By 6 June 2020 0 Comments

தலைதூக்கும் நச்சுக் காளான்கள் !! (கட்டுரை)

காளான்களை எப்படிச் சமைத்துச் சாப்பிட்டாலும், நாவுக்கு மிகவும் ருசியாகத்தான் இருக்கும். அதேபோல, காளான்களை வகையறிந்து வைத்திருக்க வேண்டும். இல்லையேல், கண்களுக்குப் பளிச்செனத் தெரியும் காளான்கள், வயிற்றுக்குள் சென்றுவிட்டதன் பின்னர், தன்னுடைய ஆட்டத்தைக் காண்பித்துவிடும். சில காளான்கள் வாந்தி, வயிற்றோட்டம், உடற்சோர்வு உபாதைகளை ஏற்படுத்துவதுடன் நின்றுகொள்ளும்; இன்னும் சில, உயிருக்கே உலைவைத்து விடும்.

மழைக் காலங்களில் மின்னல் வெட்டி, இடியிடிக்கும் போது, காளான்களைப் பறித்து உண்ணும் பலரையும் கண்டிருக்கின்றோம். இன்னும் சிலர், வீட்டிலேயே வளர்த்து வருகின்றனர். தலை கொய்யப்பட்ட நச்சுக் காளான்கள், மீண்டும் முளைப்பதில்லையெனக் கேள்விப்பட்டிருக்கின்றோம். ஆனால், இது தேர்தல் காலமென்பதலால், நச்சுக் காளான்கள் எம் கண்முன்னே மிளிரும்; மனங்குளிர வைக்கும்; வாக்குறுதிகளை அள்ளிவீசும்; நாமெல்லாம் சகோதரர்கள் என்றெல்லாம் ஓரணியின் கீ்ழான ஒன்றுமைக்கு வித்திடும்.

கடந்த ஜனாதிபதித் தேர்தல், வன்முறைகளற்ற தேர்தலென்பது யாவருக்கும் வெளிப்படையாகவே தெரியும். ஆனால், தேர்தல் பிரசார காலங்களில், மேடைகளிலிருந்து வார்த்தைகளால் அள்ளிவீசப்பட்ட, தேர்தலுக்கு முந்திய வன்முறைகளுக்குக் குறைவே இல்லை. இதில், தமிழர்களுக்கு வாக்குறுதிகளும், முஸ்லிம்களை அச்சுறுத்தும் வகையிலான மிரட்டல்களும் அள்ளி வீசப்பட்டன என்பதே திண்ணம்.

உதாரணமாக, கண்டி முஸ்லிம்கள் தங்களுக்கு வாக்களித்தால், ஸ்ரீ தலதா மாளிகைக்கு முன்பாகவே, முஸ்லிம்களுக்குத் தேசியப் பாடசாலையொன்றைக் கட்டித்தருவதாக, மஹிந்தானந்த கூறியிருந்தது யாருக்கும் ஞாபகமிருக்கும். அரசியலில் நண்பனுமில்லை; எதிரியுமில்லை என்பர். ஆனால், தனக்கான வாக்கை, இன்னொருவரின் வாக்குவங்கியிலிருந்து சேர்த்துக்கொள்வதற்குத் தோளோடுதோள் நின்றுவிட்டுப் பின்னர், தோளில் கைகளைப் போடுவோர் பற்றி, மிகவும் அவதானமாகவே இருக்கவேண்டும். அவ்வாறானவர்கள், கொண்டை இழந்த நச்சுக் காளான்களாகவே இருப்பர் என்பது மட்டுமே நிதர்சனம்.

எமது புலம்பெயர் தொழிலாளர்களை, ‘மனித குண்டுகள்’ என விமர்சித்த முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே, நாட்டு மக்களின் எந்தவொரு விடயத்திலும், அக்கறை காட்டக்கூடியவராக இருப்பரா என்பது, இன்றைய கேள்விக்குறியாகவே காணப்படுகின்றது. இவர், இனவாதிகளின் செயற்பாடுகளுக்குப் பக்கபலமாகச் செயற்படுபவர். தனியார் தொலைக்காட்சிகளில் தனது வைராக்கியப் பேச்சுகளை, மிகவும் சுவாரஷ்யமாகக் கொண்டுசெல்லக் கூடியவர். முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவின் இனவாதப்பேச்சைப் பௌத்த அமைப்பான ஹெலபொது சவிய அமைப்பின் தலைவர் புதுகல ஜனவங்ச தேரர் கண்டித்துள்ளார்.

ஹெலபொது சவிய அமைப்பின் தலைவர் போன்ற பௌத்த அமைப்புகள் கண்டித்தால், மஹிந்தானந்த அளுத்கமகே போன்ற வங்குரோத்து அரசியல்வாதிகளின் கூரல்வளைப் பௌத்த மக்களே நசுக்கிவிடுவார்கள்.

ஹெலபொது சவிய அமைப்பின் தலைவர் புதுகல ஜனவங்ச தேரர், வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குனவர்தனவுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவின் இனவாதப் பேச்சுகளைக் கண்டித்தும், தொலைக்காட்சிகளில் முஸ்லிம்களுக்கு எதிராக வெறுக்கத்தக்க பேச்சுகளைப் பேசிவருவதாகவும் இது கண்டனத்துக்குறிய விடயமென்பதையும் சுட்டிக்காட்டி, விலாவாரியாகக் விவரங்களை அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

வருடாந்தம் சுமார் ஏழு பில்லியன் அமெரிக்க டொலர்களை, அந்நியச் செலாவணியாக ஈட்டித் தரும் மத்திய கிழக்குத் தொழிலாளர்களை விமர்சித்துக் கொண்டிருப்பதை, நிறுத்த வேண்டுமெனவும் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தனவுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், நாவலப்பிட்டி தேர்தல் தொகுதியில் போட்டியிடும் முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே, முஸ்லிம்களின் அதிகளவு வாக்குகளாத்த்தான் தெரிவாவதாகக் கூறப்பட்டாலும், அதை அளுத்கமகே மறுத்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இவை, இப்படியிருக்க இம்முறை நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில், கண்டி மாவட்டத்தில் பொதுஜன பெரமுன சார்பாக, பாரிஸ் ஹாஜியார் போட்டியிடவுள்ளார். ஆனால், இங்கு போட்டியிடும் முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே, தற்போது பாரிஸ் ஹாஜியாருடன் நெருங்கிப் பழகுவதைப் பார்த்தால், ஏதோ எண்ணத் தோன்றுகின்றது. இப்போது, மஹிந்தானந்த அளுத்கமகே கூறுகின்றார், ”தமிழ், முஸ்லிம் மக்கள், எதிர்வரும் தேர்தலில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவை ஆதரிக்க வேண்டும். பொதுஜன பெரமுன அரசாங்கத்தில் பங்குதாரராக வேண்டும்” இவ்வாறு,அவர் தற்போது நீலிக் கண்ணீர் வடிக்க ஆரம்பித்துள்ளார். இனவாதிகளுடன் இணைந்து, இனவாதம் பேசும் போது, இந்தத் தமிழ், முஸ்லிம் மக்களின் வாக்குகளின் பெறுமதி விளங்கவில்லை. தற்போது தேர்தல் காலம் நெருங்கும்போது தான் பாசம் பொங்கி வடிகின்றது. இனவாதிகளின் செயற்பாடுகள் குறித்துத் தமிழ், முஸ்லிம் மக்கள் மிகவும் விழிப்பாகவுள்ளனர்.

இங்கு, இன்னுமொரு விடயத்தைப் பகிர்ந்து கொள்ளவேண்டும். இனவாதத்தின் மற்றுமொரு குழுவின் அடாவடித்தனத்துக்கு இதுவோர் எடுத்துக்காட்டாகும். அதாவது, ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரிக்கு எதிராக, வெறுப்பூட்டும் பேச்சுகள் பேசிய பௌத்த மத குருவுக்கு எதிராக, நீதிமன்றத்தில் வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதன்போது, மதகுருவிடம் 150 இலட்சம் ரூபாய் நட்டஈடும் கோரப்பட்டுள்ளது.

இவ்வாறு, இனவாதிகளின் செயற்பாடுகளை நீதிமன்றத்தின் ஊடாகவாவது சென்று, இவர்களின் வாய்களை மூட முடியுமென்பதை, ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி நிரூபித்துள்ளார். இனவாதிகளே! சற்று நிதானமாகச் செயற்படுங்கள். இலங்கையின் நீதித்துறை மிகவும் சுயாதீனமானது.

இது இவ்வாறு இருக்க, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன மஹேந்திரனை, சிங்கப்பூரிலிருந்து இலங்கைக்கு அழைத்து வருவதற்காக 21 ஆயிரம் பத்திரங்களில் கையொப்பங்களை இட்டதாகக் கூறும் கதையைக் கேட்கும்போது, சிறுபிள்ளைகள் கூட நையாண்டியாகப் பார்க்கும் கதைபோல்தான் தெரிகின்றது. முன்னாள் ஜனாதிபதி ஒருவர் பேசும் பேச்சுப் போல் தெரியவில்லை.

பதவிவகித்த முன்னாள் ஜனாதிபதிகளில் ஜே.ஆர் ஜெயவர்தன, ரணசிங்க பிரேமதாஸ, சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, மஹிந்த ராஜபக்ஷ போன்றோரின் செயற்பாடுகளையும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பேச்சையும் கேட்கும் போது, ஏன் இவருக்கு எமது பொன்னான வாக்குகளைக் கொடுத்து, ஜனாதிபதியாக்கினோம் என்று, சுதந்திரக் கட்சியின் ஆதாரவாளர்கள் இன்றும் அங்கலாய்த்துக் கொண்டிருக்கின்றார்கள். அன்று, ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் இணைந்து, அன்றைய ஜனாதிபதியும் தற்போதைய பிரதமருமான மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராகப் பொது வேட்பாளராக மைத்திரிபால சிறிசேனவைக் களமிறக்கினர். அந்தநேரத்தில், மைத்திரிபால சிறிசேன அல்ல, வேறு யாராக இருந்தாலும், வெற்றியடைந்து தான் இருப்பார்கள். ஏனென்றால், அப்போதுள்ள தேவை அவ்வாறுதான் இருந்தது.

இப்படியான முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா, 21 ஆயிரம் தரம் கையொப்பமிட்ட கதையைப் பார்க்கும்போது, வேடிக்கையாகவுள்ளது. இவற்றை அவதானிக்கும்போது, தனது அதிகாரத்தின் பெறுமதி தெரிந்த ஒருவராக இருந்திருக்கமாட்டார் என்பது திண்ணமாகின்றது.

இதேவேளை, கடந்த நல்லாட்சியில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, ஆதரவு தெரிவித்திருந்த காலத்தில் தமிழர்களுக்கு ஏதாவது தீர்வு கிடைக்கக் கூடிய வாய்ப்பு ஏற்படுமென, அன்று கனவு கண்ட சில அரசியல் அவதானிகள், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவின் செயற்பாட்டை அறிந்து கொண்டு, இவரின் செயற்பாடுகளை விமர்சனம் செய்த வரலாறுகளை நாம் மறப்பதற்கில்லை. ஆனால், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா, சுகாதார அமைச்சராகப் பதவிவகித்தபோது, டெங்கு ஒழிப்பு நடவடிக்கையில் மிகவும் கட்சிதமாகச் செயற்பட்டதை, மறந்து விட முடியாது. அப்போது அவரின் செயலாளர்களின் செயற்பாடுகளை, விமர்சனம் செய்த செய்திகளும் அங்காங்கே இடம்பெற்றதை அறிவோம்.

இங்கு இன்னுமொரு செய்தியைச் சொல்லியுள்ளார், மைத்திரிபால சிறிசேனா, அதாவது, தான் ஜனாதிபதியாக இருக்கும்போது, மத்திய வங்கியின் ஆளுநர் பதவிக்கு, சிங்கப்பூர் பிரஜையான அர்ஜூன மஹேந்திரனை, அன்றைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நியமித்தபோது, அதை வலுவான முறையில் ஆட்சேபித்ததாகவும், அதற்கு அவர் எவ்விதமான சமிக்ஞைகளையும் காட்டவில்லை எனவும் தான் கூறுவதைக் கணக்கெடுக்கவில்லை என்பதையும் அவர் நினைவுபடுத்தினார். இவ்வாறு இருந்தும் நல்லாட்சி அமைத்து, இரு வாரங்களுக்குள் தமக்கும் ரணிலுக்கும் இடையில் பிணக்குகளை ஏற்படுத்திக் கொள்ளக் கூடாது என்பதற்காக, அர்ஜூன மஹேந்திரனின் நியமனத்தை ஏற்கும் நிர்ப்பந்தம் உருவானதாக, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார்.

அன்றைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, ஜனாதிபதி மைத்திரியை மதிக்காமல் செயற்பட்டதாகச் சில ஊடகங்களில் செய்திகள் பரவலானதையும், இவர்களிடையே கருத்து வேற்றுமைகள் எழுந்ததையும் அன்றைய அரசியல் ஆய்வாளர்கள், பத்திகளில் பரவலாகப் பகர்ந்த வரலாறுகளும் ஞாபகங்களில் இன்றும் நிழலாடுகின்றன.

”சர்வதேச பொலிஸ் ஊடாக, அர்ஜுன மகேந்திரனின் கைதை நல்லாட்சியில் உள்ளவர்களே தடுத்து நிறுத்தினார்கள்” என்று அன்றைய அதிகாரம் மிக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கூறுவது, கேலிக்கூத்தான கதையாகத்தான் இருக்கின்றது. ஆனால், இலங்கையில் ஆட்சி செய்த ஜனாதிபதிகளில் வலுவிழந்த ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன தான் இருக்கிறார்போலத் தெரிகிறது. இவரின் குற்றச்சாட்டு யாதெனில், ”எனது செயற்பாடுகளுக்கு எதிராக, முழுக்க முழுக்க ரணில் விக்கிரமசிங்க செயற்பட்டார்” என்பதாகவே இருக்கிறது. இதைப் பல்வேறு இடங்களில் சூட்சுமமாகக் கூறியதை நாம் அறிந்துள்ளோம். ஆனால், ரணில் விக்கிரமசிங்கவின் செயற்பாட்டை, முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப் பின்வருமாறு கூறியிருக்கிறார். ”திருவாளர் ரணில் விக்கிரமசிங்க பயணிக்கும் வாகனத்தில், நாம் பயணிக்க ஆயத்தமில்லை” இதுதான் மர்ஹும் அரஷ்ரபின் அரசியல் தீர்க்க தரிசனம். இந்த அரசியல் தீர்க்க தரிசனம், மைத்திரிபால சிறிசேனவுக்கு எப்போது வருமோ தெரியாது.

இலங்கையிலுள்ள புத்திஜீவிகளின் பட்டியலில், ரணில் விக்கிரமசிங்கவின் பெயர் எங்கு இருக்குமென்பதில், யாருக்கும் சொல்லித்தான் தெரிய வேண்டியதில்லை. இவரின் இராஜதந்திரச் செயற்பாடுகளும், கண்ணிமையால்ல் வெட்டும் சாமர்த்தியமும் கொண்டவர் ரணில் விக்கிரமசிங்க. இவர் மிகவும் துல்லியமாகச் செயற்படக் கூடியவர். 2000ஆம் ஆண்டளவில், தனது யுக்தியைப் பயன்படுத்தி, விடுதலைப் புலிகளுடன் நோர்வையின் அனுசரனையுடன் பேச்சுவார்த்தைக்கு அழைத்த வரலாற்றை யார்தான் மறக்க முடியும். ரணில் விக்கிரமசிங்க, சந்தர்ப்பம் பார்த்துக் காய் நகர்த்துவதில் கெட்டிக்காரன். எந்தப் பொந்துக்குள் எந்தப் பாம்பு இருக்கும் என்பது பற்றிய, பூரண விவரமறிந்த மேதையென்றும் கூறலாம். நல்லாட்சிக் காலத்தில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அதிகாரத்தைத் தொடவிடாமல் தான் தன்னிச்சையாகச் செயற்பட்ட செயற்பாடுகளே அதிகமெனக் கூறலாம்.

ஒருமுறை கொழும்பு தபால் தலைமையகத்தில், புத்தக வெளியீடொன்று நடைபெற்றது. இதில், முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார். அதன்போது, அப்புத்தக வெளியீடு முடிந்ததும், ரவூப் ஹக்கீம் மேடையிலிருந்து சபையோரிடம் பேசிக் கொண்டிருந்தார். அப்போது, அருகில் சென்று கேட்டேன். ”நீங்கள் நல்லாட்சியின் ஒரு பங்குதாரராகச் செயற்பட்டீர்கள் தானே? ஏன் அண்மைக் காலமாகப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை வித்தியாசமான கோணத்தில் பேசுகின்றீர்கள்” அதற்கு, மு.க தலைவர் ரவூப் ஹக்கீம் சொன்னபதில் ”அவரிடம் இன்னும் சென்று, காலத்தை வீணடிக்க வேண்டியதில்லை. நாம் மாற்று வழியைத் தேடவேண்டிய சந்தர்ப்பம், வெகு தொலைவில் இல்லை” எனக் கூறிவிட்டுச் சென்றுவிட்டார். அன்றுதான் நினைத்தேன், முஸ்லிம் காங்கிரஸ் ஸ்தாபகத் தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப் கூறிய கதை, விளங்கியோ விளங்கவில்லையோ அவருக்கு அன்றுதான் ஞானம் பிறந்ததோ தெரியாது.(கண்கெட்ட பின்னே சூரிய நமஸ்காரம்).

முஸ்லிம் காங்கிரஸுக்குள் அடிக்கடி பிளவுகள், பிரிவுகள் வருவது வழக்கம். ஆனால், முஸ்லிம் காங்கிரஸின் பொருளாளரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான பைசால் காசிம், ஏதோ ஒரு சமூகவலைத் தளத்தில் ஏதோ கூறிவிட்டார் என்று படபடவென மறுப்புகள் வரத் தொடங்கிவிட்டன. ஆனால், இவரின் இந்த மறுப்பு என்ன விடயத்தைத் தொட்டுக்காட்டுகின்றது என்பதைச் சற்றுத் தெளிவாகப் பார்ப்போம்.

”முஸ்லிம்களை நாடாளுமன்றில் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகள், அரசாங்கத்துடன் ஒத்துப் போவது – ஒப்பீட்டு ரீதியில் நல்லது என்றுதான் குறிப்பிட்டிருந்தேனே தவிர, முஸ்லிம் சமூகத்தை வஞ்சிக்கின்ற, முஸ்லிம்களுக்கு எதிராக இனத் துவேசத்தைக் கக்குகின்ற, முஸ்லிம்களுக்கு உரிய மரியாதையை வழங்காத அரசாங்கம் ஒன்றுடன் இணைந்து போக வேண்டும் என்று நான் ஒருபோதும் கூறவில்லை” என்று கூறும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் பைசால் காசிம், கடந்த நல்லாட்சிக் காலத்தில், அன்று ரணில் விக்கிரமசிங்க பிரதமராக இருக்கும்போது, கண்டி, திகன, காலி போன்ற பிரதேசங்களில் இடம்பெற்ற கலவரத்தின் பின்னணியில் இருந்தவர்கள் யாரென்பதை மறந்துவிடாரா? முஸ்லிம் காங்கிரஸ் நல்லாட்சியில் பங்காளிகளாக இருந்தால், அதில் குற்றம் சாட்டமுடியாது; பங்காளிகளாக இல்லாவிட்டால் குற்றம் சாட்டுவது. திகன, கண்டியில் முஸ்லிம்களுக்கான கடைகள், வீடுகள் எரிக்கப்படும்போது, நல்லாட்சியில் யார் பாதுகாப்பு அமைச்சராக இருந்தார்? இப்போது முஸ்லிம் காங்கிரஸ் கூட்டுச் சேர்ந்துள்ள, ஐக்கிய மக்கள் சக்தியில் உள்ள மத்தும பண்டார. ஏன், இவர்களுக்கு உடனடியாக அந்தக் கலவரத்தை அடக்கமுடியவில்லை? இங்கேயும் ரணில் விக்கிரமசிங்க, பாட்டாளி சம்பிக ரணவக்க போன்றவர்களும் இருந்தனர்.

சம்பிக ரணவகதான், இனவாதத்தைச் சிங்கள புத்திஜீவிகளின் மனதுக்குள் துல்லியமாகப் புகுத்தியவர். இப்போது ஆட்சியைக் கைப்பற்றுவதற்காக எதைக் கொடுக்க முடியாதோ, அதைக் கொடுப்போமெனப் பூச்சாண்டி காட்டுகின்றனர். இனவாதிகள் இருக்கும் வரை, தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் விடிவே இல்லை. கடந்த 30 வருட கொடூர யுத்தத்தால், எதை அந்தத் தமிழ் மக்கள் அனுபவித்துள்ளனர் என்பதை நாம் அறியவில்லையா? ”எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில், சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி நிச்சயமாக அரசாங்கமொன்றை அமைக்கும். அந்த அரசாங்கத்தில் பங்காளியாக முஸ்லிம் காங்கிரஸ் இருக்கும்” இவ்வாறு கூறும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் பைசால் காசிம், முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் எம்.எச்.எம் அஷ்ரபின் சித்தாந்தம் தெரியாமல்தான் இருக்கின்றாரா? முஸ்லிம் காங்கிரஸ், இதுவரை இலங்கை முஸ்லிம்கள் பொதுவாக நன்மையடையக் கூடிய பொதுவான கோரிக்கையை ஏன் இதுவரைகாலமும் முன்வைக்கவில்லை. குறைந்தபட்சம், மறைந்த ஸ்தாபகத் தலைவர் எம்.எச்.எம் அஷ்ரபால் உருவாக்கப்பட்ட ஒலுவில் துறைமுகத்தைக் கூட செப்பனிடவோ அபிவிருத்தி செய்யவோ முடியாமல் வலுவிழந்துதான் காணப்படுகின்றனர். எனவே, மக்களுக்குப் பிரயோசனமாகக் கூடிய திட்டங்களை முன்வைத்து, எதிர்வரும் அரசாங்கத்தில் யாராக இருந்தாலும் பங்காளிகளாக வரத் திட்டங்களைத் தீட்டுங்கள்.

தற்போது, கொரோனாவுடன் பொதுத் தேர்தலும் சங்கமமாகி நாட்டு மக்கள் தேர்தலா, கொரோனாவா வென முடிவெடுக்க முடியாமல், அரசின் ஒவ்வொரு செயற்பாடுகளையும் அவதானித்துக் கொண்டிருக் கின்றார்கள். கடற்படையினருக்கு மட்டும்தான் கொரோனா வைரஸ் என்ற நிம்மதிப் பெருமூச்சில் இருந்த பொதுமக்கள், அமரர் ஆறுமுகனின் ஈமக்கிரியையில் கலந்து கொண்ட மூவருக்குத் தொற்று என்ற செய்தி வெளிந்ததும், மீண்டும் மக்கள் விழித்துவிட்டனர்.

பொதுத் தேர்தலை நடத்துவது தொடர்பாக, சுகாதார வழிகாட்டுதல்கள் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டதென சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித் துள்ளதானது, மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. சரியோ பிழையோ, என்ன நடந்தாலும் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றே ஆகவேண்டும். இதுதான் தற்போதைய வேண்டுகோள். இருந்தும் நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவதற்கான திகதியைத் தீர்மானிக்கத் தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள், திங்கட்கிழமை (08) கூடவுள்ளனர். பொறுத்திருந்து பார்ப்போம்.Post a Comment

Protected by WP Anti Spam