமராஜ் யுனிவர்சிட்டியில் தொலைதூரக் கல்வியில் பி.ஏ. வரலாறு பட்டம் படித்து முடித்தேன். ஐ.ஏ.எஸ். படித்து கலெக்டர் ஆக வேண்டும் என்பது என் சிறுவயது கனவாக இருந்தது. அதனால், வரலாறு பாடம் எடுத்துப் படித்தேன். ஆனால், காலச்சூழ்நிலை என்னால் ஐ.ஏ.எஸ். படிக்க முடியாமல் போய்விட்டது.

கல்லூரிப் படிப்பு முடிந்ததும் திருமணம். அவரின் சொந்த ஊர் திருநெல்வேலி என்றாலும், கோயம்புத்தூரில் தொழில் செய்து கொண்டிருந்தார். அதனால் கோயம்புத்தூரில் செட்டிலானேன். அப்போது, நானும் பக்கத்து வீட்டு பெண்ணும் மணிக்கணக்கில் கதைகள் பேசுவோம். அதைப் பார்த்து அக்கம்பக்கத்தினர் உங்களுக்கு வாய் வலிக்காதா எனக் கிண்டல் பேசுவதுண்டு. வீட்டிலிருந்தால் அக்கம்பக்கத்தினர் அப்படித்தான் பேசுவார்கள். எனவே, உனது சொந்தக்காலில் நிற்க வேண்டுமானால் ஒரு தொழிலை கற்றுக்கொள் என எனது கணவர் கூறினார். அதனால், ஏதாவது தொழில் கல்வி பயின்று தொழில் தொடங்க வேண்டும் என்ற எண்ணத்தில் அங்குள்ள அவினாசிலிங்கம் கல்லூரியில் செயல்பட்டு வந்த மத்திய அரசுத் திட்டமான மக்கள் கல்வி நிறுவனத்தின் மூலம் அழகுக் கலைப் பயிற்சியில் சேர்ந்து படித்து முடித்தேன்.

இதற்கிடையில் எங்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்திருந்தாள். அழகுக்கலைப் பயிற்சி படிப்பில் நல்லதொரு தேர்ச்சி பெற்றதால் அங்கேயே பணியிலும் சேர்ந்தேன். கிட்டத்தட்ட பதினைந்து ஆண்டுகளாக மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கும் பகுதி நேர ஆசிரியராகப் பணிபுரிந்தேன். என் மகளுக்கு பன்னிரண்டு வயதாகும்போது பதின் பருவ வயதுக்கே உரிய முகப்பருக்கள் தோன்றி அவளை சங்கடப்படுத்தியது. அப்போது என்னைப் பார்த்து சிலர், அழகுக் கலை ஆசிரியராக இருக்கின்றீர்கள், மகளுக்கு முகத்தில் பருக்களுக்கு ஏதாவது கவனித்து சிகிச்சை அளிக்கக்கூடாதா எனக் கேட்டனர். அதனால் கிராமத்து பாரம்பரிய முறைப்படி நலங்குமாவு தயாரித்து கொடுக்கலாம் என முடிவு செய்தேன். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அந்த நலங்குமாவுப் பொடியைத் தேய்த்து குளித்து வந்தால் எந்த ஒரு சரும நோய் நொடியும் அண்டாது.

அதனைப் பயன்படுத்திய எனது மகளுக்கு பருக்கள் காணாமல் போய் நன்கு குணமாகிவிட்டது’’ என்றவர் இதையே ஒரு தொழிலாக துவங்கியுள்ளார். ‘‘என் மகளுக்கு பருக்களுக்காக தயாரித்தேன். இதே போல் பல விதமான அழகு சார்ந்த பிரச்னைகளை பெண்கள் சந்தித்து வருகிறார்கள். அவர்களுக்காக ஏதாவது செய்யலாம் என்று முடிவு செய்து தான் நலங்குமாவு மற்றும் மூலிகைப் பொடிகள் தயாரித்து ஒரு தொழிலாக ஆரம்பித்தேன். தொழில் நன்றாகப் போய்க்கொண்டிருந்த நேரத்தில், கோயம்புத்தூரில் ஒரு சிறு அசம்பாவித சம்பவம் நடந்து தொழில்கள் அனைத்தும் நலிவடையத் தொடங்கியது. கணவரின் தொழிலும் முடங்கிப்போனதால் அதை நிறுத்திவிட்டு அவரும் எனது தொழிலுக்கு பக்கபலமாய் இருந்து உதவிகள் செய்து வந்தார். நன்றாகப் போய்க்கொண்டிருந்த எங்கள் வாழ்க்கையில் திடீரென இடியாய் இறங்கியது எனது கணவரின் திடீர் இறப்பு.

இதற்கிடையில் என் மகளும் எம்.பி.ஏ முடித்துவிட்டு இத்தொழிலை சந்தைப்படுத்துதல் மற்றும் விரிவாக்கம் செய்தல் என அனைத்தையும் பார்த்துக்கொண்டார். இதையடுத்து வாலேரியன் என்ற ஒரு பிராண்டை உருவாக்கி பயோ – நேச்சுரலில் பல்வேறு பொருட்கள் தயாரிக்க ஆரம்பித்தோம். தற்போது, நலங்குமாவு, பொடுகு, பேன், தேய்த்துக்குளிக்கும் பொடி, சீயக்காய்த்தூள், கடுக்காய்ப்பொடி, ரோஸ் வாட்டர், பூஜைக்குரிய பன்னீர், சத்துமாவு…. என ஏராளமான பொருட்கள் தயாரித்து வருகிறோம்’’ என்றவர் அவர் பயன்படுத்தும் மூலிகையில் உள்ள மருத்துவகுணங்களை பற்றி விவரித்தார். ‘‘கடுக்காயில் anti-inflammatory மற்றும் Vitamin C உள்ளது. தொற்று (Infection) ஏற்படும் இடத்தில் அதாவது தோலில், பரு ஏற்பட்டு தொற்று ஏற்படும்போது கடுக்காய் பொடி தொடர்ந்து பூசும்போது (Apply) பரு நீங்கிவிடும். இதில் உள்ள வைட்டமின் ‘சி’ சருமத்தில் தழும்பு ஏற்படாமல் பாதுகாக்கும்.

அதிமதுரம் தோலில் ஏற்படும் Pigmention வெளுக்கச் செய்யும். கஸ்தூரி மஞ்சள் (anti – bacterial), மூலிகை பொருட்கள் தொடர்ந்து உபயோகிக்கும்போது, சில பல பெரிய வியாதிகளையும் தள்ளிப்போடலாம். உணவாக மூலிகை மற்றும் ஆயுர்வேதிக் பொருட்களை எடுக்கும்போது உடல் ஆரோக்கியமாக இருக்கும். நலிந்து போன தொழில் மறுபடியும் உயிர் பெற்றது. தற்போது என் மகள் திருமணமாகி கணவருடன் அமெரிக்காவில் உள்ளார். அங்கிருந்து இத்தொழிலை மேலாண்மை செய்து கொண்டிருக்கிறார். ஆன்லைனில் பிசினஸ் செய்வது, பிராண்டை இன்னும் இம்ப்ரூவ் பண்ணுவது என அவளது வழிகாட்டுதலின்படி இன்றைக்கு இத்தொழிலை நல்லமுறையில் செய்துகொண்டிருக்கிறேன். கோயம்புத்தூர், மதுரை, சென்னை, பெங்களூரு, திருநெல்வேலி என பல இடங்களுக்கும் இப்பொருட்கள் விநியோகிக்கப்பட்டு வருகிறது.

அடுத்து என்னுடைய பெரியதொரு கனவு என்னவென்றால், பாரம்பரிய உணவுகளை நாம் மீட்டெடுக்க வேண்டும். ஏனெனில், நம்முடைய உணவுமுறை மாற்றத்தால்தான் இன்றைக்கு புதிது புதிதாக நோய்கள் வந்துகொண்டிருக்கின்றன. எனவே, நம் பாரம்பரிய உணவுப் பொருட்களை தயாரிக்க வேண்டும். குறிப்பாக பள்ளிக் குழந்தைகளுக்கு அதைக் கொடுக்க வேண்டும். ரசாயனத்திலான அழகு சாதனப் பொருட்களைப் பயன்படுத்தாமல் நமது பாரம்பரிய மூலிகையிலான அழகுசாதனப் பொருட்களை உபயோகப்படுத்தும்போது சருமத்தில் வரக்கூடிய புற்றுநோய் மற்றும் சொறி, சிரங்கு உள்ளிட்ட பல நோய்களைத் தள்ளிப்போடுகிறோம். அதேபோல் சுவைக்காக உணவுகளில் ரசாயனம் சேர்க்கப்படும்போது அதுவும் நம் உடலுக்கு தீங்கு விளைவிக்கிறது. எனவே, பாரம்பரிய உணவுகளை மீட்டெடுக்கும் முறையில் அது சம்பந்தமான பொருட்கள் தயாரிப்பதே எனது அடுத்த விருப்பம்.

படிப்பு, வேலை என எதுவாக இருந்தாலும் பெண்கள் முன்னேற்றத்துக்கு சுயமாகச் செய்யக்கூடிய ஒரு தொழிலைக் கற்று வைத்திருக்க வேண்டும் என்பது என்னுடைய தாழ்மையான வேண்டுகோள். ஒரு இழப்பிலிருந்து என்னை மீண்டும் ஒரு நல்ல நிலைமைக்கு கொண்டு வர நான் கற்றுக்கொண்ட தொழில்தான் பெரும் உதவியாக இருந்தது. ஒரு பெண்ணானவளுக்கு தன் குழந்தைகளுக்கு நல்லதொரு வாழ்க்கையை அமைத்துக் கொடுக்க வேண்டும் என்பதே பெருங்கனவாக இருக்கும். எனது கனவு நிறைவேற நான் தொடங்கிய இத்தொழிலே காரணமாக இருந்தது. மற்றவர்களால் முடியாதது நம்மால் முடியும், நம்மால் முடியாதது யாராலும் முடியாது என்ற தன்னம்பிக்கையோடு ஒவ்வொரு பெண்ணும் தனது வாழ்க்கைப் பயணத்தில், ஒரு லட்சியக் கனவை நோக்கி நகர்ந்துகொண்டிருந்தால் நம் இலக்கை அடைந்துவிட முடியும்’’ என்ற நம்பிக்கை வார்த்தைகளுடன் நிறைவாக பேசி முடித்தார் சண்முகப்பிரியா.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நம் வயிறு…நம் நீரிழிவு!! (மருத்துவம்)
Next post கை, கால் எரிச்சலை போக்கும் பாகற்காய் இலை!! (மருத்துவம்)