கொவிட் 19 ; ஊர் கூடித் தேரிழுத்தல்!! (கட்டுரை)

Read Time:14 Minute, 0 Second

பேரிடர்காலம் என்பது உயிரிழப்பு மற்றும் உயிராபத்து, பஞ்சம் (பசி, பட்டினி) அடுத்து என்ன செய்வது என்று தீர்மானிக்க முடியாத நிலை போன்றவற்றை உருவாக்குவது. அரசு தொடக்கம் தனி மனிதர்கள் வரையில் எல்லோருடைய திட்டங்களையும் நிர்மூலமாக்கி, நிர்க்கதியாக்கிச் சிரிக்கும்.

ஆகவேதான் பேரிடர்காலத்தை எதிர்கொள்வதற்கு எப்போதும் கூட்டுப் பொறிமுறைகள் அவசியமாகின்றன.

கூட்டுப் பொறிமுறைகள் இல்லாமல் பேரிடர்காலத்தைக் கடக்கவே முடியாது. பேரிடர் காலத்தில் முதலில் தேவைப்படுவது பாதுகாப்பு. இது மூன்று வகைப்படும். ஒன்று உயிர்ப்பாதுகாப்பு. இதற்குள் நோய்த் தடுப்பும் அடங்கும். மற்றது உணவு மற்றும் பசி, பட்டினியில் இருந்து பாதுகாப்பு. இதற்கடுத்ததே தங்குமிடம் உள்ளிட்ட ஏனையவை.
இப்போது நாம் சந்தித்துக் கொண்டிருக்கும் பேரிடர் தொற்று நோயினால் ஏற்பட்டிருப்பது. இது ஏனையவற்றிலிருந்து வேறுபட்டது.

ஏற்கனவே நாம் பல பேரிடர்களைச் சந்தித்திருக்கிறோம். யுத்தம், வெள்ளம் – மண்சரிவு, சுனாமி, புயல் போன்றவை உருவாக்கிய பேரிடர்கள் நமக்கு நன்கு அறிமுகம். இந்தப் பேரிடர்கள் பெரும்பாலும் ஒரு குறிப்பிட்ட பிரதேசத்தை அல்லது சில பிரதேசங்களையே அதிகமாகப் பாதித்திருக்கும்.

ஆகவே ஏனைய பிரதேசத்தில் உள்ள மக்களுக்கு பாதிப்புகள் ஏற்படாதிருக்கச் சந்தர்ப்பமுண்டு. அப்படிப் பாதிப்பைச் சந்திக்காதவர்கள், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவக் கூடியதாக இருக்கும். அரசுக்கும் இது ஓரளவுக்கு நிலைமையைச் சமாளிக்கக் கூடியதாக இருக்கும். பகுதி நிலைப்பாதிப்பை ஈடு செய்வதும் கையாள்வதும் ஓரளவுக்குச் சுலபமானது.

தவிர, வெளிச் சக்திகள், சர்வதேச தொண்டு அமைப்புகள், நிறுவனங்கள், கொடையாளர்கள், வெளிநாடுகள் போன்றனவும் இந்தப் பகுதி நிலைப் பாதிப்புகளுக்கு உதவும்.
ஆனால், இந்தக் கொரோனா தொற்று உருவாக்கியுள்ள பேரிடர் என்பது அவ்வாறனதல்ல. அது எல்லோரையும் பாதிக்கக் கூடியது. உலகளாவியது. என்பதால், உலகளாவிய ரீதியில் கிடைக்கும் இடர்கால உதவிகளையும் ஆதரவையும் எதிர்பார்த்த அளவுக்குப் பெற முடியாது. ஏனெனில் அங்கும் – வெளிநாடுகளிலும் – பாதிப்பும் பிரச்சினையும் இருக்கும்போது அவர்கள் தங்களையே முதலில் பாதுகாத்துக் கொள்வதற்கு முயற்சிப்பர். அதற்குப் பிறகே பிறரைப்பற்றி – நம்மைப்பற்றிச் சிந்திப்பர்.

எனவேதான் மிக மிக அவசியமாகக் கூட்டுப் பொறிமுறையில் இதை – நம்மைச் சுற்றியுள்ள பேரபாயத்தை – எதிர்கொள்ள வேண்டியது அவசியமாகிறது.
ஏனெனில் இந்தக் கொரோனா என்பது எந்த வடிவத்தில் எப்போது அபாயத்தை உருவாக்கும் என்று தீர்மானிக்க முடியாதது. மட்டுமல்ல, வெள்ளம், மண்சரிவு, புயல் போன்றவற்றைப்போல இது ஒரு சில நாட்களுடன் அகன்று போகக் கூடியதுமல்ல.

எனவேதான் நாமெல்லாம் தொடர்ந்து லொக் டவுணில் வீட்டுக்குள்ளேயே முடங்கி இருக்க வேண்டியிருக்கிறது. ஏறக்குறைய இதுவும் ஒரு யுத்தகாலத்தைப் போன்றதே. மிகக் கொடிய எதிரியுடன் போராடுவதற்கு நிகரானது.

எதிரித் தரப்பு எப்படித் தாக்கும்? எப்போது தாக்கும்? எந்த வடிவத்தில் தாக்கும் என்று தெரியாத நிலையை ஒத்தது.

எனவே எப்போதும் நாம் எதிரியைக் குறித்து உச்சநிலைப் பாதுகாப்பு ஏற்பாட்டுடன் இருக்க வேண்டும். விழிப்போடு இருக்க வேண்டும். எதிரியைக் குறித்து அவதானிப்போடும் மதிப்பீட்டோடும் இருப்பது அவசியம். அப்படியிருந்தால்தான் நாம் அதற்கேற்ற மாதிரி நம்மைப் பாதுகாத்துக் கொள்ள இயலும்.

ஏற்கனவே பல பேரிடர்களைச் சந்தித்த அனுபவம் எங்களுக்கு உண்டு. இதென்ன பெரிதா என்று நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு நிற்க முடியாது.

ஆனால், இதைப் பலரும் புரிந்து கொண்டதாக இல்லை. கொரோனா தொற்றுக்குள்ளாகியிருக்கும் மாவட்டங்களைத் தவிர்ந்த ஏனைய பிரதேசங்களில் இதைக்குறித்த எச்சரிக்கை உணர்வு மிகக் குறைவாகவே இருக்கிறது.

பாதிப்பில்லாத மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் ஊரடங்கு நிலையை மீறியே செயற்பட முனைகிறார்கள். படைத்தரப்பும் பொலிசாரும் கட்டுப்பாடுகளை விதித்தாலும் அதை உச்சிக் கொண்டு மீறுவதிலேயே கவனம் செலுத்தப்படுகிறது.

இதற்கு இன்னொரு காரணம், பிற நாடுகளைப்போல இலங்கையில் உயிரிழப்புகள் அதிகமாக ஏற்படாதிருப்பதாகும்.

ஆனால், கொரோனா தொற்று என்பது வரவரக் கூடிக் கொண்டே செல்கிறது. இப்பொழுது இனங்காணப்பட்ட தொற்றாளர்களின் எண்ணிக்கை எண்ணூறைக் கடந்து விட்டது. இது மேலும் கூடிக் கொண்டு போக்கூடிய சாத்தியங்களே உண்டு.

எனவேதான் இதற்கெல்லாம் அவசியமான கூட்டுப்பொறிமுறையைப் பற்றி நாம் ஆழமாகச் சிந்திக்க வேண்டும் என்கிறோம். அரசாங்கம் இதற்கான சாத்தியங்களை உருவாக்க வேண்டும். அரசியல் சார்புகள் – வெறுப்புகளுக்கு அப்பால் அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கிய கூட்டுப் பொறிமுறையை உருவாக்க வேண்டும்.

எந்தக் காரணம் கொண்டும் இதைத் தாமதமாகச் செய்யக் கூடாது. இப்பொழுது அரசாங்கத்தின் நிர்வாக அலகுகளின் வழியாகவும் அரசாங்கத்துக்கு இணக்கமான தரப்புகளின் வழியாகவுமே இடர் நிவாரணப்பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன. இது போதாது.

பல தரப்புகளையும் இந்த இடத்தில் இணைத்துக் கொள்வதன் மூலம் புதிய சாத்தியப்பாடுகளைக் கண்டறியக் கூடியதாக இருக்கும். அரசாங்கத்தின் சுமையும் குறையும். நெருக்கடிகளையும் தணித்துக் கொள்ள முடியும்.

முதலில் தொற்று அதிகரிக்காதிருப்பதற்கான சிறப்புப் பொறிமுறையோடு இணைந்த விழிப்புணர்வும் பொறுப்புடன் நடக்கும் ஏது நிலையும் உருவாக்கப்பட வேணும். அடுத்தது உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் விநியோகம், உதவி வழங்கல் போன்றவை.

இதைச் செய்யும் வகையில் இந்தப் பேரிடர் காலத்தில் ஏராளம் மனிதாபிமானப் பணிகள் பல்வேறு தரப்பினரால் முன்னெடுக்கப்படுகின்றன. உள்நாட்டிலும் வெளியே – புலம்பெயர் நாடுகளிலும் இருந்து இந்தப் பணிகளுக்கான ஒத்துழைப்புகள் தாராளமாகக் கிடைத்துள்ளன.

இவ்வளவு பேர் இந்தச் சூழலுக்குள்ளேயே முன்னின்று உதவிப் பணிகளில் செயற்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பது ஆச்சரியமே. வீட்டுக்கு வெளியே வந்தால், உயிராபத்து ஏற்படக் கூடிய சாத்தியம் உண்டென்று தெரிந்து கொண்டே தங்கள் நேரத்தையும் உடல் உழைப்பையும் மட்டுமல்ல, நிதியையும் இவர்கள் செலவழிக்கிறார்கள்.
இதற்கு எதிர்பார்த்ததையும் விட அதிகமான உதவிகளையும் ஆதரவையும் புலம்பெயர்ந்த சமூகத்தினரும் செய்கின்றனர்.

இவ்வளவு பேர் மனிதாபிமானப் பணிகளில் ஈடுபடுவதற்கு எங்கள் மண்ணில், எங்கள் நாட்டில் உள்ளனரா? என்று வியப்புடன் பார்க்கிறோம். இது மகிழ்ச்சியளிக்கும் சேதியே. இவ்வளவு பேர் மனிதாபிமானப் பணிகளில் ஈடுபடக் கூடியதாக இருக்கும்போது நாம் எவ்வளவோ நற்காரியங்களைச் செய்ய முடியும் என்ற நம்பிக்கை பிறக்கிறது.

இந்த மனிதாபிமானப் பணிக்குழுக்கள் ஒழுங்கமைக்கப்பட்டதொரு பொறிமுறையில் செயற்பட்டால் அது பெரிய சக்தியாக இருக்கும். உதவிப் பணிகளில் நிகழும் விடுபடல்கள், குறைபாடுகள் போன்றவற்றைத் தவிர்க்க முடியும். அத்துடன் ஒரு பரந்த வலையமைப்பில் ஒருவரையொருவர் அறிந்து கொள்ளவும் ஒருவரோடு ஒருவர் இணைந்து செயற்படவும் வாய்க்கும். இது எதிர்காலத்தில் இதை விட வேறு பல விடயங்களைச் செய்வதற்கான சூழலையும் உருவாக்கும் என சிலர் சொல்கின்றனர்.

இல்லையில்லை. அப்படிச் செய்ய முற்பட்டால் இந்தக் குழுக்களின் தன்னார்வம் கெட்டுப்போகக் கூடிய வாய்ப்புகளே உண்டு. குழு மோதல்கள், அபிப்பிராய பேதங்களால் பணித் தாமதங்கள் மட்டுமல்ல, இடைஞ்சற்பாடுகளும் ஏற்படும். சிலர் மேலெழுவதும் சிலர் புறக்கணிக்கப்படுவதும் நிகழும். இது பலரையும் மனச்சோர்வுக்குள்ளாக்கி விடும். இந்தத்தன்னார்வ உணர்வும் சுயாதீனமும் கெட்டு விடும். ஆகவே இதை இப்படிச் சுயாதீனமாக விடுவதே சிறப்பு என்கின்றனர் வேறு சிலர்.

ஆனாலும் இவர்கள் எழுதப்படாத விதியைப்போல இணைந்து கட்டமைக்கப்படாத அமைப்பாகவே செயற்படுகிறார்கள். தங்கள் உதவி தேவைப்படும் இடங்களை பகுப்பாய்வு செய்கின்றனர். பின்னர் அதைக் குறித்த மதிப்பீட்டைச் செய்கின்றனர். அங்குள்ள பொது அமைப்புகள், பொறுப்பான உத்தியோகத்தர்கள், அதிகாரிகள் போன்ற தரப்புகளோடு தொடர்பு கொண்டு நிலைமைகளைக் கண்டறிகிறார்கள். இதற்குப் பிறகே குறித்த பிரதேசத்திற்கு என்ன வகையான உதவியைச் செய்வது? எவ்வளவு உதவிகளைச் செய்வது என்ற மதிப்பீட்டுக்கு வருகின்றனர்.

ஆக தொடக்கத்தில் சில ஒழுங்கீனங்கள் காணப்பட்டாலும் இப்பொழுது வரவர ஒரு செழுமை கூடி வருவதை அவதானிக்க முடிகிறது.

இதன்படி, இப்பொழுது செயற்படும் இந்த பேரிடர்கால மனிதாபிமானக் குழுக்களை அவற்றின் சுயாதீனத்தன்மையோடு இயங்க விடுவது சிறப்பே. ஆனால், இவற்றுக்கான அங்கீகாரத்தை அரசும் சமூகமும் வழங்க வேணும். கூடவே ஒரு பொது வலையமைப்பை உருவாக்கி அவற்றில் இவை ஒவ்வொன்றும் சுயாதீனத் தன்மையோடு இயங்கும் முறையில் ஒருங்கிணைக்கலாம். அதில் கூட்டுப் பொறிமுறையின் அவசியம், அதனுடைய தன்மை, அதன் சிறப்பு என்பதைப் பயில வைக்கலாம். இதன் மூலமாக நாம் கூறும் கூட்டுப் பொறிமுறையை நோக்கி இவற்றை நகர்த்த முடியும்.

ஊர் கூடித் தேரிழுப்பதைப்போன்றதே இது.

கொரோனா தொற்றுக்கு ஒரே வலையமைப்பில் அல்லது ஒத்த அடிப்படையில் நாமெல்லாம் லொக்டவுனுக்குக் கட்டுப்பட்டிருக்கவில்லையா? அந்த ஒருங்கிணைப்பில் கூட்டாகச் செயற்பட வில்லையா, அதைப்போல.

கருணாகரன்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post செக்ஸ் உறவு சிறப்பாக இருக்க இரவில் ‘ஃப்ரியா இருங்க’…!! (அவ்வப்போது கிளாமர்)
Next post எப்படி இருக்கிறது விமர்சனம்? (மகளிர் பக்கம்)