வெறும் குடிநீரை மருத்துவ நீராக மாற்றலாம்!! (மருத்துவம்)

Read Time:9 Minute, 11 Second

நமது உடலில் சுமார் 60% தண்ணீர்தான். ஆனால், கோடை காலங்களில் இந்த நீரானது வெப்ப மிகுதியால் வியர்வை, மூச்சுக்காற்று என பலவிதங்களில் ஆவியாகி வெளியேறி விடுகிறது. இப்படி கோடை காலங்களில் உடல் இழந்த நீரை சமன்படுத்த சிறந்த பானம் தண்ணீர்தான்!’’ என்று அடித்துச் சொல்கிறார்கள் குடிநீர் நிபுணர்கள்.கோடை காலத்தைச் சமாளிக்க நீரைத் தவிர வேறு என்னென்ன பானங்களை அருந்தலாம்? மருத்துவர்களிடம் கேட்டோம். ‘‘நம்முடைய லைஃப் ஸ்டைல்தான் ஒரு நாளில் எவ்வளவு நீரை அருந்தவேண்டும் என்பதை தீர்மானிக்கிறது. வீட்டுக்குள்ளோ அல்லது அலுவலகத்துக்குள்ளோ இருப்பவர்கள் நேரடியான வெயிலால் பாதிக்காததால் அவர்களின் உடல் அவ்வளவாக நீரை இழப்பதில்லை.

இந்தக் காலங்களில் அவர்கள் ஒரு நாளுக்கு சுமார் ஒன்றரை லிட்டரிலிருந்து 2 லிட்டர் வரை தண்ணீர் குடிக்கலாம். ஆனால், வெய்யிலில் அலைந்து திரிபவர்கள் ஒரு நாளைக்கு 2லிருந்து 3 லிட்டர் வரை நீரை குடிக்க வேண்டும். ஒரு விளையாட்டு வீரன் மைதானத்தில் விளையாடும்போது அவனது உடலிலுள்ள நீரானது வியர்வையாகவும், ஆவியாகவும் வெளியேறும்.இந்த மாதிரியான நேரத்தில் ஒவ்வொரு மணி நேரத்துக்கும் ஒரு லிட்டர் தண்ணீராவது அந்த நபருக்கு தேவைப்படும். ஆகவே குடிநீரின் அளவு என்பது எவ்வளவு நீர் நம் உடலைவிட்டு வெளியேறுகிறதோ அந்தளவு பருக வேண்டும். சிம்பிளாகச் சொல்வது என்றால், எவ்வளவு தாகம் எடுக்கிறதோ அவ்வளவு நீரைப் பருகவேண்டும்…’’ என்று சொல்லும் சத்துணவு மருத்துவரான தாரிணி கிருஷ்ணனிடம் குடிக்கும் நீரின் தன்மையிலும் பல விவாதங்கள் இருப்பதைப் பற்றிக் கேட்டோம்.

‘‘அதிக சூடாகவும், அதிக கூலாகவும் குடிக்கக்கூடாது. வெயில் காலங்களில் கூலாக குடிக்கும்போது ஆரம்பத்தில் ஒரு திருப்தி ஏற்படும். ஆனால், மீண்டும் தாகம் ஏற்பட்டு குடிநீர் குடிக்கும் நிலைமைக்குத்தான் அது நம்மைக் கொண்டு செல்லும். அதனால் வெறும் நீரைக் குடிப்பதுதான் பெஸ்ட். அல்லது வெயில் 30 டிகிரி கொளுத்தினால் நீரை கொஞ்சம் 31 டிகிரிக்கு மிதமாக சூடாக்கி குடிக்கலாம்.இந்த மிதமான சுடுநீர் தாகத்தை விரைவாகப் போக்கும். அல்லது நீரை மண்பாண்டங்களில் சேகரித்து வைத்து குடிக்கலாம். இந்த நீர் பொதுவாக வெளியில் இருக்கும் வெப்பத்தைவிட இரண்டு டிகிரியாவது குறைவாக இருக்கும். பழங்களை ஜூஸாகக் குடிப்பதைவிட பழங்களாகவே சாப்பிடுவதுதான் நல்லது. ஜூஸ் குடிக்க குறைந்தது இரண்டு மூன்று பழங்களையாவது பயன்படுத்துவோம்.

ஆனால், பழங்களாக சாப்பிடும்போது ஒரு பழத்தில் முடித்துக் கொள்வோம். காரணம், பழங்களை சுவைத்துச் சாப்பிடும்போது நம் வயிறு நிரம்பிவிடும். கொஞ்சம் கொஞ்சமாக அது நம் ரத்தத்தில் கலந்து பசியைப் போக்கும். ஜூஸை ஒரே மடக்கில் குடித்துவிடுவதால் அது உடனடியாக நம் பசியைப் போக்காது. இதனால் இரண்டு மூன்று டம்ளர் ஜூஸாவது குடிப்போம்.
இதனால் ஜூஸில் கலக்கப்படும் சர்க்கரை, நம் உடலில் அதிகமாகப் போய்ச் சேரும். உடல்பருமன் சீக்கிரத்தில் ஏற்படும். அதோடு ஒரு பழத்தை கடித்து உண்ணும்போது அதிலுள்ள நார்ச்சத்துக்கள் நம் உடலுக்குப் போய்ச்சேரும். மலச்சிக்கலைத் தீர்க்கும். இதனால் மலச்சிக்கல் வழியாக வரும் புற்றுநோயைக் கூட இது தடுக்கும்.

குளிர்பானங்களை பொறுத்தளவில் அவை அதிகப்படியாக குளிரூட்டப்பட்டது. தவிர கலர் போன்ற சேர்க்கைகள், பழக்கூழை கெடாமல் இருக்க பயன்படுத்தப்பட்ட ரசாயன சேர்க்கைகள், கார்பன்-டை-ஆக்சைடு, அசிடிட்டி போன்ற கலப்புகள் இதில் இருப்பதால் அவை தாகத்தையும் தீர்க்காது. ஆரோக்கியத்தையும் கெடுக்கும். ஒரு மில்லி லிட்டர் குளிர்பானத்தில் சுமார் 1 கலோரி இருக்கிறது.
அப்படியென்றால் நாம் ஒருநாளைக்கு குடிக்கும் ஒரு லிட்டர் குளிர்பானத்தில் சுமார் 1000 கலோரி இருக்கும். ஒரு மனிதனுக்கு, ஒரு நாளைக்கு உயிர்வாழ்வதற்கான கலோரியின் தேவையே சுமார் 1800லிருந்து 2000 வரைதான். அப்படியிருக்க 1 லிட்டர் குளிர்பானத்திலேயே 1000 கலோரி வந்துவிடுவதால் நாம் உண்ணும் எல்லா உணவுகளுமே நம் உடலின் கலோரி அளவை ஏற்றிவிடும்…’’ என்கிறார் சத்துணவு மருத்துவரான தாரிணி.

சரி. குடிநீரையே மருத்துவ குணம் கொண்டதாக மாற்ற முடியுமா? ‘‘தாகத்தை நீர் குடித்து சமாளித்து விடலாம் என்றாலும் உடல் சூடும், குடிக்கும் நீர் வயிற்றை நிரப்புவதால் பசியின்மையும், அதனால் ஏற்படும் சோர்வும் நம்மைத் தொற்றிக் கொள்ளும். இதற்கும் நீர்தான் சரியான தீர்வு என்றாலும் நீரோடு சில மருத்துவ குணம்கொண்ட பொருட்களைச் சேர்க்கும்போது அது பல பிரச்னைகளைத் தீர்க்கும்…’’ என்று டிப்ஸ் கொடுக்கிறார் குழந்தைகளுக்கான ஆயுர்வேத மருத்துவரான மதுமிதா.

பட்டையக் கிளப்பு!

பட்டை இயற்கையான வடிவத்தில் கசப்பாக இருக்கும். பட்டையை அப்படியே உண்டால் உடலை சூடாக்கும். அதுவே பொடியாக்கி நீரில் கொதிக்க வைக்கும்போது குளிரூட்டும் பொருளாக அதே பட்டை மாறிவிடும். இந்த நீரை அருந்தினால் உடம்பில் ஏற்படும் சூடு தணியும். தொண்டை வறட்சி நீங்கும்.

ஏலேலோ ஏலக்காய்!

பட்டை மாதிரியே இயற்கையாக சூட்டை கொடுக்கும் உணவுதான் ஏலக்காயும். ஆனால், பொடியாக்கி நீரில் கொதிக்க வைக்கும்போது பட்டை மாதிரியே குளிராகி நம் தாகத்தைத் தணிக்கும். அத்தோடு உடல் சூட்டைத் தணித்து பசியைப் போக்கும்.

கெட்டிப் பய வெட்டிவேர்

இதையும் பொடி செய்து நீரில் கொதிக்க வைத்துக் குடித்தால் உடல் குளிரும். எரிச்சல் குறையும். உடல் பொலிவு பெறும். வாந்தி போன்ற பிரச்னைகள் தீரும்.

நன்னா நன்னாரி

நன்னாரி சர்பத் என்றால் நமக்குத் தெரியும். ஆனால் அந்த சர்பத்தை எந்த நீரில் கலக்குகிறார்களோ, அதை எந்தக் கை கலக்குகிறதோ என்று நமக்குத் தெரியாது. எனவே நன்னாரியை வாங்கி வீட்டு நீரில் கொதிக்கவைத்துக் குடித்தால் உடல் சூடு தணியும். உடல் எரிச்சல் குறையும். காய்ச்சல் வருவது மாதிரி தோன்றும் எண்ணத்தையும் குறைக்கும்.

லகோ லவங்கம்

இதுவும் நம் உடம்பை குளிரூட்டும். தாகத்தைத் தீர்க்கும். ஜீரணத்துக்கு உதவும். உடல் வலியைப் போக்கும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post செக்ஸ் ஆசை ஆணுக்கும், பெண்ணுக்கும் எப்போது உண்டாகிறது? (அவ்வப்போது கிளாமர்)
Next post கொரோனா உயிரிழப்புகளுக்கு இதுதான் காரணம்? (உலக செய்தி)