பெண்களும் வலிப்பு நோயும்!! (மருத்துவம்)

Read Time:18 Minute, 27 Second

சென்னை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், வலிப்பு நோயாளிகளுக்கான தனி புறநோயாளிகள் பிரிவில் எப்போதும் கூட்டம் அலைமோதும். முதன்முறையாக வருபவர்கள். ஏற்கனவே மருத்துவரை பார்த்து விட்டு மறுபரிசீலனைக்கு வருபவர்கள், மாதக் கணக்காகவும் வருடக்கணக்காகவும் தொடர்ந்து மாத்திரைகள் உட்கொள்பவர்கள், நேரடியாக வர முடியாமல் பெற்றோர்கள் அல்லது உறவினர்கள் மூலம் மாத்திரைகள் வாங்கிக் கொள்பவர்கள் என பலதரப்பட்ட நோயாளிகள் வந்து செல்வார்கள். 200 முதல் 250 வலிப்பு நோயாளிகள் தினமும் வந்து செல்வர். திங்கட்கிழமைகளில் எண்ணிக்கை 300-ஐ தாண்டும். இவர்களில் சுமார் 50 சதவீதத்துக்கு மேல் பெண்கள்.

ஆய்வு சொல்வது என்ன?

எல்லா அரசு மருத்துவமனைகளிலும், அது மருத்துவக்கல்லூரியோ, மாவட்ட தலைமை மருத்துவமனையோ அல்லது கிராமங்களில் இருக்கும் ஆரம்ப சுகாதார நிலையமாகவோ ஆகட்டும். வலிப்பு நோய்க்கான ஆய்வுகள் மற்றும் வலிப்பு நோய்க்கான மருந்துகள் அனைத்தும் இலவசமாக தரப்படுகிறது. பெரும்பாலும் எல்லா அரசு மருத்துவமனைகளிலும் பினிடாய்ன்(Phenytoin), கார்பமசிபின்(Carbamazepine), சோடியம் வால்பிரோவேட்(Sodium valproate) என்னும் மூன்று வகையான வலிப்பு மருந்துகளே கொடுக்கப்படுகின்றன.

நரம்பியல் முதுகலை பயிற்சியின்போது, இந்த மாத்திரைகளின் மூலம் எந்த அளவுக்கு நோயாளிகளுக்கு வலிப்பு நோய் கட்டுப்படுகிறது மற்றும் ‘திருமணமும் வலிப்பு நோயும்’ என்ற இரண்டு தலைப்புகளில் ஆய்வுகள் செய்ய முற்பட்டோம். வலிப்பு நோயுள்ள பெண்கள் தனக்கு இருக்கும் நோயை கல்யாணத்திற்கு முன்பாக தனக்கு வரப்போகும் கணவனிடமோ அல்லது கணவரின் பெற்றோர்களிடமோ அல்லது அவர்களது உறவினர்கள் மூலமாகவோ சொல்லிவிட்டுத்தான் கல்யாணம் செய்து கொண்டார்களா அப்படி சொன்னதால் அவர்கள் எதிர்கொண்ட தடைகள் என்னென்ன என்பதும் ஆய்விற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

முதல் ஆய்வின் முடிவில், அரசாங்க மருத்துவமனைகளில் கொடுக்கப்படும் மேற்சொன்ன மூன்று மாத்திரைகளின் (தனியாகவோ அல்லது சேர்ந்தோ) மருந்தை முறையாக உட்கொள்வதன் மூலமாக 80 முதல் 85 சதவீதம் வரையிலான மக்களுக்கு வலிப்பு நோய் கட்டுப்பாட்டிற்குள் வருகிறது என்பதையும், வலிப்பு நோயை எளிதாகக் குணப்படுத்த முடியும் அல்லது கட்டுப்படுத்த முடியும் என்பதையும் கண்டறிய முடிந்தது. அரசு மருத்துவமனைகள் மீதும் அரசு மருத்துவர்கள் மீதும் ஒரு சில மக்களுக்கு இருக்கும் அச்சத்தை, சந்தேகத்தை போக்கும் வண்ணம் இந்த ஆய்வின் முடிவு இருந்தது என்பதும் மறுக்க முடியாத உண்மை. இரண்டாவது ஆய்வின் முடிவு எதிர்பாராதது. ஏனெனில் பெரும்பாலான பெண்கள் தனக்குள்ள வலிப்பு நோயை மறைத்துதான் கல்யாணம் செய்து கொண்டுள்ளனர்.

கல்யாணத்திற்கு பிறகு வலிப்பு நோய்க்கான மாத்திரைகளை கணவருக்கோ அல்லது கணவரின் பெற்றோர்களுக்கோ தெரியாமலே சாப்பிட்டு வந்ததாகவும், கணவன்-மனைவிக்குள் ஒரு பரஸ்பர அன்பு வந்த பிறகே சில பெண்கள் தனக்குள்ள நோயை வெளிப்படுத்தியதாகவும், திடீரென்று வலிப்பு ஏற்பட்டால் அப்போதுதான் முதன்முறையாக தனக்கு வலிப்பு வந்ததாக காட்டி கொண்டதாகவும் சில பெண்கள் கூறினர். வலிப்பு நோய் தனக்கு உள்ளது என்று கூறி கல்யாணம் செய்துகொண்ட பெண்கள், தனக்கு கல்யாணம் நடந்ததே பெரிய விஷயம் என்று கூறினார்கள். பெரும்பாலான மாப்பிள்ளைகள் தங்களை நிராகரித்ததையும் குறிப்பிட்டார்கள். அழகு, அறிவு, சொத்து, சொந்த பந்தங்கள், கௌரவம் போன்ற ஏனைய எதிர்பார்ப்புகள் நிறைவேறினாலும், நினைத்த அளவுக்கு வரன் அமையவில்லை என்பதை இந்த ஆய்வின் முடிவு வெளிப்படுத்தியது. இந்த 21-ம் நூற்றாண்டிலும், வலிப்பு நோய் பற்றிய மூட நம்பிக்கைகள் நமது மக்களின் மனதில் ஆழமாகப் பதிந்துள்ளது என்பது தெள்ளத்தெளிவாக இந்த ஆய்வின் முடிவு எடுத்துரைக்கிறது.

வலிப்பு தீர்க்கக்கூடியதுதான்!

வலிப்பு நோயும் தீர்க்கக்கூடிய நோய்தான். அது பரவக்கூடிய நோய் அல்ல! வலிப்பு நோய் இருக்கும் பெண்கள் மற்ற பெண்களைப் போல் கல்யாணம் செய்துகொள்ளலாம்; தாம்பத்தியத்தில் ஈடுபடலாம்; குழந்தை பெற்றுக்கொள்ளலாம்; தாய்ப்பால் கொடுக்கலாம் என்பதை மருத்துவர்கள் மூலம் ஊடகங்கள் மக்களின் மனதில் கொண்டு சேர்த்தால்தான் வலிப்பு நோய் பற்றிய பழமையான மூடநம்பிக்கைகளை ஒழிக்க முடியும். வலிப்பு நோய் சார்ந்த அணுகுமுறை ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஒரே மாதிரிதான் என்றாலும் பெண்களுக்கு கூடுதல் கவனம் தேவைப்படுகிறது. மாதவிலக்கு, பேறு காலம், பிரசவ காலம், தாய்ப்பால் கொடுக்கும் காலம் மற்றும் குழந்தை வளர்ப்பு போன்ற பல நிலைகளிலும் ஹார்மோன்களினால் பெண்களின் உடலில் ஏற்படும் ரசாயன மாற்றங்களினால் வலிப்பு நோய் வரக்கூடும்.

பொதுவாக பெண்களுக்கு இரண்டு ஹார்மோன்கள் முக்கியமானவை. முதலாவது ஈஸ்ட்ரோஜன். இரண்டாவது புரோஜெஸ்டீரான். இதில் ஈஸ்ட்ரோஜன் வலிப்பினை அதிகரிக்கும் தன்மை உடையது. புரோஜெஸ்டீரான் வலிப்பினை கட்டுப்படுத்தும் தன்மையுடையது. மூளையில் இருக்கும் ஹைப்போதலாமஸ் என்னுமிடத்திலிருந்து சுரக்கும் ஹார்மோனானது, சுரப்பிகளின் தலைமை செயலகமான பிட்யூட்டரி சுரப்பியினை தூண்டிவிட்டு எஃப் எஸ்எச்(FSH), எல்ஹெச்(LH) என்று சொல்லக் கூடிய இரண்டு ஹார்மோன்களை சுரக்க வைக்கிறது. இவ்விரு ஹார்மோன்களும் பெண்களின் சினைப்பை வரை சென்று முறையே ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்டீரான் ஹார்மோன்களை சுரக்க வைக்கிறது.

மாதவிடாய் நாட்களில்…

பெண்களுக்கு மாதவிடாய் வரும் 28 நாட்களில், முதல் 14 நாட்கள் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் அதிகமாகவும், இரண்டாவது 14 நாட்கள் புரோஜெஸ்டீரான் ஹார்மோன் அதிகமாகவும் இருக்கும். மாதவிலக்குடன் ஏற்படும் வலிப்புக்கு கேடமேனியல் எபிலப்ஸி(Catamenial epilepsy) என்று பெயர். இவ்வகையான வலிப்பு மாதவிலக்கு ஏற்படும் சமயத்திலேயோ அல்லது அதற்கு மூன்று நாட்கள் முன்பிருந்தோ அல்லது மாதவிலக்கு முடிந்து அடுத்து வரும் மூன்று நாட்களிலேயோ வரக்கூடும்(Peri menstrual seizures). பொதுவாக மாதவிலக்கு வந்த முதல் நாளிலிருந்து எண்ணி 14 நாட்கள் கழித்து பெண்களின் சினைப்பையிலிருந்து கருமுட்டை உடையும் இதை ஒவுலேஷன்(Ovulation) என்று சொல்வோம்.

ஹார்மோன்களின் மாறுபாட்டால் இந்த நாட்களிலும் வலிப்பு ஏற்படலாம். இதனை பெரி ஓவுலேடரி(Peri ovulatory seizures) வலிப்பு என்று கூறுவோம். பெண்கள் தனக்கு எந்தெந்த நாட்களில் வலிப்பு வருகிறது என்பதை ஒரு டைரியில் குறிப்பு எடுத்துக் கொண்டு வந்தால், முன்னெச்சரிக்கையாக வலிப்பு வரக்கூடிய நாட்களை முன்கூட்டியே கணக்கில்கொண்டு அசிடோசோலமைடு (Acetazolamide), க்ளோபசம்(Clobazam), க்ளோனசிபம்(Clonazepam) அல்லது புரோஜெஸ்டீரான் லாசன்ஜஸ்(Progesterone lozenges) போன்ற மாத்திரைகளை முன்கூட்டியே கணித்து தேவையான நாட்களில் மட்டும் எடுத்துக் கொண்டார்களேயெனில் மாதவிலக்கு சார்ந்து வரும் வலிப்பினை வெகுவாகக் குறைக்க முடியும்.

கல்யாணம் செய்து கொள்ளலாமா?

இது சமுதாயத்தில் எல்லோருடைய மனதிலும், அதிலும் குறிப்பாக ஆண்களுக்கு தோன்றும் முக்கியமான கேள்வி. நிச்சயமாக கல்யாணம் செய்துகொள்ளலாம். வலிப்பு நோயும் மற்ற நோய்களைப் போன்று தீர்க்கக்கூடிய நோய்தான். தீர்க்க முடியாத வலிப்பு நோய் என்பது மிகக்குறைந்த சதவிகிதம்தான் உள்ளது. அதனையும் தகுந்த மாத்திரைகள் மூலம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியும். ஆனால், பிறவியிலேயே மூளை வளர்ச்சி குன்றி இருப்பவர்களுக்கும் வலிப்பு நோய் இருக்கலாம். அவ்வாறு இருப்பவர்களுக்கு அறிவுத்திறன் குறைவாக இருக்கும்.

தன் குழந்தைகளுக்கு மூளை வளர்ச்சி குறைவாகவே இருந்தாலும், வலிப்பு நோய் கூடவே இருந்தாலும் அவர்களுக்கும் கல்யாணம் செய்து பார்க்க வேண்டும் என்ற எண்ணம் எல்லா பெற்றோர்களின் மனதிலும் கண்டிப்பாக இருக்கும். இதற்கான பதில் மூளை நரம்பியல் மருத்துவரிடம்தான் உள்ளது. அப்பெண்களின் அறிவுத்திறனை ஆராய்ந்து அவர்களால் ஒரு குடும்பத்தை நடத்தக்கூடிய அளவிற்கு மூளை வளர்ச்சி மற்றும் மூளையின் செயல்திறன் உள்ளதா என்பதை அறிந்து ஆராய்ந்து மருத்துவரின் ஒப்புதலுக்கு பின்பே திருமணம் நடத்துவதைப் பற்றி பெற்றோர்கள் எண்ணிப்பார்ப்பது நல்லது. இவ்வாறு மூளைவளர்ச்சி குன்றி வலிப்பு நோயுடன் இருக்கும் பெண்களை தவிர்த்து மற்ற அனைத்து வலிப்பு நோய் உள்ள பெண்களும் திருமணம் செய்து கொள்வதில் தடையேதுமில்லை.

தாம்பத்தியத்தில் ஈடுபடலாமா?

வலிப்பு நோய் உள்ள பெண்களிடம் தாம்பத்தியத்தில் ஈடுபடலாமா? கண்டிப்பாக ஈடுபடலாம். வலிப்பு நோய்க்கும் தாம்பத்ய உறவிற்கும் எந்தவித சம்பந்தமும் கிடையாது அது பரவும் நோயும் அல்ல. அதனால் வலிப்பு நோய் தங்களுக்கும் வந்துவிடுமோ என்ற எண்ணம் ஆண்களின் மனதில் வரத் தேவையே இல்லை.

குழந்தைப்பேற்றில் என்ன சிக்கல்கள் உள்ளன?

வலிப்பு நோயுள்ள பெண்கள் கருத்தரித்த பின்பும் அவர்களது வலிப்பு மாத்திரைகளை தொடர்ந்து விடாமல் சாப்பிட வேண்டும். மாத்திரையினால் சிசுவிற்கு ஏதாவது ஆகிவிடுமோ என்ற பயம் எல்லோரது மனதிலும் தோன்றக்கூடிய சந்தேகம். பிரசவ காலத்தில் வலிப்பு மாத்திரைகளை திடீரென்று குறைத்தாலோ அல்லது நிறுத்தினாலோ வலிப்பு திரும்ப வரும் வாய்ப்புகள் அதிகம், அவ்வாறு வலிப்பு ஏற்பட்டால் தாயின் தொப்புள் கொடியிலிருந்து குழந்தைக்கு செல்லும் ரத்த ஓட்டம் மற்றும் ஆக்சிஜன் அளவு குறைந்து குழந்தையின் உயிருக்கே ஆபத்து ஏற்படலாம். அதனால் மாத்திரைகளின் பக்க விளைவுகளை பற்றி அதிகமாக யோசிக்காமல் பிரசவ காலத்தில் பெண்கள் தமக்கு வலிப்பு வராமல் பாதுகாத்துக் கொள்வதே சாலச்சிறந்தது.

ஒரு சில மருந்துகளே குறிப்பாக வால்பிரோயேட்(Valproate) பினோபார்பிடோன்(Phinobarbitone) ஆகியவற்றை வலிப்பை குறைக்க அதிக அளவில் எடுத்துக்கொண்டால், சிசுவின் உறுப்பின் வளர்ச்சியில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்று அறிவியல் ஆய்வுகள் சொல்கின்றன. பெரும்பாலும் இந்த மருந்துகளை கர்ப்பிணிகளுக்கு மருத்துவர்கள் பரிந்துரைப்பதில்லை. அப்படியே இம் மருந்துகளைத்தான் எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற கட்டாயம் இருப்பின் மருத்துவரின் ஆலோசனைப்படி இந்த மருந்துகளின் அளவை குறைத்துக் கொண்டு வேறு வலிப்பு மருந்துகளை சேர்த்துக்கொள்ளலாம். தாயின் கருவில் இருக்கும் சிசுவிற்கு முதல் மூன்று மாதங்களில் தான் முக்கிய உறுப்புகள் உருவாகின்றன.

எனவே, வலிப்பு நோயுள்ள பெண்கள்தான் கருத்தரித்த உடனேயே அருகில் இருக்கும் மூளை நரம்பியல் மருத்துவரை சந்தித்து தனது வலிப்பு மருந்துகளை ஒழுங்கு படுத்திக் கொள்வது நல்லது. கர்ப்பகாலத்தின்போது உடல் எடை கூடுவதாலும், நீர்ச்சத்து அதிகரிப்பதாலும், உடம்பில் உள்ள ஹார்மோன்கள் மற்றும் புரதங்களில் மாற்றங்கள் ஏற்படுவதினாலும் வலிப்பு மருந்துகளின் செயல் தன்மைகளில்(Pharmacokinetics) சிறிது மாற்றம் ஏற்படும். ஆகவே 2 அல்லது 3 மாதத்திற்கு ஒரு முறை மூளை நரம்பியல் மருத்துவரை சந்தித்து அவர்களின் ஆலோசனைப்படி மாத்திரைகளின் அளவை அதிகரித்தோ அல்லது குறைத்தோ சாப்பிடுவது நல்லது.

சுகப்பிரசவமா சிசேரியனா?

எல்லா வலிப்பு நோய் உள்ள பெண்களுக்கும் சிசேரியன்தான் செய்ய வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. பிரசவத்திற்கான நேரத்தில்தான் இதனை முடிவு செய்ய முடியும். தாயின் உடல்திறன், சிசுவின் வளர்ச்சி, உடம்பில் உடனிருக்கும் வேறு ஏதும் தொந்தரவுகள், வலிப்பு நோயின் தன்மை போன்றவற்றை கருத்தில் கொண்டு மகப்பேறு மருத்துவர் நரம்பியல் நிபுணர், மயக்க மருந்து நிபுணர் அனைவரும் கூடி அந்த நேரத்தில் முடிவு செய்வதை பொறுத்துதான் சுகப்பிரசவமா அல்லது சிசேரியன் டெலிவரியா என்பதை தெளிவாக கூற முடியும்.

தாய்ப்பால் கொடுக்கலாமா?

கட்டாயமாக கொடுக்க வேண்டும். வலிப்பு நோயுள்ள தாய்ப்பால் கொடுத்த தாய்மார்களுடைய குழந்தைகளின் அறிவுத்திறன் மற்றும் செயல்திறன் வலிப்பு நோயுள்ள தாய்ப்பால் கொடுக்காத தாய்மார்களின் குழந்தைகளை விட அதிகமாக இருப்பதாக ஆய்வுகள் எடுத்துரைக்கின்றன. எனவே, தாய்ப்பால் வழியாக வலிப்பு நோய் குழந்தைக்கு பரவி விடுமோ என்ற பயம் அல்லது, தான் எடுத்துக் கொள்ளும் வலிப்பு மாத்திரைகளினால் தாய்ப்பால் மூலமாக குழந்தைக்கு ஏதேனும் தீங்கு வந்துவிடுமோ என்ற எண்ணங்களை கைவிட்டுவிட்டு முழுமையாக ஆனந்தமாக குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பது சாலச்சிறந்தது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சுய இன்பத்தால் ஆண்மை பறிபோகுமா? (அவ்வப்போது கிளாமர்)
Next post மூளையின் திறன் மேம்பட எளிய பயிற்சிகள்!! (மருத்துவம்)