கொரோனாவும் கொள்ளை நோய் பேரிடர் கொள்கையும் !! (கட்டுரை)

Read Time:14 Minute, 19 Second

கொரோனா வைரஸ் தொற்று நோய் உலகத்தை ஆட்டிப் படைக்கிறது. 3 இலட்சம் பேருக்கு மேல் பலியாகி விட்ட இந்த ‘கொள்ளை நோய்’ பேரிடர் மேலாண்மையில் புதிய சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை ‘சுனாமி’, ‘புயல்’, ‘பூமி அதிர்ச்சி’ உள்ளிட்ட இயற்கை பேரழிவுகளைச் சமாளிக்கும் விதத்தில்- அதற்கு வழிகாட்டும் விதமாகப் பேரிடர் மேலாண்மை சட்டங்களை ஒவ்வொரு நாடும் வகுத்துக் கொண்டுள்ள நிலையில், ‘கொரோனா’ என்ற ‘கொள்ளை நோய்’ ஒரு புதுவித பரிணாமத்தை உலகுக்கு அடையாளம் காட்டியுள்ளது. இந்தியாவில் ஏற்கெனவே உள்ள பேரிடர் மேலாண்மை சட்டம்-2005இன் கீழ் கொரோனா பேரிடரும் கையாளப்பட்டு வருகிறது. ‘குஜராத் பூமி அதிர்ச்சி’, ‘சுனாமி’ பேரழிவு போன்றவற்றுக்குப் பிறகு உருவான சட்டம் இது.

அதே ‘பேரிடர்’ சட்டம்தான் இன்றைக்கு ‘கொள்ளை நோய்க்கும்’ பயன்படுகிறது. இந்த நோயால் ஏற்படும் சுகாதாரப் பாதிப்புகளும், பொருளாதாரப் பாதிப்புகளும் ஒரு நீண்ட காலத்திட்டத்தின் கீழ் சீர் செய்யப்பட வேண்டியவை. 1897 வாக்கில் இந்தியாவில் ஏற்பட்ட ‘பிளேக்’ நோயைக் கட்டுப்படுத்த ‘கொள்ளை நோய் சட்டம்’ வந்தது. அந்த 1897ஆம் ஆண்டு சட்டத்தின் கீழ் மாநில அரசுக்குத்தான் முழுப் பொறுப்பும்- அதிகாரமும் அளிக்கப்பட்டுள்ளது. வெளி நாடுகளில் வரும் இருந்து நோய் ஆபத்துகளைத் தடுப்பது மட்டும் மத்திய அரசிடம் விடப்பட்டுள்ளது. அதில் போதிய அதிகாரம் இல்லாததால்தான் இந்தக் கொரோனா கொள்ளை நோய் வந்தவுடன்- கடந்த ஏப்ரல் 22 ஆம் திகதி ஓர் அவசரச் சட்டம் மூலம் அச்சட்டத்தைத் திருத்தியது மத்திய அரசு. சுகாதாரப் பணியாளர்கள், மருத்துவர்கள் உள்ளிட்டோரின் பாதுகாப்பு- அவர்களைத் தாக்குவோருக்குத் தண்டனை போன்றவை உள்ளிட்ட மேலும் சில அதிகாரங்கள் மத்திய அரசுக்கு ஏற்படுத்திக் கொண்டது. எப்படியிருந்தாலும் 4 பிரிவுகள் மட்டுமே உள்ள 1897ஆம் ஆண்டு கொள்ளை நோய் சட்டம், மாநில அரசுகளின் கோட்டைக்கு அதிக முக்கியத்துவம் அளித்து- ‘வலுவான மத்திய அரசு’ என்ற கோட்பாட்டுக்குப் பதிலாக ‘அதிகாரமிக்க மாநில அரசு’ நோக்கத்தை வெளிப்படுத்தியது.

இந்தச் சட்டம் பிறப்பிக்கப்பட்டு-108 வருடங்களுக்குப் பிறகு வந்த பேரிடர் மேலாண்மை சட்டம் அப்படியல்ல. மத்திய அரசுக்கும்- மாநில அரசுகளுக்கும் அதிகாரம் அளிக்கும் வகையில் ஒரு கூட்டாட்சித் தத்துவத்தைப் பிரதிபலித்தது. ஆனால், மத்திய அரசுக்கு அதிக அதிகாரங்கள். இச்சட்டத்தின் புதுமுகம் என்னவென்றால் உள்ளாட்சி அமைப்புகளுக்கும் கூட அளிக்கப்பட்ட அதிகாரம்தான். 2005ஆம் ஆண்டு சட்டத்தின்படி தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் ஒன்று இருக்கும். அதன் தலைவராக இருப்பவர் பிரதமர். மாநில அளவில் ‘பேரிடர் மேலாண்மை ஆணையம்’ ஒன்று இருக்கும். அதன் தலைவர் முதலமைச்சர். மாவட்ட அளவிலும் ஒரு பேரிடர் மேலாண்மை ஆணையம் இருக்கும். அதன் தலைவர் மாவட்ட ஆட்சித் தலைவர். மாவட்ட ஆணையத்தில் உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதியும் இடம்பெறுவார். உள்ளாட்சி அமைப்புகளுக்குத் தனியாக சில ‘அதிகார, பொறுப்பு’ பிரிவுகள் உருவாக்கப்பட்டு- அவற்றுக்கு பேரிடர் மேலாண்மையில் மிக முக்கியப் பங்கு அளிக்கப்பட்டுள்ளது. பேரிடர் மேலாண்மையில் நாட்டின் பிரதமருக்கு உள்ள பொறுப்பு- இந்தியாவின் கடைக்கோடி மாவட்டமான கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஒரு பஞ்சாயத்துத் தலைவருக்கும் அளிக்கப்பட்டது இந்தச் சட்டத்தின் தனிச்சிறப்பு.

இது மட்டுமல்ல- பேரிடர் மேலாண்மைக்கு ‘தேசிய திட்டம்’, ‘மாநில திட்டம்’, ‘மாவட்ட திட்டம்’ என்று மூன்று கட்டங்களில் திட்டங்களைத் தயாரித்துக் கொள்ளலாம். தனியாக மத்திய அரசும், மாநில அரசுகளும் ‘பேரிடர் மீட்புப் படை’ உருவாக்கிக் கொள்ளலாம். மத்தியில், மாநிலத்தில், மாவட்டத்தில் என எல்லா மட்டத்திலும் ‘பேரிடர் மீட்பு நிதி’ உருவாக்கலாம். பல முக்கியச் சீர்திருத்தங்களைக் கொண்டிருக்கும்- இந்தப் பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ்தான் தற்போது கொரோனாவும் ‘தேசிய பேரிடராக’ அறிவிக்கப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தேசிய பேரிடர் மேலாண்மைத் தலைவர் என்ற முறையில் மத்திய அரசின் தலைவராக இருக்கும் பிரதமர் ‘ஊரடங்கு’ பற்றி எடுத்து அறிவிக்கும் முடிவுகளை – மாநில பேரிடர் மேலாண்மைத் தலைவர்களாக இருக்கும் மாநில முதலமைச்சர்கள் செயற்படுத்துகிறார்கள்.

அதே நேரத்தில்- இந்தக் கொரோனா பாதிக்கப்பட்ட பகுதிகளை- ஒரேஞ், பச்சை, சிவப்பு மண்டலங்களாகப் பிரிப்பது, பாதுகாக்கப்பட்ட பகுதிகளாக அறிவிப்பது, நோய் தொற்றைத் தடுக்கும் உபகரணங்களைக் கொள்முதல் செய்வது போன்ற புதுவகையான ‘பேரிடர் மேலாண்மை’ பணிகள் இந்த பேரிடரின் அங்கமாக இருக்கிறது. ‘இப்பணிகளை நாங்கள் தான் செய்வோம்’ என்று மாநில முதலமைச்சர்கள் சிலர் போர்க்கொடி உயர்த்தியிருக்கிறார்கள். ‘ஒரு மாநிலத்தில் நோய் தொடர்பான பாதுகாக்கப்பட்ட பகுதி எது என்பதை நாங்களே முடிவு செய்வோம்’ என்று சில மாநில முதலமைச்சர்கள் குரல் எழுப்புகிறார்கள். கொரோனா வைரஸ் தொற்றுக் குறித்து, பரிசோதனை செய்யும் ‘அதிவிரைவு பரிசோதனைக் கருவிகளை நாங்களே நேரடியாகக் கொள்முதல் செய்வோம்’ என்று வேறு சில முதலமைச்சர்கள் கோரிக்கை வைத்தார்கள். இந்திய அளவில் ஒட்டுமொத்தமாக பாதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத்தை மீட்க 2 மில்லியன் கோடி திட்டத்தை பிரதமர் அறிவிக்கிறார். ஆனால் “எங்களுக்கு ஒரு இலட்சம் கோடி நிதி கொடுங்கள். மாநிலங்களின் நிதி நெருக்கடியை மீட்டுக் கொடுங்கள்’ என்று முதல்வர்கள் பிரதமரிடம் கோரிக்கை வைத்து நிற்கிறார்கள். இப்படிப் பல வகையிலும் புதுவிதமான அனுபவங்களை- அதிகாரக் கோரிக்கைகளை இந்தக் “கொரோனா பேரிடர் மேலாண்மை’ இந்தியாவுக்குக் கற்றுத் தந்திருக்கிறது.

நோய் கட்டுப்பாடு தொடர்பாக “கொள்ளை நோய் தடுப்புச் சட்டம்“ மாநில அரசுகளுக்கு முழு அதிகாரம் கொடுத்திருந்தாலும்- பேரிடர் மேலாண்மை சட்டம் மத்திய அரசு, மாநில அரசு, மாவட்டங்களில் உள்ள உள்ளாட்சி அமைப்புகள் வரை அனைத்துக்கும் அதிகாரம் அளித்திருக்கிறது. தேசிய பேரிடர் விவகாரத்தில் மத்திய அரசுக்கு அதிக அதிகாரம் இருக்கிறது. ஆகவே ஓர் ‘ஒருங்கிணைந்த கொள்ள நோய் எதிர்ப்பு நடவடிக்கை’ அல்லது ‘ஒருங்கிணைந்த பொருளாதார மீட்பு நடவடிக்கை’ ஆகிய இரண்டுக்கும் இன்றைக்கு உள்ள இந்த இரு சட்டங்கள் போதுமா என்ற கேள்வியை ‘கொரோனா’ எழுப்பியிருக்கிறது. இந்தச் சூழ்நிலையில் சுகாதாரம் சம்பந்தப்பட்ட- கொள்ளை நோய் சம்பந்தப்பட்ட பேரிடர்களுக்கும், பூமி அதிர்ச்சி, புயல், வெள்ளம் போன்ற பேரிடர்களுக்கும் உள்ள வேறுபாட்டை உணர வேண்டிய காலகட்டத்தில் ‘ஆட்சியாளர்கள்’ இருக்கிறார்கள்.

பொதுவாகப் பேரிடர்களில் ‘மீட்பு பணிகள்’, ‘மறு கட்டமைப்பு பணிகள்’ முக்கியப் பங்கு வகிக்கும் என்றால்- கொள்ளை நோய் பேரிடரில் ‘நோய் தடுப்பு’, ‘பொருளாதார மீட்பு’, ‘மருத்துவ உபகரணங்கள் கொள்முதல்’, ‘நாட்டு மக்களின் உயிர் காக்கும் பணி’, ‘மருத்துவ கட்டமைப்புகள் உருவாக்கும் பணி’ போன்றவை மிக முக்கியப் பங்கு வகிக்கின்றன. பூமி அதிர்ச்சியில் மக்களை மீட்க ‘இயந்திரம்’ வேண்டும் என்றால்- கொரோனாவில் இருந்து மக்களைக் காக்க ‘தடுப்பூசி’, ‘மருந்து மாத்திரைகள்’ தேவைப்படுகின்றன. ஏன் ‘கொரோனா’ போன்ற கொள்ளை நோயில் மருத்துவமனைகளும் மருத்துவர்களும் முதல் கள வீரர்களாக மக்களுக்குக் கடமையாற்ற வேண்டிய நிலையில் இருக்கிறார்கள். ஆகவே ‘கொள்ளை நோய் பேரிடருக்கு’ ஏற்றார் போல்- குறிப்பாக ‘கொள்ளை நோய் மேலாண்மை’ குறித்து மறு ஆய்வு இந்தியாவில் மட்டுமல்ல- உலக நாடுகள் அனைத்திலும் தேவைப்படுகிறது. உலக சுகாதார நிறுவனத்தின் சுகாதாரப் பிரிவுக்குத் தலைமைப் பொறுப்பை ஏற்கும் இந்தியாவின் முன்பு உள்ள முக்கியப் பணியாகவே கூட இருக்கிறது.

இந்தியா போன்ற நாட்டில் ‘கொள்ளை நோய் பேரிடருக்கு’ என்றே பிரத்தியேகமாக ஒரு பேரிடர் மேலாண்மை சட்டம் புதிதாக உருவாக்கப்பட வேண்டும் என்பது காலத்தின் கட்டாயமாகியிருக்கிறது. அது தற்போதுள்ள ‘கொள்ளை நோய் சட்டம் 1897’ மற்றும் ‘பேரிடர் மேலாண்மை சட்டம் 2005’ இலிருந்து வேறுபட்டு- மாறு பட்டதாக- மருத்துவத்துக்கு முக்கியத்துவம் அளிப்பதாக அமைந்திட வேண்டும். தேசிய, மாநில, மாவட்ட அளவில் ‘கொள்ளை நோய் பேரிடர் ஆணையங்கள்’ உருவாக்கப்பட வேண்டும். ‘கொள்ளை நோய்க்கு’ என்றே தனியாக ஒரு தேசிய கொள்கை- மாநிலக் கொள்கை- மாவட்ட அளவிலான கொள்கை வகுக்கப்பட வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக- தேசிய, மாநில, மாவட்ட அளவில் ‘அனுபவமிக்க மூத்த சுகாதார நிபுணர்கள்’ தலைமையில் ‘நோய் தடுப்பு கமிட்டிகள்’ அமைக்கப்பட்டு- கொரோனா போன்ற ‘கொள்ளை நோய் பேரிடரை’ முற்றிலும் புதியவிதமான அணுகுமுறைகளுடன் கையாள வேண்டியதிருக்கிறது.

உலக நாடுகள் அனைத்துமே அடுத்தடுத்துக் கொள்ளை நோயின் பிடியில் சிக்கி – கொத்துக் கொத்தாக மக்களைப் பறிகொடுத்துக் கொண்டிருப்பதால்- உலக சுகாதார நிறுவனம் மட்டுமே ‘சுகாதார வழி காட்டியாக’ இருந்திட முடியாது. ஆகவே, ஒவ்வொரு நாட்டுக்கும் தனியாக ‘கொள்ளை நோய் தடுப்பு ஆணையம்’ தேசிய- மாநில- மாவட்ட அளவில் உருவாகும் வகையில் ஒவ்வொரு நாடும் தங்களின் பேரிடர் மேலாண்மைச் சட்டங்களை உருவாக்கிக் கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது. அதுவே உலகளாவிய மனித குலத்தைப் பாதுகாக்கும் உன்னதமான ‘மைல்கல்’ ஆக இருக்கும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அடுத்த தலைமுறையை காப்பாற்றும் பொறுப்பு எனக்கிருக்கிறது!! (மகளிர் பக்கம்)
Next post போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?!! (அவ்வப்போது கிளாமர்)