உழைக்கும் மக்களுக்காக உயிர் கொடுத்த உத்தமன்!! (கட்டுரை)

Read Time:24 Minute, 8 Second

ஆறுமுகன் தொண்டமான் எனும் ஆல விருட்சம, அடியோடு சாய்ந்து அமைதியாகிப் போனதனால், அநாதையாய் நிற்பதாக அழுது புலம்புகிறது இந்த உழைக்கும் மலையக மண். வழமையாய் வரும் மழையுமில்லை, மின்னலாய் விரைந்து இல்லத்தில் கொள்ளி வைக்கும் மின்னொழுக்கும் இல்லை. ஆறுமுகம் சாய்ந்தார் என்ற பேரிடி மட்டும் மலையகத்தை அதிரச் செய்திருக்கிறது. மலையே சாய்ந்த பின்னர், மலையின் அகங்கள் மட்டும் அமைதிகொள்ளுமா?

2004 டிசம்பர் 26 உலக நாடுகள் பலவற்றைச் சுனாமி தாக்கியது. அதுபோல் 2020 மே மாதம் 26ஆம் திகதி மலையகம் எங்கும் சுனாமிப் பேரலையாய் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது ஆறுமுகன் தொண்டமானின் பேரிழப்பு என்றால் மிகையில்லை.

ஒரு காலத்தில் வாழ்க்கையின் வசதிகளும் வாழ்வதற்கான உரிமைகளும் மறுக்கப்பட்டு, ஒதுக்கப்பட்டு உழைப்பும் சுரண்டப்பட்ட ஓர் இனக்குழாத்தின் காவலனாய், மலையகத்தின் விடிவெள்ளியாய் விளங்கியவர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான்.

வாழ்வதற்காய் உழைத்தவர்கள் மத்தியில் உழைப்பதற்காய் வாழ்ந்தவர்களின் உலகத்தை மாற்றியமைத்தவர் சௌமியமூர்த்தி தொண்டமான். பிழைப்பதற்காய் உழைக்க வேண்டும். ஆனால், உழைப்பே பிழைப்பாகிவிடக்கூடாது என்பதால், உழைப்பாளர்களின் வாழ்வுத் திசையில் மாற்றத்தை ஏற்படுத்தினார் தொண்டமான்.

ஒரு சமூகம் முன்னேற வேண்டுமானால், கல்விக் கண்ணைத் திறந்துகொண்டு உலகத்துடன் ஒத்திசைந்து ஓடவேண்டும். தாம் சார்ந்த இனத்துடன் சேர்ந்தும் பயணிக்க வேண்டும் என்பதை மெய்ப்பித்தும் காண்பித்தார். தமிழினத்தின் தந்தை எஸ்.ஜே.வி.செல்வநாயகத்துடன் இணைந்து தாம் சார்ந்த மக்களின் தேவைகளையும் தேசிய நீரோட்டத்துடன் இரண்டறக் கலக்கச் செய்தார்.

காலத்தின் சுழற்சியால் காட்சிகள் மாறிப்போக, தன்னை ஓர் தனித்துவத் தலைவனாகத் தகவமைத்துக்கொண்ட சௌமியமூர்த்தி தொண்டமான், முழு இலங்கை வாழ் தமிழினத்திற்கு மாத்திரமன்றி, ஏனைய இனத்தவர்களுடனும் இணக்கப்பாட்டு அரசியலில் ஈடுபட்டு வந்தார்.

அமரர் சௌமியமூர்த்தியாரின் மக்கட் பணிக்குப் பக்கபலமாய் வந்து சேர்ந்தார் இராமநாதன் தொண்டமான். தனது தந்தையாரின் வழியில், உழைக்கும் மக்களின் வாழ்வில் ஒளியேற்றும் பொறுப்பை ஏற்றுக்கொண்டார் இராமநாதன் தொண்டமான். இந்த இருவரின் தொண்டுக்கும் மேலும் வலு சேர்க்க வந்துதித்தவர்தான் ஆறுமுகன் தொண்டமான் எனும் சௌமியமூர்த்தி இராமநாதன் ஆறுமுகன் தொண்டமான்.

சௌமியமூர்த்தி தொண்டமானின் பேரன், இராமநாதன் தொண்டமானின் புதல்வர் ஆறுமுகன் தொண்டமான் 1964ஆம் ஆண்டு மே மாதம் 29ஆம் திகதி பிறந்தவர்.

கடந்த வெள்ளிக்கிழமை(29) அவருக்கு 56ஆவது பிறந்த நாள்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் என்கின்ற அமைப்பு இலங்கை இந்திய அரசியல் கூட்டுப் பயணத்தின்போது உருவாக்கப்பட்ட இலங்கை இந்திய காங்கிரஸாக இருந்து மாற்றமடைந்த ஒன்றாகும். இந்த அமைப்பின் நிதிச்செயலாளர் பதவியில் 1993இல் அமர்த்தப்பட்ட ஆறுமுகன் தொண்டமான், 1994இல் அந்த அமைப்பின் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டார்.

ஆறுமுகன் தொண்டமான் இலங்கை அரசியலில் பிரவேசிக்கும் சந்தர்ப்பத்தில், மலையகத்தில் இளைஞர்கள் மத்தியில் ஓர் அரசியல் அண்ணனாக மலையக மக்கள் முன்னணியின் தலைவர் பெரியசாமி சந்திரசேகரன் உருவாகியிருந்தார். அதன் காரணமாக, ஆறுமுகன் தொண்டமான் தம்பி என்று அரசியல் இளவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தார். இருந்தாலும் மூத்த தொழிற்சங்கவாதி எம்.எஸ்.செல்லசாமி உள்ளிட்ட சிலர் ஆரம்பத்தில் தம்பி என்று பாசமழை பொழிந்தாலும், பின்னாளில் முரண்படும் அண்ணன்மாராகிப் போனார்கள்.

ஆனால், தம் பாட்டன் சௌமியமூர்த்தி வழியிலும் தந்தை இராமநாதனின் நெறியிலும் பண்படுத்தப்பட்டுப் புடம்போடப்பட்ட ஆறுமுகன் தொண்டமான், எவரிடத்தும் முரண்பாடுகளை வளர்த்துக்கொள்ளவில்லை. மாறாகத் தன்னை அரசியல் ரீதியாக வளர்த்துக்கொண்டார். இதன் காரணமாகவே அவர், 1994ஆம் ஆண்டு நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிட்டுப் பாராளுமன்றத்திற்குத் தெரிவானார். நுவரெலியா மாவட்டத்தில் தமது அரசியல் பயணத்தை ஆரம்பித்தாலும் நாட்டின் ஏனைய பகுதிகளில் வாழ்கின்ற தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை அடைந்துகொள்வதற்கும் தமது நேசக்கரத்தை நீட்டி வந்திருக்கின்றார் ஆறுமுகன் தொண்டமான். சௌமியமூர்த்தி தொண்டமானின் அரசியல் சாணக்கிய பாடமே இதற்குக் காரணம் எனலாம்.

இறுக்க குணம் உள்ள இடத்திலேயே இரக்க குணமும் குடிகொண்டிருக்கும் என்பதைப்போல, நேர முகாமைத்துவம், சொல், செயல் துணிவு எனத் தனது பணியை நேர்த்தியாகச் செய்து வரும் ஆறுமுகன் தொண்டமான், தமது பணிக்குழாமும் வினைத்திறனும் விளைதிறனும் கொண்டதாக இருக்க வேண்டும் என்பதில் கண்டிப்பாக இருப்பார்.

இருந்தபோதிலும், தமது தொண்டர்கள், அங்கத்தினர்கள், மாவட்டங்களின் கிளைத் தலைவர்களிடத்தில் நெருக்கமான நட்பையும் இறுக்கமான அன்பையும் கொண்டிருந்தவர் ஆறுமுகன் தொண்டமான்.

உழைப்பாளர்களின் நலவுரிமைப் போராட்டங்களின்போது அவர்களுக்குத் தம் கைப்படவே உணவு பரிமாறும் வழக்கத்தைக் கொண்டிருந்தவர் அவர். அவரது அன்பில் நெகிழ்ந்துபோகும் மாவட்டங்களின் கிளைத் தலைவர்கள், சௌமியமூர்த்தியாரைவிடவும் ஒருபடி மேலே சென்று எங்களை அரவணைக்கிறார் ஆறுமுகன் ஐயா என்பார்கள். தம்மைத் தேடி வருவோரை உபசரிப்பதில் எந்த ஓர் அரசியல்வாதியிடமும் இல்லாத வித்தியாசமான குணாம்சங்களைக் கொண்டிருந்தவர் அவர்.

அதே நேரம், தமது அங்கத்தினர்கள் எங்காவது ஓரிடத்தில், சிறுமைபடுத்தப்பட்டாலோ அல்லது உதாசீனப்படுத்தப்பட்டாலோ சிங்கமென வெகுண்டெழுவார் ஆறுமுகன் தொண்டமான். இப்படியான சந்தர்ப்பங்களில் தமக்கு எதிராகக் கிளம்பும் எதிர்மறையான விசமர்சனங்களைப் பொருட்படுத்திக் கொள்ளாமல், தம் எண்ணப்படி தற்துணிவுடன் செயலாற்றுவார்.

அமரர் ஆறுமுகன் தொண்டமான் 1994ஆம் ஆண்டிலிருந்து 26 வருடங்கள் தொடர்ச்சியாகப் பாராளுமன்ற அங்கத்தவராக இருந்திருக்கின்றார். அந்த 26 வருடத்திலும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் சக பாராளுமன்ற உறுப்பினர்களிடம் முரண்பட்டுக்கொள்ளாமல் நடந்துகொண்டமை ஒரு சிறப்பம்சம் என்றே கருத வேண்டும் என்கிறார்கள்.

நேரடியான அனுபவம் ஒன்றைச் சொல்வதாக இருந்தால், 1999இல் இரத்தினபுரி வேவல்வத்தையில் வன்முறையால் அழிக்கப்பட்ட தொழிலாளர் தொடர்மனைக் குடியிருப்புகளுக்குப் பதிலாகப் புதிய வீடுகள் அமைத்துத் திறந்து வைக்கும் வைபவத்தின்போது, அப்போது காங்கிரஸில் முரண்பட்டுக்கொண்டிருந்த ஏ.எம்.டி.இராஜன் பெருங்குழப்பத்தை ஏற்படுத்தினார். அப்போதைய சப்ரகமுவ மாகாண சபையின் பிரதித் தலைவர் கணபதிப்பிள்ளை இராமச்சந்திரனுக்குக் கூடுதல் கௌரவம் வழங்கப்பட்டதாகக் கூறியே இராஜன் தனது எதிர்ப்பினை வெளியிட்டுத் திறப்புவிழாவினைப் பதற்றப்படுத்தினார். எனினும், நான் உட்பட உடன் சென்றிருந்த அருள் சத்தியநாதன் முதலானோரைப் பாதுகாப்பாகத் திரும்புமாறு கூறிய அவர், பிரச்சினையை வளர்க்காமல், இராமச்சந்திரனையும் ஆசுவாசப்படுத்திச் சென்றார். அவர் எந்தளவிற்குப் பக்குவமானவர் என்பதை அந்தச் சம்பவம் நல்லதொரு சான்றாகும்.

எதிர்மறை விமர்சனங்களைப் பொருட்படுத்தாத ஆறுமுகன் தொண்டமான், மக்கள் சேவையை தன் விருப்பப்படியே மேற்கொள்வார். மக்களுக்காகத் தாம் ஆற்றும் பணிகள் குறித்து ஊடகப் பரப்புரை செய்வதையும் அவர் விரும்பியதில்லை. இதனை ஏற்றுக்கொள்ளாத சில ஊடகவியலாளர்கள் ஆறுமுகன் தொண்டமான் பற்றித் தவறான பிம்பத்தை வளர்த்துக்கொண்டிருந்தாலும், அவரை நேரில் சந்திக்கும்போது அந்தத் தப்பபிப்பிராயத்தை மாற்றிக்கொள்வார்கள்.

எந்தச் சந்தர்ப்பத்திலும் எந்த விடயத்தைப் பற்றியும் எதிர்மறைச் சிந்தனையைக் கொண்டிருக்கமாட்டார் ஆறுமுகன் தொண்டமான். ஊடகவியலாளர்கள், சில வேளைகளில் அவ்வாறு நடக்காவிட்டால், என்ன செய்வீர்கள் என்று கேள்வி கேட்டுவிட்டால், ஏன் நடக்காவிட்டால்என்கிறீர்கள்? நடக்கும் என்று நேர்மறையாகச் சிந்தியுங்களேன் என்று அடிக்கடி சொல்வார். எதற்கும் பிடிகொடுக்காமல் பதில் அளிப்பதால், சில ஊடகவியலாளர்களுக்கு அவரைப் பிடிக்காது என்றும் சொல்வதற்கில்லை.

சொல்வதைச் செய்வதைவிடச் சிந்திப்பதைச் செய்யும் பணியாளர்கள் மீது கூடுதல் கரிசனை கொண்டிருந்த அமரர் ஆறுமுகன் தொண்டமான், எந்தப் பணியானாலும் தம்மை வருத்தியேனும் நிறைவேற்றிக்கொள்ளுமாறு வலியுறுத்துவார். அப்படி அவரிடம் செல்வோருக்கு அரசியல், தொழிற்சங்கம், பிரதேசம் பாராது எதிர்பார்க்கும் சேவையைப் பெற்றுக்கொடுப்பார்.

ஒருமுறை களுப்பானை ஸ்ரீ கருமாரியம்மன் ஆலயத்தில் வைத்து அவர் என்னிடம் சொன்னவை என்றும் மறக்க முடியாதவை. “நான் பிஸி என்பது தெரியும்தானே என்னைக் கரைச்சல்படுத்துங்கள்”என்றார். அப்படி கரைச்சல் கொடுத்துச் சிலருக்குப் பேருதவியும் புரிந்திருக்கிறார். ஆனால் பேட்டிக்கென மட்டும் அவரைப் பிடிக்க முடியாது. அதனால்தான் சிலருக்குப் பிடிக்காது என்றால், அரசியல் என்றாலே என்னவென்று அறியாதவர்கள் எல்லாம் ஆறுமுகன் தொண்டமானை விமர்சிப்பதுதான் வருத்தத்திற்குரியது.

மலையகம் முன்னேற வேண்டும் என்று அவர் பாடுபட்டாரே தவிர, ஒருநாளும் நாசமாய்ப் போக வேண்டும் என்று நினைத்திருக்கமாட்டார். சில கைக்கூலிகள் அப்படித்தான் அவரை விமர்சிக்கிறார்கள். ஆழமாய்ச் சிந்தித்துப் பார்த்தால், அமைச்சர் ஆறுமுகன் மீது பழிசொல்லவோ குறைசொல்லவோ எந்தக் காரணமும் இருக்காது என்பதே உண்மை.

வெளிப்படையாகப் பேசும் அவரிடத்தில் மறைமுக அரசியல் நோக்கங்கள் இருந்ததாக நான் அறிந்ததில்லை. எந்த அவசர சூழ்நிலையிலும் முகம் சுளித்ததில்லை. சில அரசியல்வாதிகளுக்கு வேலையும் இருக்காது நடக்க நேரமும் இருக்காது. ஆனால், ஆறுமுகன் தொண்டமானைப் பொறுத்தவரை அவரின் வேகத்திற்கு ஈடுகொடுத்துப் பணியாற்றும் செயலணியையே விரும்புவார்.

சதா உழைப்பாளர்களின் நலனின் கூடுதல் அக்கறை எடுத்துக்கொள்ளும் அவர், பாலூட்டும் தாய்மார்களைப் பாலைக் கறந்து புட்டியில் வைத்துவிட்டுப் பணிக்குச் செல்லுமாறு பணித்த சில பெருந்தோட்ட முகாமையாளர்களுக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுத்து அந்தக் கொடூரத்திற்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார். அந்தளவிற்கு உரிமையுடனும் உணர்வுடனும் பணியாற்றுபவர் அவர்.

ஒவ்வொரு முறையும் சம்பள உயர்வுக்கான கூட்டு உடன்படிக்கையைப் புதுப்பிக்கும் பேச்சுவார்த்தைகளின்போது, முதலாளிமார் சம்மேளனத்துடன் மாத்திரம் கடுமையாக நடந்துகொள்ளும் ஆறுமுகன் தொண்டமான், தமது நிலைப்பாட்டைத் தோட்டத் தொழிலாளர்களுக்குத் தெரிவிப்பதற்காக நேரடியாகக் களத்திற்குச் செல்வார். கூட்டு ஒப்பந்தப் பேச்சுவார்த்தையின்போது தமக்கு எதிரான தொழிற்சங்கங்களின் தலைவர்களுடனும் இணைந்து பயணிக்க விருப்பம் தெரிவிக்கும் அவர், கடந்த 2002ஆம் ஆண்டு மலையக மக்கள் முன்னணியின் தலைவர் பெரியசாமி சந்திரசேகரனிடம், தொழிலாளர்களுக்குத் திருப்தியான சம்பள உயர்வைப் பெற்றுக்கொடுக்க உரிய நடவடிக்கை எடுங்கள், நானும் ஒத்துழைக்கின்றேன் என்றிருக்கிறார்.

அதற்குப் பதில் அளித்த சந்திரசேகரன், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஆதரவில்லாமல், சம்பள உயர்வு சாத்தியமில்லை என்றும் உங்களுடன் சேர்ந்து நானும் போராடத் தயார் என்று கூறித்தான், ஹற்றன் மல்லியப்பு சந்தியில் சத்தியாக்கிரகப் போராட்டத்தில் இணைந்துகொண்டார். அதனைத் தொடர்ந்து ஹற்றனில் இருவரும் சேர்ந்து கூட்டாக மேதின ஊர்வலத்தையும் நடத்தினார்கள்.

அரசாங்கத்தில் அங்கம் வகித்துக்கொண்டே, தமது மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்கும் விடயத்தில் அரசாங்கத்துடனேயே முரண்பட்டு வெற்றிகொள்ளுவார் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான். அவரைப்போலவே, 1999ஆம் ஆண்டு அரசாங்கத்திலிருந்துகொண்டே, தொழிலாளர்களின் நலனுக்காகத் தொழில் அமைச்சருக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கியிருக்கிறார் ஆறுமுகன் தொண்டமான்.

பதவி மோகம் பதவி மோகம் என்று சிலர் பரப்புரைகளைச் செய்தாலும், நல்லாட்சி அரசாங்கத்தில் இணையாது, ஐந்து வருடகாலம் ஒரே கொள்கைப்பிடிப்புடன் எதிரணியில் இருந்த ஆறுமுகன் தொண்டமான், எட்டாவது பாராளுமன்றத்தில் சமூக வலுவூட்டல், தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சராகப் பதவி வகித்து, மலையகத்திற்கு மாத்திரமன்றி வடக்கு, கிழக்குப் பகுதிகளில் மீள்குடியேற்ற நடவடிக்கைகளை மீளச் செயற்படுத்தும் பணியிலும் ஈடுபட்டிருந்தார்.

பெருந்தோட்டங்களில் தொழிலாளர்களின் பழைமைவாய்ந்த தொடர்மனைக் குடியிருப்புகளுக்குப் பதிலாகத் தனிவீடுகளை அமைப்பதற்காக முதன் முதலில் இந்திய அரசிடமிருந்து உதவிகளைப் பெற்றுக்கொண்டவர் அமரர் ஆறுமுகன் தொண்டமான்.

இறப்பதற்குச் சில மணித்தியாலங்களுக்கு முன்னரும்கூட, இந்திய உயர் ஸ்தானிகருடன் நடத்திய சந்திப்பில், இந்திய வீடமைப்புத் திட்டத்தில் நிலவும் குறைபாடுகளை நிவர்த்திக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கிறார். பிரதமருடன் நடத்திய பேச்சுவார்த்தையின்போது தொழிலாளர்களுக்கான ஆயிரம் ரூபாய் சம்பள அதிகரிப்பை வலியுறுத்தியிருக்கிறார்.

உண்மையில், தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வுக்காகப் பல சுற்றுப் பேச்சுவார்த்தைகளை முதலாளிமார் சம்மேளனத்துடன் நடத்தியுள்ள அமரர் ஆறுமுகன் தொண்டமான், அந்தக் கோரிக்கையை நிறைவேற்றி வைக்கும் தருணத்தில் உயிருடன் இல்லை. அவருக்குச் செலுத்தும் உண்மையான அஞ்சலியாக இந்த ஆயிரம் ரூபாயைப் பெற்றுக்கொடுக்க வேண்டும் என்று அரசாங்கத்தின் அமைச்சர்கள் உறுதியளித்திருப்பது, தங்கள் தலைவனை இழந்து தவிக்கும் மக்களுக்கு ஓர் ஆறுதலாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானால் அறிமுகப்படுத்தப்பட்ட ஆறுமுகன் தொண்டமான், சௌமியமூர்த்தியாரின் பெயருக்குப் பங்கம் ஏற்படாதவாறு செயற்பட்டு மக்களின் மனங்களில் சிம்மாசனமிட்டு அமர்ந்துகொண்டிருக்கிறார். அதேபோன்று இலங்கையின் தேசிய அரசியலில் தொண்டமான் நாமம் என்றுமே அழிக்க முடியாத ஒரு பெயராக விளங்கும் அளவிற்கு அமரர் ஆறுமுகனின் செயற்பாடுகளும் நீக்கமற நிலைத்துவிட்டதென்றே சொல்ல வேண்டும்.

ஓர் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராக இருந்த தருணத்தில் அவர் மரணமடைந்திருப்பதால், பாராளுமன்றத்தின் கௌரவத்தையும் பெற்றுப் பிரியாவிடை பெற்றிருக்கிறார். கொழும்பு இல்லத்தில் காலமான அவரது பூவுடல், பாராளுமன்றத்திலும், அவரது தலைமை அலுவலகத்திலும் றம்பொடையிலுள்ள பூர்வீக வேவண்டன் இல்லத்திலும், கொட்டகலை தொழிற்பயிற்சி மையத்திலும் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, இறுதிக்கிரியை நடத்தப்பட்டிருக்கிறது.

கொரோனா உயிர் அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் பல்வேறு இடங்களில் அமரர் ஆறுமுகன் தொண்டமானுக்கு அஞ்சலி செலுத்தும் வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறதென்றால். நாட்டு மக்கள் மத்தியிலும் தேசிய அரசியலிலும் அவர் அங்கீகரிக்கப்பட்டிருக்கிறார் என்பற்குச் சான்றாகும்.மனிதனாகப் பிறந்து உயிர் வாழும் எல்லோருக்கும் பிறந்த நாள் பரிசுகள் வழங்கப்படும். ஆனால், தாம் நேசித்த மக்களுக்குத் தமது இறந்த நாள் பரிசை வழங்கும் வகையில் தன்னைத் தியாகம் செய்திருக்கிறார் ஆறுமுகன். நலிவடைந்த நிலையில் உள்ள ஒரு சமூகம் முன்னேற வேண்டுமானால், கல்விக் கண்ணைத் திறந்துகொண்டு வெளியில் வருவதன் மூலமே பிரகாசிக்க முடியும் என்பதற்கிணங்க, மலையகத்திற்கெனத் தனித்துவ பல்கலைக் கழகமொன்றை வலியுறுத்தி வந்தார் அவர். இறுதித் தறுவாயிலும் அரசாங்கத்திடம் நாளைய சந்ததியின் எதிர்காலம் கருதி இதனை வலியுறுத்தியிருக்கிறார்.

அமரரின் இந்தக் கோரிக்கைக்கு அமைய அவரது முதலாவது நினைவு தினத்தில் மலையகத்திற்கான தனித்துவப் பல்கலைக்கழகம் திறந்து வைக்கப்படும் என்று அரசாங்கம் உறுதிமொழி வழங்கியிருக்கிறது.

மனிதனாகப் பிறந்த யாவரும் ஒரு நாள் மரணித்துப்போவார்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு தினத்தில் பிரியாவிடை பெறுவார்கள். ஆனால், ஒரு சிலர் மட்டுமே காலமாகிப்போவார்கள். அவ்வாறு மக்களுக்காகத் தம் வாழ்நாளிலும் மரணத்திற்குப் பின்னரும் மக்களுக்காகவே உயிர்நீத்த ஒரு முன்மாதிரியான அரசியல் தலைவனாக அமரர் ஆறுமுகன் தொண்டமான் திகழ்வார் என்பது நிச்சயம்!

அன்னாரின் ஆத்மா சாந்தியடைவதாக!

விசு கருணாநிதி

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இனிமே ஜம்முன்னு Car ஓட்டலாம்!’ (வீடியோ)
Next post ஆஹா… ஆப்ரிகாட்!! (மருத்துவம்)