By 4 June 2020 0 Comments

மன அழுத்தத்தில் தவிக்கும் மில்லினியல்ஸ்!! (மருத்துவம்)

இன்றைய இளையதலைமுறையினர் பற்றி பொதுவாக என்ன நினைப்பீர்கள்… ‘அவர்களுக்கென்ன… வாழ்க்கையை அனுபவிக்கிறவர்கள்’ என்றுதானே உடனே பதில் சொல்லத் தோன்றும். ஆனால், நிஜம் அதுவல்ல. பிராண்டட் உடைகள், ஸ்மார்ட்போன், அரட்டை போன்றவற்றை எல்லாம் பார்த்துவிட்டு மேலோட்டமாக ஜாலியாக வாழ்க்கையைக் கொண்டாடுகிற அதிர்ஷ்டசாலிகள் இளைஞர்கள் என்று நினைத்தாலும் இளையதலைமுறையினர் கடும் மன அழுத்தத்தில் உழன்று கொண்டிருக்கிறார்கள் என்று American Psychology Association மற்றும் இங்கிலாந்தில் உள்ள ஹெல்த் பவுண்டேஷன் ஆகிய இரண்டு அமைப்புகளின் சமீபத்திய ஆய்வுகள் தெரிவித்திருக்கிறது.

ஜெனரேஷன் Y அல்லது மில்லினியல்கள்(Millennials) என்றழைக்கப்படும் இன்றைய இளம் தலைமுறையினர் அதி தீவிர, மன அழுத்தங்களுக்கு உள்ளாவதாக குறிப்பிடுகின்றன. அலுவலகம் மற்றும் வீட்டு நெருக்கடி, பணிச்சுமை, வேலை இலக்குகள், கண்ணுக்கெதிரே பூதாகரமாக நிற்கும் முடிக்கப்படாத வேலைகள், நீண்ட பணி நேரம், தூக்கமின்மை மற்றும் வேலை பாதுகாப்பின்மை போன்ற காரணங்களால் வேலைக்கும், வாழ்க்கைக்குமிடையே சமநிலையைப் பராமரிக்க முடியாமல் போராடும் இவர்களில் அதிக சதவீதத்தினர் விடுப்பு கூட எடுக்காமல் நீண்ட நேரம் வேலை செய்யும் வேலை தியாகிகளாக இருக்கின்றனர். அதிலும் குறைந்த வருமானம் கொண்டவர்கள் இன்னும் படுமோசமான மன அழுத்தம் உடையவர்களாக இருக்கிறார்கள்’ என்ற தகவலை இந்த ஆய்வு முடிவுகள் வெளியிட்டுள்ளன.

‘நாள்பட்ட வேலை பாதுகாப்பின்மையை அனுபவிப்பது ஒருவரின் ஆளுமையை மிக மோசமாக மாற்றக்கூடும்’ என்று ஆஸ்திரேலியாவின் RMIT பல்கலைக்கழகத்தின் மேனேஜ்மென்ட் ஸ்கூல் ஆய்வாளர்கள் நடத்திய ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளது. ‘நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக வேலை பாதுகாப்பின்மைக்கு ஆளாகியிருப்பவர்கள் நிலையற்ற உணர்ச்சி உள்ளவர்களாகவும், உடன்பாடற்ற மனப்போக்கு உள்ளவர்களாகவும், மனச்சாட்சி இல்லாதவர்களாகவும் மாறுவதாக’ ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர். மேலும் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள தெற்கு கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தின் ஆய்வுக்குழு ஆசிரியர் டாக்டர் பர்வீன் கே. கார்க் தற்போது இளைஞர்கள் மத்தியில் தீவிரமாக பேசப்படும் Burnout பற்றி அலுவலகத்திலோ, வீட்டிலோ வேலைப்பளுவினால், கோரிக்கைகளை நிறைவேற்ற முடியாமல் போகும்போது நீடித்த மன அழுத்தத்திற்கு ஆளாகும் ஒருவரின் எரிமலையாக வெடிக்கும் உணர்வை Burnout என்கிறார்.

Burnout நோய்க்குறி இருக்கும் ஒருவரை அதிக சோர்வாக உணர வைக்கும்; ஆற்றல் இல்லாத, மனச்சோர்வு மற்றும் எரிச்சலை ஏற்படுத்தும். இந்த நிலை, இதய தாளங்களில்(Heart Rhythm) இடையூறுகள் ஏற்பட வழிவகுக்கும். முக்கியமாக மனச்சோர்வு, Burnout நோய்க்குறியின் அடையாளமாக குறிப்பிடப்படுகிறது. Burnout நோய்க்குறி பொதுவாக பணியிடம் அல்லது வீட்டில் நீடித்த மற்றும் ஆழ்ந்த மன அழுத்தத்தால் ஏற்படுகிறது. இது மனச்சோர்விலிருந்து முற்றிலும் வேறுபட்டது. குறைந்த மனநிலை, குற்ற உணர்வு மற்றும் மோசமான சுய மரியாதை ஆகியவற்றால் வகைப்படுத்தப்படுகிறது.
‘எங்கள் ஆய்வின் முடிவுகள், மனச்சோர்வால் பாதிக்கப்படுபவர்களை கவனிக்கப்படாமல் விடும்போது ஏற்படக்கூடிய தீங்குகள் மேலும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை உறுதிப்படுத்துகின்றன.

இவர்களிடத்தில் சீரற்ற இதயத்துடிப்பு(Atrial fibrillation) இருக்கிறது. இது இதயத்துடிப்பின் பொதுவான வடிவமாக இருந்தாலும், இந்தநிலை மேலும் மோசமாகும்போது மாரடைப்பு, பக்கவாதம் மற்றும் இறப்புக்கான ஆபத்தை அதிகரிக்கிறது. இந்த ஆய்வில், பதினோராயிரத்துக்கும் மேற்பட்ட நபர்களிடம் அளவுக்கதிக மனச்சோர்வு, கோபம், மனஅழுத்தத்துக்கு எதிரான மருந்துகள் பயன்பாடு மற்றும் மோசமான சமூக ஆதரவு போன்ற தரவுகளைப் பெற்று, கிட்டத்தட்ட 25 வருட காலங்கள் அவர்களை பின் தொடரவும் செய்தனர். அதிக மனச்சோர்வுடைய பங்கேற்பாளர்கள் சீரற்ற இதயத்துடிப்பு உருவாகும் அபாயத்தில் 20 சதவீதம் அதிகமாக உள்ளனர். தீவிர மனச்சோர்வு, அதிகரித்த அழற்சி (Inflammation) மற்றும் உடல்வலி ஆகியவற்றோடு தொடர்புடையது என்பதால் இந்த இரண்டு விஷயங்களும் நீண்டநாட்கள் தொடர்ச்சியாக தூண்டப்படும்போது, அது இதய திசுக்களில் தீங்கு விளைவிக்கும்’ என்கிறார் டாக்டர் கார்க்.

இளைஞர்களின் இந்த பணியிட மன அழுத்தம், உடலின் Alloostasis மற்றும் Allostatic சுமையை அதிகரிக்கிறது என்கிறார்கள். Allostasis load என்பது வாழ்க்கையின் சவால்களை சந்திப்பதற்காக உடலானது, நிலைத்தன்மையை அடைய முயற்சி செய்வது. ஆனால், Allostatic Load என்பது உயர்ந்த மற்றும் ஏற்ற இறக்கமான எண்டோகிரைன் அல்லது நரம்பியல் மறுமொழிகளுக்கு நாள்பட்ட வெளிப்பாட்டின் சுமையாகும். அதாவது திரும்பத்திரும்ப அல்லது நீண்ட கால மன அழுத்தங்களுக்கு உள்ளாகும்போது உடலில் சுமை குவிந்துவிடும். இதனால் உடல் உடைந்து கண்ணீர் சிந்தும்(Wear and tear) நிலைக்கு தள்ளப்படுகிறது.

இந்த அதிகப்படியான உடல் அழுத்தங்களால் அடிக்கடி நோய்வாய்ப்படுதல், மோசமான ஊட்டச்சத்து, உடல் வலி, உயர் ரத்த அழுத்தம், தூக்கமின்மை, தன்னுடல் தாக்க நோய்கள்(Auto-immune diseases) போன்ற உட்புற பிரச்னைகளாகவோ, வாழ்க்கை மாற்றங்கள், பொருளாதார பிரச்னைகள், வேலை தொடர்பான பிரச்னைகள், சுற்றுச்சூழல் கேடு, உறவு பிரச்னைகள், பதற்றம், மனச்சோர்வு போன்ற வெளிப்புறப் பிரச்னைகளாகவோ அல்லது இரண்டும் சேர்ந்தோ வெளிப்படுகிறது. காலப்போக்கில் உடல் சந்திக்கும் இத்தகைய அதீத அழுத்தங்கள், இளம் வயதிலேயே இதய நோய்களைத் தூண்டவும், உயர் ரத்த அழுத்தம், இன்சுலின் எதிர்ப்பு மற்றும் மாரடைப்பு போன்ற பல சிக்கலான பிரச்னைகளுக்கும் வழி வகுக்கிறது.

உடல் அழுத்தங்களைச் சந்திப்பவர்கள் அடுத்தகட்டமாக புகைபிடித்தல், மது அருந்துதல், ஆரோக்கியமற்ற உணவுமுறை, உடற்பயிற்சியற்ற நிலை போன்ற ஒழுங்கீனமான நடத்தை மாற்றங்களாலும், தூக்கமின்மை, மனச்சோர்வு உள்ளிட்ட உளவியல் ரீதியான தொந்தரவுகளுக்கும் உள்ளாகி, சில நேரங்களில் தற்கொலை எண்ணங்களுக்கும் தூண்டப்படுகிறார்கள் என்று கவலை தெரிவிக்கிறார்கள் ஆய்வாளர்கள்.

சரி… Burn out பிரச்னையிலிருந்து இளைஞர்கள் வெளிவருவது எப்படி?

செல்போனோடு தூங்காதீர்கள்

படுக்கைக்குச் செல்வதற்கு குறைந்தது ஒரு மணி நேரத்திற்கு முன்பே, உங்கள் தொலைபேசியை தூர ஒதுக்கி வைத்துவிடுங்கள். அப்படி செய்தால் உங்களுக்கு நீங்களே போனஸ் புள்ளிகள் கொடுத்துக் கொள்ளலாம். இப்படி செய்வதால், உங்கள் தொலைபேசியை அடிக்கடி சரி பார்க்கும் செயலை கட்டுப்படுத்தலாம். இது உங்கள் தூக்க சுழற்சிக்கு பயனளிப்பது மட்டுமல்லாமல், இரவு முழுவதும் ஏற்படும் மன அழுத்தத்தையும் குறைக்க உதவும்.

வீட்டை அலுவலகமாக்காதீர்கள்

‘வேலை தியாகிகளான’ நீங்கள் அலுவலக வேலையை வீட்டிற்கு கொண்டு வருவதால், வேலைக்கும் வாழ்க்கைக்குமான தெளிவான வேறுபாட்டை உணர்வதில்லை. மாலை வீட்டுக்கு வந்தபிறகும் அலுவலக இமெயில்களை சரி பார்ப்பது, அதற்கு பதில் அளிப்பது பார்ப்பதற்கு சுலபமாகத்தான் தெரியும். ஆனால், அது உங்கள் நரம்பு மண்டலங்களை ஓய்வெடுக்க அனுமதிக்காது. வேலைக்கென குறிப்பிட்ட நேரத்தை வரையறுத்துக் கொள்ளுங்கள். வீட்டில் இருக்கும்போது அலுவலக இமெயில்களுக்கு தானியங்கு பதில்களை(Automatic replies) அமைத்துவிடுங்கள். இது உங்கள் வாடிக்கையாளர்களுக்கு நீங்கள் அலுவலக நேரத்தில் இல்லை என்பதை தெரியப்படுத்திவிடுவதோடு, மறுநாள் காலையில் நீங்கள் பதிலளிப்பீர்கள் என்பதையும் தெளிவுபடுத்திவிடும்.

நோ எலக்ட்ரானிக்

‘மாதத்திற்கு ஒரு நாள் எந்தவொரு எலக்ட்ரானிக் பொருளைத் தொட மாட்டேன்’ என்ற சபதத்தை எடுக்கலாம். இதை உங்கள் நலத்திற்கான சவாலாக எடுத்துக் கொள்ளலாம். தொடர்ந்த வேலை தூண்டுதல் இல்லாத நிலை எப்படி இருக்கிறது? உங்களைச் சுற்றியுள்ள விஷயங்களுடன் நீங்கள் எந்த அளவிற்கு தொடர்பில் இருக்கிறீர்கள்? தகவல் சுமை இல்லாத நிலையில் எவ்வளவு ஆக்கப்பூர்வமான சிந்தனைகள் எழுகின்றன போன்றவற்றையும் கூர்ந்து கவனிக்க இது உதவும்.

சோர்வளிக்கும் செய்திகள்…

பொழுதுபோக்குக்கான வழிமுறையாக டிவி பார்க்கிறோம். ஆனால், உண்மையில் நகைச்சுவை காட்சிகளைத் தவிர, வேறு எந்த நிகழ்ச்சிகளும் நமக்கு
மனதிற்கு மகிழ்ச்சியைத் தருவதில்லை. செய்திகள், விவாதங்கள் போன்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் நம் நரம்பு மண்டலங்களை ஓய்வெடுக்க அனுமதிப்பதில்லை. மாறாக நம்முடைய இதயத்துடிப்பு, ரத்த அழுத்தத்தை அதிகப்படுத்தும் காரணிகளாக இருக்கின்றன. அதிகப்படியான தகவல் சுமை எப்போதும் ஒரு நல்ல விஷயமாக இருக்காது. சில சூழ்நிலைகளில், மோசமான முடிவுகளை எடுக்க மக்களை வழிநடத்தும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். கேட்ட செய்திகளையே திரும்பத் திரும்ப கேட்பதால், நாம் பாதுகாப்பற்ற உலகில் இருக்கிறோமா? என்ற பயத்தில் சிலருக்கு மன அழுத்தம் வரலாம். அதற்குப் பதில் காலார சிறிது தூரம் நடந்துவிட்டு வரலாம்; ஒரு நல்ல புத்தகத்தை படிக்கலாம்; இசையை கேட்கலாம்.

வருடம் ஒரு சுற்றுலா

எப்போதும் அலுவலகம், வீடு, வேலை என்று உழன்று கொண்டிருக்கும் உங்கள் மனநிலையை மாற்ற குடும்பத்தோடு வாரம் ஒரு முறை அருகிலுள்ள பூங்காக்கள், கேளிக்கை நிகழ்ச்சிகளுக்கு சென்று வருவது, மாதம் ஒருமுறை வெளியூர் பயணம், வருடம் ஒரு முறை வெளிநாட்டு பயணம் என அட்டவணை ஏற்படுத்திக் கொள்ளலாம். நம் உடல் இயந்திரத்துக்கும் ஓய்வு தேவை இல்லையென்றால் திடீரென்று ஒருநாள் ஸ்தம்பித்துவிடும் என்பதையும் மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.Post a Comment

Protected by WP Anti Spam