அதிகரிக்கும் கொரோனா தொற்று; சவாலை முறியடிக்குமா இலங்கை!! (கட்டுரை)

Read Time:13 Minute, 8 Second

இலங்கையில் கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தோரையே பீடித்துக் கொண்டதன் தாக்கம் அடுத்து வரும் தினங்களில் பிரதிபலிக்கப் போகிறது என்ற அச்சம் அனைவரிடத்தும் ஏற்பட்டுள்ளது. கட்டுப்படுத்தலில் அரப்பணிப்புடன் ஈடுபட்ட கடற்படை வீரர்களின் குடும்ப உறுப்பினர்களே அடுத்துவரும் தொற்றாளர்கள் வரிசையில் உள்ளனர் என்ற துயரம் நாட்டை இன்னமும் இறுக்கியுள்ளது.

கொரோனா எனும் கொடிய வைரஸ் இன்று உலக நாடுகளையே தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. இத் தொற்றினால் இன்றளவில் (30.04.2020) உலகலாவிய ரீதியில் 3,222,315 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் 228,269 பேர் உயிரிழந்துள்ளனர். 1,005, 440 பேர் குணமடைந்துள்ளனர்.

கொரோனா தொற்றால் அதிக மரணங்களை சந்தித்துவரும் நாடாக அமெரிக்கா காணப்படுவதுடன் இங்கு இன்றளவில் (30.04.2020) தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 61 ஆயிரத்தை கடந்துள்ளது. 1,064,533 பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனரென சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன இதேவேளை அமெரிக்காவில் ஒரே நாளில் 2 ஆயிரத்து 390 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள ஏனைய நாடுகளான ஸ்பெயினில் 24,725 பேரும் இத்தாலியில் 27,682 பேரும் பிரான்ஸில் 24,087 பேரும் இங்கிலாந்தில் 26,097 பேரும் இதுவரை உயிரிழந்துள்ளனர். இவை வைரஸ் தொற்றுக்குள்ளானோர் மற்றும் உயிரிழந்தோர் எண்ணிக்கையில் முன்னணி வகிக்கும் நாடுகளாக காணப்படுகிறது.

இவ்வாறு கொரொனா வைரஸ் தொற்று இலங்கை உள்ளடங்களாக 210 நாடுகளில் ஏற்பட்டுள்ளது. இதில் இலங்கை உயிரிழப்பு மற்றும் தாக்கத்தின் பட்டியலில் முன்னணியில் இல்லையென்பதால் இலங்கை ஆபத்தில் இல்லை. நாட்டில் வைரஸ் தொற்று இல்லை என்ற முடிவிற்கு வந்துவிட முடியாது.

மேற்குறிப்பிட்ட இழப்புக்களில் முன்னணி வகிக்கும் நாடுகளை பொறுத்தவரையில் மக்கள் தொகை அதிகம் இதற்கேற்ப நெருக்கடிகளும் அதிகம் இதனால் தொற்றின் வீச்சும் பரம்பலும் சிந்தனைக்கு எட்டாதவாறு அதிகரித்துள்ளது. இலங் கையிலும் மக்கள் தொகை மற்றும் அதுசார் நெருக்கடியுடன் ஒப்பிடும் போது அபாயமும் அச்சுறுத்தலும் அதிகமாகவே உள்ளது எனலாம்.

நாட்டில் ஆரம்பத்தில் தொற்று இனங்காணப்பட்ட போது அரசாங்கம் விரைவாக நடவடிக்கைகள் மேற்கொண்டிருந்தாலும் ஏற்கனவே நாட்டிற்குள் நுழைந்த வைரஸ் காவிகளால் நாட்டில் தொற்று ஆங்காங்கே இனங்காணப்பட்டது. நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டு நாடு பூராக ஊரடங்கு சட்டம் அமுல்செய்யப்பட்டாலும் இனங்காணப்பட்ட தொற்றாளர்களுடன் பழகியவர்கள் நெருங்கியவர்கள் என அனைவரையும் தனிமைப்படுத்தி அரசு முழுவீச்சாக செயற்பட்டதென்று கூறினாலும் நாளுக்கு நாள் தொற்றாளர்களின் எண்ணிக்கை உயர்ந்துகொண்டுதான் இருந்தது.

புதிதாக இனங்காணப்படும் தொற்றாளர்கள் ஏற்கனவே தனிமைப்படுத்தல் முகாம்களில் இருந்தவர்கள் ஆகையால் மக்கள் அச்சமடையத் தேவையில்லை என நாட்டு மக்களை அரசு ஆசுவாசப்படுத்தியது. சற்றும் எதிர்பாராத விதமாக நாட்டின் கடற்படை வீரர்களுக்கு வைரஸ் தொற்று இனங்காப்பட்டமை நாட்டில் அதிர்வலையை தோற்றிவித்தது.

கடற்படை வீரர்களில் முதலாவதாக இனங்காணப்பட்டவர் வெலிசறை கடற்படை முகாமில் கடமையாற்றியவர் இவர் தனிமைப்படுத்தல் நடவடிக்கையில் ஈடுபபட்டவர் என்பதுபின்னர் தெரியவர வெலிசறை கடற்படை முகாமில் கடமையில் இருந்த அனைத்து வீரர்களும் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தபட்டனர். தொற்றாளர்களின் எண்ணிக்ைக அதிகரித்தது.

இதுவரையில் ஆமை வேகத்தில் நகரந்த தொற்றாளர் எண்ணிக்கை திடீரென வேகமாக அதிகரித்தது. இன்றளவில் (30.04.2020) நாட்டில் 649 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். 07 பேர் உயிரிழந்துள்ளதுடன் 139 பேர் குணடைந்துள்ளனர். 226 கடற்படையினர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட கடற்படை வீரர்களில் பெரும்பாலானவர்களுக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து அரசு உடனடியாக முப்படையினரின் விடுமுறையினை இரத்து செய்து விடுப்பில் இருக்கும் அனைத்து வீரர்களும் கடமைக்கு திரும்ப வேண்டும் எனவும் அறிவித்தது.

அவ்வாறு விடுப்பில் இருந்து மீண்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். இதன்போதும் தொற்றாளர்கள் உறுதிப்படுத்தப்பட்டனர்.

முதலாளித்துவ வல்லரசு நாடுகளே இந்த வைரஸ் பாதிப்பினை எதிர்கொள்ளமுடியாமல் திக்குமுக்காடி வரும் நிலையில் நம் நாட்டில் கட்டுப்படுத்தல் செயற்பாட்டு பொறிமுறையில் ஈடுபட்ட படையினர்களுக்கு தேவையான பாதுகாப்பு அங்கிகள் ஏன் வழங்கப்படவில்லை ?

மருத்துவ உபகரணங்களுக்கான பற்றாக்குறை இருந்தபோதும் பின்பு வெளிநாட்டு நன்கொடைகள் நாட்டிற்கு கிடைத்தது. இதனை அரசாங்கம் வெளிப்படையாக தெரிவித்தது. இதனைவிட இலங்கை ஒரு தைத்த ஆடைகள் ஏற்றுமதி நாடாக திகழ்கின்றது. இந்நிலையில் நாட்டில் பல ஆடை உற்பத்தித் தொழிற்சாலைகள் இருக்கும் பட்சத்தில் தொற்றைக் கண்டறிதல், தனிமைப்படுத்தல் மற்றும் மருத்துவ சேவைகள் வழங்கல் ஆகியவற்றில் ஈடுபடுபவர்களுக்கு இந்த ஆடைத்தொழிற்சாலைகள் மூலம் பாதுகாப்பு அங்கிகளை உருவாக்கி வழங்கியிருக்க முடியும். ஆனால் ஆடைத்தொழிற்சாலைகளும் ஊரடங்குச் சட்டத்தினால் முடக்கப்பட்டதால் அதுவும் சாத்தியமற்றிருக்கலாம்.

தனிமைப்படுத்தல் நடவடிக்கையில் ஈடுபட்ட படையினர் தமது சீருடையுடன் வெறுமனே கையுறை மற்றும் சுவாசக் கவசம் மட்டும் அணிந்து பணிகளை முன்னெடுத்தனர்.

தொற்றாளர்களுடன் நேரடியாக தொடர்புகைளை பேணவேண்டியதை படையினரால் தவிர்க்கமுடியவில்லை.

தொற்று உறுதிப்படுத்தப்பட்ட கடற்படை வீரர்கள் விடுமுறையில் சென்ற இடங்கள் மற்றும் பிரதேசங்களை இனங்கண்டு அவற்றை முடக்குதல் மற்றும் நபர்களை தனிமைப்படுத்தும் நடவடிக்கையினை அரசுமேற்கொண்டது.

இதற்கமைய நாவலப்பிட்டி பிரதேசத்துக்கு விடுமுறையில் சென்றிருந்த கடற்படை வீரர்கள் இருவர் கொரோனா தொற்றாளர்களாக இனங்காணப்பட்டதை தொடர்ந்து அங்கு சகல வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டன.

குருநாகல் மாவட்டத்தில் இனங்காணப்பட்ட 9 இராணுவா வீரர்களை தொடர்ந்து 326 பேர் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

அநுராதபுரம் மாவட்டத்தில் 9 பேருக்கு தொற்று இனங்காணப்பட்டது. மேலும் வவுனியா தெற்கு களுத்துறை ஆகிய பகுதிகளிலும் படையினர் தொற்று இனங்காணப்பட்டதை தொடர்ந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதேபோல் தொற்றினால் பாதிக்கப்பட்ட கடற் படையினரின் அனைத்து குடும்ப உறுப்பினர்கள் மற்றும் அவர்களுடன் நெருங்கிய தொடர்பினை பேணிய அனைவரும் தனிமைப்படுத்தலுக்காக தனிமைப்படுத்தல் மையங்களுக்கு கடந்த 28 ஆம் திகதி அனுப்பப்பட்டுள்ளனர்.

இதன் மேலதிக நடவடிக்கையாக அனைத்து படை முகாம்களையும் ஆய்வு செய்து முகாம்களின் சுகாதார பாதுகாப்பினை உறுதிசெய்வதற்கு விசேட ஜனாதிபதி செயலணி தீர்மானித்தது.

முகாம்களில் உள்ள சுகாதார நடைமுறைகள் குறித்து அதிக கவனம் செலுத்துவதாக செயலணியின் தலைவர் மேல் மாகாண ஆளுனர் ரொஷான் குணதிலக்க தெரிவித்துள்ளார்.

அத்துடன் சமூக இடைவெளி உள்ளிட்ட சுகாதார ஆலோசனைகள் சரியாக செயற்படுத்தப்படுகின்றதா? என்று ஆராயப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

சிறிய முகாம்களின் தலைவர்களை அழைத்து சுகாதார நடைமுறைகள் குறித்து தெளிவுப்படுத்தவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டிலுள்ள 7 வைத்தியசாலைகளில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்கப்படுவதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பு ஐ.டீ.எச். வெலிகந்த கொழும்பு-கிழக்கு இரணவில காத்தான்குடி மினுவங்கொட மற்றும் வெலிசர கடற்படை வைத்தியசாலைகளில் கொரோனா தொற்றாளர்களுக்கு சிகிச்சையளிக்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

வைரஸ் தொற்று விடயத்தில் மட்டுமல்ல எந்த ஒரு இடர் சந்தர்ப்பத்திலும் முன்னாலுள்ள எதிரி யார்? அதன் வலிமை என்ன? அதன் தாக்கத்தின் பரம்பல் விட்டம் என்ன? எவ்வாறு தாக்கும்? தாக்குதலின் முதல் படி என்ன? இவ்வாறான கேள்விகளுக்கு பதில்களைக் கொண்டே எதிர்ப்புக்கான திட்டங்கள் வகுக்க வேண்டும் இவ்வாறு வகுக்கப்படும் திட்டங்களே இழப்புக்களை குறைத்து வெற்றியைத்தரும். இல்லாவிட்டால் இழப்புக்களே அதிகமாகும்.

கொரோனா வைரஸ் விடயத்தில் இந்தக் கேள்விகளுக்கான பதில்கள் தெளிவுற்றுள்ள நிலையில் அதற்கான அணுகுமுறையுடன் திட்டங்கள் வகுக்கப்பட்டதா என்ற கேள்வி எழுகின்றது. உலகின் மிகப்பெரிய வல்லரசான அமெரிக்காவுக்கே கொரோனாவைக் கட்டுப்படுத்த முடியாது திண்டாடுகின்ற நிலையில் எம்முன் உள்ள சவாலானது மிகப்பெரியதென்றே எண்ணத்தோன்றுகின்றது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஜாதிக்காய் நேச்சுரல் வயகரா!! (அவ்வப்போது கிளாமர்)
Next post அணுமின் நிலைய கட்டிடங்களை வெடி வைத்து தகர்க்கும் காட்சிகள்!! (வீடியோ)