டயட் மேனியா!! (மகளிர் பக்கம்)

Read Time:18 Minute, 14 Second

டயட் மேனியாவில் நாம் இதுவரை உலகின் மிக முக்கியமான டயட்கள் ஒவ்வொன்றைப் பற்றியும் பார்த்துவந்தோம். உண்மையில் எத்தனை வகையான டயட்கள் இங்கு உள்ளன என்று கேட்டால் அதை எண்ணிக்கையில் சொல்வது மிகக் கடினம். பல லட்சக்கணக்கான மக்கள் குழுக்கள் உள்ள இவ்வுலகில் பலவிதமான டயட் முறைகளை காலகாலமாகக் கடைப்பிடிக்கிறார்கள்.

இதைத்தவிர, மருத்துவர்கள், விஞ்ஞானிகள், உணவியல் நிபுணர்கள் போன்ற துறைசார்ந்த நிபுணர்கள் உருவாக்கிய நவீன டயட்களும் உள்ளன. இப்படியான நவீன டயட்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு சிறப்புக் காரணத்துக்காக உருவாக்கப்படுபவை.

உதாரணமாக, சர்க்கரை நோயாளிகள், முதியவர்கள், விளையாட்டு வீரர்கள் ஆகியோருக்கும் சிறப்பு டயட் உண்டு. ஆனால், பெரும்பாலான டயட்கள் எடைக்குறைப்பை மையமாகக் கொண்டே உள்ளன.

சிறப்பு டயட்களில்கூட சிலவற்றைப் பின்பற்றினால் எடைக்குறைப்பும் சேர்ந்தே நிகழும் டயட்களும் உள்ளன. இவை ஒவ்வொன்றையும் அந்தந்த தேவை உள்ளவர்கள் மட்டுமே மருத்துவர்கள், உணவியல் நிபுணர்கள் ஆலோசனை பெற்று பின்பற்ற வேண்டும். எல்லோருக்கும் எல்லா டயட்டும் செட் ஆகாது என்பதை நாம் அழுத்தமாகச் சொல்ல வேண்டியுள்ளது.

நமக்கு செட் ஆகாத டயட்டை பின்பற்றினால் நேர்மறை விளைவுகள் உருவாகுமோ இல்லையோ சில சமயங்களில் எதிர்மறை விளைவுகளை உருவாக்கிவிடும். குறிப்பாக, வெயிட் லாஸ் டயட்களை கவனமாகக் கையாள வேண்டும். அவற்றைப் பற்றிய போதிய புரிதல் இல்லாமல் நண்பர்கள் சொன்னார்கள், தெரிந்தவர்கள் பின்பற்றுகிறார்கள் என்று நாமே களத்தில் இறங்கி எடை கன்னாபின்னாவென்று அதிகரித்து அவதிப்படுபவர்களும் இருக்கிறார்கள். இதனால், எடைக்குறைப்பு டயட்கள் மீது காரணமற்ற ஒவ்வாமையே ஏற்பட்டுவிடும். ’டயட் எல்லாம் வேஸ்ட்டுப்பா நமக்கு நம் இஷ்டப்படி சாப்பிடறதுதான் சரி’ என்று கருதிக்கொள்கிறார்கள்.

டயட் என்பது நம் உணவுப் பழக்கவழக்கத்தின் ஒழுங்கு வடிவம். எந்த ஒன்றும் ஓர் ஒழுங்குக்குள் இருக்க வேண்டியது மிகவும் அவசியம். குறிப்பாக, உணவுப் பழக்கவழக்கங்கள். இதை, முறையாகப் பின்பற்றாவிட்டால் ஒபிஸிட்டி முதல் உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை, இதய நோய்கள் வரை வரிசையாக அணிவகுக்கும். மிரட்டுவதற்காக நாம் இதைச் சொல்லவில்லை. இதுதான் எதார்த்தம்.

இன்று முன்பு எப்போதையும்விட மருத்துவமனைகளுக்கு அதிகமானோர் படையெடுக்க தவறான உணவுப் பழக்கம்தான் காரணம். எனவே, டயட்கள் என்பது ஏதோ நமக்குத் தேவை இல்லாத விஷயம் என்ற அலட்சியம் வேண்டவே வேண்டாம். அது குறித்து மிகவும் விழிப்புணர்வோடு இருப்பது அவசியம். திட்டமிட்ட சிறப்பான டயட் பயிற்சி நிச்சயம் நம் உடலை ஆரோக்கியமாக்கும், தோற்றத்தை இளமையாக்கும், நோய்களை விரட்டியடிக்கும், ஆயுளை அதிகரிக்கும்.

இது ஒன்றும் மேஜிக் அல்ல. திட்டமிடலும் கறாரான பின்பற்றலுமே இதற்கு அவசியம். டயட் மேனியா தொடர்பாக பலவிதமான சந்தேகங்கள் எழுப்பப் படுவதாலேயே இந்த விளக்கங்களைச் சொன்னோம். அடுத்தடுத்த இதழ்களில் இன்னும் சில டயட் வகைகளைப் பற்றித் தொடர்ந்து பார்ப்போம்.

எக்ஸ்பர்ட் விசிட்

நாற்பது வயது என்பது இளமையின் கடைவாசல். முதுமையின் தலைவாசல். வயசாகிடுச்சு என்ற மனநிலையை கொஞ்சம் பதற்றத்துடன் பரவவிடும் காலம். இத்தனை ஆண்டுகளாக இல்லாத உடல் உபாதைகள் மெல்ல ‘உள்ளேன் ஐயா’ என்று எட்டிப்பார்க்கும் காலம். இத்தனை நாள் எப்படியோ இந்த வயதில் நம் உணவுப் பழக்கத்தை ஆரோக்கியமாக மாற்றிக்கொண்டால்கூட ஹெல்த்தியான நீண்ட ஆயுளுக்கு அச்சாரமிடலாம். உணவியல் நிபுணர் ரூபாலி தத்தா, நாற்பதைக் கடந்தவர்களுக்கான உணவுகள் என்னென்ன என்று பட்டியலிடுகிறார் பாருங்கள்…

முழுதானியங்களை உணவில் சேர்த்திடுங்கள். நார்ச்சத்து, புரோட்டின், வைட்டமின்கள், பலவிதமான பைட்டோகெமிக்கல்கள் நிறைந்த இது உங்கள் உடலில் பல நேர்மறை விஷயங்களை ஏற்படுத்தக்கூடியது. குறிப்பாக, நார்ச்சத்துதான் இதன் மிக முக்கிய அம்சம். செரிமானத்தை மேம்படுத்துவது, ரத்தத்தில் சர்க்கரை அளவைச் சீராகப் பராமரிப்பது, கெட்ட கொழுப்பைக் கட்டுப்படுத்துவது, எடைப் பராமரிப்பை நிகழ்த்துவது எனப் பல வேலைகளை இந்தத் தாவர புரோட்டின் செய்கிறது. எனவே தினசரி அறுபது முதல் தொன்னூறு கிராம் வரை முழுதானியங்களை உண்ணுங்கள்.

நம் உடலில் உள்ள ஒவ்வொரு செல்லிலும் புரோட்டின் உள்ளது. அப்படி, நம் உடலில் உள்ள புரோட்டின்களில் பெரும்பகுதி தசைகளிலும் எஞ்சியவை எலும்பிலும் உள்ளன. பீன்ஸ், ராஜ்மா போன்றவற்றில் சிறப்பான புரோட்டின் உள்ளது. எனவே, இதைத் தவறாமல் எடுத்துக்கொள்ளலாம். உடலுக்குத் தேவையான ஒன்பது அமினோ அமிலங்களில் எட்டு பீன்ஸில் உள்ளது. எஞ்சிய ஒன்றான மெத்தியோனைன் பருப்புகளில் உள்ளது. எனவே, இந்த இரண்டையும் சேர்த்துச் சாப்பிட்டால் சிறப்பான புரோட்டின் கிடைக்கும்.

நம் உடலில் உள்ள கொழுப்புச்சத்தை சிறப்பாகப் பராமரிப்பதில் நட்ஸ் களுக்கு முக்கிய இடம் உள்ளது. அதிலும் குறிப்பாக வால்நட். வைட்டமின் இ, மூளையைத் தூண்டும் மெலட்டோனின் ஆன்ட்டி ஆக்ஸிடண்ட் ஆகியவை அதிகம். இந்த காம்பினேஷன் ஃப்ரீ ரேடிக்கல்ஸாக செயல்பட்டு புற்றுநோய் போன்ற நோய்களை வராமல் தடுக்கும்.

க்ரீன் டீயை மறக்காதீங்க. சாதாரண டீ, காபி சாப்பிடும் பழக்கத்தை க்ரீன் டீ சாப்பிடும் பழக்கமாக மாற்றிக்கொள்ளுங்கள். ஆன்ட்டி ஆக்ஸிடண்ட் நிறைந்த இது நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும். இதில் உள்ள கேட்டெசின் மிகச் சிறந்த நோய் எதிர்ப்புப் பொருள். உயர் ரத்த அழுத்தத்தைக்கூட இது கட்டுப்படுத்துகிறது என்கிறது ஒரு சமீபத்திய ஆய்வு. அதுபோலவே, இதய நோய்கள், பக்கவாதம் போன்ற பாதிப்புகளில் இருந்தும் தடுக்கிறது.

கொய்யா காய் சாப்பிடுவது செரிமானத்தை சிறப்பாகப் பராமரிக்க உதவும். கொய்யாவில் வைட்டமின் சி அபாரமாக உள்ளது. நூறு கிராம் கொய்யாவில் 212 மி.கி வைட்டமின் சி உள்ளது. பழங்களில் உள்ள இரும்புச்சத்தை உடலில் சேர்த்து நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுவாக்குவதில் வைட்டமின் சி முக்கியப் பங்காற்றுகிறது. எனவே, கொய்யாவை குறைந்தபட்சம் வாரம் நான்கைந்து சாப்பிடலாம்.

கீரைகளை தவிர்க்காமல் உணவில் சேருங்கள். வைட்டமின்கள், நுண்ணூட்டச்சத்துகள், தாதுஉப்புகள், நார்ச்சத்து எனப் பிரமாதமான காம்பினேஷன் கொண்ட அற்புதமான உணவு என்றால் அது கீரைகள்தான். எனவே, தினசரி உணவில் கணிசமாக கீரைகள் இருக்கட்டும்.

பிஸ்கெட் பிறந்த கதை

பிஸ்கெட்டைப் பிடிக்காத மனிதர் உண்டோ? பிறந்து சில மாதங்களே ஆன குழந்தை முதல் வயதானவர்கள் வரை பிஸ்கெட் என்றால் தனிப் பிரியம்தான். சிலருக்கு சிலவகை பிஸ்கெட்கள் பிடிக்காதே தவிர பிஸ்கெட்டே பிடிக்காது என்பவர்கள் மிகவும் குறைவு. சாக்லெட்டை சாப்பிடாதீங்க எனும் மருத்துவர்கள்கூட பிஸ்கெட்டை அளவாகச் சாப்பிடுங்க என்றே அறிவுறுத்துகிறார்கள். இப்படி சகல தரப்பினரின் அபிமானத்தையும் பெற்ற பிஸ்கெட் உலகுக்கு வந்தது எப்படி?

பிஸ்கெட் என்றால் பிரெஞ்சு மொழியில் இரண்டு முறை சுட்டது என்று அர்த்தம். ரொட்டியின் வேறொரு வடிவமாகவே பிஸ்கெட்டை உருவாக்கினார்கள் ஐரோப்பியர்கள். அந்தக் காலத்தில் அவர்கள் கப்பல் பயணம் செய்தபோது டன் கணக்கில் பிஸ்கெட்களைச் சுமந்து திரிந்திருக்கிறார்கள். பிஸ்கெட்கள் நீண்ட நாட்கள் கெட்டுப்போகாது என்பதுதான் இதற்குக் காரணம்.

அமெரிக்கர்கள் முதலில் பிஸ்கெட்டை ‘இன்ஸ்டண்ட் பிரெட்’ அதாவது திடீர் ரொட்டி என்று அழைத்தனர். ரொட்டியை பேக்கிங் சோடா கலந்து தயாரித்தால் அது பிஸ்கெட் என்பதாக எளிய ரெசிப்பி முறைதான் அப்போது இருந்தது.

முதல் உலகப் போரின் போது வீரர்கள் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பதற்காகவும் நீண்ட நாட்கள் பிஸ்கெட்கள் கெட்டுப்போகாமல் இருக்க வேண்டும் என்பதற்காகவும் சுவையும் முக்கியம் என்ற யோசனையிலும் புதிய வகை பிஸ்கெட்டை உருவாக்கினார்கள். அதுதான், அன்ஸாக் (Anzac) வகை பிஸ்கெட்டுகள்.

1877ல் ஜான் பாமன் என்பவர்தான் முதன்முதலில் இயந்திரம் மூலம் பிஸ்கெட் தயாரித்தார். இவர் தயாரித்த பிஸ்கெட்டுகள் டீ கப்பின் சாஸர் வடிவத்தில் பெரியதாக இருந்தன. பிஸ்கெட் ஊட்டச்சத்துகள் நிறைந்த உணவுப்பொருள்தான் என்றாலும், அதை அடிக்கடி சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். பிஸ்கெட்டை அடிக்கடி சாப்பிட்டால் அதில் உள்ள சர்க்கரைப் பொருள் ஒட்டிக்கொள்ளும்.

நிறைய பேர் பிஸ்கெட்டுடன் டீயும் அருந்துவதால், டீயில் உள்ள சர்க்கரையும் அதனோடு இணைந்துகொள்ளும். அதனால்தான் அதிகம் பிஸ்கெட் சாப்பிடுபவர்களின் பற்கள் கறைபடிந்து காணப்படுகின்றன. இன்று, சர்க்கரை நோயாளிகளுக்கான சுகர்ஃப்ரீ பிஸ்கெட்கள் முதல் விதவிதமான பிஸ்கெட்கள் சந்தைக்கு வந்துவிட்டன. அளவோடு சுவைத்தால் பிஸ்கெட் போல் நம் வாழ்க்கையும் சுவைக்கும்.

உணவு விதி #20

வெறும் வயிற்றில் சூடான பானங்களை அருந்தாதீர்கள். நல்ல பசியோடு இருக்கும்போது எது கிடைத்தாலும் சாப்பிடலாம் என்று வெறி வருவது இயல்புதான். ஆனால், நல்ல பசி நேரத்தில் சூடான உணவுப் பொருளை உண்பதால் நம் குடல்கள் புண்ணாகக்கூடும். வயிற்றில் இருந்த உணவுகள் அனைத்தும் செரிக்கப்பட்டு, புதிய உணவவைச் செரிப்பதற்கான சுரப்புகள் சுரந்து காத்திருக்கும் நிலையில் சூடான திரவப் பொருள் நுழைந்தால், அந்த சுரப்புகளின் காரத்தன்மையையும் பாதித்துவிடும். இதனால், செரிமானம் சிக்கலாகும். எனவே, பசி நேரத்தில் டீ, காபிக்கு தடா போடுங்க.

ஃபுட் சயின்ஸ்

விளம்பரங்களில் தொடங்கி மருத்துவர்கள் வரை பலரும் அடிக்கடி உச்சரிக்கும் சொல் வைட்டமின்கள். இந்த வாரத்தின் கிச்சன் டைரீஸ் பகுதியிலேகூட நாம் அச்சொல்லை ஒன்றுக்கும் மேற்பட்ட முறை பயன்படுத்தியிருக்கிறோம். சரி இந்த வைட்டமின்கள் என்பது என்ன? தமிழில் நாம் இதை ஊட்டச்சத்துகள் என்கிறோம். வைட்டமின்கள் எனப்படுபவை நம் உடலின் வளர்சிதை மாற்றம் இயல்பாக நடக்கவும், நாம் செயல்படவும் தேவையான அடிப்படையான உயிர்பொருள். நம் உடல் மணிக்கொரு முறை இடித்துக்கட்டப்படும் கோட்டையைப் போன்றது.

இச்செயலை நாம் வளர்சிதை மாற்றம் என்கிறோம். அதாவது, மெட்டபாலிசம். இடித்துக்கட்டும்போது வடிவம் சிதையாமல் இருக்க சாரம் வேண்டும் இல்லையா? அதுதான் வைட்டமின்கள். உயிர்களால் தமக்குத் தேவையான ஊட்டச்சத்துகளைத் தாமே தயாரித்துக்கொள்ள முடியாது. அதனால்தான் நாம் உணவைத் தேடுகிறோம். உணவின் மூலம் உடலில் சேகரமாகும் வைட்டமின்கள் நம்மை வாழவைக்கின்றன.

பெரும்பாலான வைட்டமின்கள் ஒற்றை மூலக்கூறுகளால் ஆனவை அல்ல. அவை தொகுப்பாகவே உள்ளன. இந்த வைட்டமின் தொகுப்பை வைட்டமர்ஸ் என்கிறார்கள். வைட்டமின்கள் ஏ,பி,சி,டி,இ,கே எனப் பலவகை உள்ளன. இதில் வைட்டமின் பியில் மட்டுமே பனிரெண்டு வகை உள்ளன. அதனால்தான் இதை, பி காம்ப்ளெஸ் வைட்டமின்கள் என்கி றார்கள். பருப்புகள், கீரைகள், காய் கறிகள், பழங்கள், நட்ஸ் போன்றவற்றில் பலவகையான வைட்டமின்கள் உள்ளன. இதில் ஒவ்வொரு பொருளிலும் ஒவ்வொரு வகையான வைட்டமின்கள் உள்ளன. எனவே, இந்த ஒவ்வொன்றையும் தவறாமல் உணவில் சேர்க்க வேண்டியது மிகவும் அவசியம்.

பிளாஸ்டிக் முட்டை அபாயம்

எந்த ஓர் உண்மையான பொருளோடும் போலி ஒன்றைக் கலந்தால்தான் கலப்படம். முழுமையாகவே போலியாக ஒரு பொருளைத் தயாரித்தால் கலப்படம் என்று சொல்லலாமா தெரியவில்லை. ஆனால், இந்த தத்துவ சிக்கலைக் கடந்து பிளாஸ்டிக் கோழி முட்டைகள் பற்றிய அபாயம்தான் மக்களிடம் பரபரத்துக்கொண்டிருக்கிறது.

சகலத்துக்கும் போலிகளைத் தயாரித்துத் தரும் சீனாதான் இதற்கும் பூர்விகம் என்கிறார்கள். வெள்ளை வெளேர் என பிராய்லர் கோழி முட்டைகள் போல இருக்கும் இதை, உடைத்துப் பார்த்தாலும் கொழகொழவென மஞ்சள் கருவும் அதே போல் இருக்கும் என்கிறார்கள். சுவையிலும் பெரிய மாறுபாடு இல்லை என்பதால் இது போலி என்று தலையில் அடித்துச் சத்தியம் செய்தாலும் உண்டவர்கூட நம்ப மாட்டார் என்கிறார்கள்.

நிஜக் கோழி முட்டைகளுடன் இந்த முட்டைகள் கலந்து விற்கப்படுவதாக ஒரு புகார் அவ்வப்போது எழுவதும் அடங்குவதுமாக இருக்கிறது. கண்டவர் விண்டிலர்! விண்டவர் கண்டிலர் என்பதைப் போன்று உண்மை நிலவரம் அறிய முடியாததாக இந்த பிளாஸ்டிக் முட்டை வதந்தி இருக்கிறது. எதற்கும் முட்டைகளை நன்கு அறிந்த கடைகளில் மட்டுமே வாங்குங்கள். அதுதான் ஓரளவு பாதுகாப்பு.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஹஸ்பண்ட் டே கேர்!! (மகளிர் பக்கம்)
Next post 35 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கு இந்தப் புற்றுநோய் வரலாம்!! (அவ்வப்போது கிளாமர்)