ஆனந்தம் விளையாடும் வீடு!- அசத்தலான 50 டிப்ஸ் !! (மகளிர் பக்கம்)

Read Time:29 Minute, 22 Second

மகிழ்ச்சியோடு இருப்பதுதான் மனிதவாழ்வுக்கு முக்கியம். எல்லா இடங்களும் நமக்கு மகிழ்ச்சியை மட்டுமே கொடுத்துவிடும் என்பதற்கு எவ்வித உத்தரவாதமும் கிடையாது.ஆனால்-நம் வீட்டில் நாம் விரும்பக்கூடிய மகிழ்ச்சியை நாமே உருவாக்க முடியும்.எப்படி?

காலை ஆறு மணிக்குள் எழும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளுங்கள். அதிகாலையே எழுவது ஒரு நாளை நன்கு திட்டமிட மிகவும் உதவும். நாள் முழுவதும் உற்சாகமாகவும் சுறுசுறுப்பாகவும் இருக்க முடியும். குழந்தைகள் அதிகாலையில் எழுந்து படித்தால், பாடங்கள் நன்கு மனதில் பதியும். அவர்களின் நினைவாற்றல் மற்றும் சிந்தனைத்திறன் மேம்படும்.

 நடைப்பயிற்சி, உடற்பயிற்சி, யோகா,
மூச்சுப்பயிற்சி, தியானம் போன்ற உடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பயிற்சிகளைச் செய்யலாம். உடற்பயிற்சிகளை வீட்டில் செய்வதற்கு முன் தகுந்த நிபுணர் ஒருவரிடம் ஆலோசனை பெற்றுச் செய்வது நல்லது.

ஆரோக்கியமான உணவுதான் ஆரோக்கியமான குடும்பத்தின் அஸ்திவாரம். எனவே, பழங்கள், காய்கறிகள் என சத்தான உணவுகளை உண்ணும் பழக்கத்தை ஏற்படுத்துங்கள். எப்போதாவது வெளியில் சென்றால் ஹோட்டலில் சாப்பிடுவது என்பது சரி. மற்றபடி எப்போதும் வீட்டில் சமைத்த ஆரோக்கிய உணவுகளே பெஸ்ட்.

நீங்கள் உண்ணும் உணவில் கார்போஹைட்ரேட், புரதசத்து, கொழுப்புச்சத்து, நார்ச்சத்து, வைட்டமின்கள், தாது உப்புக்கள், நுண்ணூட்டச்சத்துக்கள் என அனைத்தும் சம விகிதத்தில் இருக்கட்டும்.

 ஃபாஸ்ட் ஃபுட்கள், ஜங்க் ஃபுட்ஸ், மசாலா ஐட்டங்கள், சாட் உணவுகளை அடிக்கடி சாப்பிடுவதைத் தவிர்த்திடுங்கள். அதேபோல் கோலா பானங்கள், செயற்கையான பலரச பானங்கள் பருகுவதையும் தவிர்க்கலாம். நம்மை பார்த்துத்தான் நம் குழந்தைகளும் கற்கிறார்கள் என்பதால் ஆரோக்கியமற்ற இந்த உணவுகளைத் தவிர்த்தாலே ஒபிஸிட்டி போன்ற பிரச்சனைகளைத் தவிர்க்கலாம்.

 குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரின் உணர்வுகளையும் மதியுங்கள். அனைவரின் விருப்பங்களுக்கும் ரசனைகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அன்பைப் பகிர்வது என்பது பொறுப்பெடுத்துக்கொள்வது, போதுமான சுதந்திரம் தருவது. எனவே, மற்றவர்களின் கருத்துகளுக்கு மதிப்பளியுங்கள். ஆரோக்கியமான உரையாடலைச் செய்வதற்கான குடும்ப ஜனநாயகம் எப்போதும் வீட்டில் இருக்கட்டும்.

 தினமும், ஒருவேளை உணவையாவது குடும்பத்தில் உள்ள அனைவரும் சேர்ந்து உண்ணலாம். ஒன்றாக அமர்ந்து சாப்பிடும்போது ஒவ்வொருவரின் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகள், தேர்வுகளைப் புரிந்துகொள்ள முடியும். குழந்தைகளை உணவு நேரத்தில் சுதந்திரமாக இயங்க விட வேண்டும். தங்கள் முன் உள்ளவற்றை அவர்கள் விருப்பப்படி சாப்பிட அனுமதிப்பது அவசியம். அதே சமயம், எச்சில் விரலை சூப்பக் கூடாது. கீழே சிந்தாமல், பொறுமையாகச் சாப்பிட வேண்டும். சிந்திய பருக்கைகளைக் கையில் எடுத்து சாப்பிடக் கூடாது போன்ற ஆரோக்கியமான, சுத்தமான உணவுப்பழக்கங்களைக் குழந்தைகளுக்குக் கற்றுக்கொடுக்க வேண்டியது அவசியம்.

தொலைக்காட்சி, மொபைலில் நேரம் செலவிடுவதற்குப் பதில் மாலை நேரத்தில் வீட்டில் உள்ள குழந்தைகள் முதல் முதியோர் வரை அனைவருமே சேர்ந்து அமர்ந்து மனம–்விட்டுப் பேசுங்கள். உரையாடல் பாசிடிவ்வான சொற்களில் இருக்கட்டும். பொருளாதாரம் உள்ளிட்ட குடும்பத்தின் சூழ்நிலை ஒவ்வொருவருக்கும் தெரிந்திருப்பது நல்லது.

குடும்பச் சூழ்நிலையைப் பற்றி மட்டும் இன்றி, பொதுவான விஷயங்களையும் பேசுங்கள். கலகலப்பான, நகைச்சுவைகள் நிறைந்த உரையாடல்கள் அவசியம். மனிதர்களைப் பற்றி பேசுவது, சம்பவங்களைப் பற்றி பேசுவது, கருத்தியல்களை (கான்செப்ட்ஸ்) பற்றி பேசுவது என உரையாடல்களை மூன்று வகைகளாகச் சொல்வார்கள். மனிதர்களை பற்றி பேசும்போது அது வெறும் உரையாடலாகவே எஞ்சும். சில சமயங்களில் நெகட்டிவ்வான சிந்தனைகளையும் ஏற்படுத்தும். சம்பவங்களைப் பற்றி பேசும்போது நம் அனுபவ அறிவு மேம்படும். கருத்தியல்களைப் பற்றி பேசும்போது நம்மைப் பற்றி மட்டும் இன்றி நம்மைச் சுற்றியுள்ள மனிதர்களையும் இந்த சமூகத்தைப் பற்றியும் புரிந்துகொள்ள முடியும்.

 வாரம் ஒருமுறை எங்காவது வெளியில் செல்வது, ஆண்டுக்கு ஒரு முறை சுற்றுலா செல்வது என்பதைப் போன்ற பழக்கங்களை ஏற்படுத்திக்கொள்ளுங்கள். இது உங்கள் குடும்பத்தினருடன் இனிமையான தருணங்களை உருவாக்கி, நீங்கள் ஒரு குடும்பம் என்கிற ஐக்கிய உணர்வை ஏற்படுத்தும்.

 பண்டிகை நாட்களையும் பிறந்த நாள், திருமண நாள் போன்ற வீட்டு விசேஷங்களையும் மகிழ்ச்சியுடன் கொண்டாடுங்கள். `வேலை இருக்கிறது வர முடியாது. நீங்களே கேக் கட் பண்ணிடுங்க, எனக்கு மீட்டிங் இருக்கு’ என்று சொல்வதை இயன்றவரை தவிர்த்திடுங்கள்.

 சமையல் முதல் எல்லா வீட்டு வேலைகளையும், பெண்கள் மட்டுமே செய்ய வேண்டும் என்று இல்லை. சமைப்பது, துவைப்பது போன்ற வீட்டு வேலைகளில் ஆண்கள் உதவுவதில் தவறே இல்லை. நம் வீட்டு வேலையைச் செய்வதில் நமக்கு என்ன தயக்கம் என்ற மனநிலை தேவை. வீட்டு வேலைகளை ஒருவருக்கு ஒருவர் பகிர்ந்துகொள்ளுங்கள். குறைந்தபட்சம் சமையல் செய்யாவிட்டாலும் சமையலுக்குத் தேவையான சிறுசிறு உதவிகளையாவது செய்துகொடுங்கள். வார இறுதிகளில் சமைப்பது, வீட்டை சுத்தமாக்குவது போன்ற வேலைகளைப் பகிர்ந்துகொள்வது கணவன் – மனைவிக்கு இடையே நல்ல இணக்கத்தையும் அன்பையும் ஏற்படுத்தும்.

 குடும்பத்துக்கு என நீங்கள் ஒதுக்கும் நேரத்தை சிறப்பான நேரமாக பயன்படுத்துங்கள் (குவாலிட்டி டைம்). எவ்வளவு நேரம் செலவிடுகிறோம் என்பதைவிட எப்படி அந்த நேரத்தைச் செலவிடுகிறோம் என்பதே முக்கியம். எனவே, நீங்கள் செலவிடும் நேரம் எப்போதும், நினைவில் நிற்கும் இனிமையான தருணங்களாக, ஆரோக்கியமான தருணங்களாக இருக்கட்டும்.

 குழந்தைகள் வரம் என்றால் குழந்தை வளர்ப்பு ஒரு தவம். நல்ல பெற்றோர்களே நல்ல சமூகத்தை உருவாக்குகிறார்கள். குழந்தைகள் விஷயத்தில் எப்போதும் பொறுப்புடனும் அக்கறையுடனும் நடந்துகொள்ள வேண்டியது மிகவும் அவசியம். எனவே, குழந்தைகளோடு மனம்விட்டுப் பேசத் தயங்காதீர்கள்.

 குழந்தைகளுக்கான தடுப்பூசியைத் தவிர்க்காமல் போட வேண்டியது அவசியம். தடுப்பூசி சார்ட் அட்டையை மாதாமாதம் கவனித்து அந்தந்தப் பருவத்தில் போட வேண்டிய தடுப்பூசிகளை உரிய காலத்தில் போடத் தயங்காதீர்கள்.

 இரண்டு முதல் மூன்று வயதுக் குழந்தையின் தேவை வேறு. ஏழெட்டு வயதுக் குழந்தையின் தேவை வேறு. பதின்பருவத்தில் இருப்பவர்களின் தேவைகள் வேறு. எல்லா பருவங்களிலும் குழந்தைகளை ஒரே மாதிரி அன்புடனும் கண்டிப்புடனும் வளர்க்க முயல்வது தவறு. அந்தந்த வயதில் ஏற்படும் உடல், மனம் மற்றும் சமூகம் சார்ந்த விஷயங்களை ஆராய்ந்து அதற்கு ஏற்பப்
பக்குவமாகக் கையாள வேண்டியது முக்கியம்.

 இரண்டு வயது வரை குழந்தைக்குக் கொஞ்சுவதும் சீராட்டுவதும் தேவைப்படும். இரண்டரை வயது முதல் ஆறு வயது வரை நல்லது கெட்டது
களை நாம்தான் சொல்லித்தர வேண்டும். பிடிவாதம் அதிகம் இருக்கும் பருவம் இது என்பதால் சிறிது கண்டிப்புடன் நடந்துகொள்ளலாம். பொய்சொல்லும் போதும், அளவுக்கு அதிகமாகக் குறும்புத்தனம் செய்யும் போதும் தவறைச் சுட்டிக்காட்ட வேண்டும். செய்த தவறை திரும்பத் திரும்பச் செய்யும் குழந்தைகளிடம் கண்டிப்பைப் படிப்படியாக அதிகரிப்பதில் தவறு இல்லை.

சாப்பிட மறுக்கும் குழந்தைகளைத் துரத்தி துரத்தி உண்ணவைப்பது மிகவும் தவறு. அவர்களின் உணவுகளை அவர்களுக்கு எட்டும் இடத்தில் வைத்துவிட்டு கண்டுகொள்ளாமல் விட்டுவிடலாம். அவர்களுக்குத் தேவையானதை அவர்கள் எடுத்ஃதுச் சாப்பிடுவார்கள். வலிய போய் உணவைத் தருவது, அவர்களின் பிடிவாதகுணத்தை அதிகரிக்கும். மேலும், குழந்தைகள் தங்களுக்குப் பிடித்தமான உணவைத் தேர்வு செய்ய ஏழு முதல் பத்து
சந்தர்ப்பங்கள் தேவைப்படும் என்கிறது ஓர் ஆய்வு. எனவே, ஒரு முறை குழந்தை மறுத்த உணவை வற்புறுத்தித் தருவதைவிட, வேறு வகை உணவை அதனிடம் தரலாம். மீண்டும் சில நாட்கள் கழித்து அந்த உணவை வேறு வடிவிலோ ருசியிலோ மாற்றம் செய்து கொடுத்துப் பார்க்கலாம்.

ஒவ்வொரு குழந்தைக்கும் உணவுத் தேவை மாறுபடுகிறது. எனவே மற்ற குழந்தைகளோடு
ஒப்பிட்டு அதிகமாகத் தருவதோ குறைப்பதோ கூடாது. அவர்களின் பசியறிந்து ஆரோக்கியமான உணவைக் கொடுப்பது நல்லது.

 மொட்டை மாடித் தோட்டத்தில் நீர்விடுவது, வீட்டைச் சுத்தம் செய்வது போன்ற பணிகளைக் குழந்தைகளோடு சேர்ந்து செய்யுங்கள். அவர்
களால் செய்ய இயன்ற வேலைகளைச் செய்ய அனுமதியுங்கள். குழந்தைகள் ஆர்வத்தோடு ஈடுபடும்போது அவர்களின் மனவலிமை அதிகரிக்கும்.

 தினமும் இரண்டு முறை பல் துலக்குவது, தும்மல் வந்தால் கைக்குட்டையைக்கொண்டு மூக்கை மூடுவது, போன்ற நல்ல பழக்க
வழக்கங்களைக் கற்றுக்கொடுக்க வேண்டும்.

 ஷூவுக்குப் பாலிஷ் போடுவது போன்ற அவர்களின் சின்னச்சின்ன வேலைகளை (Self care activity) அவர்களே செய்ய அனுமதியுங்கள். இது, எதிர்காலத்தில் அவர்களைத் தன்னம்பிக்கை மிக்கவர்களாகவும் சொந்தக் காலில் நிற்பவர்களாகவும் மாற்றும். அவர்களின் ஆளுமைப் பண்பினை வளர்க்க உதவும்.

 குழந்தைகள் செய்யும் சின்னச் சின்ன நல்ல செயல்களுக்கு எளிய கிஃப்ட்களைக் கொடுத்து ஊக்குவியுங்கள். இதனால் அவர்கள் மிகுந்த உற்சாகம் அடைவார்கள். இதுபோலவே, அவர்கள் தவறு செய்யும்போது, தர வேண்டிய கிஃப்ட்களைத் தராமல் தாமதப்படுத்தலாம். இது அவர்களுக்கு கண்டிப்பின் வலுவை உணர்த்தும்.

 காய்கறிகள் வாங்கும்போது குழந்தைகளையும் மார்க்கெட்டுக்கு அழைத்துச்செல்லலாம். அவர்களுக்குப் பிடித்த
மானகாய்கறிகளை அவர்களே தேர்ந்தெடுக்க அனுமதியுங்கள். இதனால், காய்கறிகள் போன்ற சத்தான உணவுகளை உண்ணும் பழக்கமும் ஏற்படும். சமூகத் தொடர்பும் குழந்தைக்குக் கொஞ்சம் புரியும்.

 தினமும் படிக்கும் பழக்கத்தைக் குழந்தை
களுக்கு ஏற்படுத்துங்கள். நாளிதழ்களில் வரும் செய்திகளில் சொல்லப்பட்டிருப்பவை குறித்து அவர்கள் ஏதேனும் கேட்டால், எதிர்மறை எண்ணங்கள் தோன்றாதவாறு பாசிடிவ்வான முறையில் அதற்கு விளக்கங்கள் கொடுங்கள். இது சமூகத்தில் என்ன நடக்கிறது என அவர்கள் தெரிந்துகொள்ள உதவும்.

 முதியோர் வீட்டில் இருப்பது என்பது ஒரு வரம். முதியவர்கள் இருக்கும் வீட்டில் அனுபவமும் ஞானமும் உள்ளது என்று பொருள். முதுமையை இரண்டாவது பால்யம் என்பார்கள். உடலாலும் மனதாலும் தளர்ந்திருக்கும் முதியவர்களிடம் கனிவாகப் பேச வேண்டும். உரிய மரியாதை
தர வேண்டும்.

 முதியவர்கள் எதிர்பார்ப்பது உணர்வுபூர்வமான அன்பைத்தான். தனியறை, ஏ.சி, டி.வி போன்ற வசதிகளை மட்டுமே அல்ல. எனவே, அன்பை, பாசத்தை சொற்களால் வெளிப்படுத்துங்கள். காலையில் செல்லும்போது, ‘சென்று வருகிறேன்’ என்று சொல்வதும், மாலையில் வந்ததும் ‘எப்படி இருக்கிறீர்கள்’ எனக் கேட்பதும் அவர்களை சந்தோஷமாகவும் பாதுகாப்பாகவும் உணர
வைக்கும்.

 முதியவர்கள் அவர்களின் நண்பர்களுடன் தொடர்புகொள்ளத் தேவையான வசதிகளைச் செய்து தர தயங்காதீர்கள். நண்பர்களுடன்
அளவளாவுவதால் அவர்களுக்குத் தனிமையில் இருக்கிறோம் என்கிற மனஅழுத்தம் குறையும்.

 வீட்டுக்கு யாராவது நண்பர்கள் வந்தால் வீட்டில் உள்ள பெரியவர்களிடம் அறிமுகப்படுத்துங்கள். இதனால், அவர்களுக்கு `தனிமைப்
படுத்தப்படுகிறோமோ’ என்ற உணர்வு வராமல், பாதுகாப்பான உணர்வு ஏற்படும்.

 பெரியவர்களை கேலி, கிண்டல் செய்யக்கூடாது. குறிப்பாக, முதுமையினால் அவர்களுக்கு ஏற்படும் இயலாமை, மறதி போன்றவற்றைக் குத்திக்காட்டியோ பரிகசித்தோ கிண்டலாகவோ பேசக் கூடாது. இதனால் அவர்கள் மனம் புண்படும்.

 முதுமையை நோய்களின் வேட்டை நிலம் என்பார்கள். வீட்டில் உள்ள குழந்தைகளுக்கு காய்ச்சல் போன்றவை வந்தால் முதியவர்களுக்கும் அது வரக்கூடும். எனவே, முதியவர்களை பத்திரமாகப் பாதுகாக்க வேண்டியது அவசியம்.

 தற்போது முதியவர்களுக்கான தடுப்பூசிகள் புழக்கத்தில் உள்ளன. உங்கள் மருத்துவரை அணுகி தேவையான தடுப்பூசிகள் போட்டுக்கொள்வதன் மூலம் ஃப்ளூ, டெட்டனஸ், நிமோனியா போன்ற முதுமையில் ஏற்படும் சில தொற்றுநோய்களைத் தடுக்கலாம்.

உயர் ரத்த அழுத்தம், சர்க்கரைநோய், இதய நோய், மூட்டுவலி, தைராய்டு பிரச்சனை போன்ற நோய் உள்ள முதியவர்களுக்குத் தேவையான மருந்துகளை தீர்வதற்குக் கொஞ்சம் முன்பாகவே
வாங்கிவைத்திருப்பது நல்லது.

 முதியோருக்கான டயட், உடற்பயிற்சி, மருத்துவம் போன்றவற்றில் அதிக கவனம் செலுத்த வேண்டும். ரத்த அழுத்தம், ரத்தத்தில் சர்க்கரை, கொழுப்பு அளவு, அல்ட்ரா சவுண்ட், கண் பரிசோதனை போன்றவற்றை ஆண்டுக்கு ஒருமுறை செய்துகொள்ள வேண்டும்.

 ஐம்பது வயதைக் கடந்த பெண்கள் தைராய்டு பரிசோதனை, மார்பகப் புற்றுநோய்க்கான மேமோகிராம் பரிசோதனை, கர்ப்பப்பை வாய் நோயைக் கண்டறியும் பேப்ஸ்மியர் பரிசோதனை போன்றவற்றை அவசியம் செய்துகொள்ள வேண்டும்.

 முதியவர்களை செல்போன், கம்ப்யூட்டர் போன்ற நவீன மின்னணு சாதனங்களைப் பயன்படுத்த ஊக்குவிக்க வேண்டும். இது அவர்களுக்கு அப்டேட்டட் ஆக உள்ளோம் என்ற எண்ணத்தை ஏற்படுத்தி, அவர்களின் தன்னம்பிக்கைக்கும் ஆரோக்கியத்துக்கும் உதவும்.

 குழந்தைகளைப் பள்ளிக்கு அழைத்துச் செல்வது, கடைகளுக்குச் சென்றுவருவது போன்ற சின்ன சின்ன வேலைகளை வீட்டு முதியவர்களைச் செய்ய வைக்கலாம். இதனால், நாமும் இந்தக் குடும்பத்தின் ஓர் அங்கம். எனக்கும் பொறுப்புகள் இருக்கின்றன என்கிற மனநிலை அவர்களுக்கு ஏற்படும். வேலை செய்ய அவர்களுக்கு விருப்பம் இல்லை எனில் வற்புறுத்துவதும் நல்லது அல்ல.

 முதியவர்களிடம் கொஞ்சம் பாக்கெட் மணி கொடுக்கலாம். அவர்களுக்கு கோயில்களுக்கோ வேறு எங்கேனும் செல்லும்போதோ செலவு செய்வதற்கும், குழந்தைகளுக்கு சிறுசிறு திண்பண்டங்கள் வாங்கித் தரவும் உதவும். இதனால், குழந்தைகளுக்கும் தாத்தா
பாட்டிக்குமான உறவு பலப்படும்.

 முக்கிய முடிவுகள் எடுக்கும்போது, முதியவர்களிடம் தேவையான ஆலோசனை கேட்கலாம். அவர்களின் அனுபவம் நமக்கு உதவியாக இருக்கும். அதே சமயம், முதியவர்கள் இளையோரின் எல்லா விஷயங்களிலும் தலையிட்டு தன்னுடைய கருத்தை சொல்லக் கூடாது. இது தேவையற்ற தொந்தரவாக இளையோரால் பார்க்கப்படும்.

 இல்லறம் என்பது நல்லறமாக வீடுதான் நமக்கு பிரதானம். வீட்டை ஆரோக்கியமாக, சுத்தமாக, இனிமையான மனநிலை தருவதற்கு ஏற்றதாக வைத்துக்கொள்ளும்போது வீட்டுக்குச் செல்கிறோம் என்ற உணர்வே நிம்மதியையும் ஆசுவாசத்தையும் தருவதாக இருக்கும்.

 வீட்டின் அமைப்பை நல்ல ஆரோக்கியமான உணர்வுகளைத் தூண்டும் வண்ணங்களால் ஆனதாக இருக்க வேண்டியது அவசியம். வண்ணங்களுக்கும் நம் எண்ணங்களுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. கண்களை உறுத்தாத, இயல்பான வண்ணங்களைத் தேர்ந்தெடுத்துப் பூசுவது நல்லது. சமையலறை மற்றும் ஹால் மஞ்சள் வண்ணத்திலும் படுக்கை அறை பச்சை வண்ணத்திலும் இருப்பது சிறந்தது. நிறங்கள் தனிப்பட்ட ரசனை மற்றும் மன அமைப்புக்கு ஏற்ப மாறுபடுபவைதான். எனவே, எந்த வண்ணமாக இருந்தாலும் மனதுக்குத் தொந்தரவு தராத வண்ணமாக இருப்பது அவசியம்.

 பகலில் மின்சார செலவு இல்லாமல் காற்றும் ஒளியும் வரும்படி கட்டப்பட்டிருப்பதே நல்ல வீடு. நெரிசலான இன்றைய நகர சூழலில் அதற்கான வாய்ப்புகள் குறைவுதான். வீட்டில் எப்போதும் வெளிச்சமும் காற்றும் இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள். ஹாலிலும் சமையலறையிலும் வெளிச்சமான ஃப்ளோரோசன்ட் பல்புகளையும், படுக்கை அறையில் சற்றே ஒளி குறைவான விளக்குகளையும் பயன்படுத்தலாம். இரவு தூங்கும்போது, நீல நிற ஒளிதரும் ஜீரோ வாட்ஸ் பல்பைப் பயன்படுத்துவது நல்லது. தேவையான அளவு காற்றும் வெளிச்சமும் நம்மை எப்போதும் உற்சாகமான மனநிலையில் வைத்திருப்பவை.

 நம் அழகுணர்வின் வெளிப்பாடு நம் வீடுதான். எனவே அதை எப்போதும் சுத்தமாகவும் அலங்காரமாகவும் வைத்திருங்கள். அலங்காரம் என்பது வேறு, ஆடம்பரம் என்பது வேறு. பொருட்களை நேர்த்தியாகவும், சுத்தமாகவும் அந்தந்த இடத்திலும் வைத்திருந்தாலே வீடு பளிச்சென அழகாகத் தோன்றும். வாய்ப்பு இருந்தால் சித்திரங்கள், கைவினைப்பொருட்கள், கலை வேலைப்பாடுகள் கொண்டு நம் ரசனைக்கேற்ப வீட்டை
அலங்கரிக்கலாம்.

 வீட்டின் முன்புறமோ பின்புறமோ தோட்டம் அமைத்து, அன்றாட உணவுக்குப் பயன்படும் வாழை, தென்னை, கொய்யா, பப்பாளி, முருங்கை போன்ற மரங்களையும் வீட்டின் முன்புறம் குளிச்சியான காற்று கிடைக்க வேப்ப மரமும் வளர்க்கலாம். அடுக்குமாடிக் கட்டடம் எனில், உரிமையாளர்கள் அனைவரும் சேர்ந்து, மொட்டைமாடியில் தோட்டம் அமைத்து, அன்றாடம் தேவையான காய்கறிகளைப் பயிரிட்டு வளர்க்கலாம். இயற்கை விவசாயமுறை என்பதால், சத்துக்கள் சேரும். செலவுகள் மிச்சமாகும். தோட்ட வேலையில் ஈடுபடும்போது மனதுக்கும் இதமாக இருக்கும்.

 வீட்டை, பசுமையானதாக மாற்றுவது உங்களை உற்சாகமாகவும், மனநிறைவோடும் வைத்திருக்கும். வீட்டுக்குள் ஆங்காங்கே மணி பிளான்ட், பூச்செடிகள் போன்ற குறைந்த வெளிச்சத்தில் வளரும் தாவரங்களை வளர்க்கலாம். அதிகத் தண்ணீரும் தேவைப்படாது. இயற்கைக்கும் நமக்குமானநெருக்கம் அதிகரிக்கும்போது ஆரோக்கியமும் மேம்படும்.

வீட்டில் ஒரு முதலுதவிப் பெட்டி கட்டாயம் இருக்கட்டும். சிறுசிறு காயங்களுக்குக் கட்டுப்போட தேவையான பருத்தி பஞ்சு, பேண்டேஜ், டெட்டால் போன்ற கிருமிநாசினி, ஆயின்மென்ட், சாதாரணத் தலைவலி, காய்ச்சலுக்கு பாராசிட்டமால் மாத்திரை, தீக்காயத்துக்கு சில்வர் சல்ஃபாடையாசின் ஆயின்மென்ட், வயிற்று வலிக்கு டைசைக்லமின், டிரோட்டோவெரின் உள்ள வலி நிவாரணிகள் போன்றவை அதில் இருக்க வேண்டும். முதலுதவிப் பெட்டியில் உள்ள மருந்துகளின் காலாவதித் தேதிகளைக் கவனத்தில்கொண்டு மாற்றிக்கொண்டே இருப்பது மிகவும் முக்கியம்.

 ஒவ்வொரு வீட்டிலும் ஒரு நூலகம் இருப்பது சிறந்தது. குறைந்தபட்சம் சிறிய அலமாரியிலாவது கொஞ்சம் புத்தகங்களை
வைத்திருங்கள். உங்கள் மனதுக்குப் பிடித்த உங்களின் தொழிலுக்குப் பயன்படக்கூடிய, உங்கள் குழந்தைகளின் நலனுக்கு வித்தாகும் புத்தகங்களை வாங்கும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளுங்கள். இரவு படுக்கப் போகும் முன் அரை மணி நேரம், புத்தகம் படிப்பது நம் மனதைப் புத்துணர்ச்சியாக்கும். நம் குழந்தைகளுக்கும் வாசிப்பின் மீதான ஆர்வம் அதிகரிக்கத் தூண்டுதலாய் இருக்கும்.

 வீட்டின் தட்பவெப்ப நிலைக்கும் நம் மனநிலைக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. உங்கள் வீட்டின் நிலவியல் அமைப்புக்கு ஏற்ற சீதோஷ்ணம் வீட்டுக்குள்ளும் இருப்பது நம் உடலுக்கும் மனதுக்கும் மிகவும் நல்லது. ஏ.சி இருக்கிறது என்பதால் எந்த நேரமும் ஏ.சியிலேயே இருக்க வேண்டும் என்று இல்லை. கோடை காலத்தில் ஏ.சியைப் பயன்படுத்துவதில் தவறு இல்லை. மழைக் காலத்திலும் அதைப் பயன்படுத்துவது மின்சார செலவை மட்டும் இன்றி உங்கள் மருத்துவச் செலவையும் கூட்டி ஆரோக்கியத்துக்கு விலை வைத்துவிடக்கூடும்.

 அண்டை வீட்டாருடன் நல்ல சுமுகமான தொடர்பில் இருங்கள். இது இருவருக்குமே பரஸ்பரம் மிகவும் பயனுடையது. இதனால், உங்கள் வெளியுலகத் தொடர்பு அதிகரிக்கும். சுற்றிலும் நடக்கும் விஷயங்கள் உங்கள் காதுக்கு வரும். நீங்கள் வீட்டில் இல்லாதபோது, வீட்டின் பாதுகாப்பு குறித்த அச்ச உணர்வு ஓரளவு நீங்கும். குழந்தைகளை அண்டை அயலாருடன் பழக அனுமதிப்பது குற்றம் அல்ல. குழந்தைகள்தான் நல்லெண்ணத் தூதுவர்கள். அவர்கள்தான், அக்கம்பக்க வீட்டாருடன் சுமுகமான சூழலை விரைவில் ஏற்படுத்துவார்கள். இதனால், குழந்தைகளுக்கும் வெளியுலகத் தொடர்பு கிடைக்கும்.

 படுக்கையறையில் மெத்தை, தலையணைகள் மிகவும் கடினமானதாகவும் இல்லாமல், மிகவும் லேசானதாகவும் இல்லாமல்,
ஓரளவு இலகுவானதாக, பருத்திப்பஞ்சால் ஆனதாக இருப்பது நல்லது. இதனால் முதுகுவலி, கழுத்துவலி இருக்காது. இடை விழிப்பற்ற சீரான ஆழ்ந்த உறக்கம் கிடைக்கும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மழைக்காலத்தில் மின்விபத்து ஏற்பட்டால் செய்ய வேண்டியவை…!! (மகளிர் பக்கம்)
Next post உடலுறவில் ஆடவன் சந்திக்கும் பல்வேறு கட்டங்கள்!! (அவ்வப்போது கிளாமர்)